“உன் அக்காவுக்கு பொறாமைடா”
“ஆமா தான் இப்ப அதுக்கு என்ன?” முறைத்தவர் கேமராவை பார்த்து சிரித்தார்.
“என்னடா அம்மா இப்படி நடிக்கிறாங்க” பனி முணக,
“இதுக்கே இப்படியா? இன்னும் போக போக பாரு.. எப்படி எல்லாம் ஆக்ட் குடுப்பாங்கன்னு” என்ற சித்து அக்காவின் தோள் மீது கைப்போட்டு நின்றுக் கொண்டான்.
அவ்வளவு அழகாக அந்த புகைப்படம் வந்தது.
எல்லா ஆர்ப்பாட்டமும் முடிந்து சம்மந்தி விருந்து முடிந்து பொண்ணு மாப்பிள்ளையை முதலில் பெண் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ரேவதியும் பனியும் தான் ஆரத்தி சுற்றி வரவற்றார்கள்.
துளசியை விளக்கு ஏற்ற சொல்லி சாமி கும்பிட சொல்லி, மணமக்களுக்கு பாலும் பழமும் குடுத்து உபசரித்தார்கள்.
அதிலும் பனி தான் முன்னாடி நிற்க வைக்கப் பட்டாள்.
“என்னம்மா இது” என அவள் சங்கடப்பட,
“நீ தான் இனி இந்த வீட்டு மருமக.. அப்ப நீ தானே செய்யணும்” என்று அவர் சொல்ல, கேட்டுக் கொண்டு இருந்த மங்கைக்கு அத்தனை கடுப்பாக இருந்தது.
“ரேவதி..” என்று கடுப்பாக அவர் பேச வர,
“கொஞ்சம் வேலையா இருக்கேன் அத்தை” என்று முடித்து விட்டார்.
அதோடு கதிரவன் வேறு அங்கு தானே இருக்கிறான். மங்கையால் வாய் திறக்க முடியவில்லை.
தாயை எதுவும் சொல்ல முடியாமல் கதிரவனை முறைத்துப் பார்த்தாள் பனி.
“என்னடி?” பார்வையாலே இவளிடம் கேட்டான். அவள் இன்னும் முறைத்தாள்.
“என்னடி யம்மா இது இன்னைக்கு வந்த பொண்ணு நம்ம சின்ன அய்யாவை இந்த முறை முறைக்கிறது” வேலைக்கார பெண் குசுகுசுக்க,
“ம்ஹும்.. அந்த பொண்ணு முறைக்க நம்ம அய்யாவோ கொஞ்சமும் கோவமே படாம பதிலுக்கு மென்மையா பார்க்கிறாரு..”
“நம்ம ரேவதி அம்மா வேற அந்த பொண்ணை அய்யாவோட வருங்கள மனைவின்னு சொல்லுறாக.. கல்யாணத்துல பார்த்துட்டு தானே இருந்தோம் இவுக ரெண்டு பேரும் எப்படி ஒட்டி உரசிக்கிட்டு இருந்தாகன்னு.. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.. நம்ம அய்யாவுக்கு ஏத்த மாதிரி அம்சமா இருக்காக அந்த பொண்ணு” என்று பணியாட்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க, அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த மங்கைக்கு பத்திக் கொண்டு வந்தது.
கதிரவனோ அதற்கு மேல்,
“வந்து இருக்குற எல்லாருக்கும் காபி குடு நிலா.. மசமசன்னு நின்னா ஆச்சா.. எங்க ரேவதி.. அவளையும் கூப்பிட்டுக்கோ” என்றான் பொண்டாட்டியை அதிகாரம் பண்ற மாதிரி.
அதற்கும் அவள் முறைத்து விட்டு போக,
“நிலா ஒரே ஒரு கப் காபி மட்டும் சுகர் கம்மியா கொண்டு வா” என்றான்.
“ம்ம்” தலையை ஆட்டி விட்டு அவள் போக,
“நிலா எனக்கு டீ வேணும்” என்றான்.
