ஆத்திரம் தீரும் மட்டும் அவர்களின் காலிலே அடி வெளுத்து எடுத்தான். நால்வரின் கால்களும் சிதைந்து போனது. அதை பார்த்துக் கொண்டு இருந்த கீர்த்தியின் அப்பா எதுவும் சொல்லவில்லை. அவன் கொண்ட உணர்வுகளின் வீரியத்தை தன்னுள் உணர்ந்துக் கொட்னவரின் விழிகள் நண்பனுக்காக கண்ணீர் சிந்தியது.
“டாக்டர்” என்றான் சிங்கன்.
“சொல்லுடா ராசா” என்று அவனின் தோளில் ஆதரவாக கையை வைத்தார் அவர்.
“இனி இவங்களால வாழ்க்கை முழுவதுக்கும் எழுந்திரிக்கவே முடியாத அளவுக்கு செய்து விட்டேன். ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர். என் அத்தைகளாலுயும் சித்திகளாலும் தான் இவங்களுக்கு இந்த உயிர் பிச்சை. இல்லன்னா இந்நேரம் உருத்தெரியாம அழிச்சு போட்டு இருப்பேன்” என்று சொன்னவனின் கூற்றில் அதுவரை “அம்மா... ஆயா...” “எங்களை விட்டுட்டு சிங்கா.. இனி இதுமாதிரி செய்ய மாட்டோம். எங்களை உயிரோட விட்டுட்டு” என்று அலறிக் கொண்டு இருந்தவர்கள் வெட்கிப் போனார்கள் நால்வரும். எல்லோருக்கும் இப்படி தானே இருந்து இருக்கும்.
எல்லோருக்குமே வாழ வேண்டும் என்கிற ஆசை இருந்து இருக்கும் தானே... ஆனா அவர்களின் உயிரை எல்லாம் துச்சமாக எண்ணி துள்ளி துடிக்க வெட்டிக் கொன்று போட்டு விட்டு இவர்களின் உயிரை மட்டும் காபந்து பண்ணிக் கொள்ள நினைத்த நினைப்புக்கு ராசசிங்கன் சவுக்கடி கொடுத்தான்.
அவன் வாயையே திறக்கவில்லை. ஆனால் அவனது செயல்களிலே அனைத்தையும் அவர்களை உணரவைத்து விட்டான்.
“மத்தவங்க உயிரெல்லாம் வெறும் மயிறு... இதே உங்க உயிர்னா மட்டும் தங்க பேழையில் பொத்தி வைக்கும் பொக்கசமா? சாவுங்கடா... எத்தனை பேரை துள்ளி துடிக்க விட்டு கொன்று இருப்பீங்க... நாலு பேர் காலையும் சிதைச்சு போட்டுட்டேன். ஒரு நாள் முழுக்க இந்த வலியிலே கிடங்க...” என்று தன் ஆத்திரம் தீரும் வரை அடி வெளுத்து எடுத்தவன் ரயில்வே ட்ராக்கில் கொண்டு போய் போட்டவன்,
“நாளைக்கு வரை இந்த வலியோட... எந்த ட்ரெயின்லையும் அடிபடாம, நாய் நரிக் கூட்டத்துக்கு இரையாகாம இருந்து உங்களை காப்பாத்திக்கிட்டு நாளை காலைவரை உயிரோட இருந்தா போனா போகுதேன்னு உங்களை மருத்துவமையில சேர்க்கிறேன். உங்க நாலு பேருக்கும் உயிரை பிச்சையா போடுறேன்” என்று போய் விட்டான் சிங்கன்.
இதைவிட அவர்களை அசிங்கப் படுத்தவே முடியாது. பிச்சையா போட்ட உயிரில் வாழ வேண்டுமா என்று ரோசபாட்டால் போய் சேர வேண்டியது தான்.
மோன்டியா முடமா இருந்தாலும் வாழ்கிற ஆசை அவர்களை விடவில்லை.
