அத்தியாயம் 7

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்னம்மா இப்படி பேசுற.. அப்போ என் பொண்ணோட வாழ்க்கை” சட்டென்று கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது மங்கைக்கு. அவரின் ஆசையே தன் தாய் வீட்டுக்கு தன் மகளை குடுத்து இன்னும் அதிகாரத்தை இங்கே நிலை நாட்ட தான். அதோட தாய் வீட்டு உறவு அவருக்கு காலமும் நிலைக்கும் இல்லையா..

அது மட்டும் தானா.. இல்லையே ஊரே கை எடுத்து கும்பிடும் குடும்பம் அவரின் தாய்வீடு. ஊர் மரியாதை எல்லாம் இந்த குடும்பத்துக்கு தான். பெரிய குடும்பம் என்ற சொல்லின் பின்னாடி இருக்கும் கெளரவம் அவருக்கு வேண்டியதாக இருந்தது.

அதுவும் கதிரவனின் ஆளுமை, திறமை, தோற்றம், தோரணை என எல்லாமே பார்ப்பவரின் கண்களை அப்படி நிறைத்துப் போடும். அந்த குடும்பத்தில் எல்லாமே கதிரவான் தான். அவனையே தன் கைக்குள் வைத்துக் கொள்ள தான் தன் மகளை அவனுக்கு கட்டிக் குடுத்து சாதித்துக் கொள்ள இரகசிய திட்டம் உள்ளுக்குள் இருந்தது அவருக்கு.

ஆனால் அதை எல்லாம் முறித்துப் போட்டு விட இதோ பனிநிலவு வந்து இருக்கிறாள். அவளை எதிரியாக பார்த்த மங்கையை அதட்டி அடக்கி வைத்து விட்டார் விசாகம்.

“வேற எப்படி பேச சொல்ற...? அவன் கதிரவன். அதை முதல்ல ஞாபகம் வச்சுக்க.. அய்யா என்ன முடிவு எடுக்கிறானோ அது தான் இந்த வீட்டுல எல்லாரோட முடிவும். உன் இஸ்ட்டத்துக்கு வார்த்தையை விடாத. அவன் அம்மாக்கிட்ட நீ இப்படி பேசுனதை கேட்டாலே உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான். கவனமா இரு” என்றவர்,

“போய் ரெண்டு டீ போட்டுட்டு வா காமட்சி.. அவங்களுக்கு குடுக்கலாம்” என்று மருமகளை அனுப்பியவர்,

“காமாட்சி எதுவும் பேச மாட்டான்னு அவளை அதிகம் பேசாத மங்கை. அவளுக்காக நான் இருக்கேன். மத்தியம் சமைக்க உதவி பண்ணு வா” என்று இவரும் எழுந்து அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டார்.

தாயின் பேச்சில் விக்கித்துப் போனார் மங்கை. அவரையும் அறியாமல் டைனிங் டேபிள் பக்கம் பார்வை போனது.

அங்கே இன்னும் கதிரவன் பனியை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவனது கவனிப்பில் அவள் தான் நெளிந்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கு இந்த கவனிப்பு எல்லாம் புதிது. சாப்பிட்டியா என்று கேட்க கூட ஆளில்லை இதுநாள் வரை. ஆனால் அந்த வீட்டின் தலைமகன் இப்படி அவளை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து கூச்சமாகிப் போனது.

அதுவும் தனக்காக அவனது குடும்பத்தாரிடம் சண்டை போட்டது எல்லாம் அவளை மிகவும் நெகிழ்த்தி இருந்தது. ஆனால் அதே நேரம் சற்று தூரத்தில் இருந்தபடி தங்களையே பார்த்துக் கொண்டு இருக்கும் வீட்டு பெண்களின் பார்வையில் அசெளகாரியமாக உணர்ந்தாள்.

இப்படி இவன் கவனிக்காமல் இருக்கலாம் என்று தான் தோன்றியது. ஆனால் கதிரவன் அடங்குவானா என்ன..

“சட்னி போட்டுக்க வேண்டியது தானே.. ஏன் வெறும் தோசையை சாப்பிடுற”

“இன்னும் ஒரு பூரி போட்டுக்க” என்று அவன் அவளின் தட்டில் பார்த்து பார்த்து வைத்தான்.

“ஆனியன் தோசை ஒன்னு சொல்லவா?”

“இல்ல ஒரு ஆம்லேட் போட்டுட்டு வர சொல்லவா? சாப்பிடுறியா?” என்று கேட்டான்.

அவனின் கவனிப்பை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல்,

“ப்ளீஸ் என்னை இப்படி எல்லாம் கவனிக்காதீங்க.. என்னால முடியல.. ரொம்ப மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. ரொம்ப புதுசா இருக்கு” என்றவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“இனி நீ எல்லாத்துக்கும் பழகிக்க.. பழகி தான் ஆகணும்” அழுத்தமாக சொன்னவன், “கேட்டனே” என்றான்.

“இல்ல வேணாம்.. இதுவே போதும்” என்று தட்டில் இருந்த பூரியை பிய்த்து உண்டாள்.

“சுயர்”

“யா.. ஹண்ட்ரட் பெர்சென்ட்”

“ம்ம்” என்றவன் அவள் சாப்பிடும் வரை உடன் அமர்ந்து இருந்தான். அவள் முழுமையாக உண்ட பிறகே அவளுடன்  எழுந்து கைக்கழுவ வந்தான்.

