இவக்கிட்ட பேசுறதே வீண் என்று வேலையை பார்த்தார்.
ஆனால் மங்கை அப்படி ஓய்ந்துப் போகவே இல்லை. புலம்போ புலம்பு என்று புலம்பிக் கொண்டே இருந்தார். அதுவும் பனியை “எங்க இருந்து வந்தாளோ என் வீட்டு ஆட்களையே எனக்கு எதிரா திருப்பிட்டா... நல்லா இருப்பாளா இவ.. என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டாளே” கரித்துக்கொட்டிக் கொண்டு இருந்தார்.
விசாலத்துக்கு பனியை எண்ணி வேதனையாக இருந்தது. அடக்கிப் பார்த்தும் அடக்க முடியாமல் போக விட்டுவிட்டார்.
இங்கே மேலே வந்த காமாட்சி பனியின் கதவை தட்டினார். அது திறந்து இருக்கவும் உள்ளே நுழைந்தார்.
அதுவரை அழுதுக் கொண்டு இருந்தவள் கதவு தட்டும் சத்தத்தில் பட்டென்று கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
அவளுக்கு முன்பு வந்து நின்ற காமாட்சியை பார்த்து வலுக்கட்டாயமாக சிரிக்க முயன்றாள்.
அவளின் முயற்சியை பார்த்து வேதனை கொண்டவர் எதுவும் பேசாமல் கையில் இருந்த மோரை அவளிடம் நீட்டினார்.
“வேணாமே...” என்று அவள் தயங்கினாள்.
எதுவும் பேசாமல் அவளின் படுக்கையில் போய் அமர்ந்தார். ஏனோ இந்த பெண்ணை பார்க்கயில் அவருக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு நெகிழ்வு. அது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் அவளாக வந்து பேசியதில் இருந்து மெல்ல தடுமாற்றம் அவரிடம். இந்த பெண்ணை திட்டி பேசிய மங்கை மீது அவ்வளவு கோவம் வந்ததது.
“இங்க வா” என்று அவளை அழைத்தார். அவருக்கு அருகில் உட்காராமல் அவரின் காலடியில் வந்து அமர்ந்தவளை பார்த்த காமாட்சிக்கு ஏனோ கணகளில் இருந்து கண்ணீர் வந்தது.
அதை மறைக்க முயன்றும் தோற்று,
“நீ.. நீ.. எதையும் நினைச்சுக்காதடா.. உனக்கு எவ்வளவு வலிக்கும்னு எனக்கு தெரியும்.. என்ன சொல்லி சமாதனம் செய்யிறதுன்னும் எனக்கு தெரியல.. சமாதனம் செய்யவும் எனக்கு வரல..” என்றவரின் தடுமாற்றத்தை பார்த்து நெகிழ்ந்துப் போனாள் பனி.
அவளின் அம்மாச்சி அல்லவா இந்த காமாட்சி.. எப்படி அவரை கோபித்துக் கொள்ள முடியும் அவளால். அவரே வந்து பேசவும் தன் கண்ணீரை முழுமையாக கை விட்டவள் அவரையே பார்த்து முட்டியில் நின்றாள்.
“மங்கை எப்பவுமே அப்படி தான்.. கொஞ்சம் துடுக்குன்னு பேசிடுவா.. அவளுக்காக நான் மன்னிப்பு” என்ற நேரமே அவரின் கையை பிடித்துக் கொண்டவள்,
“பெரியவங்க மன்னிப்பு எல்லாம் கேட்கக் கூடாது ஆன்டி” தடுத்து விட்டாள். அம்மாச்சி சொல்ல ஆசை தான். ஆனால் அவரின் இளமை அவளை தடுத்தது. அதனால் ஆன்டி என்றே அழைத்தாள்.
அவளின் இந்த பண்பை கண்ட காமாட்சிக்கு அவளின் மீது இன்னும் அன்பு பொங்கியது.
“ஏன்னு தெரியல கண்ணு.. உன்னை வேத்து ஆளாவே என்னால பார்க்க முடியல.. என்னவோ உன்னை இந்த கையாள தூக்குன மாதிரியே இருக்கு” என்றார்.
அதை கேட்டு திகைத்துப் போனவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்துப் போனது.
