கங்குவன் போன பிறகு அவ்விடத்தில் மயான அமைதி நிலவியது. என்ன சொல்ல முடியும் ஏது சொல்ல முடியும். இந்த நேரத்தில் எது பேசினாலும் அது தவறாகவே போகும் என்று புரிந்துக் கொண்ட பெரியவர்கள்,
“நாளைக்கு எல்லோருக்கும் வேலை இருக்கே.. சீக்கிரம் தூங்குங்க.. காலையில வெள்ளனவே இங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாம்” என்று பாட்டி சொல்ல, அது சரியாக பட, அனைவரும் அவரவர் அறைக்கு சென்று படுத்துக் கொண்டார்கள்.
எடுத்துட்டு போன ட்ரிங்க்ஸ் யாரும் தொடாமல் அப்படியே இருந்தது கேட்பாரற்று.
இங்கே வீட்டுக்கு வந்த கங்குவனோ தன் மகனின் மனதில் தாயாய் இடம் பிடித்து இருந்தவளை எப்படி அழிப்பது என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டான்.
“நீ எதுக்காக அவளை அம்மான்னு சொன்ன?” மொட்டையாக கேட்டான். ஆனால் அவனின் மகனோ,
“மாமா தானே சொன்னாங்க எல்லாமே செஞ்சா அவங்க தான் அம்மான்னு. எனக்கு எல்லாமே செஞ்சது வேரல் அம்மா தானே.. அது தான் சொன்னேன்” என்று தெள்ளதெளிவாக மகன் உரைக்க,
“அது அப்படி இல்லடா” என்று அவனுக்கு புரிய வைக்கப் பார்க்க,
“நீங்க எதுவும் பேச வேண்டாம். நான் பிக்ஸ் ஆகிட்டேன். வேரல் தான் என்னோட அம்மா. எனக்கு தூக்கம் வருது.. நான் போறேன்” என்று அவனது அறைக்குள் நுழைந்து தூங்க ஆரம்பித்து விட்டான்.
கங்குவனுக்கு தலை இடியாய் போனது. ஆட்டோமேட்டிக்கா அவனின் கால்கள் ட்ரிங்க்ஸ் இருக்கும் இடத்துக்கு நகர, கண்மண் தெரியாத அளவுக்கு குடித்தான்.
உள்ளமெல்லாம் அப்படி ஒரு நமைச்சல். என்னவோ குற்றம் செய்து விட்டது போல ஒரு உணர்வு. அவளை தண்டிக்கும் பொழுது கூட ஏற்படாத குற்ற உணர்வு அவளை உரிமையாக மகன் பார்க்கும் பொழுது வந்தது.
இளந்திரையன் சொல்லும் பொழுது கூட விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டான். ஆனால் தன் பிள்ளையின் மனதில் துளிர் விட்ட பேராசையை அகற்ற முடியாமல் தடுமாறி போய் மதுவின் உதவியை நாடினான்.
என்ன செய்ய என்ன செய்ய என்று தலையை பிடித்துக் கொண்டவனுக்கு ஆத்திரத்துக்கு மேல் ஆத்திரம் வந்தது. முரளியின் முன்பும் இளமாறன் முன்பும் தான் கூனி குறுகி நின்றது கண் முன் வர அவனது கோவம் இன்னும் பெருகியது.
இதற்கு எல்லாம் காரணம் அவ தான் என்று குடி வெறியில் தவறாக எண்ணி வேரலின் எண்ணுக்கு போனை போட்டான்.
தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டு இருந்தவளுக்கு கங்குவனிடம் இருந்து அலைப்பு வர வேகமாக எடுத்து காதில் வைத்தாள். வைத்த அடுத்த நொடி கங்குவனிடம் இருந்து கெட்ட வார்த்தை வந்தது.
அதை கொஞ்சமும் எதிர் பாராதவள் திகைத்துப் போய் விட்டாள்.
“மிஸ்டர் கங்குவன்” என்று அவள் அதிர,
“வாயை மூடுடி டேஷ்” என்று சொன்னவன், “ஆமா உன் மனசுல உன்னை பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. பெரிய மாதர் தெரசான்னா.. அப்படி ஒரு நினைப்பு இருந்தா உன் எண்ணத்தை மாத்திக்க. நீ அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த்தே இல்ல” என்று சம்மந்தமே இல்லாமல் அவளிடம் பேசினான்.
“கங்குவன்”
“என் பேரை சொன்ன உன்னை கொன்னுடுவேன்டி.. உனக்கு என்ன தகுதி இருக்குன்னு என் பேரை சொல்ற.. இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்காக என் மகனோட நெருங்கி பழகுன.. அவனை வச்சு என்னை மயக்கி என்கிட்டே இருக்க ஸ்கூல் எல்லாத்தையும் வளைச்சு போட்டுக்கவா, இல்ல என் பாடியை பாத்து மயங்கி என் கூட படுக்கவா..?” நாராசமாக அவன் கேட்க, பட்டென்று போனை வைத்துவிட்டாள்.
அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை கூட கேட்க முடியவில்லை. அவனிடம் இருந்து விடாத அழைப்பு வர, ஒரு கட்டத்துக்கு மேல் போனை ஆப் பண்ணி விட்டு விட்டு கண்களில் வழிந்த கண்ணீருடன் அந்த நெடு இரவை தனித்து கடந்து வந்தவள், சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு எல்லோரும் வருவதற்கு முன்பே கிளம்பி ரெடியாக இருந்தாள்.
அவளின் விழிகள் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது. வந்த மற்றவர்கள் அவளின் முகத்தை பார்த்து எதையும் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அதன் பின்பு கிளம்பி அவரவர் வேலைக்கு செல்ல ஸ்கூலுக்குள் நுழைந்தவளுக்கு தலைவலி உயிரை எடுத்தது. இரவெல்லாம் ஒரு பொட்டு கூட தூங்காதது அவளை மிகவும் சோர்வுற செய்து இருக்க, மேசை மீது கவிழ்ந்துக் கொண்டாள்.
கவிழ்ந்த அடுத்த நொடி அவளின் விழிகளில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. என்ன முயன்றும் அவன் பேசியது அவளின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவன் மீது துளிர்த்த நேசத்தில் அவனே அமிலத்தை ஊற்றி இருந்தான்.
அவன் சேர்த்து வைத்த சொத்துக்காகவா அவன் மீது நேசம் பிறந்தது. இல்லை அவன் கட்டுமஸ்த்தான உடலமைப்பை பார்த்தா அவள் நேசம் கொண்டாள்.. இல்லையே.. அவன் மீது துளிர்த்த நேசத்துக்காகவா அவன் பிள்ளை மீது நேசம் கொண்டாள். எதுவும் இல்லையே.. இருவரின் மீதும் அவளுக்கு ஏற்பட்ட நேசத்துக்கும் பாசத்துக்கும் காரணமே இல்லையே..
காரண காரியம் பார்த்துக் கொண்டா நேசமும் பாசமும் பிறக்கும். அதை அறியாத மானிடனிடம் வைத்த காதலை எண்ணி அழுது கரைந்தாள்.
அந்த நேரம் முரளியிடம் இருந்து போன் வர, பட்டென்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு “அப்பா” என்றாள்.
மகளின் குரல் லேசாக பிசுறு அடிக்க,
“என்னடா கண்ணா குரல் ஒருமாதிரி இருக்கு..?” பதறிப்போய் அவர் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. நேத்திக்கு பனியில உட்கார்ந்து இருந்ததுனால இருக்கும்.. மத்தபடி ஐ ஆம் ஓகே தான் டேடி” என்றாள்.
“அப்பா நேர்ல வரவாடா?”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் ப்பா.. ஸ்கூல்ல ஒர்க் இருக்கு. அதோட இன்னைக்கு மத்தியம் ஒரு மீட்டிங் இருக்கு.. ஸ்கூல் டூர் போறதை பத்தி பேசணும்” என்றாள்.
“அப்படியா? நான் மத்தியம் புது படத்துக்கு டிக்கெட் ரிசேர்வ் பண்ணி இருக்கேன்டா” என்றார்.
“சரிப்பா நான் வரேன். மீட்டிங்கை பியே பார்த்துக்கட்டும்” என்று சொல்ல, தகப்பனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
“சரிடா” என்றவர் மத்தியம் அவரே வந்து அவளை பிக்கப் பண்ணிக்கொண்டு போனார்.
இங்கே மீட்டிங்கில் அவளை எதிர்பார்த்து இருந்த கங்குவன் அவள் வராமல் போக காரணமே இல்லாமல் அவனுக்குள் சினம் துளிர்த்தது.
நேற்றைக்கு அத்தனை முறை அவளை அழைத்தும் அவள் பேசாமல் போனதில் ஆத்திரம் இன்னும் கூடிப் போய் இருந்தது. அதற்கு ஏற்றார் போல இந்த மீட்டிங்கை அவள் தவிர்த்து இருக்க ஏகத்துக்கும் உச்சிக்கு ஏறியது கோவம்.
தகப்பனோடு அவள் படம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அவளுக்கு அழைப்பு விடுத்தான் கங்குவன். யார் என்று பார்த்தவள், கங்குவன் என்று வர, போனை சைலண்டில் போட்டு விட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
முரளி ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. அவளின் கைப்பேசியில் வெளிச்சம் வந்துக் கொண்டே இருந்தது. அதை உணர்ந்தவருக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.




