அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கப்பு காஞ்சிடும் விளக்குறவங்களுக்கு சிரமமா போகும். அதனால போய் இப்பவே கீழ குடுத்துடு” என்று அறிவுறுத்தல் வேற கதிரவனிடம் இருந்து.

பெருமூச்சு விட்டவள், இரண்டு கப்பையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

வீட்டு பெண்கள் அடுப்படியில் இருக்க, வேலையாட்கள் அங்கும் இங்குமாய் நின்று வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களிடம் கொடுக்க எண்ணினாள். ஆனால் அவனின் அம்மாவிடம் தான் குடுக்கணும் என்று சொல்லி இருக்க, தயக்கத்துடன் அடுப்படிக்குச் சென்றாள்.

அங்கே பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டு இருந்த காமாட்சியை பார்த்து தயக்கத்துடன் பார்த்தாள்.

எதற்காகவோ அவர் திரும்பவும் பனி நிற்பதை பார்த்தார். சட்டென்று பதறிப் போனவர்,

“என்னம்மா எதுவும் வேணுமா? மேல இருந்தே கூப்பிட்டு இருந்து இருக்கலாமே.. நான் ஓடி வந்து இருப்பனே” என்றவரின் பேச்சில் இவளுக்கு பாவமாய் போக, சட்டென்று அவரின் கையை பற்றிக் கொண்ட பனி,

“அச்சோ ஏன் ஆன்டி இப்படி பதறுறீங்க.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. இந்த டீ கப்பை குடுக்கலாம்னு வந்தேன்” என்றாள் பாவமாய்.

“அப்படியா?” என்றவருக்கு அதன் பிறகே மூச்சு சீராய் வந்தது.

“நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ம்மா.. தம்பி உன்னை நல்லா கவனிச்சுக்க சொன்னாப்லையா.. நான் இங்க அடுப்படி வேலையில இருந்ததுனால நீ கூப்பிட்டு எனக்கு கேட்கலையோன்னு நினைச்சு பதறிட்டேன்” என்று சொன்னவரை கண்டு ரொம்ப பாவமாய் இருந்தது அவளுக்கு.

“ஆன்டி ப்ளீஸ் என்னை பார்த்து இப்படி பதறாதீங்க.. நான் அவ்வளவு பெரிய விஐபி எல்லாம் இல்லை. ப்ளீஸ் என்னை சாதாரணமாவே நடத்துங்க” என்று சொன்னவளின் பேச்சில் இருந்த இயல்பு காமாட்சியை வெகுவாக ஈர்க்க,

“நல்ல பொண்ணு தான் போல..” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட நேரமே,

“உங்க மகனுக்கு எல்லாம் பயப்படாதீங்க.. இயல்பா இருங்க. அவரு உங்களை எதுவும் இனி சொல்ல மாட்டாரு” என்று வேறு அவள் சொல்ல, காமாட்சி ஆச்சர்யமாய் பார்த்தார் அவளை.

“இங்க எதுக்கு வந்த.. உன் இடம் எதுன்னு உன்னக்கு தெரியாதா. இது இந்த வீட்டு பொண்ணுங்க மட்டும் புழங்குற இடம். இங்க கண்டவளுக்கும் நுழைய உரிமை இல்லை.. வரவும் கூடாது.. ஊர் பேர் தெரியாதவ எல்லாம் எங்க வீட்டு அடுப்படி வரை நுழையிறாளுங்க.. எல்லாம் என் மருமகனை சொல்லணும். யார் யாரை எங்க வைக்கணும்னே தெரியல..” என்று மங்கை நாக்கில் நரம்பு இல்லாமல் பேசிவிட்டு,

“அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி.. போக சொன்னா உடனே இங்க வந்து நுழைஞ்சிடுவியா..? ஏதோ திறந்த வீட்டுக்குள்ள நுழையிற மாதிரி நுழையிற.. இது தான் இங்க வர்றது கடைசியா இருக்கணும். அவன் ஆயிரம் சொல்லுவான். ஆனா நீ தான் எல்லாத்தையும் விட்டு தள்ளி இருக்கணும்..” என்று மேலும் அவர் பேசினார். தன் அண்ணியிடம் அன்னையிடமும் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் பனிநிலவிடம் அவர் கொட்ட, விக்கித்துப் போனாள்.

நொடியில் கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்து விட்டது. நாயோடு தன்னையும் இணை கூட்டி பேசிய பேச்சில் உள்ளுக்குள் பெரிதும் அடி வாங்கினாள்.

சுயம் வர, பட்டென்று காமாட்சியின் கையை விட்டவள், “சாரி” என்று விட்டு வேகமாய் அங்கிருந்து நகர,

“அம்மாடி நில்லும்மா” என்று பாட்டி பனியை அழைக்க, அவளோ யாரையும் தலை தூக்கிப் பார்க்காமல் அங்கிருந்து ஓடியே போய் விட்டாள். அப்படியே நின்று விட்டார் காமாட்சி.

நெஞ்சை ஏதோ அடைத்த உணர்வு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிதமான புன்னகையுடன் பேசிய அந்த புது பெண்ணின் முகம் சட்டென்று அவமானத்தில் சுருங்கிப் போனதை பார்த்தவருக்கு மங்கை மீது அவ்வளவு கோவம் வந்தது. ஆனால் அதை அப்படியே அவரிடம் காட்டி விட முடியாதே..

