Notifications
Clear all

அத்தியாயம் 56

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கண்ணம்மா இந்தா இதை உன் சின்ன நாத்தனாருக்கு போட்டு விடு” என்று கதிராவன் சொல்ல, திகைத்துப் போனாள் பனி.

“ஹாங்” என்று அவனை பார்க்க,

“போட்டு விடுடி” என்றான் அழுத்தமாக.

“அது தான் என் தம்பியே சொல்றான் இல்ல.. போட்டு விடு பனி” என்றார் ரேவதியும்.

“அக்காவும் தம்பியும் ஒரு மார்கமா தான் இருக்கீங்க” முணுமுணுத்துக் கொண்டே அவள் கையில் கொடுத்த வைர நெக்லஸ், ஆரம், வளையல் என எல்லாவற்றையும் துளசிக்கு போட்டு விட்டாள்.

துளசி ஆவென்று பனியை பார்த்தாள். அவளிடம் மட்டும் சொல்லி இருந்தார் காமாட்சி.

“அடியேய் இப்ப நீ எனக்கு மகளா.. இல்ல அண்ணன் பொண்டாட்டி அண்ணியா?” காதருகில் கிசுகிசுத்தாள்.

“ஒழுங்கா கல்யாண பெண்ணா அடக்க ஒடுக்கமா இரு சித்தி” அவளும் நகை போடும் சாக்கில் அவளின் காதில் சொன்னாள்.

“ம்கும்.. நான் அடக்க ஒடுக்கமா இருக்குறது இருக்கட்டும்.. நீ முதல்ல கேள்விக்கு பதில் சொல்லு..”

“அதை நீ உன் அண்ணன் கிட்டையே கேட்டுக்க.. இப்ப என்னை ஆள விடு” என்றவள் மலர்ச்சியுடன் அவளுக்கு அணைத்து நகைகளும் போட்டு விட்டாள். கூடவே ரேவதியும் நகைகள் போட உதவி செய்தார்.

“அக்கா..” என்றாள் துளசி.

“உன் பொண்ணு வந்துட்டா டி” என்றார் புன்னகையுடன்.

“ம்கும் எங்க எனக்கு அண்ணியால்ல வந்து இருக்கா இப்ப” நொடித்துக் கொண்டாள்.

“அதுக்காக அவ உன் மக இல்லன்னு ஆயிடுமா?” என்ற ரேவதி,

“பாருடி உன் சித்திய எப்படி சொல்றான்னு” மகளிடம் சொல்ல,

“பின்ன உங்க தம்பி என்ன சொன்னாருன்னு கவனிச்சீங்களா இல்லையா? சின்ன நாத்தனாராம் துளசி எனக்கு” என்று அவள் ஒரு பக்கம் பொறும,

“அது அவன் ஆசையில சொல்லி இருப்பான்” என்று ரேவதி கோடி பிடிக்க,

“சரியான தம்பி கோண்டு” என்று சித்தியும் மகளும் ஒரே மாதிரி சொல்ல,

“ம்கும்” என்று நொடித்துக் கொண்டார் ரேவதி.

“நகையை போடாம அங்க என்ன அரட்டை” என்று வீட்டுக்கு மூத்தவராய் பொன்னன் அதட்டினார்.

காமாட்சியோ, “அதென்ன சட்டு புட்டுன்னு போடுற விசயமா? பரபரப்புல நகையை போட்டு எங்காவது கழண்டு விழுந்துடுச்சுன்னா என்ன பண்றது.. என் பையன் ஆசையா அவன் தங்கச்சிக்கு வாங்கி கொடுத்தது” சொன்னவர்,

“இருங்க நானும் பார்க்கிறேன்” என்று குனிந்து அவரின் பெண்களோடு பேத்தியோடு ஐக்கியம் ஆகி விட்டார்.

“என்ன அம்மாச்சி சத்தம் பலமா இருக்கு..”

“உன் மாமன் காரன் கிட்ட மட்டும் தான்டி சத்தம் வராது. மத்தபடி நானும் ரவுடி தான்” என்றார்.

“பாரேன் எங்க அம்மாவுக்கு கொடுக்கு முளைச்சுடுச்சு” ரேவதி வார,

“அடியேய்.. சீக்கிரம் மாட்டி முடிங்கடி.. எல்லார் கண்ணும் உங்க மூணு பேரு மேல தான். வீட்டுல போய் சுத்தி போடணும்” என்றார்.

