சேகரனை மீறி அவரால் எதுவும் பேச முடியவில்லை. வேற எந்த விசயமாக இருந்தாலும் அவர் பேசி இருப்பார். அவ்வளவு நிமிர்வாக இருப்பார். ஆனால் இந்த விசயம் மிகவும் வேற மாதிரியானது எனவே அவர் எதுவும் பேசவில்லை.
“தப்பா தான் பேசி இருக்கீங்க.. என்னை பேசுனா நான் கேட்டுக்குவேன். ஆனா மாமாவை தப்பா பேசாதீங்க. நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்றாள் சற்றே கடுமையாக.
“எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ யாரு?” என்றார் அவர் இன்னும் கோவமாக.
“உங்க ரெண்டு பேருக்குள்ள நான் வரல. ஆனா என்னை வச்சு அவரை திட்ட கூடாதுன்னு சொல்றேன்” என்றாள் அவளும்.
“ப்ச் நீ ஒதுங்கி போனா உனக்கு நல்லது” சேகரன் எச்சரித்தார்.
“நான் ஒதுங்கி போயிடுறேன். ஆனா மாமாவை திட்டக் கூடாது. அதுக்கு ஒகேன்னா நான் ஒதுங்கிக்கிறேன்” என்றாள் பனியும்.
“என்ன கதிரவன் அவளை பேச விட்டு நீ வேடிக்கை பார்க்கிறியா?” பனியிடம் பேசாமல் அவனிடம் எகிறினார்.
“இப்ப தானே சொன்னேன்.. எதா இருந்தாலும் என் கிட்ட பேசுங்க.. உங்க கிட்டன்னு இல்ல வேற யார்க்கிட்டயும் நான் யாருன்னு சொல்ல வேணான்னு சொன்னது நான் மட்டும் தான். கதிரவன் மாமாவுக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்லை. அவரை திட்ட யாருக்கும் உரிமை கிடையாது. அதிகாரமும் கிடையாது” என்றவளை உருத்துப் பார்த்த ரேவதிக்கு கோவம் கட்டுக் கடங்காமல் போனது.
“நீ யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா பனி” அழுத்தமாக கேட்டார். அவர் கணவனின் மரியாதை அவருக்கு முக்கியமாக பட்டது போல.
“ஏன் தெரியாம நல்லாவே தெரியும்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“சோ தெரிஞ்சு தான் அவர் கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கியா?”
“நான் தவறா எதுவும் பேசல. அதே போல மரியாதை குறைவாவும் பேசல. மாமாவை தேவை இல்லாம பேச வேணான்னு சொன்னது உங்களுக்கு எந்த விதத்துல மரியாதை குறைவா படுதுன்னும் எனக்கு புரியல” என்றாள்.
“பனி” என்றார் சேகரன். அவரின் அழைப்பில் அத்தனை கடுமை நிறைந்து இருந்தது.
“சொல்லுங்க” என்றாள் அலட்டிக் கொள்ளாமல். அவளின் ஆட்டிட்யூட்டில் கதிரவனே புருவம் சுருக்கிப் பார்த்தான் அவளை.
“பனி” என்றான் ஆட்சேபனையாக.
“ப்ளீஸ் மாமா.. நான் பேசிக்கிறேன்” என்றாள் அவள். அதில் அவன் அடிபட்டு போக, பட்டென்று அவளை விட்டு அவன் விலகி நிற்க,
“ப்ச் மாமா நான் அந்த மாதிரி சொல்லல” என்றவள் அவனின் இரு கையையும் பிடித்து தன்னை சுற்றி வளைத்துக் கொண்டு அவனின் கை வளைவுக்குள் நின்றுக் கொண்டாள்.
தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும் தன் கை வளைவுக்குள் வந்து நின்றவளை கண்டு கதிரவனின் நெஞ்சம் சற்றே குளிர்ந்து தான் போனது.
“இப்போ ஓகேயா” என்று அவனின் கண் பார்த்து அவள் கேட்க, அவனின் கண்களில் சின்னதாய் திருப்தி தென்பட,
“சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குறாரு..” தனக்குள் அலுத்துக் கொண்டவளின் நெஞ்சில் அவன் காட்டும் சின்ன பிணக்கு கூட வலியை கொடுத்தது. அவன் மனதை நோகடிக்காமல் அவன் விருப்பம் போல வளைந்துக் கொடுத்தாள்.
மீண்டும் அவர்களின் இருவருக்குள்ளும் மூழ்கிப் போவதை பார்த்த மூவருக்கும் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை தான்.
“பனி” என்றார் அதட்டலாக சேகரன்.
“எஸ்” என்று சொன்னவள் அலட்டிக் கொள்ளவே இல்லை. தன்னை சுற்றி கதிரவனின் கைகளை போட்டுக் கொண்டு அவன் கையணைவில் நின்று கொண்டு சேகரனுடன் வாதத்தில் ஈடு பட்டாள் கதிரவனின் பனிநிலவு.
