“சரி சரி நேரமாச்சு.. துளசியை கொண்டு போய் அவளோட வீட்டுல வீட்டுல விடணும்” என்று ரேவதி பரபரக்க, அதன் பிறகே சூழ்நிலை புரிந்தது அனைவருக்கும்.
“இருந்தாலும் நீ சாதிச்சுட்டடா மாப்பிள்ளை” என்று சேகரன் மீண்டும் ஒரு முறை கதிரவனை கட்டி பிடித்துக் கொண்டார்.
அதை பார்த்த ரேவதி,
“போதும் போதும் போய் கிளம்புங்க நீங்களும் நானும் தான் அங்க தங்குற மாதிரி இருக்கும்” என்றார்.
“உன் அக்காவுக்கு பொறாமையை பத்தியா?” கிண்டல் பண்ணி சிரிக்க, அவர் முறைக்க என இடமே கொஞ்சம் இலகுவாக மாறியது.
அத்தனை ஆர்பாட்டத்திலும் கதிரவனின் பார்வை அவனின் நிலவிடம் தான் இருந்தது.
பனி அமைதியாக நின்று அவனை தான் வெறித்துப் பார்த்தாள். அவளின் பார்வையில் பெருமூச்சு விட்டவன்,
“வா” என்று அவளிடம் கையை நீட்டினான். அவள் வர மாட்டேன் என்று தலையை ஆட்டி விட்டு வெளியே ஓடி விட்டாள்.
“இவ ஏன் இப்போ இப்படி ஓடி போறா?” ரேவதி கேட்க,
“கொஞ்சம் இலகுவா ஆகட்டும். ரொம்ப இறுக்கமா இருப்பா இல்லையா? அவளுக்கு எல்லாமே உடனடியா ஏத்துக்க முடியாதுல்ல.. கொஞ்சம் ஆறப்போடுவோம். இவ்வளவு தூரம் உன் மக தாக்கு பிடிச்சதே பெருசு.. தொந்தரவு பண்ணாத.. நீ கிளம்பு துளசி வீட்டுக்கு” என்ற கதிரவன் நடப்புக்கு இழுத்து வேலையில் ஆழ்த்தினான்.
துளசி எல்லோரையும் விட்டு பிரியும் வேளை கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை. அதுவும் கதிரவனை கட்டிக் கொண்டு அவள் அழுத அழுகை பார்த்த எல்லோருக்கும் அவ்வளவு வேதனையாகப் போனது.
சமாதனம் சொல்லி அவளுக்கு எடுத்து வைத்த சீர் பண்ட பாத்திரம் உடைகள் என எல்லாமும் அவர்களின் காருக்கு பின்னாடி போனது.
கதிரவனும் உடன் வந்தான்.
“நீ எதுக்குடா தம்பி” என்று கேட்ட ரேவதிக்கு சிரிப்பை மட்டும் கொடுத்தான்.
காரை விட்டு இறங்கிய துளசி திரும்பி பார்க்க, மங்கை, சிங்காரம், ரேவதி, சேகரன் நால்வரோடு கதிரவனும் வந்து இருப்பதை பார்த்து கண்கள் கலங்கியது.
“அண்ணா” என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டாள்.
“இதுக்கு தான் வந்தியாக்கும்” என்று கேட்ட ரேவதி இருவரையும் அணைத்துக் கொண்டார்.
“சரி சரி போதும் உள்ள போங்க” மங்கை சிடுசிடுக்க, அதை கண்டு கொள்ளவில்லை யாரும். அதன் பிறகு சிறிது நேரம் இருந்த கதிரவன் துளசியை இரவுக்கு ஏற்பாடு பண்ண அழைக்கவும்,
தங்கையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான். “நாளைக்கே நம்ம வீட்டுக்கு அழைக்க வருவோம் துளசி அழக்கூடாது..” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
வீட்டுக்கு வந்த பொழுது இரவு உணவு முடிந்து பலர் கிளம்பி இருந்தார்கள். சேகரனின் அப்பா குடும்பமும் கிளம்பி இருந்தது.
அதே போல கலாவின் பிறந்த வீட்டு குடும்பமும் சிங்காரத்தின் உடன் பிறந்தவர்கள் பெற்றவர்கள் என எல்லோரும் கிளம்பி இருந்தார்கள். அக்கம் பக்கத்தினர், அங்காளி பங்காளி என கிளம்பி இருக்க,
காமாட்சியின் பிறந்த வீட்டு சொந்தம் மட்டும் இங்கேயே இருந்தது. அது போல மங்கையின் பிள்ளைகள் இருவரும் இங்கே தான் இருந்தார்கள். தனியாக இருக்க கமாட்சி விடவில்லை.