“நான் பிறந்தப்ப உங்க மகனுக்கு பிறகு நீங்க தான் என்னை ஆசையா தூக்கியது அம்மாச்சி” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்,
“எனக்கும் உங்களை வேறையா பார்க்க முடியல ஆன்டி” என்றாள்.
“அப்படின்னா அவ பேசுனதை மனசுல வச்சுக்காம இந்த மோரை குடிப்பியாம்” என்று மோரை எடுத்து அவளிடம் நீட்டினார்.
“குடிக்காம விட மாட்டீங்க போலையே” என்று புன்னகை செய்தவள், இன்னொரு க்ளாசை எடுத்து அதில் பாதியை ஊற்றி அவரிடம் நீட்டினாள்.
வியப்புடன் பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவர், நீயும் மேல வந்து உட்காரு கண்ணா” என்று அவளை மேல அமர வைத்து அவளோடு சேர்ந்து இவரும் மோரை குடித்தார். ரேவதி கூட இந்த அளவுக்கு தன் தாயை கவனித்துக் கொண்டது இல்லை.
இருவருக்குள்ளும் அந்த நிமிடம் ஒரு பிணைப்பு உண்டானது.
“சரி கண்ணா நான் கிளம்புறேன். கீழ எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே வந்துட்டேன். இனி தான் சமைக்கணும். நீ கொஞ்ச நேரம் படு. சாப்பிடும் பொழுது கூப்பிடுறேன்” என்று எழுந்துக் கொண்டார்.
“சரிங்க ஆன்டி” என்றாள்.
“அத்தைன்னு கூப்பிட்டேன்” என்று சொல்ல ஆசை தான். ஆனா மகனின் எண்ணம் எதுன்னு தெரியலையே.. அதனால் அமைதியாக வந்து விட்டார்.
வந்தவரிடம் “என்ன அவளை சீராட்டியாச்சா?” என்று மங்கை பாய்ந்துக் கொண்டு வர, இவருக்கு சலித்து வந்தது.
“மங்கை எனக்கு வேலை இருக்கு. கதிரவன் வந்துக்கிட்டு இருக்கானாம்” என்று சொல்ல, அதன் பிறகு அவர் வாயையே திறக்கவில்லை.
ஆசுவாசம் ஆனா காமாட்சி பணியாளர்களுடன் சமையலை செய்ய ஆரம்பிக்க, ஒத்தாசையாக அவரின் மாமியார் கூட இருந்தார்.
ஆனால் மங்கைக்கு வணங்காததால் அறைக்கு போய் விட்டார்.
“இவ ஏன் தான் இப்படி இருக்காளோ காமாட்சி.. அந்த பிள்ளை முகம் எப்படி வாடி போச்சு ல்ல..” என்றவர்,
“இப்போ எப்படி இருக்கா அந்த பொண்ணு” என்று அவளின் நலத்தை விசாரித்தார்.
“அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிடுச்சு த்தை.. இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் யார் கிட்டையும் பேச்சு வாங்கி இருக்காது போல.. மனசே விண்டு போயிடுச்சு” காமாட்சி புலம்பினார்.
“ஆமா இங்க இருந்து போகும் போதே அவளுக்கு முகம் செத்து போயிடுச்சு காமாட்சி. என்னவோ போ இந்த மங்கை ஏன் தான் இப்படி இருக்காளோ.. எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துட்டேன். அவ குணம் மட்டும் மாறவே மாட்டிகிது” இருவரும் பேசியபடியே சமையலை முடித்தார்கள்.
முதலில் டெப்போவுக்கும் வந்தான் கதிரவன். அதன் பிறகு குடோனுக்கு சென்றான்.
கதிரவனின் அப்பா பொன்னன் டெப்போவில் இருந்தார். அவரை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன், அவர் பேச்சை ஆரம்பிக்கும் முன்பே,
“மூணாம் நம்பர் டூரிஸ்ட் பஸ் புக் ஆகி தானே இருந்தது. ஏன் இப்போ போகாம மாத்தி விட்டு இருக்கீங்க? போன வாரம் தான் செர்வீஸ்க்கு போயிட்டு வந்தது..” கேட்டபடியே வந்தான்.
