--
நிமிர்ந்துப் பார்த்த வேரலின் கண்ணில் பட்டது என்னவோ கங்குவன் தான். ஒரு கணம் மெலிதாக அதிர்ந்துப் போனவள் பட்டென்று தலையை குனிந்துக் கொண்டாள்.
“ச்ச.. என்ன இது இப்படி ஆகிப்போகுது” தலையை உலுக்கிக் கொண்டவள் அதன் பிறகு யாரையும் தலை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. உள்ளுக்குள் அத்தனை பதட்டம் கொண்டாள் அவள்.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கொஞ்சமும் எதிர் பாராதவளுக்கு என்னவோ போல ஆனது. ஒருவித படபடப்பு அவளை தொற்றிக் கொண்டது.
“என்ன ம்மா பண்ற..?” மாப்பிள்ளையின் அம்மா அவளை விசாரிக்க,
இவள், “ஸ்கூல் வச்சு நடத்திட்டு இருக்கேன்” என்றாள்.
அதை கேட்டு அசூசை ஆனவர், “நீயும் உங்க அப்பா மாதிரி பிசினெஸ் பண்ணலாம்ல.. அதுல தானே காசு பணம் வரும்.. இதுல என்னத்தை வரும்.. வெறும் சேவைக்காக நடத்த இது ஒன்னும் செர்வீஸ் சென்ட்டர் இல்லையே.. கோடியை கொட்டி இன்வெஸ்ட் செய்யணும் அதே போல கோடியா கோடியா அள்ளனும்.. அது தான் பக்கா பிசினெஸ்.. என் மகன் அப்படி தான் பண்ணிட்டு இருக்கான். அவன் கிட்ட பிசினெஸ் செய்ய கத்துக்க.. பத்து போட்டு ஆயிரம் அள்ளுவான்” என்றார் பெருமையாக.
அவரின் பேச்சு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை வேரலின் குடும்பத்தார்களுக்கு.
ஆனால் வந்திருந்தவர்களோ அந்த அம்மாவுக்கு ஒத்து ஊதிக் கொண்டு இருக்க, வேரலுக்கு தலைவலியே வந்து விட்டது.
தன் தாயை பாவமாக பார்த்தாள்.
“கொஞ்ச நேரம்டா” என்று அவர் சமிக்ஷை செய்ய, சிணுங்கியபடி தலையை குனிந்துக் கொண்டாள்.
“சும்மா சும்மா தலையை குனியாம எல்லோருக்கும் டீ காபி எடுத்து குடும்மா.. அப்பா தானே தெரியும் நீ எங்க வீட்டுக்கு ஏத்தவளா இல்லையான்னு.. நீ குடுக்குற விதத்துலையே நான் கண்டு பிடுச்சிடுவேன்” என்று அந்த அம்மா பெருமை பீத்திக் கொள்ள, வேரலுக்கு செம்ம கடுப்பானது.
ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக எல்லோருக்கும் காபியை நீட்டினாள். யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. தலையை குனிந்தபடி எல்லோருக்கும் குடுத்து முடித்தவள், சரியாக கங்குவனிடம் வரும் பொழுது தானாகவே அவளின் தலை நிமிர்ந்து அவனை பார்த்தது.
“இதென்னடா மறுபடி மறுபடி இப்படியே நிகழுது” தன்னை கடிந்துக் கொண்டு சட்டென்று தலையை குனிந்துக் கொண்டாள்.
கங்குவன் பெருமூச்சு விட்டபடி அவள் நீட்டிய காபியை எடுத்துக் கொண்டான்.
“இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல” என்று இளந்திரையன் ஆரம்பிக்க,
“வாயை திறந்த உன்னை கொன்னுடுவேன்டா” பல்லைக் கடித்தான் கங்குவன்.
“இல்ல உன் லைப்ல ஒரு லைட்டை ஏத்தி வைக்கலாம்னு பார்த்தேன். பேட் நீ சரியான ட்யூப் லைட்டா தான் இருப்பேன்னு இருக்க.. ஒன்னும் பண்ண முடியாது” என்றான் இளந்திரையன்.
“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்”
“அப்படி எல்லாம் பட்டுன்னு சொல்லிடக் கூடாது மாமூ”
“மாமூன்னு சொன்ன உன்னை தொலைச்சுடுவேன்டா”
“சரி விடுடா மாப்பிள்ளைன்னு சொல்லிக்கிறேன்”
“திருந்த மாட்டியாடா நீ” அவனிடம் எகிறினான்.
“வாய்ப்பு இல்லடா”
“கொஞ்சமாச்சும் பொறுப்பு உள்ள அண்ணனா நடந்துக்கடா”
“அதனால தான்டா உன் கிட்ட இவ்வளவு மூச்ச போடுறேன். நீ தான் செவிடன் காதுல ஊதுற சங்கு போல எந்த ரியாக்ட்டும் பண்ணாம இருக்க”
“வந்தவங்களை கவனிடா”
“இவனுங்களுக்கு இதுவே போதும். பொறுக்கி பிள்ளையை பெத்து வச்சுட்டு அந்த பொம்பளைக்கு பேச்சை பாரு.. இந்தம்மா பேசுற பேச்சுக்கு அவனை இன்னும் நல்லா வச்ச செய்யணும்டா” கறுவினான்.
