“சாரி சார்” என்று அவனின் கையில் இருந்த தன் கையை உருவிக் கொண்டு மொத்த மகிழ்ச்சியும் உற்சாகமும் நொடியில் வடிந்து போய் விட சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டாள் அதிரல்.
அவளின் மகிழ்ச்சி வடிந்த முகம் ஏனோ தீத்திரள் தீரனின் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. அன்றிரவு ஒரு பொட்டு தூக்கம் கூட அவனை நெருங்கவில்லை.
விழிகளை மூடினாலே “சாரி சார்” என்று உள்ளேப் போன குரலில் அவள் கேட்டதே கண் முன் வந்தது.
“உப்...” வாயை குவித்து காற்றை வெளியே விட்டவனுக்கு உள்ளுக்குள் என்னவோ ஒரு குடைச்சல் நமைச்சல் ஏற்பட்டது.
--
இரவெல்லாம் அதிரலின் “சாரி சார்” என்ற குரலும், தான் திட்டியதால் அவளின் முகத்தில் இருந்த உற்சாகம் நொடியில் வடிந்துப் போனதும் தான் லூப் மோடில் வந்துக் கிண்டி இருந்தது.
அதனால் தீத்திரள் தீரனுக்கு இரவெல்லாம் கொஞ்சமும் தூக்கம் என்பதே இல்லை. அடுத்த நாள் காலையில் விரைவாகவே அலுவலகம் கிளம்பி வந்தவனை கடுப்புடன் பார்த்தார் ஆளவந்தான்.
“இப்ப எதுக்கு அவனை முறைச்சு பார்க்குறீங்க?” பெற்ற மகனை தகப்பன் ஒரு பார்வை பார்க்க கூட விடவில்லை தேவகி.
“நீ இப்படி எதுக்கு எடுத்தாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு அவனுக்கு வராத தேவகி” எரிச்சலுடன் சொன்னார்.
“அப்படி சொல்லுங்க ப்பா.. எப்போ பாரு அண்ணனுக்கே கொடி புடிச்சுக்கிட்டு இருக்காங்க” என்றவள்,
“உங்களுக்கே இதெல்லாம் ஓவரா தெரியலையா ம்மா.. சும்மா இருந்த எங்களை ஊட்டிக்கு டூர் போகலாம்னு கூட்டிட்டு வந்துட்டு அண்ணன் ஆபிஸ் ஆபிஸ்னு போனா எங்களுக்கு கோவம் வரதா. சின்ன அண்ணன் வேற மூணு வருடமா வெளிநாட்டுல இருக்கான். அட்லீஸ்ட் பெரிய அண்ணன் கூட வாவது டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு இருந்தோம். நேத்திக்கு நம்மளை எல்லாம் கார்டனுக்கு அனுப்பிட்டு பாதியில தான் வந்து சேர்ந்தாங்க.. இதோ என்னைக்கு சாக்லேட் பேக்டரி, டீ பேக்டரி போலான்னு சொன்னாங்க.. குட்டி மௌன்டேயின் போகலாம்னு சொன்னாங்க. ஆனா இப்ப எதுவும் இல்லாம ஆபிஸ் கிளம்பி வந்தா அப்பாவுக்கு கோவம் வரதா?” ஆதங்கத்துடன் கேட்டாள் தாரா.
“நாங்க பாட்டுக்க சென்னையில இருந்து இருப்போம். என்னவோ ஊட்டியை பார்த்ததே இல்லாத மாதிரி இங்க கூட்டிட்டி வந்தான். நானும் உங்க கூடவே இருக்கிறேன்னு சொன்னான். ஆனா இங்க வந்தா சொன்னதுக்கு நேர் மாறா வேலையை கட்டிக்கிட்டே அழறான்..” என்று ஆளவந்தான் பொறும,
“என் புள்ள ஊர் சுத்த வர்ற இடத்துல கூட எவ்வளவு பொறுப்பா இருக்காப்ல. அதை நினைச்சு பெருமை படுவீங்கலாம் அதை விட்டுட்டு என்னவோ சின்ன பிள்ளை மாதிரி ஊர் சுத்த ஆள் தேடிக்கிட்டு இருக்கீங்க” என்று தேவகி சொல்ல,
“இவங்க கிட்ட பேசுறதே வேஸ்ட் டேடி..” தாரா அலுத்துக் கொள்ள,
“அது எனக்கு எப்பவோ தெரியும் பேபி..” சொன்ன ஆளவந்தான் உணவு உண்ண வந்த மகனை பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார். அதன் பிறகு அவன் எங்கே அலுவலகம் போவது.
