அத்தியாயம் 2

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நான் யாருன்னு நீங்க யார் கிட்டையும் சொல்லக் கூடாது” என்றாள்.

“அதெப்படி முடியும்?”

“இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா நான் உங்க கூட வரேன்.. இல்லன்னா நான் எங்கயும் வரல.. இனி நீங்க என்னை தேடி வரவும் கூடாது” என்றாள் ஒரேடியாக.

அவனுக்கு அவளின் கண்டிஷனை மீற முடியவில்லை. சரி என்று தலையை ஆட்டியவன் கிளம்பி விட்டான். ஒரு மாத மெடிக்கல் லீவ் அப்ளை செய்து விட்டு கதிரவனோடு ஊருக்கு பயணம் ஆனாள் பனிநிலவு.

ஜீப்பில் தான் பயணம் ஆனார்கள். கதிரவன் வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்க, அவனுக்கு அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தாள் பனிநிலவு.

இருவரும் சேர்ந்து இரவு உணவை ஒன்றாக முடித்துக் கொண்டு ஜீப்பில் ஏறினார்கள். இதோ சென்னையை தாண்டி செங்காட்டுநிலத்தை நோக்கி ஜீப் விரைந்துக் கொண்டு இருந்தது.

இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டு இருந்தது. இடையில் மழை வேறு பிடித்துக் கொள்ள, வழியில் இருந்த காபி ஷாப்பில் இருவரும் சேர்ந்து காபி குடித்து விட்டு, மழையை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து நின்றவர்கள் அதன் பிறகு மீண்டும் கிளம்பினார்கள்.

பாதி நேரம் கூட தாண்டி இருக்க மாட்டார்கள். கதிரவனின் போனுக்கு அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது.

“கிளம்பிட்டீங்களா ஐயா...?”

“கிளம்பியாச்சா அண்ணா?”

“தம்பி கிளம்பிட்டீங்களா?” என மாத்தி மாத்தி போன் வந்த வண்ணமாகவே இருந்தது. அவனும் பொறுமையாகவே  அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

அதை ஒரு ஏக்கத்துடன் கவனித்துக் கொண்டவள் கண்ணாடி புறம் திரும்பிக் கொண்டாள். ஏனோ நெஞ்சில் அவளுக்கு அவ்வளவு அழுத்தம்.

அதும் அவர்களின் பேச்சு அமைதியாக இருந்த காருக்குள் ப்ளூடூத் உதவியுடன் அப்படியே கேட்க, ஒவ்வொருவரின் குரலிலும் இவளே ஒரு அனுமானத்துக்கு வந்து இது இவர்கள் என்று கணித்துக் கொண்டு இருந்தாள்.

அதுவும் கடைசியாக வந்த போன் காலில் கேட்ட குரலில் என்ன முயன்றும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. முதல் முறையாக அவளின் தாயின் குரலை அவள் கேட்கிறாள்.

உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. ஆனால் அதை தாண்டி வெறுப்பு தான் வந்தது அவளுக்கு. ஓரக்கண்ணால் அவளை பார்த்தான் கதிரவன். அவள் குறுங்கண் ஓரம் திரும்பி இருந்தாள். ஆனாலும் அவளின் நெஞ்சில் இருந்த வேதனையும் துயரமும் அவனை உலுக்கியது.

ஆறுதல் கூற முடிந்தாலும் அது எந்த அளவுக்கு அவளை இன்னும் வேதனை படுத்தும் என்று அறிந்தவன் வாயை திறக்கவில்லை.

ஊரு எப்ப வரும்..? நீண்ட மௌனத்தை கலைத்து விட்டு அவளே அவனிடம் பேசினாள். தூக்கமும் வரவில்லை.

“இன்னும் கால்வாசி தூரம் தான். தூக்கம் வந்தா தூங்கு” என்றான் கதிரவன்.

“ம்ஹும்” என்றவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

வெறும் இருள் தான் எங்கும் பூசி இருந்தது. தூரத்து வெளிச்சமும் அவ்வப்பொழுது ஊர் வந்தால் மட்டும் கடந்து செல்லும் மின் கம்பங்களின் வெளிச்சமும் மட்டுமே இருந்தது.

“டீ குடிக்கலாமா?”

“வேணாம்” என்றவளுக்கு பசி எடுத்தது. இரவு முழித்து இருக்கும் சமயம் எல்லாம் பசி வந்துவிடும் அவளுக்கு. படிக்கும் காலத்தில் கூட தேர்வு சமயம் விடிய விடிய படிக்க, கூடவே நொறுக்கு தீனியும் உள்ள போகும்.

ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

“ஓகே.. எனக்கு பசிக்கிது” என்று ஜீப்பை சாலையோரம் இருந்த கடைக்கு அருகில் நிறுத்தி விட்டு இறங்க, அவளும் இறங்கினாள்.

பாத்ரூம் சென்றுவிட்டு அவள் வர, ஓப்பேன் பிளேஸ்  காபிஷாப் என்பதால் அவன் மேசையில் இரண்டு கப்போடு அமர்ந்து இருப்பதை பார்த்து அவனை தவிர்த்து விட்டு போகாமல் அவனுடன் வந்து அமர்ந்தாள் பனிநிலவு.