“விடுடா.. அவன் இன்னி யாருக்கும் இந்த மாதிரி அனுப்பாத மாதிரி ஒரு ட்ரீட்மென்ட் பண்ணிடலாம்.. நீ டென்ஷன் ஆகாத” நண்பனை தேற்றினான் கங்குவன்.
“கண்டிப்பாடா.. சாவடி அடிக்காம விடமாட்டேன்டா”
“ஓகேடா ஓகே..” சமாதனம் செய்தவன் தன் மகனை அருகில் வைத்துக் கொள்ள பார்க்க, அவனோ வேரலை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.
“ஆமா யாரு இந்த பொடுசு.. என்னவோ வேரல் தான் அவனை பெத்து போட்ட மாதிரி அவ முந்தானையை பிடிச்சுக்கிட்டே திரியுறான்..” அந்தம்மா மீண்டும் ஆரம்பிக்க,
கங்குவனுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது.
“சாம் கம் ஹியர்” என்று தன்னிடம் மகனை நேரடியாக அழைத்துக் கொள்ள,
அவனோ, நிமிர்ந்து வேரலை பார்த்தான்.
“என்கிட்டையே இருக்கட்டும்” என்று அவள் சொல்லி விட, கங்குவனுக்கு ஆத்திரம் பீறிக் கொண்டு வந்தது. ஆனால் சபை நாகரீகம் கருதி அமைதியாக போகவேண்டி வந்தது.
இலமாறனையும் முரளியையும் பார்த்து “சாரி சார்” என்றான் யாருக்கும் தெரியாமல்.
“இட்ஸ் ஓகே ப்பா” என்று அவர்கள் மிக பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள, கங்குவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.
அந்த அம்மா விடாமல் இன்னும் ஏதேதோ பேச, அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
“நான் கிளம்புறேன் சார்.. ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு.. சாமுக்கும் கிளாஸ் இருக்கு” என்று வலுக்கட்டாயமாக வேரலிடம் இருந்து சமரனை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டான்.
போகும் அவனை ஒரு கணம் பார்த்த வேரல் பின் தலையை குனிந்துக் கொண்டாள். அவளின் பார்வையை உணர்ந்த இளந்திரையன்
“சுத்தம்” தலையை உலுக்கிக் கொண்டவன், இதற்கு மேல் அவளை சபையின் நிற்க வைக்க மனம் வராமல்,
“வேரல் நீ ரூமுக்கு போ... இனி அப்பாவும் தாத்தாவும் பேசிக்குவாங்க” என்று அவளை அனுப்ப பார்த்தான். ஆனால் அதற்கும் அந்த அம்மா தன் தொண்டையை திறக்க,
“இதுக்கு மேல அவ என்னத்த அத்தை பேச போறா.. அதோட அவளை வச்சுக்கிட்டு நாம பேசுறதும் சரியா இருக்காது.. ஆமா தானே ப்பா” தகப்பனை பார்த்தான்.
“ஆமா திரையன்.. பிள்ளையை வச்சுக்கிட்டு என்ன பேசுறது.. கண்ணா நீ மேல போ.. நாங்க பெரியவங்க பேசிக்கிறோம்” என்று மகளுக்கு கண்ணை காட்டினர்.
“நான் கூட்டிட்டு போறேங்க” என்று மாளவிகா அவளுடன் கிளம்ப,
“நீ இரு மாளவிகா..” அவரை தடுத்து நிறுத்தப் பார்க்க,
“அவ போகட்டும் விடு.. அவ என்னத்தை பேச போறா.. நீ உன் அண்ணன் கிட்டயும் சித்தப்பா கிட்டயும் பேசு..” என்றார் பாட்டி பவித்ரா.
“அதுவும் சரி தான் என்ன தான் நாட்டுக்கே மேயர் னாலும் வீட்டுல பெட்டி பாம்பா அடங்கி தான் போகணும் இல்ல” என்று அதற்கும் நக்கல் செய்த அந்த அம்மாவை வெறுப்புடன் பார்த்தார்கள் வேரலின் குடும்பத்தார்கள்.
ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. வேரலோடு மாளவிக்காவையும் மேலே அனுப்பியதற்கு காரணமே இதற்கு மேல் அவரை டென்ஷன் பண்ண வேண்டாம் என்கிற நல்லெண்ணத்தில் தான்.
ஆனால் அதையே இப்படி ட்விஸ்ட் செய்த மாப்பிளை வீட்டார்களை கண்டு மலைத்துப் போய் நின்றார்கள் வேரல் வீட்டு ஆட்கள்.