“ம்ம்” என்று விட்டு அவள் போக,
“நிலா” என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க, திரும்பி நின்றவள் அவனை நேரடியாக பார்த்து முறைத்தாள்.
எத்தனை நிலா தான் போடுவாரு இவரு..
அவளின் பார்வையில் சுற்றி இருந்த அத்தனை பேரும் கிளுக்கென்று சிரித்து வைத்தார்கள்.
“என்னடி?” என்றான் அவர்களின் கேலியை கவனியாமல்.
“ஒன்னும் இல்ல” என்று விட்டு உள்ளே ஓடி வந்து விட்டாள். மண்டபத்திலே அனைவருக்கும் தெரிந்து விட்டது. கதிரவனின் மனைவி ஆகப் போகிறவள் பனி தான் என்று. அதனால் விரசம் எதுவும் இல்லாமல் கேலி பண்ணி சிரித்தார்கள் உறவில் உள்ள அனைவரும்.
அதுவும் அவன் கணவனாய் நடந்துக் கொள்வதும் அதில் நிலாவின் முகம் சிவந்துப் போவதையும் பார்த்து அத்தனை கேலி பிறந்தது அவர்களிடம் இருந்து.
போதாதற்கு ரேவதி வேறு. எல்லோரையும் சமாளித்து விடலாம் போலா.. இவரை தான் இவளால் சமாளிக்க முடியவில்லை.
எதற்கு எடுத்தாலும் இவளையே முன்னுக்கு நிற்க வைத்து படுத்தி எடுத்தார். விசாலம் கூட சொல்லி பார்த்து விட்டார். அவ கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு. ஆனா ரேவதி அடங்கவே இல்லை.
எப்படியும் நாளைக்கு கல்யாணம் ஆகப்போறவ தானே.. அதனால இப்பவே எல்லாத்தையும் தெருஞ்சுகட்டும் ஒன்னும் தப்பு இல்ல. என்று முடித்து விட்டார்.
பனிக்கு தான் எங்காவது முட்டிக்கலாம் போல இருந்தது.
“அம்மாச்சி” என்று காமாட்சியை பிடித்துக் கொள்ள, அவர் இன்னொரு புறம்.. யாரையும் சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள் பனிநிலவு.
அதற்குள் கதிரவன் “நிலா” என்று மீண்டும் அழைத்து விட, சக்கரை இல்லாத காபியை எடுத்துக் கொண்டு கதிரவனிடம் வந்து விட்டாள். இல்லை என்றாள் இன்னும் அவளின் பெயரை ஏலம் போடுவானே..
“சுகர் இல்லாதது யாருக்கு குடுக்கணும் மாமா” என்று கேட்டாள்.
அவனோ கையை சேகரனின் அப்பா பக்கம் காட்டினான்.
இவள் அதிர்ந்து போய் கதிரவனை பார்த்தாள்.
“கொண்டு போய் குடு” என்றான் அழுத்தமாய்.
“என்னங்க இது..” என்று அவள் தவிக்க,
“நம்ம வீட்டுக்கு வந்தவங்களை நாம தானே உபசரிக்கணும்” என்று கேட்டவனுக்கு தலையை ஆட்ட மட்டுமே அவளால் முடிந்தது.
“அப்போ அது உன் பொறுப்பு தானே..”
“ம்ம்”
“அப்புறம் எதுக்கு தயங்குற.. கொண்டு போய் குடு” என்றான்.
கைகள் நடுங்க சேகரனின் அப்பாவிடம் காபி ட்ரேயை நீட்டினாள் பனி. கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. ஏனெனில் ரிஷப்ஷனில் நின்று இருந்த பொழுது கதிரவன் அவரிடம் பேசிய பேச்சிலே நன்கு புரிந்துப் போனது. தன்னை அனாதையாக்கிய மனிதன் இவர் தான் என்று. அவரை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமும் விருப்பம் இல்லை.
