அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

இருவரும் அமைதியாக தேநீர் பருகி விட்டு,

“குளிச்சுட்டு வா சாப்பிடலாம்” என்றான் கதிரவன்.

“இல்ல கொஞ்ச நேரம் தூங்கனும். அப்பறமா சாப்பிட்டுக்குறேன். காலையில இருந்து டீ பிஸ்கட் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு” சொல்லிட்டு அவள் கீழே இறங்க, அவனும் கீழே இறங்கினான்.

“சுயர்”

“எஸ்” என்றாள் நிலா.

“ஓகே” என்று தன் அறையில் புகுந்தவன், போனை எடுத்து கீழே இருக்கும் போனுக்கு போன் போட்டான்.

பாட்டி தான் எடுத்தார்.

“நான் தூங்குறேன் பாட்டி. டிஸ்ட்டப் பண்ண வேண்டாம். அவ எழுந்தா அவளுக்கு டிபன் குடுத்து கவனிங்க..” சொல்லி விட்டு வைத்து விட்டான்.

“சரிய்யா” என்று மண்டையை ஆட்டிக் கொண்டு இருந்த மாமியாரை பார்த்து பெருமூச்சு விட்டவர், அவர் போனை வைத்த உடன்,

“என்னவாம் உங்க பேரனுக்கு?” கேட்டார் காமட்சி.

“அந்த பெண்ணை சாப்பிட வைக்கணுமாம்” என்றார்.

“ஓ..!” என்று கேட்டுக் கொண்டார்.

“என் கிட்ட விருந்தினர் அறைக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டு, இங்க வந்து பார்த்தா அவனோட பக்கத்து அறையில தங்க வச்சுட்டான்.. இவன் மனசுல என்ன நினைப்பு இருக்குன்னே தெரியல அத்தை” என்றார்.

“எனக்கும் ஒன்னும் புடிபடல காமாட்சி.. இன்னும் சின்ன மருமவ ஊருக்கு போயிட்டு வரல. அதுவரை தலை தப்பியது. இல்லன்னா அவ வேற வந்து ஒரு ஆட்டம் காட்டுவா” என்றார்.

“ம்ஹும்.. எல்லோருக்கும் பதில் சொல்லி ஓயாது நமக்கு.. என்னவோ போங்க அத்தை” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே விசாலத்தின் இளைய மகள் மங்கை வந்து விட்டார் அந்த விடியற்காலை பொழுதிலே..

ஒரு தெரு தள்ளி தான் அவரின் வீடு. அதற்குள் பெரிய வீட்டில் சின்னவர் ஒரு பெண்ணுடன் ஜீப்பில் இருந்து வந்து இறங்கி இருக்கிறார் என்கிற விசயம் அந்த ஊர் முழுக்க காட்டு தீயாய் பரவி இருந்தது.

அது அவருக்கும் தெரிந்து இருக்க அடித்து பிடித்துக் கொண்டு வந்து விட்டார் தாய் வீட்டுக்கு.

“அம்மா” என்று வாசலில் இருந்து அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வர, தந்தை அங்கு திருவாசகம் படித்துக் கொண்டு இருக்கக் கண்டு, வாயை மூடிக் கொண்டவர் வேகமாய் அடுப்படிக்குள் நுழைந்தார்.

“வாடி” என்று விசாலம் அழைக்க,

“இப்ப அது தான் முக்கியமா? கதிரவன் என்னம்மா பண்ணிட்டு வந்து இருக்கான்..” எடுத்த எடுப்பிலே அவர் கேள்வி கேட்க,

“அடியேய் இருடி.. எங்களுக்கும் ஒன்னும் புரியல. அதுக்குள்ள நீ வந்து ஜங்கு ஜங்குன்னு ஆடாத” என்றார்.

“அண்ணி நீ கூடவா இதுக்கெல்லாம் உடைந்தை. உன்னை தானே மலை போல நம்பி என் பிள்ளையை பெத்து வச்சு இருக்கேன். இப்படி என் தலையில கல்லை போட உனக்கு எப்படி மனசு வந்துச்சு..” ஆடாத ஆட்டமாய் அவர் ஆட,

“ப்ச் மங்கை நீ வேற, இங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கே ஒன்னும் புரியல. உன் மருமவனை ஒத்த வார்த்தை கேள்வி கேட்டு விட முடியுமா? நாங்களே ஒன்னும் தெரியாம தான் முழிச்சுக்கிட்டு இருக்கோம். பயண களைப்பு. தூங்கி எழுந்திரிக்கட்டும். வந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு அப்புறம் ஆத்திரப்படு. இப்ப வந்து காபி தண்ணி குடி” என்று மலை இறக்கி விட்டார் காமட்சி.

அதன் பிறகு மூவரும் அடுப்பையில் சமையல கவனிக்க,

“என்னம்மா அங்க நம்ம வீட்டுல சமைக்காம இங்க அத்தை வீட்டுல வந்து என்ன பண்ணிட்டு இருக்க?” கேட்டுக் கொண்டே வந்தாள் மகா.

