பனி மற்றும் சித்தின் பாசத்தை நிறைவாக பார்த்த சேகரன், “கதிரவா..” என்று பேச வர,
“இப்ப எதுவும் பேச வேண்டாம் மாமா.. எல்லாவற்றையும் கல்யாணம் முடிஞ்சு கறி விருந்து முடிஞ்சு பேசிக்கலாம். அதுவரை இதை பத்தி பேச வேண்டாம்” என்றான் முடிவாக.
“ஆனா எப்படி தம்பி, எனக்கு என் மகளை பத்தி” ரேவதி சொல்ல வர,
“ரேவதி உன் பொண்ணு முழுசா உன் கிட்ட இருக்கால்ல.. அதை மட்டும் இப்போதைக்கு நினைச்சுக்கோ.. பிறகு ஆற அமர நாம பேசலாம். இப்போ துளசி கல்யாணம் முன்னாடி நிக்கிது. அதை பார்க்கணும் இல்லையா?” என்றவனின் பேச்சு புரிய,
“சரி” என்று ஒப்புக் கொண்டவர், “சரி வாங்க போகலாம்” என்று அவர் வெளியேறப் போக,
“ம்மா நீங்க கொஞ்சம் முன்னாடி போங்க.. எனக்கு மாமா கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு” என்றாள் பனி. விழிகளால் கதிரவனை சுட்டு பொசுக்கினாள்.
“இப்ப பேச போறியா?” ரேவதி சந்தேகமாக கேட்க,
“ஆமா இப்பவே உங்க தம்பிக்கிட்ட பேசுனா தான். பிறகு சாரை கையில பிடிக்க முடியாதே அது தான்..” என்றாள்.
அவளின் திடீர் கோவம் எதுக்கு என்று புரிந்துக் கொண்ட கதிரவனுக்கு இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகை வந்தது.
“சிரிக்காதீங்க” கதிரவனை எச்சரித்தாள் பனி.
“என்ன பாப்பா எதுவும் பிரச்சனையா?” என்று அவளிடம் வந்தார் ரேவதி.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல க்கா நீ முதல்ல கிளம்பு.. போறதுக்கு முன்னாடி முகத்தை நல்லா கழுவி மேக்கப் போட்டுட்டு போ..” என்றவன் தன் மாமனை பார்த்தான்.
அவர் தலையை அசைத்து விட்டு மனைவி மகன் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
“நீங்க என்னங்க என்ன ஏதுன்னு கேட்க விடாம கூட்டிட்டு போறீங்க” கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டே வெளியே போனார்.
அவர்கள் வெளியே போன பிறகு வேகமாய் கதவை தாழிட்டு விட்டு அவன் முன்னாடி அவ்வளவு கோவமாக வந்து நின்றாள் பனிநிலவு.
அவளின் கோவத்தை சட்டை செய்யாமல் கண்ணாடி முன்பு போய் நின்று கலைந்த தலையை சீப்புக் கொண்டு சீவிய கதிரவனை முறைத்துக் கொண்டே அவனுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் வந்து நின்றாள்.
அப்பொழுதும் அவளை சட்டை செய்யாமல் தொடர்ந்து சீவிக் கொண்டு இருக்க, வேகமாய் அவன் கையில் இருந்த சீப்பை பிடுங்கி தூர எறிந்தவள்,
“ஏன் இப்படி பண்ணீங்க?” அவனின் சட்டையை பிடித்து அவ்வளவு கோவமாக கேட்டாள்.
அவளின் கையில் இருந்த சட்டையை ஒரு பார்வை பார்த்தவன்,
“நான் எதுவும் பண்ணலையே..” இரு தோள்களையும் கேசுவலக குலுக்க, இன்னும் கோவம் வந்தது அவளுக்கு.
“எதுவும் பண்ணலையா?” வேகமாக மூச்சு விட்டவள்,
“நீங்க எதுவும் பண்ணாம தான் உங்க அக்கா என்னை கண்டு பிடுச்சாங்களா?” கேட்க,
“பட் நான் வாய் திறந்து யார் கிட்டயும் எதுவும் சொல்லைலையே..” நாக்கை கன்னத்தில் உள் பக்கமாக வைத்து நிமிட்ட, அவனது கேலியில் இன்னும் கோவம் வந்தவள்,
“ஆஹா அப்படியே ஒன்னும் தெரியாத மனுசன் தான் நீங்க.. பார்த்து மூணு மாச பிள்ளைன்னு நினைச்சு உங்கம்மா உங்களை தூளி கட்டி போட்டுட போறாங்க” பொறுமினாள்.
அவளது கோவத்தில் சிரிப்பு வந்தது கதிரவனுக்கு.
“ஹேய்” என்று அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் முறைத்தான்.
“பின்ன ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது..” என்றாள்.
“நான் என் வாக்கை காப்பாத்துனனா இல்லையா?”
