Notifications
Clear all

அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

“யார் வாங்கி வச்சது?” சிம்ம குரலில் அவனது குரல் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரலே அவர்களை எல்லாம் அச்சுறுத்தியது. குடோனில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த அத்தனை பேரையும் கூர் பார்வையால் சுழற்றி எடுத்தான்.

எல்லோருமே நடுநடுங்கிப் போய் நின்று இருந்தார்கள்.

“சார் நான் தான் சார்...” என்று ஒருவன் முன்னாடி வர, அவனை விழிகளால் எரித்து இருந்தான்.

“எத்தனை முறை சொல்லி  இருக்கேன். என்ன பொருள்னு பார்த்துட்டு அதுக்கு பிறகு பேக் பண்ணுங்கன்னு.. அந்த சென்ஸ் கூட இல்லன்னா நீ எல்லாம் எதுக்கு வேலைக்கு வர்ற.. பொருள் என்னன்னே தெரியாம எப்படி பில் போட்டு  குடுத்த.. வேலையில அவ்வளவு லெத்தாஜிக் இல்ல...” சாட்டையாய் அவன் சுழற்றி எடுக்க, எதிரில் நின்று இருந்தவனுக்கு தொண்டையில் நீர் வற்றிப் போனது.

“ஒரு வேலையை எடுத்தோம்னா அதை சரியா செய்து பழகணும்.. அதை விட்டுட்டு பக்கத்துல இருக்குற பொண்ணுக்கிட்ட கடலை போட்டா இப்படி தான் ஆகும்.. இதென்ன சின்ன விசயம்னு நினைச்சியா? கஞ்சாவை வாங்கி வச்சு இருக்க.. இதனோட சீரியஸ்நெஸ் என்னன்னு தெரியுமா? யூ இடியட்.. முதல்ல இந்த தலைவியை தீர்த்துட்டு பிறகு உன்னை வந்து வச்சுக்குறேன்” என்று அவனை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தவன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டு,

“எந்த ஆள்னு தெரியுமா? யார் கொண்டு வந்து குடுத்தான்னு கவனிச்சீயா? இதுக்கு முன்னாடி வந்து இருக்கானா? அட்ரெஸ் கரெக்ட்டான்னு செக் பண்ணியா? டு அட்ரெஸ் செக் பண்ணியா. டெஸ்டிநேஷன் சரிதானா?” கேட்டுக் கொண்டே சிசிடிவி கேமரா மானிட்டர் முன்பு போய் அமர்ந்தான்.

அங்கு இருந்த ஆப்ரேட்டரை பார்த்து,

“புட்டேஜ் எடுத்தீங்களா?” கேட்டபடி சேரில் அமர்ந்தான்.

“சார் இதோ இது தான்.. இந்த ஆளை பாருங்க” என்று அவனுக்கு காண்பித்தான் ஆபரேட்டர்.

அவனை கூர்ந்துப் பார்த்த கதிரவன்,

“மாதவா” போனில் அழைக்க,

“மச்சான் குடோனுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.. வரேன்” என்று சொன்னவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து விட்டான்.

“இவனை இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்து இருக்கியாடா?” யோசனையுடன் கேட்டான். 

மானிட்டரை கூர்ந்துப் பார்த்த மாதவன், “இல்லயே மச்சான்..” என்றான்.

“இப்போ இவன் எங்க இருக்கான்னு கண்டு பிடிக்கணும்டா.. இவனோட மோட்டிவ் என்னன்னு பார்க்கணும். நம்மளை மாட்டி விட இந்த ப்ளானா.. இல்ல உண்மையாவே கொரியர் பண்ண தான் வந்து இருக்கானான்னு கண்டு பிடிக்கணும்”

“ஆனா அதுவரை போலீஸ்க்கு” என்று மாதவன் இழுக்க,

“நான் ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிட்டேன்டா..” வந்துடுறேன்னு சொல்லி இருக்காங்க” என்று சொன்னவனுக்கு அடுத்த மூன்று மணி நேரம் பரபரப்புடனே சென்றது.

வீட்டில் மத்தியம் பனியை சாப்பிட வைக்க கீழே கூட்டிக்கொண்டு போனார் காமாட்சி..

“அவங்க வரட்டுமே ஆன்டி” இவள் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அவர் விடவே இல்லை.

“நீ வாம்மா அவனை எல்லாம் மத்திய சாப்பாட்டுக்கு எதிர் பார்க்கவே முடியாது.. சாப்பிட்டுட்டு உடனே போயிடு” என்று அவளை உட்கார வைத்து பரிமாறினார்.

அனைவரும் உணவு மேசையில் தான் அமர்ந்து இருந்தார்கள்.

துளசி, மகா, மங்கை, பாட்டி, தாத்தா என எல்லோரும் இருக்க, இவள் வரவும் மங்கையின் முகம் கடுப்பை காண்பித்தது. ஆனால் துளசியும் மகாவும் அவளை ஆராய்ச்சியாக பார்த்து வைத்தார்கள்.

“பொண்ணு நல்லா இருக்குல்ல” குசுகுசுவென்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

“ஆமா க்கா.. நல்ல கலரு” என்றாள் மகா.

“ம்ம்ம்” என்ற நேரமே,

“அங்க என்ன பேச்சு ஒழுங்கா சாப்பிட மாட்டீங்களா?” தேவையில்லாமல் மங்கை இவர்களை  அதட்ட, இருவரும் வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டார்கள்.