அவள் புறமாக தேநீர் கப்பை நகர்த்தி வைத்தான். ஒன்றும் சொல்லாமல் எடுத்துக் கொண்டாள். மிதமான பனி விழுந்தது. அதை இருவரும் அனுபவித்துக் கொண்டே பருகினார்கள். அவன் பிஸ்கெட்டும் வாங்கி வைத்து இருக்க.. கொஞ்சம் பசி அடங்கியது.

பின் ஜீப்பில் ஏறி பயணம் ஆனார்கள். “இன்னும் கொஞ்ச நேரத்துல ஊர் வந்திடும்” என்றான்.

“ம்ம்” என்று சொன்னாள். ஆனால் உள்ளுக்குள் பெரும் பிரளையமே வெடித்துக் கொண்டு இருந்தது. லேசாக அவளின் தேகமும் நடுங்கத் தொடங்கியது.

“கடவுளே” தனக்குள் உறுப் போட்டுக் கொண்டு இருந்தவளை காண கதிரவனுக்கு மனம் கணத்துப் போனது.

“ரிலாக்ஸ்” என்று மட்டும் சொன்னான். அதற்கும் ம்ம் என்று மட்டும் போட்டாள். ஆனால் உள்ளுக்குள் நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை அவளால் என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.

“வீட்டுல ஏதும் சொல்லி இருக்கீங்களா?” கேட்டாள்.

“எதுவும் சொல்லல” என்றான். நீடித்தது மௌனம் இருவரிடையே.

“ஊர் வந்திடுச்சு நிலா” என்றான். பெருமூச்சை விட்டு தன்னை சமன் படுத்திக் கொண்டவள் சுற்றிலும் பார்க்க, விடியற்காலை நேரம் ஆங்காங்கே பெண்கள் வீட்டுக்கு முன் கோலம் போட்டுக் கொண்டும், வாசல் தெளித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இதில் எந்த வீடு என்று அவளுள் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அவளின் போராட்டத்தை நிறுத்துவதை போல பெரிய வீட்டின் முன்பு ஜீப்பை நிறுத்தினான் கதிரவன்.

கேள்வியாக அவனை பார்த்தாள்.

“இது தான் நம்ம வீடு.. உள்ள வா” என்று ஜீப்பை வீட்டுக்கு வெளியவே விட்டவன், வண்டியில் இருந்து இறங்கும் முன்பே வேலையாள் வந்து நின்றுவிட்டான் அவனின் முன்பு.

“லக்கேஜ் பின்னாடி இருக்கு” என்று கை காண்பித்து விட்டு நிலாவை அழைத்துக் கொண்டு உள்ளே வர, வீட்டின் பெரிய வாசலை தாண்டி உள்ளே நுழைந்தான். அதன் பிறகு வீட்டின் முக்கிய வாசல். அதில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார் கதிரவனின் அன்னை காமாட்சி.

“வாய்யா” என்று வாய் நிறைய புன்னகையோடு குனிந்து இருந்தவர் நிமிர்ந்து மகனை வரவேற்க, கூடவே இருந்த பெண்ணை பார்த்து திகைத்துப் போனார்.

அதற்குள் அக்கம் பக்கம் உள்ள பெண்கள் எல்லாம் இங்கே வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள். ஏனெனில் இதுவரை கண்டிராத ஒரு புதுப் பெண் பெரிய வீட்டில் நுழைந்தால் யாரு தான் வேடிக்கை பார்க்காமல் இருப்பார்கள்.

“அய்யா இது?” என்று அவர் தயங்கிக் கேட்டார். சட்டென்று மகனிடம் அவரால் நினைத்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டு விடவே முடியாது.

“இந்த பெண்ணுக்கு நம்ம விருந்தினர் அறையை காட்டுங்க ம்மா” என்றான். அவர் திகைத்து நின்றதை கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல். தன் போல அவரின் தலை அசைந்தது.

போட்ட கோலத்தை பாதியில் விட்டுட்டு அவர் உள்ளே வர,

“இல்லங்க நீங்க முதல்ல கோலத்தை போடுங்க.. பிறகு வந்து அறையை காண்பிங்க. ஒன்னும் அவசரம் இல்ல” என்றாள் நிலா.

மகனை ஒரு கணம் பார்த்தவர், “பரவாயில்லம்மா இருக்கட்டும் வந்து போட்டுக்குறேன்” என்று சொன்னவர்,

“வாம்மா” என்று முன்னாடி போனார். அவரின் பின்னாடி இவள் போக, இவளுக்கு பின்னாடி கதிரவன் சென்றான். வாசலை தாண்டி மிகப்பெரிய முன் கூடம் இருக்க, அங்கே ஊஞ்சலில் அமர்ந்து இருந்தார் மெய்யப்பன்.

அந்த அதிகாலையிலே குளித்து நெற்றி நிறைய திருநீரை பூசி பக்தி பழமாக அமர்ந்து திருவாசகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.

கதிரவன் வரவும்,

“வாய்யா” என்று சொன்னவர் அவனுக்கு முன்னாடி ஒடிசலான தேகத்தோடு வந்துக் கொண்டு இருந்த பெண்ணை ஒரு கணம் புருவத்தை தூக்கிப் பார்த்தவர்,

“என்ன காமாட்சி?” என்றார் கேள்வியாக.

“தம்பி தான் மாமா.. எனக்கு எதுவும் தெரியாது” என்றார் பவ்யமாக.

“ம்ம்” என்றவர் பேரனை ஒரு பார்வை பார்த்தார்.

“துளசி கல்யாணத்துக்கு வந்து இருக்கா தாத்தா” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:05 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top