அவனின் ஒவ்வொரு செயலிலும் இவளுக்கு மூச்சு திணறியது. சொன்னாலும் அவன் கேட்கும் நிலையில் இல்லை என்பதை புரிந்து அமைதியாக இருந்துக் கொண்டாள். அதுவும் ஆடர் வேற போடுறானே என்று குமைந்துப் போனாள்.

எல்லாம் இன்னும் ஒரு மாதம் மட்டும் தான். அதுவரை இவனை பொறுத்துப் போகலாம் என்று எண்ணிக் கொண்டாள். ரொம்ப எல்லை மீறினா அதுக்கு பிறகு பார்த்துக்கலாம். என்று எண்ணியவளுக்கு தெரியவில்லை இந்த ஒரு மாத காலமும் அவனின் பழக்கத்துக்கு பழகிய மனம் அதன் பிறகு வரும் நாட்களில் அவனின் கவனிப்புக்காக ஏங்கிப் போவோம் என்று.

பனிநிலவு கதிரவனின் கவனிப்புக்கு எங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

பனிக்கு சாப்பிட்ட பிறகு தான் தூக்கம் சொக்கியது.

“தூக்கம் வருது. நான் போய் தூங்குறேன்” என்று அவள் கதிரவனிடம் சொல்லி விட்டு அவளின் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் போன பிறகு, “ம்மா” என்று சத்தம் குடுத்தான் அடுப்படி பக்கம் திரும்பி.

ஈரக்கையை துடைத்துக் கொண்டு அவசர அவசரமாய் டீயை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் காமட்சி.

“இதோ வந்துட்டேன் ப்பா” என்று வேகமாய் வந்தவரை பார்த்து, ட்ரேயை வாங்கிக் கொண்டவன்,

“நான் டிப்போ போயிட்டு அப்படியே குடோன் போயிட்டு வரேன்...” என்று அவன் முடிக்கும் முன்பே,

“அந்த பெண்ணை நல்லா கவனிச்சுக்குறேன் தம்பி.. மதியம் சாப்பிட வச்சுடுறேன்..” என்று அவசரமாய் அவர் மொழிய, அவரை கூர்ந்துப் பார்த்தவன்,

“அவளை நல்லா பார்த்துக்கோங்க ம்மா” என்றான் சின்ன தலையசைப்புடன். அவனது குரலில் என்ன இருந்தது என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனது பேச்சை மீறி அவர் இன்று வரை எதுவும் செய்தது இல்லையே..

“நிச்சியமா ப்பா” வாக்குறுதி குடுத்தார்.

“சரி வரேன்” என்று மேலே வந்தவன், அவளின் கதவை தட்டி உள்ளே நுழைந்தான். டீயுடன் அவன் வரவும்,

“இப்ப தானே சாப்பிட்டேன்” என்று அவள் மறுக்க, “சூடா குடி நல்லா இருக்கும்” என்று அவளுக்கு பழக்கப் படுத்தினான்.

“ஆனா..” என்று அவள் மறுக்க வரும் பொழுதே,

“எப்படியும் ஆபிஸ்ல பதினனொரு மணிக்கு குடிக்கிறது தானே” என்றான்.

‘எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு இருக்காரு’ முணகியவள் வேறு வழியில்லாது எடுத்துக் கொண்டாள்.

அவளுடன் அமர்ந்து அவன் டீயை பருக, இவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதுவும் ஒரே அறையில் இருவரும்.. இதெல்லாம் புதிது.. ஆனாலும் எதுவும் சொல்லாமல் அவனுக்கு அருகில் உட்காராமல் குறுங்கண் ஓரம் நின்றுக் கொண்டு வெளியே வேடிக்கை பார்ப்பது போல தள்ளி இருந்துக் கொண்டாள்.

அவளின் ஒதுக்கம் புரிந்தாலும் கதிரவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. என்னை முதல்ல பழகு. அதுக்கு பிறகு இந்த வீட்டு ஆளுங்களையும் பழகு.. வேற வழியில்லை என்று சொல்லி விட்டான்.

டீயை குடித்தவன், “ரெண்டு கப்பையும் கீழே அம்மாக்கிட்ட கொண்டு போய் குடுத்துடு” என்றான்.

“ஹாங்.. நானா” வியர்த்துப் போனது அவளுக்கு.

“ஆமா நீ தான்” என்று விட்டு அவன் கிளம்பி கீழே போய் விட்டான்.

பனிநிலவு தான் அதிர்ந்து போய் விட்டாள். இந்த ஒரு மாத காலமும் இந்த அறையை விட்டு வெளியே போகாமல் இப்படியே இருந்து ஓட்டி விடலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அவள் எண்ணிய எல்லாத்தையும் ஒரே நாளில் முறியடித்து போட்டு விட்டான்.

“கப்பு காஞ்சிடும் விளக்குறவங்களுக்கு சிரமமா போகும். அதனால போய் இப்பவே கீழ குடுத்துடு” என்று அறிவுறுத்தல் வேற கதிரவனிடம் இருந்து.

பெருமூச்சு விட்டவள், இரண்டு கப்பையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

வீட்டு பெண்கள் அடுப்படியில் இருக்க, வேலையாட்கள் அங்கும் இங்குமாய் நின்று வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களிடம் கொடுக்க எண்ணினாள். ஆனால் அவனின் அம்மாவிடம் தான் குடுக்கணும் என்று சொல்லி இருக்க, தயக்கத்துடன் அடுப்படிக்குச் சென்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:11 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top