ஏனெனில் மங்கையும் கலாவும் ஏன் மற்ற எல்லோருமே இவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அந்த மூன்று பெண்களின் முகத்தில் இருந்த புன்னகையும் அரட்டையும் அவர்களின் ஒற்றுமையை நன்கு காட்டியது.

மூன்று பெண்களும் நகை போட்டுக் கொண்டே கிசுகிசுத்துக் கொண்டு இருந்தார்கள் அவர்களுக்குள். அதை ஊரே பார்க்க,

அதற்குள் மாப்பிள்ளைக்கு போட வேண்டிய நகைகளை எல்லாம் கதிரவன் போட்டு விட்டான்.

“எதுக்கு மச்சான் இதெல்லாம்” என்று கோபால் சங்கடப்பட,

“இதெல்லாம் வழக்கம் கோபால்..” சிரித்தவன், அவனுக்கு அணிவித்தது எல்லாமே வைரம் தான். அல்லிக்கு பெருமை பிடிபடவில்லை. கூடவே சில சொத்து பத்திரங்கள் என வாரி வழங்கினான்.

அல்லி மற்றும் ராஜன் சொந்தக்காரர்களுக்கு “பாரேன் இவங்களுக்கு வந்த வாழ்வை” என்று பொறாமை பட்டுக் கொண்டார்கள்.

ஊரே கண் படும் படி திருமண வைபவம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஒருவரையும் விட்டு வைக்காமல் புகைப்படம் எடுக்கப்பட்டது.

கதிரவன் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் உட்கார வைத்து படம் எடுக்க சொன்னான். மங்கைக்கும் கலாவுக்கு போக விருப்பம் இல்லை தான் ஆனால் போகவில்லை என்றால் கதிரவனின் குடும்பம் இல்லை என்று ஆகி விடுமே என்று எண்ணி போய் நின்றார்கள்.

தாத்தாவுக்கு எல்லாமே கை மீறி போன நிலை தான். இந்த கல்யாணத்தில் எல்லாமே கதிரவன் தான். யாரையும் அவன் கேட்டு நிற்கவில்லை.

அவனுக்கு என்ன தோன்றியதோ அதை சிறப்பாக செய்தான். ஊரே மெச்சியது துளசி திருமணத்தை பார்த்து. அதுவும் விருந்து மிக மிக அபாரம்.

ஊர் பக்கம் கேட்டு பார்த்து ருசித்து அறியாத பண்டங்களை எல்லாம் மெனுவில் சேர்த்து இருந்தான். அதுவும் எல்லாமே கவர் பேக்கிங் போட்டு.

பந்தியில் வைத்த பொருள் வீணாகாமல் ஈசியாக எடுத்து செல்லும் படியாகவே கவர் பண்ண சொல்லி இருந்தான்.

உணவு வீண் பண்ணுவதில் அவனுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. எனவே யோசித்து இந்த முடிவு எடுத்து இருந்தான். செலவு தான் என்றாலும் ஒரு பருக்கை உணவு கூட வீண் ஆகவில்லை என்கிற திருப்தி அவனுக்கு இருந்தது.

தலைமுறை மாற மாற மாற்றங்களும் அதிகம் நிகழும் இல்லையா? பெருமூச்சு விட்டவரின் விழிகள் அங்கும் இங்குமாய் ஓடியாடிக் கொண்டு இருந்த பனியின் மீது விழுந்தது.

சேகரனின் அப்பா அவரிடம் வந்து பேசி விட்டு போனதில் இருந்து மனதில் அத்தனை பாரம்.

அது பனியை பார்க்கும் பொழுது எல்லாம் இன்னும் அதிகம் ஆனது. யாருக்கும் தெரியாமல் தன்னை திடப்படுத்திக் கொண்டார் மெய்யப்பன்.

வந்திருந்த முக்கியமான ஆட்கள் எல்லோரையும் கிளம்பிய பிறகு வீட்டு ஆட்களும், பல முக்கிய நெருங்கிய சொந்தங்களும் மட்டுமே நிரம்பி இருந்தார்கள்.

அதனால் போட்டோ எடுக்கும் செக்ஷன் ஆரம்பம் ஆனது.

