அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதனால் கதிரவனுக்கு வெளியே பெண் எடுக்காமல் மங்கையின் மகளான மகாவை கட்டி வைக்க வீட்டில் இருந்த அத்தனை பேரும் ஆசை பட்டார்கள். ஆனால் அவள் இன்னும் படிப்பை முடிக்காத காரணத்தினால் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இல்லை என்றால் எப்பவோ கதிரவனின் கல்யாணம் நடந்து இருக்கும். எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டே மாமியாரும் மருமகளும் அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வீட்டு மாப்பிள்ளை இருவருக்கும் பிடித்தார் போல உணவு இருக்கணும், ரேவதியின் கணவன் கூட கொஞ்சம் அனுசரித்துக் கொண்டு போவார். ஆனால் மங்கை கணவன் சுத்தம். எதியிலும் அனுசரிக்கவே மாட்டார். தான் தான். என்கிற குணம் அவருக்கு மிக அதிகம். அதுவும் வீட்டில் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் இவரை தனியாக எல்லோரும் அழைப்பு விடுத்து கெஞ்சி கூத்தாடி அழாத குறையாக அழைத்த பிறகே வருவர்.

அதுவரை பிகு பண்ணிக் கொண்டே இருப்பார். ஆனால் இந்த பருப்பு எல்லாம் கதிரவனிடம் வேகவே வேகாது. கதிரவன் சாமானியன் அல்ல.. யார் யார் எப்படி. அவர்களிடம் எந்த மாதிரி நடந்துக் கொள்ள வேண்டுமோ அந்த மாதிரி நடந்துக் கொள்வான். அதுவும் அவனிடம் யாராலும் அவ்வளவு எளிதாக வார்த்தையை விட்டு விடவே முடியாது.

எல்லோரை காட்டிலும் ஒரு படி உயர்ந்து நின்றதே காரணம் என்றாலும் அவ்வளவு எளிதாக அவனை நெருங்க விடவே மாட்டான். யாராக இருந்தாலும் தள்ளி வைத்து தான் பேசுவான். பழகுவான்.

அதே போல செய்ய வேண்டிய சீர்வரிசை வழிமுறைகளை எல்லாம் சரியாகச் செய்துவிடுவான். குறை சொல்லும் அளவுக்கு என்றைக்கும் நடந்துக் கொள்ளவும் மாட்டான். அவ்வளவு கவனமாக இருப்பான்.

அப்படி பட்டவன் இப்படி ஊர் தெரியாத பெண்ணை கூட்டிட்டு வந்ததை தான் யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு வேலை காதலா இருக்குமோ என்று தான் வீட்டு பெண்களின் சிந்தனையின் ஓட்டம் இருந்தது. ஆனால் இந்த காதலை ஆதரிக்க தான் அங்கே யாருக்கும் மனது இல்லை.

காதல்னு மட்டும் சொல்லட்டும் அதுக்கு பிறகு இருக்கு.. என்று எல்லோருமே கருவிக் கொண்டார்கள்.

“என்ன அக்கா நம்ம கதிரவன் யாரோ ஒரு பெண்ணை வீட்டுக்குள்ள அழைச்சுட்டு வந்து இருக்கானாம்.. இதெல்லாம் நீங்க என்னனு கேட்க கூடாதா? நம்ம வீட்டு பாரம்பரியம் என்ன? கலாச்சாரம் என்ன? மரியாதை என்ன? கெளரவம் என்ன?” என்று பல என்னக்களை போட்டு அடுக்கிக் கொண்டே போனார் அந்த வீட்டின் சின்ன மருமகள் கலா. விசாலத்தின் இரண்டாவது மருமகள்.

“காலங்காத்தால வேற வேலை இல்லன்னு இதை விசாரிக்க போனை போட்டியாக்கும்” என்று மாமியார் குரல் கேட்க, ஒரு கணம் பயந்து தான் போனார் கலா. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,

“அது தான் விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சுருச்சே.. அப்படியே காத்து வாக்குல ரெண்டு ஊரு தள்ளி இருக்கிற எனக்கும் வந்திடுச்சு.. அது தான் என்னன்னு கேட்கலாம்னு போனை போட்டேன்” என்று கலா சொல்ல,

“உன் அம்மா வீட்டுல சீராட்டுனது போதும் முதல்ல வீட்டுக்கு வந்து சேரு.. பொறவு எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்” என்று முறைத்து விட்டு போனை பொட்டென்று வைத்து விட்டார் விசாலம்.

ம்கும் கிழவிக்கு ரொம்ப தான் என்று அலுத்துக் கொண்ட கலா தாயிடம் சொல்லிக் கொண்டு அன்று மத்தியமே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அதற்குள் இங்கே வீட்டில் கதிரவன் ஒரு ருத்திர தாண்டவமே ஆடி இருந்தான்.

