அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

“சாப்பிடு.. சாப்பாடு நமக்காக காத்துக்கிட்டு இருக்கக் கூடாது” சொன்னான்.

தலையை ஆட்டியவள் உணவை எடுத்து வாயில் வைத்தாள். முதல் முறை வீட்டு உணவு சாப்பிடுகிறாள். கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது. அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவள் சாப்பிட,

“தண்ணி குடிச்சுட்டு சாப்பிடு” என்று அவள் பக்கம் தண்ணீரை நகர்த்தி வைத்தான். அவனது அந்த சின்ன கரிசனையில் இவளுக்கு இன்னும் கண்ணீர் வரும் போல இருந்தது. வேகமாய் தண்ணீரை எடுத்து குடித்து விட்டு மீண்டும் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

“இது சாப்பிடு.. அம்மா ப்ரிப்றேஷன்.. இது பாட்டி செஞ்சது..” என்று அவளுக்கு பரிமாறியபடியே உண்டான் கதிரவன்.

அவனது உபசரிப்பிலும் கவனிப்பிலும் மனம் சற்றே நெகிழ்ந்தது.

கதிரவன் தூங்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு செல்ல, தானும் படுக்கலாம் என்று தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு படுத்த பிறகும் தூக்கம் வரவே இல்லை.

வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு வீட்டு ஆட்களே அந்த டைனிங் டேபிளில் நிறைந்து இருந்தார்கள். மேலிருந்து கீழே பார்க்கும் படி தான் அந்த வீட்டு அமைப்பு இருந்தது.

கூட்டு குடும்பமாய் வாழ்ந்த அவர்களை பார்த்து நெஞ்சுக்குள் அப்படி ஒரு ஏக்கம் பிறந்தது. அவர்களின் மத்தியில் தானும் ஒருத்தியாய் வாழ்ந்த்து விட பேராசை வந்தது.

காலை நேரத்தில் அவ்வளவு பரபரப்பாக அங்கும் இங்குமாய் அலைந்துக் கொண்டு இருந்த காமாட்சியை பார்த்து பாவமாய் இருந்தது. ஒரு இருக்கையில் அமர்ந்து பாட்டி பேரப்பிள்ளைகளுக்கும், மருமகனுக்கும் டிபன் கட்டிக் கொண்டு இருந்தார்.

அவரோடு துளசி, மகா, மெய்யப்பன், கதிரவனின் அப்பா பொன்னன், வீட்டு மாப்பிள்ளை சிங்காரம், ரேவதியின் கணவன் சேகரன், அவரின் மகன் சித்து என எல்லோரும் அமர்ந்து உண்டுக் கொண்டு இருந்தார்கள்.

அந்த நேரம் “அம்மா ப்ளேட் வைங்க” என்றபடி ரேவதி வந்து அமர்ந்தார். நீட்டாக மடிப்பு எடுத்து கட்டிய காட்டன் புடவையில் பேங்க் ஆபிசெர் பதவிக்கு ஏற்றார் போல வந்து அமர்ந்தவரை மேலிருந்து பார்த்த பனிநிலவுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.

பிடித்து இருந்த கைப்பிடி சுவரை இன்னும் இறுக்கிப் பிடித்தாள். அந்த நிமிடம் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கு கூட புலப்படவில்லை.

அவரின் முன்னாடி போய் நின்று விட கால்கள் எல்லாம் பரபரத்தது. மனம் ஆவலாய் இருந்தது. ஆனால் அதை அவளால் அவ்வளவு எளிதாக செய்து விட முடியாதே.. பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்து மீண்டும் தன் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

நேரம் ஆகியதே தவிர யாரும் வந்து அவளை உணவு உண்ண அழைக்கவில்லை. பசி வேறு வயிற்றை சுண்டி இழுத்தது. தானாக கீழே போக அவளுக்கு முடியவில்லை. பசிக்காக போய் அவர்களிடம் நிற்க வேண்டுமா என்று எண்ணி படுக்கையில் சுருண்டுக் கொண்டாள்.

தண்ணீரை குடித்து தன் பசியை போக்கிக் கொண்டவள் காலை முடிந்து நண்பகல் பன்னிரண்டு மணி ஆன பொழுது அவளின் கதவு தட்டப்பட்டது.

“யாரு?” என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தாள்.

கதிரவன் தான் நின்று இருந்தான்.

“தூங்குனியா? டிஸ்ட்டப் பண்ணிட்டனா?” கேட்டான்.

“இல்ல தூங்கலாம் இல்ல.. முழிச்சு தான் இருந்தேன். அதோட புது இடம்ன்றதுனால தூக்கமும் வரல” என்றாள்.

“சாப்பிட்டியா?”

“ம்ம்..” என்றவளை பார்க்கும் பொழுதே அவள் உண்ணவில்லை என்று நன்றாக தெரிந்துக் கொண்டவன்,

“சரி வா சாப்பிடலாம்” அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றவன், அதற்கு பிறகு தான் தாயிடம் ருத்திர தாண்டவம் ஆடியது.

காலையில் இருந்து அவளும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே காம்ட்சிக்கு நேரம் சரியாக இருந்தது. ஒவ்வொருவராய் கவனித்து அனுப்பி வைப்பதற்குள் அவர் ஒரு வளியாகி இருந்தார். இதில் அவர் சாப்பிட உட்காரும் பொழுதே மணி பதினொன்று ஆகி இருந்தது. இதில் அவரை குற்றம் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

அதனால் கதிரவனை மேற்கொண்டு பேசவிடாமல் உண்ண அழைத்துச் சென்று விட்டாள்.  

