Notifications
Clear all

அத்தியாயம் 49

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனது கர்ஜனையில் திகைத்துப் போனாலும் அடுத்த நொடி அவரின் கண்களில் இருந்து இன்னும் கண்ணீர் அதிகமாக வந்தது.

“ப்ச் ம்மா” என்று அவன் அவரை தொட வர, வேகமாய் அவனின் கையை தட்டி விட்டவர்,

“ஆன்டின்னு கூப்பிடுறாடா.. இவளுக்கு நான் ஆன்டியா... அம்மாச்சி இல்லையா?” என்று அவர் கதற, விக்கித்துப் போனாள் பனி.

தாயை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,

“இப்ப அதுவா முக்கியம் உன் மகளை முதல்ல பாரு.. மயக்கம் போட்டு விழுந்து வச்சு இருக்கா. தட்டி எழுப்பு” என்றான்.

“பனி” என்று அவர் அவளிடம் வர பார்க்க,

“இவ எங்கும் போயிட மாட்டா.. முதல்ல உன் மகளை எழுப்பு” என்றான் அதன் பிறகே மகளிடம் போனார். இருந்தாலும் ஒரு கண் தன் பேத்தியிடமே இருந்தது.

“ஐயோ ரேவதி” என்று வேகமாய் மகளருகில் அமர்ந்து அவரை தட்டி எழுப்பினார் காமாட்சி.

“அம்மாடி ரேவதி.. கண்ணு தொரடா” ரேவதியை உலுக்கி அசைத்தார். பயனில்லாமல் போக அருகில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தார்.

இந்த பக்கம் பனியின் சிவந்து போய் இருந்த கன்னத்தை தொட்டு தடவி வருடி விட்டவன்,

“வலிக்கிறதாடி” ஆதூரமாக கேட்டான்.

“ம்கும்” என்றவளின் கண்கள் ரேவதியிடமே நிலைத்து இருந்தது. அவரின் அதிர்ச்சியும் மயக்கமும், அதற்கு முன்பாக அவர் சிந்திய கண்ணீர், அதிர்ச்சி என எல்லாமும் அவளின் கண் முன் வந்து போக தளர்ந்துப் போனாள்.

கசக்கிப் பிழிந்த உணர்வுகளில் இருந்து அவ்வளவு எளிதாக ரேவதியால் வெளி வரவே முடியவில்லை. விடாமல் காமாட்சி தட்டி தட்டி எழுப்ப ஒரு கட்டத்துக்கு மேல் தன் நினைவுகளை ஒன்று திரட்டி மெல்ல விழிகளை மலர்த்தினார் ரேவதி.

தன் எதிரில் இருந்த பனியை தான் அவரின் விழிகள் தேடி போய் தழுவியது. அவளை தான் அங்குலம் விடாது பார்த்துக் கொண்டு இருந்தார். அவளிடம் இருந்து தன் பார்வையை விலக்காமலே எழுந்து அமர்ந்தவரின் விழிகள் அங்கு நின்று இருந்த இன்னொருவரிடம் தாவி தழுவியது.

அவரின் பார்வையாலே ஏதோ குறிப்பு சொல்ல, நின்று இருந்தவரின் தலை தானாக ஆடியது ஆமாம் என்பது போல..

மீண்டும் ரேவதியின் விழிகளில் கண்ணீர் நிரம்பியது. எதிரே நின்று இருந்தவரின் உருவத்தை மறைத்தது. வேகமாய் கண்ணீரை துடைத்துக் கொண்டு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் அந்த நபரிடம் ஓடினார் ரேவதி.

ஓடி வரும் ரேவதியை உயிர் தழுவ அணைத்துக் கொண்டார் சேகரன்.

“என்னங்க” என்று அவர் கதறி அழ, சேகரனுக்கு பேச்சே வரவில்லை. மனைவியை தழுவி நின்றவரின் பார்வை பனியை தொட்டு இருந்தது.

தன்னை வெறித்துப் பார்த்த சேகரனின் பார்வையில் தடுமாறிப் போனவள் நிமிர்ந்து கதிரவனை பார்த்தாள். இன்னும் அவனின் பிடியில் இருந்தாள் பனி.

ஆதரவாக தன்னை பார்க்கும் பெண்ணவளை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டவன், அவளின் முதுகை தடவிக் கொடுத்தான்.

“மாமா” என்று கதிரவன் பேச வர,

“எப்போ உண்மை தெரியவந்தது..” ஆணி தரமாக சேகரன் கேட்க, கதிரவன் பெருமூச்சு விட்டான்.

“அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் ப்ளான் பண்ணி பனியை கூட்டிட்டு வந்து இருக்க இல்லையா?” கதிரவனிடம் அழுத்தமாக கேள்வி கேட்டார் சேகரன்.

“ஆமாம் மாமா” என்று அவன் ஒப்புக்கொள்ள,

“அப்புறம் ஏன்டா எங்கக்கிட்ட முன்னாடியே சொல்லல.. என்னை விடு உன் அக்கா என்னடா பண்ணா.. அவக்கிட்டையாவது சொல்லி இருக்கலாம் தானே.. ஏன் நீ சொன்னா அவ சந்தோசப்பட்டுடுவான்னு சொல்லாம விட்டியா?” தன் அணைப்பில் இருந்த மனைவியை நகர்த்தி விட்டு வேகமாய் கதிரவனின் சட்டையை கோர்த்து பிடித்து அவர் கேட்க,

கதிரவன் பெருமூச்சு விட்டான்.

