Notifications
Clear all

அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இங்க இருந்து போ... உன்னை காண காண என் ஏமாற்றம் தான் கண் முன் எழுந்து என்னை கொல்லுது...” என்று அவளை காண படிக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.

அவனது இந்த வார்த்தைகளில் உள்ளம் துடித்து போனவள் வெடித்து எழும்பிய கேவலை அடக்க முடியாமல் வாய் விட்டு கதறிவிட்டாள்.

“சாரி ஆதி... எனக்கு... நான்...” ஏதோ உளறியவளை கண்டு மனம் புண் பட்டவன்,

“உன்னை பார்க்காம இருந்தா என் மனம் ஆறும்னு நினைச்சேன்... ஆனா உன்னை பார்க்காம இருந்தா நானே காணாம போய்டுவேன் போல... இந்த தொல்லையை என்னால தாங்க முடியல மயூ... அதுல உன்னை ரொம்ப ஹெர்ட் பண்றேன்...”

“எனக்கு நான் என்ன பண்றேன்னே தெரியமாட்டிக்குது... எது பேசுனாலும், பண்ணினாலும் என்னை மன்னிச்சுடு...” என்று அவளது கண்ணீரை பார்த்து உள்ளம் உடைந்து பேசினான்.

அவனது பேச்சில் இன்னும் கதறி துடித்தவள் வேகமாய் வந்து அவனை அணைத்துக்கொண்டாள்...

“வேணாம் ஆதி... என்னை நீங்க என்ன வேணாலும் பண்ணலாம்... ஹெர்ட் பண்ற எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு... உங்களை என்னால எப்பவும் வெறுக்க முடியாது...” கண்ணீருடன் சொல்லி அவனது முகத்தை தன் கரங்களில் ஏந்தி சொன்னவளை காதலுடன் பார்த்தவன்,

“இந்த ஸ்டேட்மென்ட உன்னை பார்த்து சொல்ல எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா...? ஆனா அதை சொல்ல விடாம நீ என்னை தார வார்த்து குடுத்துட்ட... மனசு முழுக்க உன்னை சுமந்துக்கிட்டு இன்னொருத்தியை எப்படி நான் ஏத்துக்குவேன்...”

“மனசெல்லாம் வலிக்குதுடா... உனக்கு புரியுதா... என்னோட ஒவ்வொன்னுக்கும் நீ வேணும்டி..” தளர்ந்து போய் சொன்னவனை கண்ணீருடன் பார்த்தாலே தவிர, அவளால் வேறு எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் இருந்தாள்.

“நான் கண்ணு முழிக்கிறதே உன் முகத்துல தான்... அதுல இருந்து ஆரம்பிக்கிற என் பொழுதுகள் எல்லாவற்றிலும் நீ ஏதாவது ஒண்ணுல என் கூடவே இருப்ப... சாப்பாடு சாப்பிடுற நேரம், அலுவலகத்துல பையில் பாக்குற நேரம்.. என்னோட ட்ரைவிங் டைம்... ஸ்விம் பண்ற நேரம், டென்னிஸ் ஆடும் போது கம்பெனி குடுப்பதுன்னு சொல்லிட்டே போகலாம்...”

“ஏன் எனக்கு ஒய்வு தேவை படும் போதும் வாகா என் கைக்குள்ள அடங்கி இருப்பியே அந்த இனிமையான நேரத்தை மறுபடி எனக்கு உன்னால குடுக்க முடியுமா...? இப்போ இது எல்லாத்தையும் நான் மாத்திக்கணும்னா எப்படி என்னால மாத்திக்க முடியும்...”

“ஒண்ணு ஒண்ணுலயும் நீ என் கூட இருந்துட்டு இப்போ மொத்தமா போறேன்னு சொன்னா என்னால அதை எப்படி தாங்கிக்க முடியும்..”

“எஸ்... நான் அடங்காத குதிரை தான்.. யாரும் எனக்கு பொருட்டு இல்ல தான். ஆனா நீ எனக்கு வேணும்டி.. நீ இல்லன்னா நான் மண்ணுன்னு உனக்கு புரியலையா...? நீ எனக்கு அவ்வளவு முக்கியம்...”

“நீ தான் நான்.. ஆதி மட்டும் தான் நான்... என்னோட அந்தம் நீ... என்னோட ஆதி அந்தம் மொத்தமும் நீ தான்டி... உன்னை காதலிக்கிறேன்னு நான் சொன்னது இல்ல தான்... ஏன்னா நான் உன்னோட ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்...”

“என் உயிரோட ஓட்டமே நீ தான்... என் மைய புள்ளியே நீ தான்டி... நீ இல்லன்னா நான் செத்துடுவேன்லாம் என்னால சொல்ல முடியாது...”

“ஆனா நீ என்னை பிரிஞ்சா என் மூச்சு காத்து நின்னுடும் தேவிமா...” என்றவனின் கடைசி வரியில் உயிர் துடிக்க ஓடி வந்து அவனை இறுக்க கட்டிக்கொண்டவள், உதடு துடிக்க வெடித்து அழுதாள்..