முதலில் தாத்தா பாட்டியோடு மணமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அதோடு கதிரவன் தன் பனிநிலவோடு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டான். அதுவும் கேமரா மேனுக்கே எப்படி எடுக்கணும் என்று சொல்லிக் கொடுத்து தனியாக பிரிண்ட் போட சொல்லி ஆடர் வேற..

ரேவதி தன் மகளோடு சில பல புகைப்படங்கள், பிறகு கோபாலை கழட்டி விட்டுட்டு இந்த மூன்று பெண்களும் பல புகைப்படங்கள், மகாவை அழைக்க மங்கை மறுத்து விட்டார்.

ஆனாலும் அவருக்கு தெரியாமல் மகா அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.

அகிலாவை அழைத்ததற்கு அவள் “நாட் இண்டரெஸ்ட்” சொல்லி விட, இவர்கள் நால்வரும் வளைத்து வளைத்து எடுத்துக் கொண்டார்கள்.

அதட்ட ஆட்கள் இருந்தால் தானே.. கதிரவனே இப்படி நில்லுங்க அப்படி நில்லுங்க என்று நிற்க வைக்க, யார் அவர்களை அதட்டி இது கல்யாண மேடை என்று சொல்வதாம்.

இறுதியாக ரேவதியும் சேகரனும் தன் மகன் மகளை அழைத்துக் கொண்டு மேடை ஏறினார்கள். துளசிக்கும் கோபாலுக்கும் நகைகளையும், ஒரு காரையும் பரிசாக கொடுத்து விட்டு புகைப்படம் எடுக்க நின்றார்கள். அவர்களுக்கு நேர் எதிரில் கீழே சேகரனின் அப்பாவும் அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் கண் பார்க்க மகளை நடுவில் விட்டு கொஞ்சமும் கம்பீரம் குறையாமல் சேகரனும் ரேவதியும் அவர்களை நேர்பார்வை பார்த்தார்கள்.

இத்தனை வருட வேதனைகளுக்கும் கண்ணீருக்கும் காரணம் அவர்கள் தானே.. அந்த கண்ணீருக்கும் வேதனைக்கும் பரிசாய் இதோ அவர்களின் புதல்வி வைரக்கட்டியாய் கிடைத்து விட்டாளே.. அந்த பெருமையோடு அவர்களை பார்த்த தம்பதியர்களின் முகத்தில் இனி வேதனையின் சாயல் துளிருமா என்ன? கதிரவன் தான் துளிர விடுவானா? அதிக வெப்பம் கொடுத்து காய்ந்து கருக செய்து விட மாட்டானா?

இன்னொரு பக்கம் சேகரன் கதிரவனை அணைத்து நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க,

“என்ன மாமா இது சின்ன பிள்ளையாட்டம்” என்று முறைத்தான்.

“நீ மட்டும் என் மகளோட அப்படி இப்படின்னு போட்டோ எடுத்தல்லடா”

“அதுக்குன்னு உன்னோட எடுக்க சொல்றியா?” அலுத்துக் கொண்டே கம்பீரமாக தன் மாமனுக்கு அருகில் நின்றான் கதிரவன்.

அவனின் தோள் மீது கை போட்டு “என் படை தளபதிடா” என்றார்.

“கிழிஞ்சுது” என்றான்.

“ஏன்டா” என்றார் பாவமாய்.

“உன் வீட்டு மருமகன்ய்யா நானு” பல்லைக் கடித்தான்.

“அது இப்ப தானே.. இதுக்கு முன்னாடி” என்று அவர் சிரிக்க,

“போதும் போதும் ரெண்டு பேரும் அரட்டை அடிச்சது.. கேமரா பாருங்க” என்றார் ரேவதி.

“உன் அக்காவுக்கு பொறாமைடா”

“ஆமா தான் இப்ப அதுக்கு என்ன?” முறைத்தவர் கேமராவை பார்த்து சிரித்தார்.

“என்னடா அம்மா இப்படி நடிக்கிறாங்க” பனி முணக,

“இதுக்கே இப்படியா? இன்னும் போக போக பாரு.. எப்படி எல்லாம் ஆக்ட் குடுப்பாங்கன்னு” என்ற சித்து அக்காவின் தோள் மீது கைப்போட்டு நின்றுக் கொண்டான்.

அவ்வளவு அழகாக அந்த புகைப்படம் வந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 4:07 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top