தன்னை வெறுத்து தூக்கிப் போட்டவரின் முன்பு தன் கண்ணீரை காட்ட விரும்பாமல், தாயை போல திடமாக இருந்துக் கொண்டாள்.
அந்த நேரம் கதிரவன் இப்படி ஒரு கேள்வி கேட்க, கதிரவனை தீர்க்கமாக பார்த்தா பனிநிலவு,
“எனக்கு வேணும் கதிரவன்.. நான் தான் அவருடைய பேத்தின்னு இந்த ஊருக்கு சொல்லணும்.. என் அம்மா அப்பாவோட தூய்மையான காதலுக்கு தான் நான் பிறந்தேன்னு இந்த ஊருல இருக்குற அத்தனை பேருக்கும் தெரியணும். நான் அசிங்கம் இல்ல.. அவமானம் இல்லன்னு இந்த மனுசனுக்கு உரக்க சொல்லி தெரியப்படுத்தணும். குடும்ப கெளரவம்னு சொல்லி என்னை என் பெத்தவங்கக்கிட்ட இருந்து பிரிச்சு எங்கயோ தூக்கிப் போட்ட இந்த பெரிய மனுசனோட முதல் பேத்தி நான் தான்னு ஒவ்வொருத்தருக்கும் தெரியணும்.. நான் இவரோட பேத்தின்னு இந்த ஆளும் என்னை ஏத்துக்கணும்” என்றாள் அத்தனை நிமிர்வாக.
“எனக்காக இதை செய்வீங்களா மாமா?” என்று கேட்ட பனியை ஆழ்ந்த புன்னகையுடன் பார்த்த கதிரவன்,
“யக்கா உன் பொண்ணுன்னு நிரூபிச்சுட்டா...” என்றான் கதிரவன். அந்த சொற்களில் அத்தனை உணர்வுகள் கொட்டி கிடந்தது. குரல் கூட பிசிறியது அவனுக்கு.
எங்கே இவள் அவரை பார்த்து பயந்து அழுது இங்கிருந்து எழுந்து விடுவாளோ என்று உள்ளுக்குள் கலங்கி போய் இருந்தான் கதிரவன். ரேவதி சேகரனுக்கும் கூட அந்த கலக்கம் இருந்தது. ஆனால் அந்த கலக்கத்தை எல்லாம் நொடியில் துடைத்துப் போட்டு விட்டு அத்தனை கம்பீரமாக தன் உரிமையை நிலை நாட்ட கேட்டவளை உணர்வுகள் பொங்க பார்த்தார்கள் ரேவதியும் சேகரனும்.
“நீ கேட்டு நான் இல்லன்னு சொல்லிடுவேனா கண்ணம்மா..” என்று சிரித்த கதிரவன்,
“மாதவா” என்று அவன் புறம் கையை நீட்டினான்.. அவர்களுடன் தானே அவனும் அமர்ந்து இருந்தான். நண்பனின் அழைப்பை புரிந்து, அவனது கையில் ஒன்றை வைத்தான்.
அதை வாங்கி பனியிடம் நீட்டினான்.
“உன் கையாள அந்த பெரிய மனுசனுக்கு குடு” என்றான்.
பனி என்ன ஏது என்று எதுவும் கதிரவனிடம் கேட்காமல் தன்னை வெறுத்து தூக்கிப் போட்ட தாத்தாவிடம் நீட்டினாள்.
“வாங்கிக்கங்க பெரியவரே.. பிரிச்சு படிச்சு பாருங்க.. நீங்க தான் தலைமை தாங்கனும்” என்றான் நக்கலாக.
“என்ன மாப்பிள்ளை அது” என்று கேட்ட சேகரனுக்கும் ஒன்னும் புரியவில்லை.
எல்லோருக்கும் மாதவன் ஒரொரு பத்திரிக்கையை நீட்டினான்.
“தொலைந்துப் போன என் பேத்தி மறுபடியும் கிடைத்து விட்டாள். அந்த மகிழ்ச்சியை கொண்டாட தான் இந்த விழா. அதோடு அவளை நம் உறவுகளுக்கும் நட்புக்கும் சொந்தத்துக்கும் பந்தத்துக்கும் அறிமுக செய்து வைக்கும் விழாவாக இந்த அறிமுக விழா ஏற்பாடு செய்து இருக்கிறேன். விழாவில் கலந்து கொள்ளும் அத்தனை பேருக்கும் வெள்ளி காயின், குங்கும சிமிழ், பட்டுப்புடவை, வேட்டி சட்டை என பரிசுகள் வழங்கப்படும்.
வந்த அனைவரும் மனமார என் பேத்தியை ஆசீர்வாதம் செய்துவிட்டு விருந்து உண்டுவிட்டு பரிசு பொருளையும் வாங்கி செல்லலாம்..” என்று பத்திரிக்கையில் உள்ளதை கதிரவன் அப்படியே மனப்பாடமாய் சொல்ல,
ரேவதிக்கும் சேகரனுக்கும் கண்கள் கலங்கியது.
