அந்த உச்சி வேளையில் கதிரவன் சுட்டு எரித்துக் கொண்டு இருந்தாலும் கொஞ்சமும் அதன் தாக்கம் உள்ளே தெரியாமல் குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனத்தின் கேண்டினில் அமர்ந்து உணவு உண்டுக் கொண்டு இருந்தாள் பனிநிலவு.
அவளுடன் அவளின் தோழமை கூட்டமும் அமர்ந்து கேலி கிண்டல் பேசிக் கொண்டே உணவை உண்டுக் இருந்த நேரம்,
“மேடம் உங்களை பார்க்க விசிட்டர் வந்து இருக்காங்க” என்று சொல்லவும், அவளின் முகத்தில் சிந்தனை கோடுகள்.
“என்னை தேடியா?” என்று கேட்டாள்.
“ஆமாம் மேடம். உங்க பேரை சொல்லி தான் கேட்டாங்க..” என்று பணியாள் வந்து சொல்லிவிட்டு போக, உண்டுக் கொண்டு இருந்த உணவிலே ஸ்பூனை வைத்து விட்டு,
“கைஸ் நீங்க கண்டினியூ பண்ணுங்க.. நான் வந்திடுறேன்” என்று சொல்லி விட்டு டிஷ்யூ பேப்பரில் கையை துடைத்து தூக்கி வீசிவிட்டு வெளியே வந்தாள்.
கார்டனில் இருப்பதாக தகவல் சொல்ல, அங்கே விரைந்தாள். அந்த ஐடி கம்பெனியில் சேர்ந்து இதோடு ஒரு வருடம் முடிவடைந்து இருந்தது. கல்லூரியில் இறுதி பருவத்தின் போதே வேலையில் சேர்ந்தது விட்டாள். அப்பொழுதே மூன்று மாதம் ட்ரைனிங் முடித்து விட்டு வேலையிலும் சேர்ந்து இருந்தாள்.
அவளின் திறமையை பார்த்து கல்லூரியே அவளுக்கு அனுமதி வழங்கி இருந்ததால் ட்ரைனிங் முடித்து மீதம் இருந்த மூன்று மாதத்துக்கும் சேர்த்து அட்டனென்ஸ் போட்டு இருந்தார்கள். தேர்வு முடிந்து இதோ ஆறு மாத காலமும் கடந்து விட்டது.
காலையில் இருந்து இதோட மூன்று போன் கால்கள் அவளுக்கு வந்து விட்டது. எல்லாம் ஒரே எண்ணில் இருந்து. அதை வேண்டும் என்றே எடுக்காமல் இருந்தாள். அதன் விளைவு இதோ அவளை தேடி வாந்தாகி விட்டது. போன் எடுக்காமல் விட்டால் அதோடு முடிந்து விடும் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அது இப்படி தொடரும் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.
தோட்டப் பகுதிக்கு வந்தவளின் முன்பு வந்து நின்றான் ஒரு நெடியவன். ப்ளாக் கலர் பேண்ட்டில், சந்தன கலர் சட்டையில் அம்சமாக நின்று இருந்தான் அவன். அவனின் தோற்றமோ வசீகரமோ அவளை கொஞ்சமும் ஈர்க்கவில்லை. மாறாக அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தான் வெடித்துக் கொண்டு இருந்தது.
முயன்று தன் உணர்வுகளை வெளியே காட்டாமல்,
“ஏன் இப்படி அடிக்கடி வந்து என்னை டார்ச்சர் பண்றீங்க? ஒரு முறை சொன்னா கேட்க மாட்டீங்களா?” என்று எடுத்த உடனே படபட பட்டாசாக அவள் பொரிய, பெருமூச்சு விட்டவன்,
“கேட்க மாட்டேன்னு தெரிஞ்சும் எதுக்காக ஆர்க்யூ பண்ணிட்டு இருக்க நிலா” அழுத்தமாக அவன் கேட்டதில் இவளுக்கு தான் பத்திக் கொண்டு வந்தது. ஆனாலும் தன் கோவத்தை காட்டாமல் இழுத்துப் பிடித்தவள்,
“ப்ளீஸ்.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. இவ்வளவு நாள் யாரும் இல்லாம தானே இருந்தேன். இனி மேலும் எனக்கு யாரும் வேணாம்.. இப்படியே இருந்துட்டு போறேன். யாரையும் எதிர்க்கொள்ள என்னால முடியாது மிஸ்டர்” என்றவளின் குரல் சாதாரணமாக இருந்தாலும் அதன் பின்னியில் இருந்த வலியை உணர்ந்துக் கொண்டவன்,
“அதனால தான் சொல்றேன். இவ்வளவு நாள் நீ அனுபவித்த தனிமை போதும். எங்களோட வந்து இரு” என்றான் அழுத்தமாய்.
“ஒரு முறை சொன்னா புரியாதா உங்களுக்கு. மறுபடியும் மறுபடியும் வந்து எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க?” ஆவேசமாக அவள் கத்தி விட, அங்கும் இங்குமாய் நின்று இருந்தவர்கள் இவர்களை திரும்பி பார்க்க, விழிகளாலே தன் எதிரில் இருந்தவளை அழுத்தமாக முறைத்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் தலை குனிந்தவள், சட்டென்று “சாரி” என்றாள்.
“லுக் மீ நிலா” அடிக்குரலில் உறும, விதிர் விதிர்த்துப் போனாள்.