ஏனெனில் அவளை பார்த்த பொழுது அவரின் கண்களில் இருந்து அளவுக்கு அதிகமான குரோதமும் வெறுப்பும் மட்டும் தான். அது இப்பொழுதும் அவளால் உணர முடிந்தது.
ஆனால் கதிரவன் ஒரு வார்த்தை சொன்ன பிறகு அதை அவளால் மீற முடியுமா என்ன? கைகள் நடுங்கிய பொழுதும் அவரிடம் காபியை நீட்ட மறுக்கவில்லை. பனி அவரை கண்டு தளர்ந்துப் போகக் கூடாது, பயந்துப் போகக் கூடாது என்று தானே கதிரவன் அவளையே அவருக்கு காபியை கொடுக்க சொன்னது.
அதை புரிந்துக் கொண்டு அதை செயலாற்றினாள். ஆனால் அவர் தான் எடுக்கவில்லை.
அதை பார்த்தா கதிரவன்,
“தைரியமா நீங்க காபியை குடிக்கலாம்.. அதுல விஷம் எல்லாம் கலக்கல” என்றான். அதை கேட்டு அவர் முறைக்க,
“அதே போல விருப்பம் இல்லன்னா முன்னர் மாதிரி தூக்கி எல்லாம் போட வேண்டாம்.. எங்க கிட்ட குடுங்க ராணி மாதிரி நாங்க வச்சுக்குறோம்” என்று நக்கலாக சொன்ன கதிரவன்,
“காபியை சொன்னேன்” என்று சொல்லி விட்டு,
“பெரியவருக்கு ஏற்கனவே கொழுப்பு கொஞ்சம் கூடுதல். அதனால அவருக்கு பால் காபி எல்லாம் ஒத்து வராது.. நீ போய் கடுங்காப்பி போட்டு வேணா எடுத்துட்டு வா” என்று சொன்னான் கொஞ்சம் நக்கலாகவே.
“என்னடா கூட்டிட்டு வந்து அவமானப் படுத்துறியா?” கண்கள் சிவக்க கேட்டவரை திருமணத்திற்கு வந்து அப்படியே மண்டபத்தோடு போக பார்த்தவரை வம்படியாக வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இதோ அவன் ஆரம்பித்து விட்டான் ஏழரையை.
“என்ன மச்சான் இங்க வந்து உட்கார்ந்துட்ட..” கேட்டுக் கொண்டே சேகரன் வர,
“பெரியவரை கொஞ்சம் கவனிக்க வேண்டி இருந்தது. அதுதான்” என்றவன்,
“உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா அதை போய் பாருங்க மாமா” என்றான்.
“எனக்கு என்ன வேலை இருக்கப் போகுது.. நீ கண்டிநீயூ பண்ணு. நான் வேடிக்கை பார்க்கிறேன். எனக்கும் போரடிக்காம இருக்கும் இல்ல” என்றார் அவர்.
“டேய் அவன் உன் அப்பாவை கூப்பிட்டு வச்சு ஏழரையை இழுத்துக் கிட்டு இருக்கான்” என்று பல்லைக் கடித்தார் சேகரனின் அப்பா.
“அது தெருஞ்சதுனால தான் ஜோதியில கலந்துக்கலாம்னு வந்தேன்” என்றவர் கதிரவனுக்கு அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார்.
அதோடு மகளை அருகில் வைத்துக் கொண்டு, “ரேவதி சூடா மூணு டீ.. சுகர் தூக்கலா இருக்கணும்” என்று அவர் பங்குக்கு அவர் ஆரம்பித்து விட,
சும்மா இருந்த மாதவனையும் பிடித்து அமர்த்திக் கொண்டு அவனுக்கும் ஒரு டீயை சேர்த்து போடா சொல்லி நால்வரும் சேகரனின் அப்பாவை சுற்றி அமர்ந்துக் கொள்ள,
சேகரனின் தம்பி பதறிப்போய் அவ்விடம் வந்தான்.





