உள்ளுக்குள் உடைந்துப் போனாள். கண்ணீர் அது பாட்டுக்க கொட்டிக் கொண்டு இருந்தது.
“நாங்க தான் பெத்த பாசத்துல துடியா துடிச்சுக்கிட்டு இருக்கோம்.. உனக்கு அது இல்லன்ற மாதிரி பேசுறியே பாப்பா.. இது நாள் வரை உனக்காக நாங்க ஏங்கிய ஏக்கம் தெரியுமா உனக்கு? உன்னை ஒரு முறை கூட கையில ஏந்தி நெஞ்சோட அணைச்சுக்க முடியலையேன்னு எங்க நெஞ்சு கொதிக்கிற கொதிப்பு உனக்கு தெரியுமா?
“ஒரு முறை கூட உன்னை கையில தூக்கலையேன்னு எங்க கைகள் நடுங்குற நடுக்கம் உனக்கு தெரியுமா? இந்த பூ முகத்தை பார்க்கிற பாக்கியத்தை கூட இழந்து, ஒவ்வொரு நொடியும் உயிரை குடிச்சுக்கிட்டு இருக்குற நோயை பற்றி தான் தெரியுமா? எப்படியாவது ஏதாவது செஞ்சு, மாயாஜாலம் செஞ்சு மறுபடியும் நீ எங்களுக்கு கிடைச்சிட மாட்டியன்னு ஏக்கத்துலயே செத்து போயிட்டு இருக்கோ ம்மா... எங்களை நாங்களே குற்ற உணர்வுல கொஞ்சம் கொஞ்சமா சிதைச்கிக்கிட்டு இருக்கோம்” என்ற சேகரனின் பேச்சில்,
“ஐயோ அப்பா” என்று கதறிக் கொண்டே வேகமாக அவரிடம் ஓடிப் போனவள் அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டு அழ,
தன் நெஞ்சோடு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சேகரனுக்கும் கண்களில் கண்ணீர். அவர் இழந்துப் போன சுவர்க்கம் அல்லவா அவரின் மகள்.
பிறந்த உடன் தொலைத்துப் போன மகள் மீண்டும் அவரின் கையில்... கண்ணீரை தவிர அவருக்கு எதுவும் பேச வரவில்லை.
அப்பாவும் மகளும் கண்ணீரில் கரைய ரேவதி மட்டும் தனித்து நின்றார் விழிகளில் ஈரத்துடன். பனி நிமிர்ந்து தன் தாயிடம் கையை நீட்டினாள் ஏக்கத்துடன். அவ்வளவு தான் ரேவதி கத்தி கதறி “ஐயோ என் கண்ணே” என்று ஓடிப் போய் கணவரோடு சேர்த்து மகளை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அங்கே அழகான உணர்வுகள் முகிழ்த்தது.. பிறந்ததில் இருந்து தாய் தந்தையை இழந்து இத்தனை வருடங்களாக தவித்த சிசுவிற்கு அதனின் பெற்றவர்கள் கிடைத்து விட்டார்கள். அதே போல பிறந்த உடனே முகத்தை கூட காணாமல் இழந்துப் போன பெற்றவர்களுக்கு மீண்டும் அவர்களின் குழந்தை அவர்களின் கைகளுக்கே கிடைத்து ட்டது.
எண்ணி எண்ணி ஏங்கிய ஏக்கம் எல்லாம் கலைந்துப் போய் மகிழ்ச்சி மட்டுமே அவ்விடத்தில் குவிந்தது. நிறைந்தது.
கதிரவன் அவர்களின் மூவரையும் கண்களில் மின்னிய வைரத்துடன் பார்க்க, காமாட்சி கண்களில் வழிந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டு மனமார பார்த்து இரசித்தார்.
அந்த நேரம் கதவை யாரோ தட்ட,
“நீங்க போய் பாருங்கம்மா.. நான் இங்க பார்த்து இவங்களை கூட்டிட்டு வரேன்” என்று அவரை அனுப்பி வைத்தான்.
காமாட்சி கண்களை துடைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியே போனவர் கதவை சாத்தி விட்டே சென்றார்.
“எங்க போயிட்டீங்க அக்கா.. அங்க மேடையில உங்களை தேடுறாங்க.. அரசாணி எடுத்து வச்சீங்களா?” என்று கலா கேட்க, அப்பொழுது தான் கல்யாண பரபரப்பையே உணர்ந்தார் காமாட்சி.
“அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுல தான் எடுத்துட்டு வருவாங்க.. நம்ம பக்கம் பெருசா எதுவும் இல்ல.. அதனால அதை பத்தி அல்லி கிட்ட தான் கேட்கணும்..” என்றவர் தன் சம்மந்தி அம்மாவை பார்க்க போனார்.
கலாவுக்கு ஒரே குறுகுறுப்பா இருந்தது. “எதுகாக இந்ந்த அக்கா அறையை விட்டு வெளியே வரும் போது கண்ணை துடைச்சுட்டு வந்தாங்க.. எதுவும் கலவரமா?” யோசித்தவர், “இதை போய் உடனே மங்கை கிட்ட சொல்லியாகணுமே. அதோட நான் பார்க்க முடியாத மாதிரி உடனே கதவையும் சாத்திட்டாங்க.. அப்படி என்ன இரகசியமா இருக்கும்” யோசித்தவர் மங்கையிடம் போய் விசயத்தை சொன்னார்.
