அன்றிரவு கதிரையும் அவனது மனைவியும் அங்கேயே தங்க சொல்லிவிட்டு இவர்கள் மேலே தங்களது அறைக்கு வந்தார்கள்.
இலகு உடைக்கு மாறிவிட்டு வந்தவனிடம் கையை நீட்டினாள் ஏந்திழையாள்.
என்ன என்பது போல அவன் பார்த்தான். அவளது கையை பற்றி குலுக்கவே இல்லை அவன். அதை கண்டு கொள்ளாமல்,
“வாழ்த்துக்கள்...” என்றாள் கையை மடக்கிக்கொண்டு.
“உண்மையை சொன்னா நீ இந்த வாழ்த்தை எனக்கு சொல்ல மாட்ட டியர்.. திருப்பி வாங்கிக்குவ” என்று கண்ணடித்தான்.
ஏன் என்பது போல அவனை பார்த்தாள்.
“ஏன்னா இன்னைக்கு தோற்கடிச்சது உங்க க்ரூப்ஸ் ஆப் கம்பெனியை தான்” என்றான் ஏளனமாக.
அதில் ஒரு கணம் முகம் வாடினாலும்,
“ஜெயிச்சது நீங்க தானே... சோ என் வாழ்த்துக்களை நான் திரும்ப பெற தேவையில்லை... எப்படியும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு தான்” என்று மாற்று உடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.
போனவளின் முதுகை வெறித்துப் பார்த்தான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது அவனது கண்களில் ஒரு மின்னல் வந்து விட்டு போகிறது. இதோ இப்பொழுது கூட ஒரு மின்னல் தெரித்துக் கொண்டு இருக்கிறது.
ஆனால் அதை பார்க்க தான் ஏந்திழையாளுக்கு கொடுத்து வைக்கவில்லை பாவம்.
உடை மாற்றி விட்டு வந்த ஏந்திழையாள் தானாகவே அவனை நெருங்க ராசசிங்கனின் கண்களில் மீண்டும் மின்னல் வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“என்னடி ஒட்டி ஒட்டி வர்ற... எனக்கு மூட் இல்ல” என்று பட்டு கத்தரிப்பது போல நறுக்கென்று அவன் கத்தரித்து பேச முன்பு போல இருந்தால் இந்நேரம் ஆமை போல ஓட்டுக்குள் சுருண்டு இருப்பாள். ஆனால் இப்பொழுது ராசசிங்கனை அவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறதே... பிறகு எப்படி அவனை விட்டு அவள் ஒதுங்கிப் போவாள்.
“பரவாயில்லை இதுக்கு மூட் வேணும்னு ஒன்னும் அவசியம் இல்லை” என்றவள் அவனை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டாள்.
“இப்படி செஞ்சா கட்டிலுக்கு கூப்பிடுறன்னு பொருள்டி” என்றான் விடாமல். ஆனாலும் அவனின் முகம் அவளின் நெஞ்சில் தான் புதைந்து இருந்தது.
“அப்படின்னு எல்லா நேரமும் நினைக்க முடியாதுங்க... சில நேரம் நம்ம கணிப்பு பொய்யா கூட போகலாம்” என்றவள் அவனை தனக்குள் இன்னும் பொத்தி வைத்துக் கொண்டு அவன் வெறுத்த தனிமையை போக்கிக் கொண்டு இருந்தாள்.
மெல்ல அவளின் இடையில் அவனது கை ஊர, குனிந்து அவனை பார்த்தாள்.
“பிடிச்சுக்க வேணும்ல” என்றவன் அன்றைய இரவு முழுவதும் அவளின் அணைப்பிலே குளிர் காய்ந்தான். சிறு பிள்ளையாய் முகத்தை அவளது மார்பில் புரட்ட தவித்துப் போனாள்.
அவளை மேலும் அவன் தவிக்க விட,
“ஷ்... பேசாம படுங்க” என்று அதட்டினாள்.
“என்னடி கொஞ்சம் விட்டா ரொம்ப தான் போற... நான் ராசசிங்கன்” என்று கண்கள் சிவக்க அவளை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான்.
“நான் இல்லன்னா சொன்னேன்... பேசாம தூங்க தான் சொன்னேன்.. ப்ளீஸ் தூங்குங்க” என்றவளுக்கு ஏனோ அவனை தாலாட்டி தூங்க வைக்க ஆசை வர,
“நான் பாட்டு பாடட்டுமா?” என்று கேட்டாள்.
“சும்மாவே உன் குரலை கேட்க முடியாது. இதுல பாட்டு வேறையா.. அதுக்கு வேற ஆளை பாரு” என்று ஒருக்கழித்து அவனது நெஞ்சிலே படுத்துக் கொண்டான். அவள் பாடும் பாட்டை கேட்பதற்காக.