அன்றைக்கு குடும்பத்தோடு ஊர் சுற்ற வெளியே கிளம்பி விட்டான். அதில் குடும்பத்தார்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி பிறந்தது.
அவர்களோடு சுற்றி திரிந்து மகிழ்ந்த பொழுதும் நெஞ்சுக்குள் என்னவோ ஒரு நமைச்சல் இருந்துக் கொண்டு இருந்தது தீரனுக்கு.
ஏன் இப்படி என்று தலையை பிடித்துக் கொள்ளாத குறையாக அவனின் உள்ளம் அலைப் பாய்ந்துக் கொண்டே இருந்தது.
அதிரல் எப்பவும் போல அவசர அவசரமாக கிளம்பாமல் நிதானமாக கிளம்பினாள்.
“என்னக்கா இவ்வளவு லேட்டா கிளம்புற? ஆபிஸ் போக டைம் ஆகலையா?” கேட்ட தங்கைக்கு வெறும் சிரிப்பை மட்டும் கொடுத்தவள், குழந்தைக்கு உணவை ஊட்டி விட்டு கிளம்பி விட்டாள்.
“நீ சாப்பிடலையா க்கா” என்றவளிடம் புன் சிரிப்பை உதிர்த்து விட்டு அலுவலகம் சென்றாள். அங்கே விஜயன் அவளை காட்டு கத்து கத்தினான். ஏனெனில் தீரன் அவனை அந்த அளவுக்கு திட்டி தீர்த்து இருந்தான்.
“ஒரு லீவை கூட பிராப்பரா அவர்கிட்ட இன்பார்ம் பண்ண முடியாதா உன்னால..” என்று ஆரம்பித்து அவன் பாட்டுக்க வசை பாட,
அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், இறுதியாக “என்னோட ரெசிக்னேஷன் லெட்டர்” என்று அவனது மேசையில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் கிளம்பி வந்து விட்டாள்.
“அதிரல்” என்று விஜயன் அதிர்ந்து போய் அவளை அழைக்க,
“சாரி சார் என்னால நீங்க திட்டு வாங்குனதுக்கு. இனி அந்த நிலைமை வராது” சொன்னவள் விறுவிறுவென்று வெளியேறி விட்டாள்.
அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத நிலை.. மகனோடு இன்னும் ஒரு மாத காலம் இருக்கலாம் தான். ஆனால் அடுத்த வேலை தேடியே ஆகவேண்டிய கட்டாய சூழல்.
ஏதாவது ஒரு குக்கிராமத்துக்கு போய்விடலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் நேத்ரவை எண்ணி தன் என்னத்தை மாற்றிக் கொண்டு இதே ஊட்டியில் இருக்க முடிவு எடுத்தாள். ஏனெனில் அவளின் உடல்நிலை காரணமாக ஊட்டி தான் அவளுக்கு உகந்த சுற்று சூழல்.. இதிலிருந்து வெளியே வந்தால் நிச்சையம் ஏதாவது கோளாறு வந்து விடும். எனவே இங்கிருக்கும் ஏதாவது கம்பெனிக்கு வேலைக்கு போக முடிவு எடுத்தாள்.
எடுத்த உடனே யாரும் பெரிய வேலை எதுவும் குடுத்து விட மாட்டார்கள். அடிமட்ட வேலை தான். அதன் பிறகு தான் போக போக சம்பளமும் உயரும் பதவியும் உயரும்.
அதோடு ஊட்டியில் இருக்கும் அனைத்து நிறுவங்களை காட்டிலும் முன்பு வேலை செய்த நிறுவனம் தான் டாப்பில் இருக்கிறது. அங்கு வேலையை விட்டுட்டு வேறு ஒரு கம்பெனிக்கு வேலை தேடி சென்றால் நிச்சையம் ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும்.