“மாமா” என்று அவன் சொல்ல வர,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. வாயை திறக்காதடா நீ.. என் தம்பியை விட, என் நண்பனை விட உன்னை உயர்வா நினைச்சேன் மதிச்சேன் இல்லையா அதுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அதை நல்லா செஞ்சுட்ட.. உன்னை போய் இத்தனை நாளா தலையில தூக்கி வச்சு கொண்டாடினேன் இல்லையா அதுக்கு ரொம்ப நல்லா மரியாதை குடுத்துட்டடா” என்றவரின் பேச்சை குறுக்கிடாமல் அப்படியே நின்றான்.

“என்னங்க” என்று அவரை நிதானப்படுத்த முயன்ற ரேவதியை கொஞ்சமும் சட்டை செய்யவே இல்லை.

“நீ உன் தம்பிக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்த.. அப்படியே உன் தம்பியோடவே போயிடு” பாராபட்சம் பார்க்காமல் அவர் பேசினார்.

யாரும் வாயை திறக்கவே இல்லை. சேகரன் மட்டும் அடவு கட்டினார்.

கதிரவனின் கைக்குள் இருந்த பனிக்கு அத்தனை வேதனையாகிப் போனது. தான் சொன்னதுனால தானே, என் சொல்லுக்கு கட்டுப்பட்டதுனால தானே கதிரவன் எதுவும் சொல்லாமல் இருந்தார். ஆனால் எந்த தப்பும் செய்யாமல் இவ்வளவு பெரிய அபாண்டமான பழியை சுமப்பது சரியா என்று கலங்கிப் போனாள்.

நிமிர்ந்து கதிரவனை வேதனை தாங்கிய முகத்துடன் பார்த்தாள். கதிரவன் குனிந்து அவளை தான் பார்த்தான். சேகரன் பேசியது திட்டியது எல்லாம் அவனின் காதில் விழவே இல்லை போல.. அவள் நிமிர்ந்து பார்க்கவும் இவனும் குனிந்து அவளை பார்த்தான்.

தாமரையை காணும் கதிரவன் போல, கதிரவனை பார்க்கும் தாமரை போல இருவரின் பார்வையும் இருந்தது அந்த நிமிடம்.

அவனது இதழ்களில் இதுவரை காணாத மெல்லிய புன்னகை தென்பட்டது. அதுவும் அவளை சமாதனம் செய்யும் வகையிலே பூத்து இருப்பதை உணர்ந்துக் கொண்ட பனிக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

வாயை அசைத்து குரல் வராமல் சாரி என்றாள்.

“என் கண்ணம்மா சாரி எல்லாம் சொல்லக் கூடாது” என்று அவன் கண்களிலே அதட்டினான்.

“இங்கு என்ன நடந்துக்கிட்டு இருக்கு. இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்காங்க பாருங்க” சேகரனுக்கு கொதிக்கிற தீயில் இன்னும் எண்ணெய் வார்ப்பது போல இருந்தது இந்த காட்சி.

“கதிரவா” சேகரன் கத்திய கத்தலில் இருவரும் தங்களின் இணையில் இருந்து மீண்டு அவரை பார்த்தார்கள்.

“உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க கதிரவா” சேகரன் மீண்டும் ஆரம்பிக்க,

கதிரவன் எந்த அசைவும் இல்லாமல் நீங்க திட்டுங்க மாமா என்கிற ரீதியில் நின்றான். எங்கும் தலை குனியாதவன் யாருக்கும் தலை வணங்காதவன் இன்று தனக்காக இப்படி செயல் மறந்து நின்று இருப்பதை பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

“ப்ளீஸ் அவரை எதுவும் சொல்லாதீங்க.. எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான். எது பேசுறதா இருந்தாலும் என்னை மட்டும் பேசுங்க..” என்று பனிநிலவு சொல்ல,

“நீ யாரு.. நான் எதுக்கு உன் கிட்ட பேசணும்” என்று கேட்ட சேகரனை அடிவாங்கிய உணர்வுடன் பார்த்தாள் பனி.

“என்னங்க”

“மாப்பிள்ளை” என்று ரேவதி, காமாட்சி இருவரும் அதிர்ந்துப் போய் கூவினார்கள்.

“நான் என்ன தப்பா பேசிட்டேன்.. இந்த அளவுக்கு அதிர்ந்து போறதுக்கு. நான் சரியா தான் பேசுறேன்” என்று சேகரன் அழுத்தமாக சொல்ல, ரேவதியின் கண்களில் கண்ணீர் தடம் பதித்தது.

சேகரனை மீறி அவரால் எதுவும் பேச முடியவில்லை. வேற எந்த விசயமாக இருந்தாலும் அவர் பேசி இருப்பார். அவ்வளவு நிமிர்வாக இருப்பார். ஆனால் இந்த விசயம் மிகவும் வேற மாதிரியானது எனவே அவர் எதுவும் பேசவில்லை.

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 3:57 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top