“துளசி கல்யாணத்துக்கு வந்து இருக்கா தாத்தா” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே.. அதுக்குள்ள என்ன?” என்று அவர் கேட்க, நிலாவுக்கு இப்படியே இந்த கணமே இந்த வீட்டை விட்டு போய்விடலாம் என்று தோன்றியது.
முகத்துக்கு நேரான அவமானம். அவளின் முகம் சுருங்கிப் போனதை பார்த்தவன், சட்டென்று அவளின் கையை பிடித்துக் கொண்டு,
“இருக்கட்டும் தாத்தா. டவுன்ல வளர்ந்த பிள்ளை. நம்ம கிராமத்தின் நடப்பு வழக்கு எல்லாம் பழகட்டும்னு தான் கூட்டிட்டு வந்தேன்..” என்றான்.
“இது சரி பட்டு வருமான்னு” என்று இழுத்தவரின் பார்வை மொத்தமும் கைக்கோர்த்து இருந்த இருவரின் கை மீது மட்டுமே இருந்தது.
“நான் பார்த்துக்குறேன்” என்று முடித்து விட்டான் கதிரவன். அதற்கு மேல பேசவிடாமல் நறுக்கென்று பேசிய பேரனை ஆழ்ந்து பார்த்து விட்டு,
“உன் அத்தை கிட்ட சொல்லி.. நல்லா கவனிக்க சொல்லு” மருமகளிடம் சொல்லி விட்டு மீண்டும் திருவாசகத்துக்குள் நுழைந்துக் கொண்டார்.
அவரின் இந்த சொல்லில் என்ன இருந்தது என்று நிலாவால் கணிக்கவே முடியவில்லை. ஆனால் காமாட்சிக்கு தான் திக்கென்று இருந்தது.
“என்ன இது மாமனாரு ஒண்ணுமே சொல்லல.. அதுவும் நல்லா வேற கவனிக்கனுமாம்..” தனக்குள் புலம்பியவர் பூசை அறையில் இருந்து எதிரில் வந்த தன் மாமியார் விசாலத்தை சற்றே பயத்துடன் பார்த்தார். மற்ற நேரம் என்றால் பயந்து இருக்க மாட்டார்.
ஆனால் மகன் ஊர் பேர் தெரியாத பெண்ணோடு வீட்டுக்குள் நுழைந்தால் என்ன பேச்சு வரும் என்று அறியாதவரா அவர்.
விசாலம் காலையில் குளித்து நெற்றியில் குங்குமமும் விபூதியும் மின்ன வந்தவரின் ஆசை பேரன் யாரோ ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு வருவதை பார்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
மூச்சே எடுக்க முடியவில்லை.
“கதிரவா...” என்று அவர் தள்ளாட, வேகமாய் அவரிடம் போனவன் ஒரு கையால் அவரை பற்றி நிறுத்திக் கொண்டான்.
“பார்த்து வர்றதுல்லையா பாட்டி” கடிந்துக் கொண்டான்.
“எனக்கென்ன.. நான் நல்லா தான் இருக்கேன். ஆனா” என்றவரின் பார்வை நிலாவின் மீது இருக்க,
“துளசி கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வந்து இருக்கேன்” என்றான் அழுத்தமாய்.
“ஆனா யாரு என்னன்னு தெரியாம எப்படி கதிரவா வீட்டுக்குள்ள...?” அம்மாவும் தாத்தாவும் கேட்க தயங்கிய கேள்வியை பாட்டி கேட்டு விட்டார்.
“எனக்கு தெரிஞ்ச ஆளா இருந்தா கூட எடை போட்டு பார்ப்பீங்களா பாட்டி?” கேட்டவனின் தோரணையில் இருந்த அழுத்தமும் அதிகாரமும் பாட்டியை திகைக்க வைத்தது. அவளை யாரும் எடை போடக் கூடாது என்ற மறைமுக அழுத்தம் அதில் மித மிஞ்சி இருந்தது.
சட்டென்று சுதாரித்துக் கொண்டவர்,
“சரிய்யா.. போ போய் குளிச்சுட்டு வா.. சாப்பிட்டிட்டு போய் கொஞ்ச நேரம் படு” என்றவரின் பார்வை தன் எதிரில் இருந்த பெண்ணவளின் மீதே நிலைத்து நின்றது.
குத்தும் அந்த பார்வையில் இருந்து தப்பிக்கவே எண்ணினாள் நிலா.
அவளின் அவஸ்த்தை புரிந்து,
“கம் நிலா” என்று அவனே அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.