இருவரும் மெதுவாக அவர்களுக்குள் பேசிக் கொள்வதையும், கதிரவன் அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதையும் பார்த்தவர்களுக்கு அவர்களின் பேச்சு காதில் விழாத பொழுதும் காட்சியாக மனதுக்குள் விழுந்து அதன் பொருள் இன்னது என்று புரிய, உள்ளுக்குள் நொந்துப் போனார்கள் மாமியாரும் மருமகளும்.

ஏனெனில் அவர்கள் பார்த்த கதிரவன் வேறாயிற்றே.. அதிகமாய் எதற்கும் வாய் திறக்காதவன். நாலு கேள்வி கேட்டால் அந்த நாலு கேள்விக்கும் ஒரே பதிலை சொல்லக் கூடியவன். அப்படி சொல்லும் பதில் அத்தனை கேள்விக்கும் பொருத்தமாய் பொருந்திப் போகும்.

சொல்லில் பேச்சில் சிக்கனம் பார்க்கும் மகன், யாருக்கும் சேவை செய்யாதவன் இன்று எங்கிருந்தோ வந்த பெண்ணுக்கு இப்படி விழுந்து விழுந்து பரிமாறுவதை கண்டு அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று புரிந்துக் கொண்ட காமாட்சிக்கு கண்கள் ஏனோ கலங்கியது.

மகன் தன் கை விட்டு நழுவி விடுவானோ என்று மனம் கலங்கினார். ஆனால் அவரின் மகன் எப்பொழுது அவரின் கைக்குள் இருந்தான் என்று அவர் யோசிக்கவே இல்லை. அவன் யாருக்கும் அடங்காத காட்டாற்று வெள்ளம் அல்லவா..

இன்றைக்கு நேற்றா அவன் தனித்து இருக்கிறான். அவன் இந்த குடும்பத்தை விட்டு விலகி வருடக் கணக்கு ஆகி விட்டதே.. உண்ண உறங்க மட்டும் தான் இந்த வீட்டுக்கு வருகிறான்.

மத்தபடி யாரிடமும் எந்த ஒட்டுதலும் இல்லை. ஆனால் அவன் தான் அந்த குடும்பத்தில் என்ன முடிவு எடுக்கணுமோ அதை எடுப்பான். அதை யாரிடமும் விட்டு குடுக்கவும் மாட்டான்.

தன் முடிவையும் அவன் தான் எடுப்பான். அதே போல மற்றவர்கள் முடிவையும் அவன் தான் எடுப்பான். அவனது குணத்தை கண்ட பெரியவர்கள் அவன் தலை எடுத்து விட்டதை உணர்ந்து அமைதியாக அவனது வழிக்கே போய் விட்டார்கள்.

ஆனால் இதில் அதிக பொறுமல் கொண்டது இந்த வீட்டின் சின்ன மருமகள் கலா மட்டும் தான். அவனின் சித்தப்பா கூட பல முடிவுகளை அவனிடம் கேட்டு தான் செய்வார்.

தன் பேரனின் ஆளுமையில் மனம் மயங்கிய விசாலம் தான் இப்பொழுது கதிரவனின் இந்த செயலில் விக்கித்து நின்றார்.

“என்ன அண்ணி உங்க மகன் இப்படி எல்லாம் பண்றான்.. நாடு வீட்டுல யாரோ ஊர் பேர் தெரியாத பெண்ணுக்கு இப்படி விழுந்து விழுந்து சவரட்னை செஞ்சுக்கிட்டு இருக்கான். இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? நம்ம குடும்ப கௌரவத்தை குழித் தோண்டி புதைச்சுடுவான் போல.. எனக்கு தெரியாது மகா தான் இந்த வீட்டு மருமக. அதுக்கு மட்டும் ஏதாவது பங்கம் வந்துச்சு நீங்க என்னை மனுசியாவே பார்க்க மாட்டீங்க”

“என்ன சொல்லுவீங்களோ ஏது சொல்லுவீங்களோ எனக்கு தெரியாது. இன்னைக்குள்ள அந்த பொண்ணு இந்த வீட்டை விட்டு வெளியே போய் இருக்கணும்” மங்கை குதி குதி என்று குதித்தார்.

“இவக்கிட்ட குதிக்கிறதை விட்டுட்டு உன் மருமவன் கிட்ட நீயே பேசவேண்டியது தானேடி” என்று மகளை முறைத்த விசாலம்,

“அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம வார்த்தையை விடாத மங்கை. கதிரவன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அதோட அவன் ஒரு முடிவு எடுத்துட்டா அதை யாராலும் எப்பவும் மீறவும் முடியாது. அதையும் ஞாபகம் வச்சுக்க” என்றார் அழுத்தமாக.

“என்னம்மா இப்படி பேசுற.. அப்போ என் பொண்ணோட வாழ்க்கை” சட்டென்று கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது மங்கைக்கு. அவரின் ஆசையே தன் தாய் வீட்டுக்கு தன் மகளை குடுத்து இன்னும் அதிகாரத்தை இங்கே நிலை நாட்ட தான். அதோட தாய் வீட்டு உறவு அவருக்கு காலமும் நிலைக்கும் இல்லையா..

அது மட்டும் தானா.. இல்லையே ஊரே கை எடுத்து கும்பிடும் குடும்பம் அவரின் தாய்வீடு. ஊர் மரியாதை எல்லாம் இந்த குடும்பத்துக்கு தான். பெரிய குடும்பம் என்ற சொல்லின் பின்னாடி இருக்கும் கெளரவம் அவருக்கு வேண்டியதாக இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : April 17, 2026 12:10 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top