“குடுக்க முடியாது, கவனிக்க முடியாதுன்னு என்கிட்டே சொல்லி இருந்தா நானே கவனிச்சு இருந்து இருப்பேன். அப்ப எதுவும் சொல்லாம ரொம்ப அசால்ட்டா மறந்து போயிடுச்சுன்னு சொல்றீங்க” அவனின் முகம் அவ்வளவு கனலாய் இருந்தது.

“இல்லய்யா அக்கா குடும்பமும் அத்தை குடும்பமும் வந்துடவும் எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல” என்று பாட்டி கெஞ்ச,

“அவங்க என்ன இன்னிக்கு நேத்தா புதுசா வர்றாங்க. எப்பவும் ரெகுலரா வர்றது தானே... என்னவோ இன்னைக்கு தான் புதுசா வர்ற மாதிரி ரீசன் சொல்லிட்டு இருக்கீங்க” என்று வானத்துக்கும் பூமிக்கும் குதியாய் குதித்தவனை அடக்க முடியாமல் நெற்றியில் கை வைத்து பார்த்துக் கொண்டு இருந்த நிலாவுக்கு விசாலத்தையும் காமாட்சியையும் பார்க்க பாவமாய் இருந்தது.

“ஐயோ விடுங்களேன்” அவளே சொல்லி விட்டாள் அவன் அவர்களை அரட்டுவதை பார்த்து தாங்க முடியாமல்.

“அதெப்படி அவ்வளவு ஈசியா விட சொல்ற நீ” என்று அவளையும் காய, மண்டையை படித்துக் கொண்டாள் நிலா. சத்தியமாக அவனை இதற்கு முன்பு இப்படி ஒரு அறட்டலில் அவள் பார்த்ததே இல்லை. அழுத்தமாய் இருப்பானே தவிர இப்படி ஒரு தோற்றத்தில் ம்ஹும்..

பெருமூச்சு விட்டவள்,

“பசிக்கிது சாப்பிடலாமா இல்ல வேணாமா?” ஒரே கேள்வி தான்.

“வா” என்று அவளுடன் இணைந்து உணவு மேசைக்கு விரைந்து விட்டான் கதிரவன்.

அவன் சென்ற பிறகே அப்பாடி என்று பெருமூச்சு விட்டார்கள் இருவரும். மழை பேஞ்சி ஓஞ்ச மாதிரி இருந்தது அவ்விடம்.

ஆனால் அந்த பெண் கேட்ட ஒரே கேள்வியில் மொத்தமாக அடங்கிப் போன தன் மகனை, பேரனை பார்த்து நின்ற மூத்த பெண்களுக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்று இருந்தது.

தங்களிடம் அப்படி கடுகாக பொரிஞ்சவன் அந்த பெண்ணிடம் மொத்தமாக அடங்கிப் போனதை பார்த்து என்னவோ போல ஆனது.

மகா தான் இந்த வீட்டு மருமகள் இருவரும் தங்களின் மனதுக்குள் அழுத்தமாக சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் மேசையில் அமர்ந்து இருப்பவர்களுக்கு பரிமாற வர,

“தேவையில்லை.. நானே பார்த்துக்குறேன்” என்று சொல்லி விட்டான் கதிரவன். அதில் காமாட்சிக்கு கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.

அவரின் கலங்கிய கண்களை பார்த்த பனிநிலவுக்கு பாவமாய் இருந்தது.

“எதுக்காக இவ்வளவு கடுமையா நடந்துக்குறீங்க” அவனிடம் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“உன்னை இவ்வளவு நேரம் பட்டினியா போட்டா கோவம் வர தான் செய்யும்” என்றான்.

“ப்ச் இத்தனை வருடமா நான் எவ்வளவோ நாள் பட்டினியா தான் இருந்து இருக்கேன். அப்போ எல்லாம் எங்க போச்சு உங்க அக்கறை” வெளியே கேட்காமல் அவனுக்கு மட்டும் கேட்பது போல சொன்னவளை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“அப்படி நீ இருப்பன்னு பல நாட்கள் நானும் பட்டினியா இருந்து இருக்கேன்” என்று சொன்னவன் உணவில் கவனமாகி விட்டான்.

“இது என்ன பதில்” என்று விக்கித்துப் போனாள் பனி.

“சாப்பிடு.. சாப்பாடு நமக்காக காத்துக்கிட்டு இருக்கக் கூடாது” சொன்னான்.

தலையை ஆட்டியவள் உணவை எடுத்து வாயில் வைத்தாள். முதல் முறை வீட்டு உணவு சாப்பிடுகிறாள். கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது. அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவள் சாப்பிட,

“தண்ணி குடிச்சுட்டு சாப்பிடு” என்று அவள் பக்கம் தண்ணீரை நகர்த்தி வைத்தான். அவனது அந்த சின்ன கரிசனையில் இவளுக்கு இன்னும் கண்ணீர் வரும் போல இருந்தது. வேகமாய் தண்ணீரை எடுத்து குடித்து விட்டு மீண்டும் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:08 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top