Notifications
Clear all

அத்தியாயம் 20

 
Admin
(@ramya-devi)
Member Admin

“குழந்தை” தீரனிடம் அதிரல் கேட்க,

“இவனை வச்சுக்கிட்டு எப்படி ரெடி பண்ணுவ?” முறைத்தான். அவனது முறைப்பில் எதுவும் பேசாமல் தங்கை  தூங்கும் அறையை விடுத்து அதன் அருகில் இருந்த இன்னொரு அறையை ரெடி செய்தாள்.

படுக்கை தயார் செய்துவிட்டு வெளியே வர,

“என்ன இங்க தூங்கப் போறீங்களா?” தேவகி நெற்றிக் கண்ணை திறந்தார்.

“எனக்கு ஒன்னும் ஆசை இல்ல இங்க தூங்க. ஆனா என்னால கொஞ்சமும் முடியல தேவகி. ரொம்ப சோர்வா இருக்கு. படபடன்னு வருது” என்றார் ஆளவந்தான். உண்மைக்கும் அவரால் கொஞ்சமும் முடியவில்லை. காபியை பிடித்து கூட குடிக்க முடியவில்லை. பெரிதாக தடுமாறினார்.

“தீரன் காரை எடுத்துட்டு வந்தா நாம உடனே நம்ம வீட்டுக்கு போயிடலாமேங்க”

“உனக்கு புரியலயா.. என்னால தெம்பாவே உணர முடியல தேவகி. ரொம்ப பெயினா இருக்கு.  இதோட ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல” என்றவரின் குரலில் வலியின் வீரியம் அதிகம் தெரிந்தது.

“சரி அட்லீஸ்ட் டாக்டர் கிட்டயாவது போயிடலாம். ஆனா இங்க வேணாம்” என்றார் தேவகி.

“ப்ச் என்னை விட உனக்கு உன் கெளரவம் தான் பெருசா போச்சா?” கேட்டார்.

“அது இல்லங்க.. முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுல எப்படி?” என்று தேவகி தயங்க,

“ம்மா இவ நம்ம கம்பெனி ஸ்டாப் தான். அதானல ஒன்னும் யோசிக்காம அப்பாவை கொனஜ் நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க. நான் டாக்டருக்கு போன் போட்டு வர சொல்றேன்” என்று தீரன் சொல்ல, தேவகியை சட்டை செய்யாமல் அதிரல் காட்டிய அறையில் போய் படுத்து விட்டார் ஆளவந்தான்.

தேவகிக்கோ ஒன்றுமே செய்ய முடியாத நிலை. என்னவோ ஒரே நாளில் எல்லாமே தலைகீழாக நடப்படுது போல ஒரு உணர்வு.

அதுவும் தீரனின் கையில் இருக்கும் குழந்தையை காண காண அவரின் நெஞ்சுக்குள் என்னவோ ஒரு தவிப்பு. அதை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.

தாரா தீரனின் மடியில் இருந்த குட்டி தீராவோடு விளையாட, அதிரலுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தாள்.

“உன் வீட்டுக்காரர் எங்க? என்ன பண்றாரு..?” தேவகி அதிரலை பற்றி தெரிந்துக் கொள்ள துருவினார்.

இத்தனை வருடங்களின் இந்த ஒரு கேள்வி மட்டும் மாறவே இல்லை. என்று எண்ணிக் கொண்ட அதிரல் எல்லோருக்கும் சொல்லிய பொய்யை தேவகிக்கும் சொன்னாள்.

--

தேவகி திடுதிப்பென்று அதிரலின் கணவனை பற்றி கேட்க பெரிதாக அதிரவெல்லாம் இல்லை அவள். காரணம் கையில் மூன்று வயது பிள்ளையை வைத்துக் கொண்டு இளமையுடன் இருக்கும் எந்த பெண்ணையும் இந்த சமூகம் கேள்வி கேட்டு குடையாமல் அவ்வளவு எளிதாக விட்டு விடுமா என்ன?

பெருமூச்சு விட்டவள் எல்லோரிடமும் சொன்ன பொய்யை இவரிடமும் கூறினாள் நம்பும் படியே.

“என் வீட்டுக்காரர் ஒரு போலீஸ் ஆபிசெர் மேடம்.. க்ரைம் பிரான்ச்ல வேலை பார்க்கிறாரு.. அதனால எப்பவும் பிசியா தான் இருப்பாரு. வீட்டுக்கே எப்பாவாவது தான் வருவாரு. ஒரு கேஸை எடுத்துட்டாருன்னா அதுலையே மூழ்கி போயிடுவாரு. இந்த முறை டெல்லில இருந்து அவருக்கு இன்வைட் வந்து இருக்கு. ஏதோ மாபியா கேங்கை கண்டுப்பிடிக்கணுமாம். கிட்டத்தட்ட போய் ஒரு மாசம் ஆகப்போகுது. நேத்திக்கு கூட போன் பண்ணி வர ரெண்டு வாரம் ஆகும்னு சொன்னாரு” என்றாள்.