“சரி தான் தம்பி ஆனா ப்ரேக் சரியா பிடிக்கல.. டிரைவர் வண்டியை செக் பண்ணும் பொழுதே கண்டு பிடிச்சுதான். இல்லன்னா கல்யாண வீட்டு விசேசம் வேற.. பதறி போயிட்டேன்” என்றார் அவர்.
“செர்வீஸ் சென்டருக்கு போன் போட்டீங்களா? ஏன் இன்னும் எடுத்துட்டு போகாம இருக்காங்க..” அடுத்த கேள்வி வந்தது அவனிடம் இருந்து.
“மாதவன் தான் சொன்னான். ஆனா அங்க ஆள் இல்லையாம். நம்மளை கொண்டு வந்து விட சொல்றாங்க..” என்று அவர் முடிக்கும் முன்பே,
“என்ன விளையாடுறாங்களா.. ஏற்கனவே செர்வீஸ் சரியில்ல.. இதுல இவங்க எடுத்துட்டு போகாம நாம கொண்டு போய் வேற விடனுமாக்கும்.. இதெல்லாம் சரி வராதுன்னு நான் முன்னாடியே சொன்னனா இல்லையா.. நீங்க என்ன சொன்னீங்க.. உங்க நண்பன் செர்வீஸ் சென்ட்டர் ஆரம்பிச்சு இருக்காருன்னு சொல்லி ரெண்டு பஸ்ஸை செர்வீஸ்க்கு கேட்டீங்க. சரின்னு நானும் ஒத்துக்கிட்டா இப்போ இந்ந்த மாதிரி பண்ணா எப்படி.. இதெல்லாம் சரி பட்டு வராது..
நான் எப்பவும் செர்வீஸ் பண்ற இடத்துலயே இந்த பஸ்ஸையும் விட்டுக்குறேன். அவங்களோட காண்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணிடுங்க” என்றவன் அவர் நிதானிக்க கூட நேரம் தராமல், மாதவனுக்கு போனை போட்டான்.
“எங்கடா இருக்க”
“இங்க தான் மச்சான் இருக்கேன்.. தோ வரேன்” என்று அவனின் முன்பு வந்த நின்ற நண்பனை முறைத்துப் பார்த்தான்.
அவனின் பார்வைக்கு அர்த்தம் புரிய,
“இல்ல மச்சான் அப்பா தான்” என்றான்.
“அதுக்காக இந்த பஸ்ஸை அப்படியே விட சொல்றியா?” கடுப்புடன் கேட்டவன்,
“நம்ம ரெகுலர் செர்வீஸ்க்கு போனை போட்டு எடுத்துட்டு போக சொல்லு.. இது ஒன்னும் சும்மா கிடையாது. நம்மளை நம்பி தான் பஸ்ஸுல அத்தனை பேரும் ஏறுறாங்க.. அவங்களோட பாதுகாப்பு நம்மளை சார்ந்தது” என்றான்.
“புரியுது மச்சான். இப்பவே போன் போடுறேன்” என்று போனை எடுத்து ரெகுலர் செர்வீஸ் சென்டருக்கு போனை போட்டு பஸ்ஸை எடுத்துட்டு போக சொன்னான்.
அவர்களும் அடுத்த பத்து நிமிடத்தில் எடுத்துக் கொண்டு போனார்கள். போகும் முன்பு அந்த செர்வீஸ் கடையின் ஒனர் நேரிலே வந்து விட்டார்.
“எங்க செர்வீஸ்ல எதுவும் குறை இருக்கா சார்? இன்னொரு சர்வீஸ் சென்ட்டர்ல நம்ம பஸ்ஸை பார்த்தேன். அது தான்” பவ்யமாக கேட்டவரை பார்த்த கதிரவன் தன் தந்தையை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அவர் சற்றே தலையை குனிய,
“அதேல்லா ஒன்னும் இல்ல மாணிக்கம்.. அப்பாவோட நண்பர் கடை தான் அது. ஹெல்ப்பா கேட்டாங்க.. சரின்னு ரெண்டு பஸ்ஸை குடுத்தேன். அதுக்காக நம்ம டீலிங் உடையாது.. நீங்க பஸ்ஸை எடுத்துட்டு போங்க..” என்று அவரை அனுப்பி வைத்தவனுக்கு இன்னொரு போன் கால் வர,
எடுத்து பேசினான். அதில் சொல்லப்பட்ட விசயம் கேட்டு கடுப்பானான்.