தன் ஆட்களை ஏவி விட்ட சிங்கன் இவர்களின் அனைத்து தகவல் தொடர்பையும் முறியடித்து விட்டு, வேறு யாரும் அவர்களை காப்பாற்றாத அளவுக்கு காவலுக்கும் வைத்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.
சிங்கன் சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் இரத்த வாடைக்கு நாய்கள் கூட்டமாய் அங்கு வந்து அவர்களை கடித்து குதறப் பார்க்க, எழுந்து ஓட வழியில்லாமல் ட்ராக்கில் இருந்த கல்லை எடுத்து நாய்களை விரட்டிக்கொண்டு விடியும் வரை அங்கேயே இருந்தார்கள். வலி உயிர் போனது. இரண்டு காலும் முற்றிலும் சிதைந்து போய் இருக்க வலியின் உச்சத்தில் நொடி நொடியாக மரண வேதனை கொண்டார்கள்.
சத்தமின்றி ஒரு சூரசம்ஹாரத்தை செய்து விட்டு வீட்டுக்கு வர வீடு ஒரே கஜ கஜவென்று இருந்தது. யாரையும் கண்டுக் கொள்ளாமல் நேராக குளித்து விட்டு வெளியே வர அவனுக்காக படுக்கையில் காத்து இருந்தாள் ஏந்திழையாள்.
அவளின் மடியில் போய் படுத்துக் கொண்டவன்,
“கட்டிலை விட்டு எழுந்தியாடி?” என்று மிரட்டலாக கேட்டான்.
“சாமி நீங்க அவ்வளவு தூரம் மிரட்டி விட்டு போனதுக்கு பிறகு நான் காலை கீழ வைப்பானா?” சொன்னவள் அவனது ஈரத் தலையை தன் முந்தானையால் துடைத்து விட்டாள்.
அவளின் வயிற்றில் முத்தம் கொடுத்தவன்,
“என் மகன் என்னடி சொன்னான்?” என்று கேட்டு அவளின் வயிற்றை வருடிக் கொடுக்க, அந்த கூச்சத்தில் நெளிந்தவள்,
“ம்ம்ம் வேற என்ன சொல்லுவான். அவன் வருகிற வரை அவனோட அப்பாவை நல்லா பார்துக்கனுமாம். அப்படி நான் நல்லா பார்த்துக்கலன்னா எனக்கு அடி கொடுப்பானாம்” என்று சொல்ல,
“அவன் என் பிள்ளைடி அப்படி தான் இருப்பான்” என்றான்.
“ஹைய்யோ ரொம்ப தான் பெருமை” என்று அவனின் மீசையை பிடித்து இழுத்த நேரம் இரு பாட்டிகளும் உள்ளே நுழைந்தார்கள்.
கைகளில் வெட்டி வைத்த பழங்களும் சூப் பவுலும் இருந்தது.
“இந்தா ராசா” என்று நீட்ட,
“நானா மாசமா இருக்கேன்? அவக்கிட்ட குடுங்க” என்றான்.
“அவளுக்கு இப்ப தான் சாப்பிட குடுத்தேன். இது உனக்கு தான் ராசா” என்று அவர்கள் பாசத்துடன் சொல்ல சிங்கனால் வெகு இயல்பாக அவர்களுடன் ஒன்ற முடியவில்லை.
“ப்ச் வச்சிட்டு போங்க” என்றான் தன் முகத்தை மனைவியின் வயிற்றில் புதைத்துக் கொண்டான். அவன் சிறு வயதில் ஏங்கிய பொழுது இந்த சொந்தங்கள் எல்லாம் எங்கப் போனதாம். இன்று எதுவுமே வேணாம் என்று நிறுக்கும் பொழுது ஒட்டு மொத்த சொந்தமும் வந்து நிற்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அதை புரிந்துக் கொண்டாலும் அவனை அப்படியே தனித்து விட மனமில்லை பாட்டிகளுக்கு.