“அய்யா விருந்தினர் அறை” என்று பாட்டி இழுக்க,
“வேணாம் பாட்டி. அது சரி வராதுன்னு தோணுது. என் அறைக்கு பக்கத்துல இருக்க அறையை நேத்திக்கே வேலையாள் கிட்ட சொல்லி ரெடி பண்ண வச்சுட்டேன். அங்கயே நிலா தங்கிக்கட்டும்” சொன்னவன் அவளை கையோடு அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
இருவரும் போன திசையை பார்த்துக் கொண்டு இருந்த மருமகளிடம் விசாரித்தார் விசாலம்.
“எனக்கும் ஒன்னும் தெரியாது அத்தை..” என்றார் பாவமாக.
“என்னைக்கு எதை சொல்லிட்டு செய்து இருக்கான் என் பேரன். எல்லாமே அவன் விருப்பம் தான்.. எப்போவோ நம்ம கையை மீறி போயிட்டான். இனி அடக்க முடிஞ்சாலும் அடக்க முடியாது..” பெருமூச்சு விட்டவர்,
“துளசி சம்மந்தக்காரங்க வேற இந்த விசயம் கேள்வி பட்டு என்ன சொல்லப் போறாங்களோ.. அதோட உன் வீட்டு மூத்த மாப்பிள்ளை வேற விசயம் தெரிஞ்சா ஒரு ஆட்டம் ஆடுவாரு...” என்றார் பாட்டி.
“அது மட்டுமா? உங்க மூத்த மகளை விட்டுட்டீங்களே... என் நாத்தனாருக்கு தெரிஞ்சா இன்னும் சலங்கை கட்டாத குறை தான்” என்றார் காமட்சி.
“அதை சொல்லு.. இந்த பெண்ணோட வரவால இங்க என்னென்ன குழப்பம் வரப்போகுதோ” நொந்துக் கொண்டார் பாட்டி.
“விடுங்க அத்தை பார்த்துக்கலாம்” என்று தன் மாமியாரை சமாதனம் செய்தவர் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டார்.
அவரோடு பாட்டியும் உள்ளே நுழைந்து அன்றாட வேலையை ஆரம்பிக்க, பணியாளரிடம் பேரனுக்கும் அந்த புது பொண்ணுக்கும் குடிக்க கொறிக்க குடுத்து அனுப்பினார்.
இரண்டையும் வாங்கிக் கொண்டவ கதிரவன் அவளின் கதவை நாசுக்காக தட்டினான். வேகமாய் வந்து திறந்தாள் நிலா.
“டீ குடிக்கலாம் வா” என்று அழைத்து மேல் தளத்தில் இருக்கும் டெரஸ்க்கு கூட்டிட்டுப் போனான்.
எதுவும் பேசாமல் அவனுடன் வந்தவள்,
“இந்த மூணு பேரையே என்னால சமாளிக்க முடியல... இன்னும் மிச்சம் இருக்கும் எத்தனை பேரை நான் சாமாளிக்கிறது.. ப்ளீஸ் என்னை விட்டுட்டுங்க” என்றாள் அமைதியாக.
“இனியும் இப்படி விட முடியாதுன்ற காரணத்துனால தான் உன்னை கூட்டிட்டு வந்து இருக்கேன் நிலா” அழுத்தமாகவே சொன்னான்.
“ஆனா இவ்வளவு நாள் இப்படி விட்டுட்டு தானே இருந்தீங்க. இப்ப மட்டும் என்னவாம்.. எனக்கு யாரும் வேணாம். அதுவும் வேணாம்.. லீவ் மீ” என்றாள் பிடிவாதமாய்.
“முடியாது. இதை தவிர வேற எதா இருந்தாலும் கேளு தரேன்” என்றான் அவளுக்கு மேல் பிடிவாதமாய்.
“நீங்க தான் எல்லோர்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்க போறீங்க பாருங்க”
“அது என்னோட பார்ட்.. நான் பார்த்துக்குறேன்” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
இவ்வளவு அடம் பிடிக்கிறவனை கண்டு எரிச்சல் தான் வந்தது நிலாவுக்கு. அதை அவனிடமும் காட்டினாள் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்.
ஆனாலும் கதிரவன் பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ளவே இல்லை. “உன் இருப்பு இப்ப இந்த குடும்பத்தில் இருக்கணும் தட்சிட்” என்று முடித்துக் கொண்டான்.
அவனது அழிச்சாட்டியத்தில் பத்திக் கொண்டு வந்தது பனிநிலவுக்கு. காலை நேரத்தில் இன்னும் நிறைய பேர் வந்து விடுவார்கள். அவர்களிடம் எல்லாம் இவன் என்ன சொல்லி சமாளிப்பான் என்று தோன்றியது.
“அது இவனது வேலை.. சமாளிச்சா சமாளிக்கட்டும். இல்லன்னா மாட்டிக்கிட்டு நல்லா முழிக்கட்டும்” என்று கருவிக் கொண்டவள் தேநீரை பருகினாள்.