“எனக்கு மட்டும் ஆசையா மாமா... உங்களை பிரியணும்னு... விதி...” என்று கதறியவள், அவனை இழுத்து தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்... 

“நீங்க இப்படி பேசுனா என்னால தங்க முடியாது தேவா... உங்களை பிரிஞ்சி நான் மட்டும் சந்தோசமாவா இருப்பேன்...”

“எனக்கு வேற வழியில்லயே... இது நடந்தே ஆகணும்... என் உயிர் மூச்சு ஆதி ஆதின்னு சொல்லிக்கிட்டு இருக்கு உங்களுக்கு கேக்குதா...? நான் பிறவி எடுத்ததே உங்க கூடா வாழ தான். ஆனா இடையில இப்படி ஒரு திருப்பம் வரும்னு, இந்த மூணு மாசத்துல நான் நினைச்சிக்கூட பார்த்தது இல்ல. ஆனா வந்துடுச்சு.”

“அதனால தான் இந்த பிரிவு... உங்களை மனசளவுல பிரிய என்னால முடியாது.. உடம்பு தான் தனி தனியா இருக்கே தவிர ரெண்டு மனசும் ஒண்ணா தான் இருக்கும். அதை நினைச்சுக்கோங்க மாமா...”

“நீங்க என்னை விட்டு தள்ளி போனாலும் என் பார்வை முழுசும் நீங்க மட்டும் தான். என் கவனம் முழுசும் உங்க கிட்ட தான் இருக்கும்... ப்ளீஸ் இந்த பிரிவை ஏற்றுக்கொள்ள பழகுங்க ஆதி... நமக்கு வேற வழி இல்ல..” என்று அவனது தலையில் கவிழ்ந்து அழுதவளை கண்டு பாரமாகியது ஆதி தேவனுக்கு.

அவளை கஷ்டப்படுத்தி பார்க்க மனம் வரவில்லை தான். ஆனால் அவனது இயல்பையும் மீறி அவளை தேடும் போதெல்லாம் மனது வாடி வதங்கி அவளையே காயப்படுத்தி தன் காயங்களை இன்னும் கீறி விட்டு ருசி பார்க்கிறது ஊமை மனது...

இதற்க்கு என்ன தான் தீர்வு என்று அலசியவனுக்கு அவளை விட்டு விலகுவது தான் சரியானதாய் இருக்கும் என்று எண்ணியவன் அவளை விட்டு தள்ளி இருக்க முடிவெடுத்துக்கொண்டான்.

ஆனால் அதை அவனால் செயல்படுத்த இயலுமா என்று பொறுத்து இருந்து தான் பாக்க வேண்டும்...

அவனது முடிவை அறியதவளோ அவனிடம் உடைந்து போய் அழுதுக்கொண்டு இருந்தாள்... இருவரது கண்ணீரையும் மௌன சாட்சியாய் பார்த்துக்கொண்டு இருந்தது உப்பரிகையில் படர்ந்த கொடியும், குளிர் வெண்ணிலாவும், அதனோடு இயைந்து வந்த மந்த மாருதமும்....

தூக்கம் வராமல் சீதா தோட்டத்தில் நடந்துக்கொண்டு இருக்க இருவரது சம்பாசனைகளையும் கேட்டுவிட்டார். கேட்ட நொடியிலிருந்து அவரது மனம் புண் பட்டு போனது...

அதன் பிறகு தனக்குள் நன்கு ஆலோசித்து ஒரு முடிவு எடுத்துக்கொண்டார்... அதன் பின்பே தூங்க சென்றார். சீதாவின் முடிவில் இருவரது காயங்களும் தீருமா...? இல்லை இன்னும் வலிக்க செய்யுமா...?

மயூவின் பேச்சில்... இருந்த ரணம் இன்னும் ஆழமாய் கீறி விடப்பட்டு இருந்தது ஆதிக்கு... அவனை பொறுத்த வரை அவள் அவனிடம் வந்து சேர்வது தான் அனைத்திற்கும் மருந்தாகும்..

இல்லையென்றால் அவள் என்ன சொன்னாலும், ஆதிக்கு அவனது காயங்களை கீறி விடுவது போலவே, பச்சை ரணமாய் என்றும் ஆறாமல் அப்படியே தான் இருக்கும்... அதை உணர்ந்தவன் மெல்ல அவளிடமிருந்து விலகிக்கொண்டு,

“சரி போய் படு... தூக்கம் வருது..” என்றவன் அறையின் உள்ளே சென்றுவிட்டான். அவனது இந்த ஒதுக்கம் மனதை பிசைய வேறு வழியில்லாமல் அவனோடு உள்ளே வந்தாள்...

வந்தவளின் கண்களில் அங்கிருந்த பிரம்மாண்டமான படம்  பட... சட்டென்று ஆதியை பார்த்தாள். அவனோ கண்களை மூடி படுத்துவிட்டான்.

அவளால் அந்த படத்திலிருந்து பார்வையை விளக்கிக்கொல்லவே முடியவில்லை... ஏதோ வசியம் செய்தது போல அவளது கண்கள் அந்த படத்திலே நிலைத்து நின்றது...

Loading spinner

Quote
Topic starter Posted : October 1, 2026 8:23 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top