“ஹேய் ரிலாக்ஸ்” அவள் பயப்படுவதை பார்த்து சொன்னவன்,
“காது எனக்கு நல்லாவே கேட்கும். சோ நீ மெதுவாவே பேசலாம். அண்ட் கோவமும் படலாம்” என்றவனை ஏறெடுத்துப் பார்த்தவளின் விழிகளில் படர்ந்து இருந்த வெறுமையை கண்டு,
“என்னை நம்பி வா” என்றான்.
“சொன்னா புரிஞ்சுக்கோங்க சார்” என்று அவள் மன்றாட,
“மாமா சொல்லு” என்றான் அழுத்தமாய்.
“ப்ச்.. எனக்கு யாரும் வேணாம் எந்த உறவும் வேணாம்” பிடிவாதமாய் அவள் சொல்ல, அவனின் இதழ்களில் சின்ன புன்னகை தோன்றியது அவளின் சிறுபிள்ளை போன்ற கோவத்தில்.
“ஓகே வேணாம். ஆனா நீ என் கூட வரணும்” அவன் சொல்லும் பொழுதே நீ வந்து தான் ஆகணும் என்கிற கட்டாயம் தென்பட, பரிதவித்துப் போனாள்.
“எனக்கு அங்க யாரையும் தெரியாது”
“என்னை தெரியும் தானே..” ஆழமாய் அவன் கேட்க, இவள் உச்சுக் கொட்டினாள்.
“ஜஸ்ட் ஒன் மந்த்.. எங்க கூட வந்து இரு. கல்யாணம் முடிஞ்ச பிறகு வந்திடு” என்றான்.
“உங்க தங்கை கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்?” கோவமாகவே கேட்டாள்.
“என் தங்கச்சி உனக்கு சித்தி அதை மறந்துடாத” தீவிரமாய் சொன்னான்.
“அம்மாவே இல்லையாம் இதுல சித்தி வேறையாக்கும்” கடுப்படித்தவளின் உள்ள குமுறலை புரிந்துக் கொண்டு,
“வொர்க் முடிஞ்சு ரெடியா இரு.. நைட் கிளம்பனும்” என்றான்.
“நான் வர மாட்டேன்” என்றாள்.
“உனக்கு ஆப்ஷன் குடுக்கல நிலா. திசிஸ் மை ஆடர்”
“என்னக்கு ஆடர் குடுக்க நீங்க யாரு?” வெடுக்கென்றே கேட்டாள். அவள் கேட்டதில் மனதின் ஓரம் சுருக்கென்று வலி எடுத்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,
“நான் உன்னோட தாய் மாமா” என்றான் மிக மிக அழுத்தமாக.
“தாயே இல்லன்னு சொல்றேன்.. அப்புறம் எங்க இருந்து தாய் மாமா வந்ததாம். ப்ளீஸ் மிஸ்டர்...” என்று அவள் தொடங்க,
“மாமா சொல்லு... இல்லையா கதிரவன்னு சொல்லு.. மிஸ்டர் போடாத.. ரொம்ப ஹெர்ட் ஆகுதுடி” உண்மையான அன்புடன் அவன் சொல்ல, அவனின் குரலில் தென்பட்ட வருத்தத்தை உணர்ந்தவள்,
“என்னால அவ்வளவு சீக்கிரமா எதையும் மாற்றிக் கொள்ள முடியாது.. சோ ப்ளீஸ்” என்றாள் இறைஞ்சலாக. அவளின் சூழ்நிலை புரிய பெருமூச்சு விட்டவன்,
“கதிரவன்னு சொல்லு” என்றான் தன்மையாக.
“ட்ரை பண்றேன்” என்று சொன்னவள், “என்னை விட வயசு அதிகம் உங்களுக்கு” தயக்கமாக சொல்ல,
“நோ ப்ராப்ளம்.. நீ மொட்டையா பேசுறதுக்கும், மிஸ்டர் போட்டு பேசுறதுக்கும் என் பேரை சொல்லி கூப்பிடுறது பெட்டரா தான் இருக்கு. சோ அதையே பாலோ பண்ணிக்கோ” என்றவன் கிளம்பிவிட,
“ஒரு நிமிடம்” அவனை தேக்கினாள்.
“ஹும்” திரும்பி நின்றான்.
“நான் வரேன் பட் கல்யாணத்துக்கு வரேன். அதும் ஒரு நாள் மட்டும் தான்” என்றாள்.
“நோ வே.. ஒரு மாதம் நீ எங்க கூட வந்து தங்கணும்..”
“லீவ் தர மாட்டாங்க”
“அதை நான் பார்த்துக்குறேன். நீ கிளம்பி இரு” என்றவன் போக, மீண்டும் அவனை தேக்கினாள்.
“வாட்?”
“அது..” என்று தடுமாறியவள், “நான் யாருன்னு நீங்க யார் கிட்டையும் சொல்லக் கூடாது” என்றாள்.
“அதெப்படி முடியும்?”
“இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா நான் உங்க கூட வரேன்.. இல்லன்னா நான் எங்கயும் வரல.. இனி நீங்க என்னை தேடி வரவும் கூடாது” என்றாள் ஒரேடியாக.
அவனுக்கு அவளின் கண்டிஷனை மீற முடியவில்லை. சரி என்று தலையை ஆட்டியவன் கிளம்பி விட்டான். ஒரு மாத மெடிக்கல் லீவ் அப்ளை செய்து விட்டு கதிரவனோடு ஊருக்கு பயணம் ஆனாள் பனிநிலவு.