“ஓ..! உன் வீட்டுக்காரர் போலீஸ் ஆபிஸரா?” கேட்ட தேவகிக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“ஆமாம் மேடம்.. க்ரைம் பிரான்ச் ன்றதுனால அடிக்கடி வெளியூர் போற மாதிரி தான் இருக்கும். சில சமயம் வெளிநாடு கூட போயிட்டு வருவாரு. அதனால அவர் இல்லாத குறையை நான் தான் என் மகனுக்கு போக்கிக்கிட்டு இருக்கேன்” என்று தாராவின் மடியில் இருந்த மகனை வாஞ்சையுடன் பார்த்தாள் அதிரல்.

“ம்ம்” என்று கேட்டுக் கொண்ட தேவகிக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாவில்லை. மௌனமாக இருந்துக் கொண்டார்.

ஆனால் அதிரலின் பேச்சை கேட்ட தீத்திரள் தீரனுக்கு தான் நெஞ்சை என்னவோ செய்தது. ஏன் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

நிமிர்ந்து அதிரலின் முகத்தை பார்த்தான். அவளின் மொத்த பார்வையும் அவளின் மகனின் மீது மட்டுமே இருந்தது.

தாராவிடம் இருந்த குழந்தை அவளிடம் தாவ வர, வேகமாய் அவனை வந்து வாங்கிக் கொண்டாள்.

தாயிடம் வந்த குழந்தை “ம்மா ங்கா..” என்று அவளின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு புரட்டி எடுத்தான்.

அவனின் செயலை கண்ணெடுக்காமல் பார்த்த தீத்திரள் தீரனின் பார்வையில் ஒரு பெண்ணாய் அதிரலுக்கு கூச்சம் எழ, உள்ளேப் போக விரைந்தாள். அவள் உள்ளே போவதை பார்த்த தேவகிக்கு திக்கென்று இருந்தது.

“நீ இன்னுமா பீட் பண்ணிட்டு இருக்க?” அதிர்ந்துப் போய் கேட்டார்.

“ஐயோ இல்ல மேடம்.. அவனுக்கு எப்பவாவது ஞாபகம் வரும். அதும் தூங்கி எழுந்தா இந்த மாதிரி பண்ணுவான். நான் அப்படியே டைவேர்ட் பண்ணிடுவேன்” என்று தீரனின் பார்வை அவளை துளைக்க, சங்கடத்துடன் தேவகிக்கு பதில் சொன்னவள் பட்டென்று தங்கை உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“ப்ச் இதென்ன இப்படி பார்க்கிறாரு..” முணகியவளின் மார்பில் பிள்ளை முகத்தை வைத்துப் புரட்ட,

“டேய் சேட்டை செய்யாதாடா” அவனை விலக்கப் பார்க்க அவனோ இன்னும் தாயோடு முட்டிக் கொண்டான்.

“எங்க இருந்துடா உனக்கு இவ்வளவு பிடிவாதம் வந்தது.. ப்பா உன்னை என்னால சமாளிக்கவே முடியல” மகனை கடிந்துக் கொண்டவள், அவனின் பின் புறத்திலே செல்லமாக ஒரு அடி அடித்தாள்.

“ம்மா” என்று சிணுங்கியவன், தாயோடு ஒட்டுண்ணியாய் பின்னிக் கொண்டான்.

“அம்மா பால் காய்ச்சி வச்சு இருக்கேன். எடுத்துட்டு வரவா?” திருட்டு முழி முழித்த மகனிடம் சிரிப்புடன் கேட்டாள்.

“நேனா..”

“ப்ச் அடம் பிடிக்காதாடா.. தம்பி வயிறு பாரு எவ்வளவு ஒட்டி போய் இருக்குன்னு. பால் குடிச்சா தான் தம்பி பிக் மேனா வளர முடியும். இல்லன்னா தம்பி ஸ்மால் மேன்ன்னு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க தெரியுமா?” மகனை தாஜா செய்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தவளின் அரவம் கேட்க, நிமிர்ந்துப் பார்த்தான் தீரன். அவன் கண் பார்வையிலே உள்ளே மகனிடம் பேசியதை எல்லாம் கேட்டுவிட்டான் என்று புரிய கூச்சம் வந்தது.

அவனிடம் இதுவரை வேலையை தாண்டி எதுவும் பேசியது இல்லை என்ற காரணத்தால் அவளால் அவனை இப்படி இயல்பான் ஒரு மன நிலையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெரிதாக கூச்சம் வந்து அவளை ஆட்கொண்டது.

அவனின் பார்வையில் மீண்டும் திகைத்துப் போனவள், தலையை குனிந்துக் கொண்டு அடுப்படிக்கு சென்று பிள்ளைக்கு பாலை ஆற்றி எடுத்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்தாள்.

அவளுக்கு எதிராக மூவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். தலையை நிமிர்த்தாமல் குழந்தையிடமே மொத்தமாக கவனத்தை பதித்தவள்,

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஆற்றி குடிக்க வைத்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 4, 2026 1:23 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top