“வாடி” என்று அவளை வரவேற்றபடியே அவளுக்கு காபி தண்ணியை நீட்டினார் காமட்சி.

“பெர்பெக்ட் அத்தை” என்று அவர் நீட்டிய காபியை வாசம் பிடித்துக் கொண்டே குடிக்க ஆராம்பித்தாள்.

கொஞ்ச நேரத்திலே காமாட்சியின் மூத்த மகள் ரேவதி வந்தார்.

“என்னமா நடக்குது வீட்டுல. வேலையாள் சொல்றது எல்லாம் உண்மையா? தம்பி எங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தவரை நான்கு பெண்களும் பாவமாய் பார்த்தார்கள்.

“இதுக்கு இல்லையா சார் எண்டு” என்ற நிலையில் இருந்தார்கள் காமாட்சியும் பாட்டியும்.

“ஆத்தா ரேவதி எங்களுக்கும் ஒன்னும் தெரியாது த்தா.. உன் தம்பி வரட்டும். அதுக்கு பிறகு அய்யா சட்டையை பிடிச்சு நீயே கேள்வி கேளு” என்றார் பாட்டி.

“ப்ச்.. நீங்க எல்லாம் கேள்வி கேட்காதீங்க.. நான் தான் இளிச்ச வாய் பாருங்க” என்று முறைத்தவர்,

“ம்மா எப்படியும் அத்தை வீட்டுக்கு இன்னைக்கு இங்க தானே சமையல். அப்படியே என் வீட்டுக்கும் சேர்த்து இங்கயே சமைச்சிடுங்க.. நான் போய் பேங்குக்கு கிளம்புறேன். சித்தும் அவரும் சாப்பிட இங்க வர சொல்லிடுறேன். இங்க இருந்தே கிளம்பிடுறோம் வேலைக்கும் ஸ்கூலுக்கும்” என்று அவரின் அறைக்குள் புகுந்துக் கொண்டார் ரேவதி.

“நானும் விட்ட தூக்கத்தை கண்டினியூ பண்ண போறேன்... பாய்” என்று சொல்லி துளசியின் அறைக்குள் நுழைந்து அவளோடு சேர்ந்து இவளும் தூங்க ஆரம்பித்து விட்டாள் மகா.

“எம்மா எனக்கும் அசதியா இருக்கு.. நானும் செத்த படுக்குறேன்” என்று சொல்லிய மங்கை தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

என்ன தான் வீட்டு பெண்களை வெளியே கட்டிக் குடுத்தாலும் அவரவர்களுக்கு என்று அந்த பெரிய வீட்டில் தனித்தனி அறை இருந்தது.

மாமியாரும் மருமகளும் மட்டும் வேலையாட்களை வைத்துக் கொண்டு மூன்று குடும்பத்துக்கும் சேர்த்து சமைத்தார்கள்.

இது போல வாரத்துக்கு நான்கு முறை நடக்கும் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவர்கள். நல்ல நாள் பெரிய நாள் வார விடுமுறை என்றால் அனைவருக்கும் இந்த பெரிய வீடு தான்.

அதுவும் காமாட்சியை பொறுத்தவரை எதையும் கண்டுகொள்ள மாட்டார். வந்தவர்களை முகம் சுழிக்காமல் பார்த்து கவனித்து மனம் போல செய்து செய்து அனுப்புவார்.

ஆனால் அதற்கடுத்து இருக்கும் சின்ன மருமகளுக்கு இப்படி செய்வதில் பெரும் கடுப்பு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விசனம் எல்லாம் கதிரவனின் மனைவி எப்படி அமைவாளோ என்று தான். ஏனெனில் அடுத்த வாரிசு இவன் தான். இந்த குடும்பத்தை கட்டில் ஆளும் உரிமையும் கதிரவனின் மனைவிக்கு மட்டும் தான்.

தங்களுடன் ஒட்டு உறவாக வருபவள் இருப்பாளா என்று தான் கவலை. அதுவும் ரேவதி, மங்கை இருவருக்கும் அந்த எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகம்.

பிறந்த வீட்டை எப்படி அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியுமா என்ன? பெண்கள் கட்டையில் போனாலும் பிறந்த வீட்டு சீர் இல்லாமல் போக மாட்டார்கள் இல்லையா? இது எல்லா பெண்களுக்கும் உள்ள குணம் தானே.

அதனால் கதிரவனுக்கு வெளியே பெண் எடுக்காமல் மங்கையின் மகளான மகாவை கட்டி வைக்க வீட்டில் இருந்த அத்தனை பேரும் ஆசை பட்டார்கள். ஆனால் அவள் இன்னும் படிப்பை முடிக்காத காரணத்தினால் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இல்லை என்றால் எப்பவோ கதிரவனின் கல்யாணம் நடந்து இருக்கும். எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டே மாமியாரும் மருமகளும் அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:07 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top