--
“சொல்லுங்க” என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“நீ பேசுறது கொஞ்சமும் சரியில்லை” சேகரன் கடுமையாக சொல்ல,
“நீங்க பேசுறது தான் கொஞ்சமும் சரி இல்லை. என்னை காரணம் காட்டி மாமாவை பேசுறது ரொம்ப தப்பு. எதா இருந்தாலும் என் கிட்ட பேசுங்க. மாமாவை குற்றவாளி ஆக்காதீங்க. அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்”
“என்ன செய்வியாம்..?” நக்கலாக கேட்டார் சேகரன்.
“எது வேணாலும் செய்வேன்” என்றவளின் குரலில் கதிரவனின் மீதான அத்தனை காதல் நிரம்பி இருந்தது. அதை உணர்வு பூர்வமாக உணர்ந்துக் கொண்ட கதிரவனுக்கு, தான் காத்து இருந்த காலங்கள், தேடிய காலங்கள் என எல்லா தவத்துக்கும் சேர்த்து வரம் கிடைத்தது போல தோன்றியது.
அவனது விழிகள் மொத்தமும் அவனது நிலவிடம் தான்.
“நான் உன்னோட அப்பா” என்றார் சேகரன் மிக அழுத்தமாக. அதை கேட்டு ஒரு கணம் மௌனம் சாதித்தாள் பனிநிலவு. அவளால் பேசவே முடியவில்லை. உணர்வுகள் அவளை மொத்தமாக சுருட்டிக் கொண்டது. விழிகளில் லேசாக கண்ணீர் அரும்பியது.
தன் தகப்பன் யார் என்று தெரியாமல் அவள் நகர்த்திய காலங்கள் எல்லாம் கண் முன் வந்தது. அவளின் கண்ணீருக்கு விடையாய் இதோ அவளின் தகப்பன் அவள் கண் முன்னாடி. மூச்சு எடுக்க முடியவில்லை. தடுமாறிப் போனாள். அவளின் தடுமாற்றத்தை தன் கைகளின் மூலம் உணர்ந்துக் கொண்ட கதிரவன் முன்பை விட அதிக இறுக்கமாக அவளை கட்டிக் கொண்டான்.
அவளின் உணர்வுகளை அவனையன்றி வேறு யாருக்கு தெரியுமாம்..
அவளின் ஒரு நிமிட மௌனத்தை எல்லோருமே கண் அசைக்காமல் பார்த்தார்கள். அதோடு அவளின் கண்கள் கலங்கி இருந்ததையும் உணர்ந்துக் கொண்டவர்களுக்கு அவள் படும் வேதனை புரியாதா என்ன..
“கண்ணு” என்று காமாட்சி பனியிடம் ஓடிப் போய் கட்டிக் கொண்டார்.
எங்கே கதிரவன் விட்டால் தானே.. தன் கைப்பிடியிலே வைத்து இருந்தான் பெண்ணவளை. அதனால் அவளின் தலையை மட்டும் அவரின் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள முடிந்தது.
“பேசுங்க மேடம், ஏன் மௌனமா இருக்கீங்க.. பெரிய பெரிய பேச்சு எல்லாம் பேசுனீங்களே. அதுவும் என் மச்சானுக்கும் எனக்கும் நடுவுலே அவ்வளவு ஆவேசமா வந்தீங்களே..” என்றார் சேகரன்.
பனி எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தாள்.
“அப்பான்னு தெரிஞ்சும் என் கிட்ட உன்னால பேச முடியல இல்லையா? என்னை பார்த்த பிறகும் என் கிட்ட உன்னால வர முடியல இல்லையா?” என்று குரல் கரகரக்க சேகரன் கேட்க, பனிக்கு கண்களில் இருந்து கண்ணீர் மழை வந்து விட்டது. தலையயை கீழே குனிந்துக் கொண்டாள்.
“அந்த அளவுக்கு பாவியா போயிட்டேன் இல்ல.. இவ்வளவு நாளா உன்னை தொலைச்சுட்டு நானும் என் பொண்டாட்டியும் செத்து சுண்ணாம்பா போயிட்டு இருக்குறது தெரியுமா உனக்கு.. ஆனா என் மச்சானுக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சும் எங்கக்கிட்ட இருந்து மறைச்கிட்டானேன்னு ஆதங்கத்துல அவனை பேசினேன். ஆனா அதை உன்னால தாங்க முடியல.. பெத்த அப்பன் கிட்டயே சண்டைக்கு வர்ற இல்ல” ஆதங்கத்துடன் கேட்டவரை நிமிர்ந்துப் பார்க்கவே இல்லை பனி.
உள்ளுக்குள் உடைந்துப் போனாள். கண்ணீர் அது பாட்டுக்க கொட்டிக் கொண்டு இருந்தது.