மங்கையின் இந்த அதட்டலிலும் பார்வையிலும் பனிக்கு சாப்பிடவே முடியவில்லை. காமாட்சியின் முகத்துக்காக சாப்பிட்டவள் முதல் முறையோடு முடித்துக் கொண்டாள்.

“மறுச்சோறு வாங்கிக்க ம்மா” என்று அவர் சொல்ல,

“இப்ப தானே ஆன்டி காலை சாப்பாடே சாப்பிட்டேன். வயிறு புல் போதுமே” என்று எழுந்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவள் கீழே வரவே இல்லை. நிறைய சத்தமாக இருந்தது. எட்டி மட்டும் பார்த்தாள். ரேவதி குடும்பமும், மங்கையின் கணவனும், கலாவும் கூட அம்மா வீட்டில் இருந்து வந்து இருந்தார். அதனால் பேச்சு சத்தம் அதிகமாகவே இருந்தது.

ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு அறைக்குள் முடங்கிக்கொண்டாள். இடையில் காமாட்சி அவளுக்கு பூவை கொண்டு வந்து குடுத்து, மாலை நேர காபி பலகாரம் எல்லாவற்றையும் கொண்டு குடுத்துட்டு போனார்.

இரவு வரை அறையிலே இருந்தாள். அந்த நேரம் கதவு தட்டப்பட, போய் திறந்தாள் பனிநிலவு. கதிரவன் தான் நின்று இருந்தான். அவனது முகத்திலே அயர்ச்சி அதிகமாக தெரிந்தது. ஆனாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

“மத்தியம் சாப்பிட்டியா?” கேட்டு அவளின் அறையின் வாசலிலே நின்றான். உள்ளே போகவில்லை.

“ம்ம்..” என்றாள்.

“நீங்க சாப்பிட்டியான்னு கேட்க மாட்டியா?”

“ப்ச்.. இதுக்கு தான் கதவை தட்டுனீங்களா?” சலிப்புடன் கேட்டவளை பார்த்தவன்,

“மேல மாடிக்கு வா.. கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்” என்று அவன் முன்னாடி போக, அவனது முதுகை பார்த்து நின்றவளுக்கு இதென்ன புது தலைவலி என்று தோன்றியது.

“தூக்கம் வருது” என்றாள்.

“ஏழு மணிக்கு என்ன தூக்கம்?” நிற்காமல் அவன் போக, அவனது அடத்தை பார்த்து முறைத்துக் கொண்டே அவனின் பின்னோடு சென்றாள்.

அங்கே இரவின் வெளிச்சம் மட்டுமே இருந்தது. அங்கும் இங்குமாய் இருந்த தெரு விளக்கின் ஒளி அவ்வளவாக அங்கு புகவில்லை. காரணம் வீட்டின் உயரம் அதிகம்.

அங்கு போடப்பட்டு இருந்த கல் இருக்கையில் அமர்ந்து இருந்தான் கதிரவன். அவனுக்கு அருகில் இடைவெளி விட்டு வந்து அமர்ந்தாள்.

“என்ன பேசணும்?”

“மொட்டையா பேசாதன்னு சொன்னேன்” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,

“என்ன பேசணும் மாமா?” சொற்களில் அவ்வளவு கடுப்பு இருந்தது.

“இன்னைக்கு நம்ம குடோன்ல கஞ்சா சிக்கி இருக்கு” என்றான். எதற்கும் பதட்டப் படாதவள் இந்த விசயத்தை கேட்டு திகைத்துப் போனாள்.

“என்ன சொல்றீங்க?” அவளின் திகைப்பை பார்த்து அன்றைக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

“இன்ஸ்பெக்டர் நம்ம ரிலேஷன்னால ஓராளவு சமாளிச்சாச்சு.. ஆனாலும் நம்ம கேர்புல்லா தான் இருக்கணும் நிலா” என்றவன் பின் பக்கம் அப்படியே சாய்ந்து கால்களை நீட்டி விட்டான். அந்த இருக்காய் அவனுக்கு கொஞ்சமும் பத்தவில்லை.

அவன் சரியாக அமர முடியாமல் இருப்பதை பார்த்து,

“கீழ போய் ரெஸ்ட் எடுக்கலாமே” என்றாள்.

“அதை நான் பார்த்துக்குறேன்.. உன் கூட ஸ்பென்ட் பண்ண தான் வந்து இருக்கேன்” என்றவன்,

அந்த குடோன் ஆரம்பித்த நேரம் ட்ரான்ஸ்போர்ட் பத்தி எல்லாம் சொன்னான். அவளும் கேட்டுக் கொண்டாள்.

“போரடிக்கிறனா?” இடையில் அதையும் கேட்டுக் கொண்டான். அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

“எனக்கு வேற எதை பத்தி பேசுறதுன்னு தெரியல நிலா..” என்றவனின் முயற்சி அவளை சற்றே அசைத்து போட தான் செய்தது.

“பரவாயில்ல எனக்கு போரடிக்கல.. நான் கேட்கிறேன்” என்றாள்.

அவளின் இந்த பதிலில் அவளை திரும்பி ஒரு கணம் பார்த்தவன், பின் மீண்டும் தனக்கு எதிர் புறம் இருந்த வெற்று வெளியை பார்த்தான்.

“இது நம்ம வழி வழியா வர்ற பிசினெஸ்” என்றவன் மேலும் பேச, நிலா கவனமுடன் கேட்டுக் கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 23, 2026 9:05 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top