“ராசா...” என்று சொல்லியபடியே அவனது காலடியில் இரு பக்கமும் அமர்ந்த பாட்டிமார்கள் அவனது கால்களை ஆளுக்கொன்று எடுத்து வைத்துக் கொண்டு அழுத்தி விட,
சட்டென்று அவனது உடல் இறுகிப் போனது. “இதெல்லாம் எதுவும் வேணாம்” என்று கால்களை எடுத்துக் கொள்ளப் பார்த்தான். விடாமல் பற்றிக் கொண்டவர்கள்,
“எல்லோருக்கும் செய்யிறது தான் சாமி... உனக்கு செய்ய முடியாம போயிடுச்சு” என்று கண்கள் கலங்கியவர்கள் அவனது இறுக்கத்தை மெல்ல மெல்ல குறைக்கப் பார்த்தார்கள்.
“உன் வருத்தமும் வேதனையும் எங்களுக்கு புரியுது ராசா. ஆனா நடந்து முடிஞ்ச எதையும் நம்மால மாத்த முடியாது. ஆனா உன் மனக்காயங்களுக்கு மருந்துப் போட முடியும். அதனால தான் அவங்களுக்கு தண்டனை குடுக்குறப்ப கூட யாரும் உன்னை தடுக்கவே இல்லை. எங்களுக்கு நீ இருக்கிறது தெரிஞ்சு இருந்து இருந்தா எப்பவோ உன்னை எங்க உயிர்ல வச்சி பார்த்துக்கிட்டு இருந்து இருப்போம் ய்யா” என்று அவர்கள் சொல்ல அவன் பதிலே பேசவில்லை.
அந்த நேரம் அவனது காலில் இன்னொரு கை பட யார் என்று தலையை தூக்கிப் பார்த்தான். அவனின் சின்ன தாத்தா தான் பிடித்து இருந்தார்.
மீண்டும் அவன் தலையை அவனின் மனைவியின் வயிற்றில் புதைத்துக் கொள்ள,
“ப்ச் தாத்தா வந்து இருக்காருங்க” என்று அவனை உசுப்பி விட்டாள். தலையை தூக்கி அவளை முறைக்க கப்பென்று அமைதியாகி விட்டாள்.
“போங்களேன் எனக்கு என்ன வந்துச்சாம்” என்று அவனுக்கு மீண்டும் தலையை கோதி விட ஆரம்பித்தாள் ஒரு உதட்டு சுளிப்போடு.
ராசசிங்கனின் கால்களை பிடித்தவரும் எதுவும் பேசவில்லை. அதிலே அவர் தன் மன்னிப்பை யாசிப்பது போல இருக்க, தன் கால்களை நகர்த்திக் கொண்டான் சிங்கன்.
ஆனால் அவர் விடவே இல்லை.
“இருக்கட்டும்டா...” என்றவர் மென்மையாக அழுத்தி விட,
“ப்ச் இப்படி நோகாம அழுத்தி விடுறதுக்கு அழுத்தாமலே இருக்கலாம்” என்றான் இவன்.
“கொழுப்பு தான்” என்று அவனது தலையை ஒரு இறுக்கு இறுக்கிப் பிடித்தாள்.
“உனக்கு என்னடி வந்தது. நான் அந்த ஆள் கிட்ட தானே சொன்னேன்...” என்று அவளை முறைத்தவன் சீண்டலாக தன் சின்ன தாத்தாவை பார்த்தான். அவனை பார்த்து மனம் குளிர புன்னகைத்தவர், அவன் விருப்பம் போலவே நன்றாக அழுத்திவிட சுகமாக மனைவியின் மடியில் தூங்க ஆரம்பித்தான் தன் மனக் காயங்கள் எல்லாம் மறந்துப் போய்.





