Notifications
Clear all

அத்தியாயம் 63

 
Admin
(@ramya-devi)
Member Admin

கலைந்து போன கூந்தல், கசங்கிப் போன சேலையோடு, மாலையில் வைத்து இருந்த பூக்கள் மன்னவனின் கைப்பட்டு வந்தங்கிப் போய், அணிந்து இருந்த நகைகள் கூட அங்கும் இங்குமாய் நகர்ந்து கலைந்த ஓவியமாய் நின்று இருந்தாள் பனி.

கதிரவனோ எப்பொழுதும் படிய வாரி இருந்த தலை முடி பெண்ணவளின் கைகளில் சிக்கி ஏகத்துக்கும் கலைந்து போய் இருந்தது. சட்டை பட்டன் முழுமையாக கழண்டு இருந்தது. உள்ளிருக்கும் வெள்ளை பனியனில் பனியின் குங்குமம் அப்பி இருந்தது..

இருவரையும் இந்த நிமிடம் யார் பார்த்தாலும் கூடல் முடித்து வந்தவர்கள் தான் என்று அடித்து சத்தியம் செய்வார்கள். ஏனெனில் அப்படி ஒரு கோலத்தில் தான் இருந்தார்கள் இருவரும்.

ஒருவரை ஒருவர் பார்வையாலே கவ்விக் கொண்டு இருந்தார்கள். ஒரு அடி கூட நெருங்கவில்லை. ஆனால் பார்வை மட்டும் உயிரை குடித்துக் கொண்டு இருந்தது..

“போய் தூங்குடி” என்றான்.

“ம்ஹும் தூக்கம் வரும்னு தோணல” என்றாள் பெருமூச்சு விட்டு.

“ஏனாம்” என்று நக்கலாக கேட்ட கதிரவனை முறைத்துப் பார்த்தவள்,

“மேல மடிக்கு போகலாமா?” கேட்டாள். இருவருக்கும் தனி தனியாக இருக்க முடியவில்லை. அதனால் தான் அவரவர் அறைக்குள் போக முடியாமல் வாசலிலே நின்று இருந்தார்கள்.

பனி அப்படி கேட்கவும் “ம்ம்” என்றவன் மேலே ஏறினான். அவனுடன் இவளும் படி ஏறினாள்.

இருவரும் மொட்டை மாடிக்கு வந்து நேரம் இன்னும் இருள் கவிழ்ந்து இருந்தது. மெல்லிய நிலவொளி மட்டும் வீசிக் கொண்டு இருக்க கதிரவன் சட்டையை கழட்டி விட்டு அப்படியே தரையில் மல்லாக்க படுத்தான். அவனுக்கு அருகில் பனி வந்து அமர்ந்துக் கொண்டாள். இரு கால்களையும் கட்டிக் கொண்டு அதில் முகத்தை சாய்த்து அவன் முகம் பார்த்தாள்.

பின்னுக்கு தலையை குடுத்து படுத்து இருந்தவனின் கண்களும் பெண்ணவளை தான் தழுவி இருந்தது. இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை. பார்வை மட்டுமே ஒன்றை ஒன்று கவ்வி இருந்தது. மெல்லிய கூதற் காற்று வீசியது அவ்விடத்தில்.

கவிழ்ந்து இருந்த மௌனத்தை கதிரவனே கலைத்தான்.

“நாளைக்கு துளசியை அழைக்க நீயும் நானும் தான் போகணும்” என்றான்.

“ம்ம்” என்று கேட்டுக் கொண்டாள்.

“இன்னைக்கு மாதிரி நாளைக்கும் சேரியே கட்டு”

“ம்ம்”

“அந்த அடர் ப்ளூ கலர் சேரி. அதுக்கு மேட்சா வைர செட் போட்டுக்கோ”

“ம்ம்”

“பூ வைக்க மறந்துடாத”

“ம்ம்”

“என்னை நினைக்காம இருந்துடாதா”

“ம்ம்” என்றவள் சுதாரித்து அவனை முறைத்தாள்.

அவளின் முறைப்பை இரசித்துப் பார்த்தவன், கைப்பிடித்து அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்.

முழுமையாக அவன் மீது படுத்துக் கொண்டவள் குளிருக்கு இதமாக அவனின் நெஞ்சில் புதைந்துக் கொண்டாள்.

“காலம் பூரா இப்படியே இருக்கலாம் போல தோணுது இல்லடி”

“ம்ம்” என்றாள்.

“என்னடி சொல்ற எல்லாத்துக்கும் ம்ம் போட்டுட்டே இருக்க”

“எனக்கு பேசவே தோணல மாமா.. இப்படியே உங்க நெஞ்சுல புதைஞ்சு இருந்தாலே போதும் போல இருக்கு.. அவ்வளவு நிறைவா என்னை பீல் பண்ண வைக்கிறீங்க.. இதை விடுத்து நான் என்ன பேச.. நீங்க பேசுங்க.. உங்க பேச்சை கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

“ம்ஹும் எனக்கும் இந்த மௌனமான நேரத்தை இரசிக்கணும்.. அதோட இந்த பெண்ணை இரசிக்கணும்” என்றவன் தன் நெஞ்சில் அவளை அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.