இல்லை என்றால் இதற்கும் சேர்த்து வைத்து ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைப்பார். சின்ன பெண்ணை இப்படி முகத்துக்கு நேராக வைத்து அவமரியாதை செய்த மங்கையை என்ன சொல்லி நோவது என தெரியாமல் மனமொடிந்து போகும் பிள்ளையை கலங்கிப் போய் பார்த்தார் காமாட்சி.

எவ்வளவு பண்பாய் பேசினாள். என் கிட்டையே என் மகனை பார்த்து பயப்படக் கூடாதுன்னு சொன்னாளே.. என்ன பாங்கு.. குரலை கூட உயர்த்தி பேசவில்லை. அப்படியாப்பட்ட பெண்ணை ஒரு நொடியில் உடைத்துப் போட்டு விட்டாளே இந்த மங்கை என்று மனம் சுணங்கிப்போனவர்,

அடுப்படி வேலையில் ஈடுபட்டார். ஒரு அரை மணி நேராம் சென்று இருக்கும். கை வேலையை விட்டுட்டு கருவேப்பில்லை, இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி, மாங்காய், பெருங்காயம் கலந்த மோரை கலக்கி அதில் மூன்று ஐஸ் கட்டி போட்டவர் கையில் எடுத்துக் கொண்டு வெளியே போக,

“எங்களுக்கு எல்லாம் மோர் இல்லையா அண்ணி?” என்று மங்கை ஒன்றுமே நடக்காதது போல கேட்க,

“அங்க வச்சு இருக்கேன் மங்கை எடுத்துக்க” என்றுவிட்டு போகப் பார்க்க,

“இப்போ இது யாருக்கு?” என்று கேட்டவரை அழுத்தமாக பார்த்த காமாட்சி “அந்த பொண்ணுக்கு தான்” என்றார்.

“நான் இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க அவளை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறது எல்லாம் கொஞ்சமும் சரி இல்லை அண்ணி”

“மங்கை இது மகனோட கட்டளை. அந்த பெண் இந்த வீட்டுல இருக்குற வரை என்னை நல்லபடியா பார்த்துக்க சொல்லி சொல்லி இருக்கிறான். என் மகன் பேச்சை என்னைக்கும் நான் தட்டியதே இல்லை. இப்பவும் அதே மாதிரி தான்” என்றார்.

“அப்போ அந்த பெண் தான் உங்க மருமகன்னு உங்க மகன் சொன்னா அதுக்கும் நீங்க தலையை ஆட்டுவீங்களா அண்ணி” அவ்வளவு ஆத்திரம் தென்பட்டது அவரின் பேச்சில்.

ஒரு கணம் நிதாணித்தவர்,

“என் மகனோட விருப்பம் அது தான்னா என்னால வேற என்ன செய்ய முடியும் மங்கை. எந்த தயக்கமும் இல்லாம அந்த பெண்ணை என் மருமகளா ஏத்துக்குவேன். ஏன்னா சொன்னது என் மகன்” என்று அதிராடியாக சொன்னவரை கண்டு வாயடைத்துப் போய் நின்றார் மங்கை.

“ம்மா இந்த அண்ணி பேசுற பேச்சை கேட்டியா?” என்று விசாலத்திடம் முறையிட, காமாட்சி மோர் கிளாசோடு மேலே போய் விட்டார்.

“நீ பேசுன பேச்சு மட்டும் சரியா மங்கை. உன்னை விட  ஒரு மண்டங்கு சின்ன பெண்ணை போய் இவ்வளவு அசிங்கமா நாயோடு ஒப்பிட்டு பேசி இருக்கியே இது எந்த விதத்துல நியாயம். நீ பேசுன பேச்சு மட்டும் கதிரவனோட காதுக்கு போனா என்ன நிலை ஆகும் தெரியுமா?” என்று விசாலம் அவர் பங்குக்கு குதிக்க, மங்கைக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

“அப்போ என் பொண்ணோட நிலைமையை நினைச்சு நான் பரிதவிக்கிறது எல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்லை இல்லையா?” விதண்டாவாதத்துக்கு பேசியவரை ஆயாசத்துடன் பார்த்த விசாலம் அதன் பிறகு வாயையே திறக்கவில்லை.

இவக்கிட்ட பேசுறதே வீண் என்று வேலையை பார்த்தார்.

ஆனால் மங்கை அப்படி ஓய்ந்துப் போகவே இல்லை. புலம்போ புலம்பு என்று புலம்பிக் கொண்டே இருந்தார். அதுவும் பனியை “எங்க இருந்து வந்தாளோ என் வீட்டு ஆட்களையே எனக்கு எதிரா திருப்பிட்டா... நல்லா இருப்பாளா இவ.. என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டாளே” கரித்துக்கொட்டிக் கொண்டு இருந்தார்.

விசாலத்துக்கு பனியை எண்ணி வேதனையாக இருந்தது. அடக்கிப் பார்த்தும் அடக்க முடியாமல் போக விட்டுவிட்டார்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:13 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top