“கதிரவா” என்று இருவரும் அவனை அணைத்துக் கொண்டார்கள் கண்ணீருடன்.
“எப்படா இந்த ஏற்பாடு எல்லாம் செய்த” சேகரனுக்கு அத்தனை நெகிழ்வாக இருந்தது. ரேவதியை பற்றி சொல்லவே வேண்டாம். அத்தனை ஆர்பரிப்பு அவருக்குள் தம்பியின் ஏற்பாட்டை பார்த்து.
“நிலா எப்போ என் கூட வர ஒத்துக்கிட்டாளோ அப்பவே எல்லாமே ப்ளான் பண்ணிட்டேன் மாமா.. என்ன தான் அவ நம்ம பிள்ளை என்றாலும் ஊரு உறவுக்கு அறிமுகம் செய்து வைக்கணும் இல்லையா? அது தான் அறிமுக விழா ஏற்பாடு செய்துட்டேன். உங்க அப்பா தான் இந்த விழாவை ஏற்பாடு செஞ்சதா பத்திரிக்கையில போட்டு இருக்கேன். தலைமை தாங்கி ஆகணும். ஏன்னா நாளையில இருந்தது எல்லோருக்கும் பத்திர்க்கை வைக்க போறேன். சோ ஊர் கௌரவத்தை தூக்கி பிடிக்க வாச்சும் உங்க அப்பா வர தான் செய்யணும்” என்றான் பெரியவரை ஏளனமாக பார்த்து.
“இதுக்கு ஒரு காலும் நான் சம்மதிக்க மாட்டேன்”
“அப்போ நீங்க ஊருக்குள்ள சொன்ன கட்டுக்கதை எல்லாம் பொய்யா போயிடாதா பெரியவரே.. என்னென்ன சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா நஞ்சமா.. உங்க பேத்தியை யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க, காணாம போயிடுச்சு, அது இதுன்னு அளந்து விட்டு இருக்கீங்களே.. இப்போ பேத்தி வந்த பிறகு நீங்க அவளை ஏத்துக்கலன்னா நீங்க தான் அவளை எங்கோ கொண்டு விட்ட மாதிரி தூக்கி போட்ட மாதிரி பேச்சு வராது..” நக்கலாக கேட்டான் கதிரவன். அவர் பல்லைக் கடித்தார்.
“வேற வழியில்ல பெரியவரே.. இன்னும் ஒரு வாரத்துல அறிமுக விழா. அதுக்குள்ள எப்படி பேசுறது என்ன பேசுறதுன்னு முடிவு பண்ணிக்கோங்க.. ஏன்னா ஸ்பீச் குடுக்க போறது நீங்க தான்” என்றான்.
பட்டென்று தன் கையில் இருந்த பத்திரிக்கையை தூக்கி போட்டு விட்டு அவர் எழுந்து போய் விட்டார். தன்னை கட்டிப்போட்டது போல வைத்து காய் நகர்த்தும் கதிரவனை எதுவும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்து விட்டு வந்து விட்டார் வெளியே.
முன்பு அவனை சிறுவன் என்று ஒதுக்கி வைத்து விட்டு ஆடிய ஆட்டம் எல்லாம் இப்பொழுது ஆட முடியுமா என்ன.. ஆளும் தோரணையும் கம்பீரமுமாக ஆறடிக்கு மேல் இருந்தவனிடம் காட்ட முடியுமா? அடங்கி தான் போகணும். இல்லை என்றால் ஒரேடியாக அடக்கி வைத்து விடுவான் கதிரவன் என தெரிந்து அவ்விடத்தை விட்டு போய் விட்டார்.
நெஞ்சு நிறைந்துப் போனது ரேவதிக்கும் சேகரனுக்கும்.
“சாதிச்சுட்டடா மாப்பிள்ளை” என்று நெஞ்சரா தழுவிக் கொண்டார் கதிரவனை. ரேவதியும் அணைத்துக் கொண்டார் தம்பியை கண்ணீருடன்.
அதை மகிழ்வுடன் பார்த்தான் மாதவன். பனிநிலவு இரு கையையும் கட்டிக் கொண்டு தன் மாமனை பார்த்து நின்றாள். அவளின் கண்களில் அத்தனை கோவம் இருந்தது.
பின்ன ஒரு மாதத்தில் துளசி கல்யாணம் முடித்த உடனே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அழைத்து வந்தவன் என்னென்ன வேலை எல்லாம் செய்து வைத்து இருக்கிறான் என பார்க்கையில் கோவம் வந்தது பனிக்கு.
அதையும் மீறி அவன் தன் மீது கொண்டுள்ள அன்பு எத்தகையது என்று புரிய உள்ளுக்குள் அத்தனை ஆர்பாட்டம், அத்தனை அலைமோதல்கள்.