கதிரவன் உள்ளே வரவும்,
“வாப்பா சாப்பிடு” என்று அழைத்தார் காமாட்சி.
“நிலா சாப்பிட்டாளா?” கேட்டான்.
“கூப்பிட்டேன் ப்பா வேணான்னு சொன்னா.. அது தான் இந்த வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா போய் ஊட்டி விடலாம்னு இருக்கேன்” என்றார்.
“எது ஊட்டி விடுறாரா?” கலா திகைத்துப் போனார். இன்னும் செய்தி யாருக்கும் தெரியவில்லை பனி ரேவதியின் மகள் என்று. அதனால் திகைத்தார்.
“நீங்க தட்டுல போட்டு குடுங்க நான் பார்த்துக்குறேன்” என்றவன் வாங்கிக் கொண்டு மேலே சென்றான்.
அவள் அறையில் இல்லை. மொட்டைமாடியில் தான் இருப்பாள் என்று உணர்ந்து அங்கே சென்றான்.
அங்கே இருளை வெறித்துக் கொண்டு நின்று இருந்தாள் பனி.
“இந்த இருட்டுல என்னடி பண்ற?” கேட்டுக் கொண்டே கொண்டு வந்ததை ஓராமாக வைத்து விட்டு அவளிடம் வந்து நின்றான்.
“நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன?” என்று கேட்டவளின் குரல் அழுகையை அடக்கி இருந்தது.
“இப்போ எதுக்கு இந்த அழுகை” அழுத்தமாக கேட்டான்.
“அழக் கூட எனக்கு உரிமை இல்லையா?” ஆத்திரமாக கேட்டாள்.
“ப்ச் எதுக்குடி கத்துற?”
“நான் அப்படி தான் கத்துவேன் அழுவேன்..” என்றவள் அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்து,
“என்ன மொத்தமா மாத்திட்டீங்கள்ள” வேதனையுடன் கேட்டாள்.
“பிடிக்கலையா?” ஒரே வார்த்தை தான் கேட்டான். ஆனால் அதில் இருந்த வீரியம் அவளுக்கு புரிய, அவனின் சட்டையயை கொத்தாக பற்றி தன்னருகில் இழுத்துக் கொண்ட பெண்ணவள்,
“பிடிச்சுருக்கு.. பிடிச்சுருக்கு.. இந்த மாமனை மட்டும் தான் ரொம்ப பிடிச்சு தொலையுது.. எனக்கு வேற யாரும் வேணாம். என் மாமா மட்டும் போதும்னு கத்தணும் போல இருக்கு” என்று குமுறினாள்.
“அப்போ எதுக்குடி அழுகுற” அவளின் தலையை இழுத்து தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்.
“எதுக்கு அழுவுறேன்னு எனக்கே தெரியல.. ஆனா அழனும் போல இருக்கு” என்றவள் மூக்கை அவனின் சட்டையிலே துடைத்துக் கொண்டாள்.
அதில் சின்ன சிரிப்பு வர,
“ஓவர் எமோஷனல் ஆகிட்ட” என்றவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அமைதியாக நின்றான். இவளும் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அவனின் கைப்பிடியில் நின்றுக் கொண்டாள்.
நேரம் அது பாட்டுக்க செல்ல, லேசாக குளிர் எடுக்க ஆரம்பித்தது.
“பசிக்கலையா?” கேட்டான்.
“ம்ஹும்..”
“தூக்கம் வரலையா?”
“ம்ஹும்..”
“சேலை மாத்தலையா?”
“ம்ஹும்” என அவன் கேட்ட எல்லா கேள்விக்கும் அவன் மீது ஒய்யாரமாக சாய்ந்துக் கொண்டே அவள் ம்ஹும் கொட்ட, கதிரவனின் அழுத்தமான உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.
“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசமாம்..”
“தெரியல” என்றாள்.
“யாரோ கால் வலிக்கிறது, கை வலிக்கிறது உதடு வலிக்கிதுன்னு சொன்னாங்க” என்றான்.
“இப்பவும் வலிக்கிறது தான். ஆனா உங்க நெஞ்சு மேல இப்படி சாஞ்சுட்டு இருக்கிற இதம் தனியா நின்னா கிடைக்காது இல்லையா?” அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னவளின் அன்பில் நிறைந்தவன், பட்டென்று அவளை இரு கையிலும் தூக்கிக் கொண்டான்.
அவள் அதிரவெல்லாம் இல்லை. அவளுக்கு வேதனை என்றால் முதலில் துடைக்கும் கரம் அவனது தானே. வாகாக அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு அவனின் கையில் இருந்தாள்.