அதன் பிறகு அங்கு எந்த பேச்சு சத்தமும் இருக்கவில்லை. மெல்ல அவள் அசையும் போது நகைகளின் ஒலியும் புடவையின் சரசரப்பு சத்தம் மட்டுமே கேட்டது.

“வெறும் தரை ஜில்லுன்னு இருக்கப் போகுது மாமா” குளிர் அதிகம் எடுத்த வேளையில் இவள் சொல்ல,

“என்ன பண்றது?” கேட்டான்.

“எழுந்துக்கோங்க” என்று சொன்னவள் தன் முந்தானையை தரையில் விரித்து விட்டு அதில் அவனை படுக்க சொல்லி அவன் மீது அவள் படுத்துக் கொண்டாள். பனியின் செயலில் தன்னை தொலைத்தவன் அவளின் கழுத்தில் அழுத்தமாக புதைந்துக் கொண்டான். இந்த சின்ன சின்ன நெருக்கங்கள் அவர்களின் காதலை இன்னும் இறுக்கமாக்கியது.

அடுத்த நாள் காலையில் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் பனி. அவளை ரெடி பண்ண காமாட்சி உதவிக்கு வந்தார். முன்னரே பொட்டிக்கில் குடுத்து சேலைக்கு மடிப்பெடுத்து வாங்கி வைத்து இருந்தாள். எனவே காலையில் உடுத்திக் கொள்ள வெகு சுலபமாக இருந்தது.

அவள் புடவை கட்ட, காமாட்சி அவளுக்கு தலையை சீவி நகைகளை போட்டு விட்டு பூ வைத்து விட்டு கிளப்பி விட்டார்.

“அம்மாச்சி சித்து ரெடியா?” கேட்டுக் கொண்டே கொசுவாத்தை சரியாக உள்ளே சொருகினாள்.

“கிளம்ப சொல்லி இருக்கேன் கண்ணு.. கிளம்பிடுவான்.. நீ இங்க காட்டு பூவை சரியா வச்சு விடுறேன்” அவளுக்கு அழகாக நேர்த்தியாக வைத்து விட்டார்.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. தேர் மாதிரி இருக்க கண்ணு” என்று நெட்டி முறித்தவர்,

“டீ மட்டும் குடிச்சுக்க கண்ணு.. அங்க துளசி வீட்டுல காலை சாப்பாட்டுக்கு வர சொல்லி சொல்லி இருக்காங்க.. வரும் பொழுது மாமா கிட்ட சொல்லி ஸ்வீட் பலகாரம் சொல்ல சொல்லிடு.. பணியாளை விட்டு எடுத்துக்கலாம்” என்றார்.

“அளவு அம்மாச்சி..”

“வெள்ளி பாத்திரம் எல்லாம் குடுத்து விடுறேன். அது நிரம்புற அளவுக்கு சொல்ல சொல்லு மாமாவை”

“ம்ம்” என்றவள் டீயை குடிக்க, எட்டி நின்று அவளின் அழகை கண் நிறைக்க பார்த்துக் கொண்டார் காமாட்சி. அந்த நேரம் கதிரவன் உள்ளே வர,

“இதோ டீ எடுத்துட்டு வரேன் தம்பி..” என்று அவர் வெளியே போக,

“அதெல்லாம் வேணாம்.. சித்து ரெடியான்னு பாருங்க” என்றான்.

அவர் வெளியே போகவும்,

“ஏன் டீ வேணாமா?” பனி கேட்டாள்.

“அந்த டீ வேணாம்.. ஆனா இந்த டீ வேணும்” என்று அவளை இழுத்து தனக்கு முன்னாள் பின் புறமாக நிற்க வைத்து அவளின் கையில் இருந்த டீயை அவளின் கையாலே பருகினான்.

“காதல் மன்னன்னு நினைப்பாக்கும்” நக்கலாக கேட்டாள்.

“அப்போ இல்லையா?” என்றவன் டீயை இரசித்துக் குடிக்க, அவனின் கன்னத்தில் டீ குடித்த சூட்டோடு அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

மீசைக்கு அடியில் இருந்த இதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது.

அவளின் இதழ் காயத்தை விரலால் தடவி விட்டவன்,

“வலிக்கிறதா?” கேட்டான்.

“ஆமா தான். ஆனா இதை விட வலி வேணும்னு மனசு கேக்குது” என்று முகம் சிவக்க சொன்னவளை இடையில் கைக்குடுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“அதுக்கென்ன காயம் குடுத்துட்டா போச்சு” என்றான்.

“ம்கும் அளவு பார்க்கிறேன்னு சொல்லி என்னை டீஸ் பண்ணி படுத்தி எடுத்துட்டு கடைசி வரை அளவு பார்க்கல. இதுல வலிக்க வலிக்க முத்தம் குடுக்க போறீங்களாக்கும்” அவனின் கண்ணியத்தில் மனம் நிறைந்துப் போனாலும் கேலி செய்தாள்.

“இதை உன் கழுத்துல தாலி கட்டிய பிறகு எழுத்து மாறாம சொல்லு..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான். சித்து தயாராக இருக்க, அவனோடு காமாட்சியின் அண்ணன் மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 5, 2026 11:05 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top