அவனது தலையை கோதிக் கொண்டே,
“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி..” என்று அவள் பாட, “எனக்கு பாட்டு பாட சொன்னா நீ என்னடி சாமிக்கு பாட்டு பாடிக்கிட்டு இருக்க” என்று நிமிர்ந்து பார்த்து அவளை முறைத்தான்.
அவனை இழுத்து மீண்டும் தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவள்,
“உங்களுக்கு தான் பாடுறேன்... கண்ணை மூடி கேளுங்க” என்று அதட்டியவள்,
“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி..” பாடி விட்டு அடுத்த வரியை அவள் பாடினாள்.
“ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி” என்று அடுத்த வரி வர கண்கள் ஒளிர அவளை நிமிர்ந்து பார்த்தான். ராசசிங்கன் ராஜாதி ராஜன் தானே...
அந்த பொருளை உணர்ந்தே ஏந்திழையாள் பாடினாள். அதை புரிந்துக் கொண்டவனோ அவளை பார்க்க, அவனை பார்த்து கண்ணை காட்டி சிரித்தவள்,
“இப்போ நிம்மதியா படுங்க” என்றவள் பாட்டை தொடர்ந்தாள்.
“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி...
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி..
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி.
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி...
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ...” என்று பாடி முடிக்கையிலே ராசசிங்கன் தூங்கி இருந்தான்.
அவனது நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவள் அவனை சுமந்துக் கொண்டே இவளும் தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் இருந்து ரொட்டின் ஒர்க் ஆரம்பம் ஆனது...
நின்று நிதானிக்க நேரமின்றி வேலை ராசசிங்கனை இழுத்துக் கொள்ள தனிமை பட்டுப் போனாள் ஏந்திழையாள். இரவு கூட நேரம் கழித்து தான் வந்தான். வந்தால் உணவு கூட உண்ணாமல் அவன் உறங்கி வழிய ஏந்திழையாள் நிலை இன்னும் மோசமாகிப் போனது.
அடைமழை இல்லை என்றாலும் ஒரு துளி நீராவது கிடைத்தால் கூட போதும் என்கிற நிலையில் இருந்தாள். ஆனால் அவளின் உணர்வுகளையும் நிலையையும் அறியாமல் வேலை வேலை என்று ஓடினான் ராசசிங்கன்.
அந்த நேரத்தில் தான் ஏந்திழையாள் அவனை அதிகம் தேடினாள். அதோடு ஒரு மிக்கியமான செய்தியும் அவனிடம் சொல்ல வேண்டி இருந்தது.
அதை அவனிடம் வெளிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது.
நேரில் தான் பார்த்து பேச முடியவில்லை. அட்லீஸ்ட் அவனுக்கு போன் போட்டாவது சொல்லலாம் என்று போன் போட்டாள். அவளுடைய அழைப்புக்கு அவன் செவி மடுக்கவே இல்லை.
கதிருக்கு போனை போட்டாள்.
அவன் அந்த பக்கம் எடுத்த உடனே, “உங்க பாஸ் பெருமைக்கு தாலி கட்டி என்னை ஸோக்கேஷ் டாலா வச்சு இருக்காரு. இதுக்கு தான் எங்க வீட்டுல இருந்த அத்தனை பேருக்கிட்டையும் சண்டை போட்டு என்னை தூக்கிட்டு போய் தாலி கட்டினாராடா” என்று பொங்கினாள்.
“மேடம்” என்று அவன் விழி பிதுங்க,
“அதுக்கு ஒத்து ஊதுனது நீதானே... இதுல எங்க அண்ணனுங்களை வேற பொளந்து கட்டுவேன்னு வேற சொன்னல்ல.. இனி வீட்டு பக்கம் வா... காலை நறுக்குறேன்” என்று காய்ந்தாள்.
“மேடம்” என்று அவன் இன்னும் பம்ம,
“நாளைக்கு பத்து மணிக்கு உங்க சார் கிட்ட எனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணிடுங்க கதிர் சார்... தாலி கட்டின பொண்டாட்டி என்றாலும் உங்க பாஸை அப்பாயின்ட்மென்ட் இல்லாம பார்க்க முடியாது போல..” என்று குரல் ஒடுங்க சொன்னவள் பட்டென்று வைத்து விட்டாள்.
அவளின் குரலை கேட்ட கதிருக்கு ஒரு மாதிரி ஆகிப் போக வேகமாய் ராசசிங்கனிடம் ஓடினான்.





