Notifications
Clear all

அத்தியாயம் 16

 
Admin
(@ramya-devi)
Member Admin

இடுப்பில் இருந்த மகனை இறக்கி விட்டு அவனின் உயரத்துக்கு கீழே அமர்ந்தவள், தனக்கு எதிராக அவனை திருப்பி நிற்கவைத்தாள்.

“கண்ணா... அம்மா தம்பிக்கிட்ட ஒன்னு சொல்றேன் அப்படியே கேட்டு நடந்துக்குறியா?” கோரிக்கை வைத்தாள் மகனிடம்.

ம்ம்ம்.. என்று மண்டையை ஆட்டினான் வாண்டு.

“இனி யார் உன் பெயரை கேட்டாலும் என்ன சொல்லுவ..?” என்று கேட்டாள்.

அவன் கொஞ்சமும் யோசிக்காமல் அவளை கை காட்ட, அவனின் கையை மடக்கி அவனின் நெஞ்சு புறமே காட்டியவள்,

“இனி தம்பி பேரு கேட்டா என்ன சொல்லணும் தெரியுமா? தீரா சொல்லணும். புரியுதா கண்ணா”

அவனோ “ம்ஹும்..” என்று கையை காலை ஆட்டி அவளையே சுட்டி காட்டினான்.

“இல்ல கண்ணா அப்படி எல்லாம் பண்ணக் கூடாது.. அது தப்பு.. தம்பி தான் வாயை திறந்து அவனுடைய பெயரை சொல்லணும். நீ சொல்லலன்னா அச்சச்சோ தம்பிக்கு பேச்சு வராதான்னு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க கண்ணா” என்று அவள் சொல்ல, தலையை கீழே தொங்கப் போட்டுக் கொண்டான் செல்லக் குட்டி.

அதில் அவளின் மனம் பொங்கி வழிய, அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,

“நீ என் தங்கம் தானே.. தம்பியை யாராவது கிண்டல் பண்ணா அம்மாவுக்கு கஷ்ட்டமா இருக்கும் தானே கண்ணா.. அதனால தானே அம்மா சொல்றேன்..”

“எங்க தம்பி உங்க பெயரை சொல்லுங்க” என்று அவள் சொல்ல,

கீழே பார்த்து நின்றவன், பின் யோசனையாய் விழிகளை அங்கும் இங்கும் உருட்டி இறுதியாக தன் அன்னையை பார்த்தான். எப்படியும் சொல்லி விடுவான் என்று அதிரல் அதிக எதிர்பார்ப்புடன் அவனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து நின்றாள்.

அவனோ கொஞ்சமும் தாமதிக்காமல் அவள் புறம் கையை காட்டி விட்டு ஓடிவிட,

“டேய் திருட்டு கண்ணா” என்று இவள் பின்னாடியே அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஏன் அவனது பெயரை சொல்ல சொன்னால் அன்னையை கை காட்டுகிறான் என்றால் அவனின் பெயரை அதிரல் பச்சை குத்தி இருந்தாள். அதனாலே அவனின் பெயரை யாரும் கேட்டால் இவன் வாய் திறந்து சொல்லாமல் அவனின் அன்னையை கை காட்டி பழகி இருந்தான்.

எல்லோரும் அவனுக்கு சொல்ல தெரியாமல் அன்னையை கை காட்டுகிறான், அன்னையை சொல்ல சொல்கிறான் என்று எண்ணி இருந்தார்கள். ஆனால் அவனின் பெயரை அவர்களுக்கு காட்ட சொல்கிறான் என்று அதிரலுக்கு மட்டும் தான் தெரியும்.

“வாண்டு சரியான சேட்டை...” செல்லமாய் திட்டிக் கொண்டே மகனை தேடி அவனின் பின்னோடு ஓடினாள். அப்படி ஓடிய நேரம் புடவை தடுக்கி கீழே விழ, ஒரு முரட்டு கரம் அவளை தாங்கிப் பிடித்தது.

யார் என்று பார்க்க தீத்திரள் தீரன் தான் அவளை தாங்கி நின்று இருந்தான்.

“ஹாங்..” என்று அவள் அதிர்ந்துப் பார்க்க,

“இன்னும் எவ்வளவு நேரம் உன்னை தாங்கி பிடிச்சுக்கிட்டு இப்படியே நிற்கணும்” வார்த்தையை கடித்து துப்பினான்.

“சாரி சார்” என்று அவனின் கையில் இருந்து விலகப் பார்த்தாள். ஆனால் மறுபடியும் அவளின் புடவை தடுக்க நிற்க முடியாமல் தடுமாறி அவனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு, காலில் சிக்கிய புடவையை லேசாக தூக்கிக் கொண்டவள்,

அவனை நேரடியாக பார்க்க முடியாமல்,

“சாரி சார்” என்று ஓடிப்போய் விட்டாள்.

“செட்... சரியான சில்லி கேர்ல்” தலையை உலுக்கிக் கொண்டவன்,

அங்கிருந்து விலகி சென்று போனில் பேச ஆரம்பித்தான். ஒரு முக்கியமான போன் கால் வர குடும்பத்தை விட்டு விலகி போன் பேச வந்து இருந்தான். வந்த இடத்தில் தான் இந்த அக்கப்போர்.

“கொஞ்சமும் பொறுப்பே இல்ல.. சைல்டிஷா பிகேவ் பண்ணிட்டு இருக்கா” வாய்க்குள் முணகினான்.

“சார்” என்று அந்த பக்கம் திகைக்கும் குரல் கேட்க,

“ஷிட்..” காலை உதறிக் கொண்டவன்,

“யா” என்று தொண்டையை செருமிக் கொண்டு போன்காலில் கவனமானான்.