“அடேயப்பா.. நல்லா காப்பாத்துனீங்க.. பொறந்த குழந்தை கூட கண்டு பிடிச்சுடும்.. எங்க அம்மா மாதிரி எனக்கு மேக்கப் போட்டதுல.. இதுல பெருமை வேற நான் வாக்கை காப்பத்துனேன்னு..” அவனை முறைத்தவள்,
“ஏன் மாமா இப்படி பண்ணீங்க?” ஆதங்கத்துடன் கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்த கதிரவன்,
“உனக்கு உன் குடும்பம் வேணும்னு நினைச்சேன்டி” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
“ஆனா அதுக்காக இப்பவே சொல்லனும்னு என்ன அவசியம்” என்று அவள் கேட்க,
“உன் மாமன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?” என்று மட்டும் கேட்டான்.
“நம்பிக்கை இல்லாமலா இவ்வளவு தூரம் உங்களோட வந்து இருக்கேன்.. ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டு என்னை நோகடிக்கிறீங்க மாமா” ஆதங்கத்துடன் சொன்னவளின் இடையில் கையை கொடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“அப்போ இப்பவும் அதே நம்பிக்கையை என் மேல வைடி.. உன்னை எப்பவும் கஸ்ட்டப்படுத்த மாட்டேன்” என்றான் உறுதியாக.
“ப்ச்.. நீங்க என்னைக்கு என்னை கஷ்ட்டப்பட விட்டீங்க.. நான் அதுக்காக சொல்லல.. அப்பா அம்மா வாழ்க்கையை நினைச்சு தான் பயமா இருக்கு..” என்றாள்.
“அதுவும் துளசி சித்தி கல்யாணத்துல ஏதாவது அசம்பாவிதம் ஆகிப்போச்சுன்னா என்ன பண்றது சொல்லுங்க” கவலையுடன் கேட்டவளை குனிந்துப் பார்த்த கதிரவனின் கண்களில் அத்தனை காதல் முகிழ்த்தது அவள் மீது.
“நான் இங்க கவலை பட்டுட்டு இருக்கேன். அந்த கவலை இல்லாம உங்க கண்ணுல என்னன்னா நட்சத்திரம் சொலிச்சுக்கிட்டு இருக்கு” லேசாக முறைத்தாள்.
“அந்த கவலை எல்லாம் என்னோடது.. நீ எதுக்கும் கவலை பட வேண்டாம்டி என் பொண்டாட்டி. எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்” என்று அவளின் மூக்கைப் பிடித்து திருகியவன்,
“ஆமா மாமா மேல ரொம்ப தான் காதல் போலையே” அவளின் முகத்தை இரசனையுடன் பார்த்தான் கதிரவன்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” அவளின் குரல் உள்ளே சென்றது. அவனின் பார்வையிலும் கேள்வியிலும்..
“ம்ஹும்... அதை நான் நம்பணுமாக்கும்” என்று கேலியாக சொன்னவன்,
“என்னடி உங்கப்பா கிட்ட அப்படி சண்டைக்கு போற? பயமே இல்லையா?” கேட்டான்.
“எதுக்கு பயப்படனும்.. தப்பே செய்யாத உங்களை பேசுனா எனக்கு கோவம் வராதா? அதோட அவங்க ஒன்னும் என்னை தேடி வரலையே.. கால் கடுக்க நீங்க தானே என்னை தேடி தேடி கண்டு பிடுச்சீங்க.. அப்போ எந்த உரிமையில கேள்வி கேக்குறாங்க. எந்த உரிமையில உங்களை திட்டுறாங்க.. அது தான் கோவம் வந்திடுச்சு..” என்று தலையை குனிந்து சொன்னவள், அவனை நிமிர்ந்து பார்த்து,
“நீங்க தேர் மாதிரி.. எல்லோரும் உங்களை தலை நிமிர்ந்து தான் பார்க்கணுமே தவிர, நீங்க எப்பவும் யாருக்காகவும் தலை குனியக் கூடாது. தலை குனியிர மாதிரி நீங்க எப்பவும் நடந்துக்க மாட்டீங்க.. அப்படி பட்ட உங்களை நிற்க வச்சு கேள்வி கேட்டா எப்படி.. அது தான் கோவத்துல பேசிட்டேன்” என்றவளை தன் உயிருக்குள் முடிந்துக் கொண்ட கதிரவன்,
“இந்த பனியை மொத்தமா உறிஞ்சு இந்த கதிரவன்குள்ள எடுத்துக்கிட்டேன்னு தான் நினைச்சேன். ஆனா அது அப்படி இல்ல.. இந்த கதிரவனை மொத்தமா சுருட்டி இந்த பனிக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டடி என்னுயிர் கண்ணம்மா..” உயிர் நெகிழ்ந்து சொன்னவன் அவளை இன்னும் இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டான்.
ஆசை முத்தங்களால் அவளை முழுமையாக அர்ச்சித்தவன்,
“என் உயிரா இருந்தவ இப்போ என் அனைத்து பிறவிக்கும் உயிரா மாற்றிட்டடி” அவளை காதலால் அர்ச்சித்து முடித்து முத்தங்களால் குளிப்பாட்டினான்.
இடைவிடாத அவனது முத்தங்களில் பெண்ணவள் தான் தவித்து தடுமாறிப் போனாள்.