என்ன செய்வது என்று பல யோசனையில் சிக்கி இருந்தவள் வீட்டுக்கு வர,
“அக்கா நான் பிரெண்டுங்களோட அவுட்டிங் போயிட்டு வரவா?” பெர்மிஷன் கேட்டு நிற்கும் தங்கைக்கு தலையை ஆட்டியவள், கையில் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தாள்.
பொம்மைகளோடு விளையாடிக்கொண்டு இருந்த மகனை தூக்கி நெஞ்சில் போட்டுக் கொண்டாள்.
மகன் அம்மாவின் முகம் பார்த்தான்.
“என்னடா தங்கம்?” அவனின் முகத்தோடு தன் முகத்தை வைத்து கொஞ்சினாள்.
“ங்கா...” என்று அவன் கேட்க, “இன்னும் நீ அதை மறக்கலையாடா” என்று சிரித்தாள் அதிரல்.
“ம்ஹும்..” என்று அவன் இரு பக்கமும் தலையை ஆட்டி சொல்ல, அவனை திசை திருப்பி
“அம்மா இன்னைக்கு தம்பியோட விளையாட போறேன். யானை சவாரி போகலாமா?” கேட்டவள் முட்டி காலில் நின்று குனிந்து நிலத்தில் கைகளை ஊன்றிக் கொண்டாள்.
“அய்...” குதூகலம் ஆனவன் தாயின் முதுகில் ஏறி அமர்ந்துக் கொண்டு,
“ஹுஹு...” சத்தமிட்டுக் கொண்டே தாயின் கூந்தலை கயிறு போல பாவித்து பிடித்துக் கொண்டான்.
அந்த சடையை ஆட்டி ஆட்டி “ஏகமா போ” என்று அவன் சொல்ல,
“வேகமா போகனுமா தீரா குட்டிக்கு” கேட்டவள் அவன் வேகமாக போக,
“இன்னும் இன்னும் ஏகமா போ” தாயை விரட்டினான். அவனின் வேகத்துக்கு இவளால் போக முடியவில்லை.
“அடேய் புடவை தடுக்குதுடா.. இருடா” என்று புடவையை சரி செய்துக் கொண்டு மீண்டும் சவாரி போனாள். அதற்குள் அவளின் கூந்தலை பிடித்து ஒரு வழி ஆக்கி இருந்தான் குட்டி வாண்டு.
மத்திய நேரம் மகன் தூக்கத்துக்கு சொக்க, அவனை தன் அருகில் போட்டு முதுகை தட்டிக்கொடுத்து மெல்லிய குரலில் தாலாட்டுப் பாடினாள். அதில் சின்னவனுக்கு தூக்கம் வந்து விட, அம்மாவின் வாசனை வேண்டும் போல இருக்க அவளின் நெஞ்சோடு முகத்தை புதைத்துக் கொண்டு தூங்கியவன்,
“ம்மா இங்கா” என்று வாய் சப்பினான்.
“இந்த ஒரு விசயத்தை மட்டும் மறக்கவே மாட்டிக்கிறடா” அலுத்துக் கொண்டவள் நெற்றியை நீவி விட்டு,
“ஆரிராரி ஆரிராரோ...” என்று மகன் அசந்து தூங்க பாட்டுப் பாடியவளுக்கும் தூக்கம் சொக்க அப்படியே அவனை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டாள். நல்ல தூக்கம்.. எந்த தொந்தரவும் இல்லாமல் நன்கு தூங்கிப் போனவள்,
மாலை வாக்கில் தான் எழுந்தாள். தங்கையிடம் ஒரு சாவி இருக்க, அவள் ஊர் சுத்தி விட்டு வந்து இவளுக்கு அருகில் படுத்து இருந்தாள். அவளின் தலையை கோதி விட்ட அதிரல் எழுந்து மாலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தாள்.
அந்த நேரம் கதவு தட்டப் பட, அவிழ்ந்த கொண்டையை தூக்கிப் போட்டுக் கொண்டு கதவை திறந்தாள்.
அங்கே வாசலில் தீத்திரள் தீரன் நின்றுக் கொண்டு இருந்தான்.