ஒரு வழியாக நேத்ரா இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவளை அவசர அவசரமாக அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

“அக்கா ஏன் இப்படி எதையும் பார்க்க விடாம கூட்டிட்டு போற.. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே” என்றவளிடம் “இல்ல தொட்டபெட்ட சிகரத்துக்கு போகலாம். அங்க இன்னும் நல்லா இருக்கும் தானே.. நமக்கு அந்த இடம் தானே ரொம்ப பிடிக்கும். வாங்க அங்க போகலாம். இன்னொரு நாள் நிதானமா இங்க வந்துக்கலாம்” என்று சொல்லி இருவரையும் தொட்டப்பெட்டா சிகரத்துக்கு கூட்டிக்கொண்டு போனாள்.

அங்கு அலையும் முகில் கூட்டங்கள் இவர்களை தழுவிச் செல்ல, அந்த இதமான மனநிலை போக போக பரவசமாக மாறியது. படி ஏறி வந்த களைப்பு எல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

“அக்கா ரொம்ப நல்லா இருக்கு இல்ல” என்று கேட்ட நேத்ராவுக்கு பதில் சொல்லும் நிலையில் அதிரல் இல்லை. அவாளி தழுவிச் செல்லும் முகில் கூட்டங்களில் முழுமையாக தொலைந்துப் போனாள்.

கருவுற்று, பிள்ளை பேறு எடுத்து, இதோ அவளின் கையில் மூன்று வயது பிள்ளை இருந்தாலும் அவள் இன்னும் கன்னி தானே.. எந்த சுகமும் அனுபவிக்காமல் வாழ்க்கை என்னும் படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறாள்.

அவளுக்குள் முகிழ்க்கும் உணர்வுகளை எங்கும் வெளிப்படுத்தாமல் கண்களால் கூட ஒரு ஆணை ஏறெடுத்துப் பார்க்காமல் கண்ணியமாக பிள்ளையை வளர்த்துக் கொண்டு வருகிறவளுக்கு பெண்மை உணர்வுகள் இயற்கை தானே..

ஆனால் விதி அவளை வஞ்சித்து விட்டதே.. எங்கு போய் அவளின் உணர்வுகளை கொட்ட.. தனக்குள்ளே குழித் தோண்டி புதைத்து வைத்து விட்டு வெளியே இயல்பாக சிரித்து நடமாடிக் கொண்டு இருக்கிறாள்.

இதோ இந்த குளிர் அவளின் மெல்லிய உணர்வுகளை தூண்டி விட்டு பெண்மையை மலரவைக்க துடித்தது. அதை கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் கண்களை மூடி இந்த குளிரில் உணர்வுகளை எரித்துக் கொண்டு இருக்கிறாள். அவளின் போராட்டம் அவளோடு... தன் வேதனை தன் தங்கைக்கு வந்து விடக் கூடாது என்று கவனமாக இருக்கிறாள்.

குளிர் நிரம்பிய மேகங்கள் அவள் அணிந்து இருந்த உடையை தாண்டி அவளை தீண்டிப் போக தேகம் மொத்தமும் சிலிர்த்துப் போனாள்.

மிக ரகசியமாக பெண்களுக்குள் எழும் மெல்லிய உணர்வுகள் அவளுக்குள்ளும் மலர, “காட்” சிலாகித்து முணகிக் கொண்டாள்.

ஆழ்ந்து மூச்செடுத்தாள். காற்று சிலீர் என்று அவளுக்குள் உள் புகுந்து குளிரச்செய்ய இன்னும் சிலிர்த்துப் போனாள்.

“அக்கா இன்னும் எவ்வளவு நேரம்” என்று மணியை பார்த்தாள் நேத்ரா.

“இன்னும் கொஞ்ச நேரம்டி” என்று மகனை அவளின் கையில் கொடுத்து விட்டு இரு கையையும் நீட்டி மேகத்தை தொடப்பார்த்து அது நழுவி போவதை விரும்பாமல் அதை துரத்திப் போக பார்க்க, பெரிய பெரிய கற்களாய் நீட்டிக் கொண்டு இருந்த பாறையில் இலாவகமாக அவளால் கடந்து போக முடியவில்லை.

சேலையின் முன் கொசுவம் தடுக்க, தூக்கி சொருகி விட்டு அவள் தாண்டிப் போகப் பார்க்க, ஒரு வலிமையான கரம் அவளை பிடித்து இழுத்தது.

“ஹேய் அறிவு இல்ல.. ஒரு பிள்ளைக்கு அம்மாவா இருந்துக்கிட்டு இப்படி தான் ஆபத்து மிகுந்த இடத்துல விளையாடிக்கிட்டு இருப்பியா? அதுவும் வயசு பொண்ணு கூட வச்சுக்கிட்டு.. உனக்கு முதல்ல புத்தி இருக்கா.. இல்ல பொரிகடல குடுக்குறாங்கன்னு யார் கிட்டயாவது வித்துட்டியா?” எரிச்சல் மிகுந்த தீத்திரள் தீரன் குரல் கூடவே ஒலிக்க,

“இங்கயுமா?” என்று வந்தது பெண்ணவளுக்கு.

“நானே எப்போதாவது தான் இப்படி என்னை மறந்து விளையாடுறேன். அது பொறுக்கலையா இவருக்கு” மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,

“சாரி சார்” என்று அவனின் கையில் இருந்த தன் கையை உருவிக் கொண்டு மொத்த மகிழ்ச்சியும் உற்சாகமும் நொடியில் வடிந்து போய் விட சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டாள் அதிரல்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 30, 2026 11:41 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top