மங்கை வேகமாக கதிரவன் பனி இருந்த கதவை தட்டினார்.
கதிரவன் மற்ற மூவரையும் பார்த்தான். அவர்கள் மூவரும் கொஞ்சமும் கலையவில்லை. தொட்டு தொடவி இரசித்து மகிழ்ந்து என இருக்க,
இவன் போய் கதவை திறந்தான். கதிரவன் இப்படி வந்து கதவை திறப்பான் என்று தெரியாத மங்கையும் கலாவும் அதிர்ந்துப் போனார்கள்.
“என்ன வேண்டும்” என்றான் காரராக..
“இ...ல்ல த...ம்பி அது அம்மா தான் கூப்பிட்டாங்க” என்று காமாட்சி மேலே பழியை போட்டார் மங்கை.
“வரேன்னு சொல்லுங்க” சொன்னவன் பட்டென்று கதவை மீண்டும் அடைத்துவிட்டான். அவர்கள் உள்ளே எட்டிப் பார்க்க முயல, அவனது உயரத்தை தாண்டி அவர்களால் எதை பார்த்து விட முடியும்..
ஏமாற்றத்துடன் கீழே போனார்கள்.
“என்னவோ ரகசியம் இருக்கு மங்கை” கலா சொல்ல,
“எனக்கும் அது தெரியுது.. ஆனா அது என்னன்னு பார்க்க விட மாட்டிக்கிறானே இந்த வளர்ந்தவன்” நொந்துப் போன மங்கைக்கு ரொம்ப ஆர்வமா இருந்தது.
“என்னத்தை இவங்க மறைக்கிறாங்க.. ஐயோ என்னன்னு தெருஞ்சுக்கலன்னா மண்டையே வெடிச்சுடும் போலையே” மங்கை புலம்பி தள்ளினார்.
அந்த நேரம் சித்து வர, இவனை அனுப்பி உள்ளே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் என்று எண்ணி அவனை அந்த அறைக்குள் அனுப்பி வைத்தார் மங்கை.
“சூப்பர் ஐடியா” என்ற கலாவும் மங்கையும் அவர்களின் அறையை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டார்கள்.
சித்து போய் கதவை தட்ட, கதவை திறந்த கதிரவன் அவனை உள்ளே இழுத்துக் கொண்டு மீண்டும் கதவை சாற்றி விட்டான்.
நீண்ட நேரம் ஆகியும் சித்து வெளியே வரவில்லை. அதில் ஏமாற்றம் ஆகிப் போன மங்கையும் கலாவும் வேறு வழி எதுவும் இருக்கா என்று தேடினார்கள்.
அதற்குள் இங்கே ஒரு பாச மழையே பொழிந்து விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் மகளும்.
உள்ளே வந்த சித்து தன் அப்பா அம்மா பனியை கட்டி பிடித்துக் கொண்டு அழுவதை பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.
அவனிடம் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள் இது மாதிரி உனக்கு ஒரு அக்கா இருந்தா.. அவளை நாங்க தொலைச்சுட்டோம் என்று. அவன் வளர வளர இழந்த குழந்தையை பற்றி சொல்லியே வளர்த்தார்கள்.
சித்து அங்கு இருப்பதை பார்த்த சேகரன்,
“தம்பி இது..” என்று அவர் மகிழ்வுடன் சொல்ல வரும் பொழுதே,
“என்னோட அக்கா” என்றான் ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல்.
“தம்பி உனக்கு எப்படிடா” என்று ரேவதி அதிர்ந்துப் போனார்.
“மாமா தான் சொன்னாங்க.. ஆனா யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க” என்றான்.
பனி அதிர்வுடன் கதிரவனை பார்த்தாள்.
“அவன் சின்ன பையன். அதோட திடுதிப்புன்னு சொன்னா அவனால அதை ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையான்னு தெரியல. அது தான் அவன் கிட்ட மட்டும் கொஞ்சம் பக்குவமா சொல்லிட்டேன்” என்றான்.
பனி சித்துவை பார்த்தாள். அவன் புறம் கையை நீட்டினாள்.
அவளின் கையை பற்றாமல்,
“வந்த நாள்ல இருந்து என் கிட்ட பேசவே இல்ல” என்றான் புகாராய்.
“நீயும் தான் என்கிட்டே பெருசா பேசவே இல்லை” இவளும் அவனிடம் வம்புக்கு நின்றாள்.
“நான் பேசலைன்னா நீ பேச மாட்டியா?” முறைத்தான் சின்னவன்.
“அப்படின்னு நான் எப்படா சொன்னேன்..” என்றவள் அவனின் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தவள்,
“அக்கான்னு சொல்லுடா” என்றாள் கண்கள் கலங்க,
“போடி மாட்டேன்” என்றவன் அவளின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான். அவனுக்கும் அவனின் அக்கா மீது அதித பாசம் தானே.. அக்கா தம்பி இருவரின் பாசத்தையும் பெரியவர்கள் மூவரும் அன்புடன் பார்த்து இருந்தார்கள்.





