Notifications
Clear all

அத்தியாயம் 65

 
Admin
(@ramya-devi)
Member Admin

காமாட்சியும் தன் கணவனிடம் இன்னும் சொல்லி இருக்கவில்லை. கல்யாண பரபரப்பு ஒரு பக்கம் என்றாலும் எல்லோருக்கும் முன்னிலையில் சொல்ல தோன்றவில்லை அவருக்கு. தனிமையே கிடைக்கவில்லை. ஆற அமர சொல்ல வேண்டிய விசயம் அல்லவா.. அதனால் மௌனம் காத்தார்.

விருந்து முடித்து அல்லியின் குடும்பம் விடைபெற்று கிளம்பி விட்டது. அதே போல காமாட்சியின் அண்ணன் குடும்பமும் கிளம்பி விட்டது.

வீட்டு ஆட்கள் மட்டும் தான். மங்கையின் குடும்பமும் கிளம்பி விட்டது.

கழுத்து நிறைய கோவத்தை வைத்துக் கொண்டு அங்கு இருக்க முடியவில்லை. வீட்டு மாப்பிள்ளை இருக்கும் போது வாயை திறந்தால் கதிரவன் தங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான் என்று பயந்தே கிளம்பி விட்டார்கள்.

“இருந்துட்டு போவ இரு” என்று விசாலம் சொன்னார். ஆனால் அவர் கேட்காமல் கணவனை அழைத்துக் கொண்டு போய் விட, பிள்ளைகளை விட வில்லை காமாட்சி.

“பிள்ளைங்க இங்க இருக்கட்டும் மங்கை. நாளைக்கு காலையில அண்ணனை கூட்டிட்டு வந்துடு..” என்று விட்டார். இரவு உணவும் இங்கேயே முடித்து விட்டு தான் கிளம்பினார்கள் இருவரும்.

“அத்தைன்னா அத்தை தான்” என்று மகாவும் மனுவும் காமாட்சியை கட்டிக் கொண்டார்கள்.

“ம்கும் அத்தை பெரிய அத்தை.. மொத்தமா வழிச்சு நாமம் போட்டுட்டு அவளை கட்டிக்கிறியே உனக்கு கொஞ்சமும் அறிவே இல்லையாடி” என்று மகளை போகிற போக்கில் திட்டி விட்டு மங்கை போய் விட்டார்.

“அம்மா கிடக்குது அத்தை.. அவரை விடுங்க” என்று காமாட்சியை சரி செய்தவள் துளசியோடும் பனியோடும் அரட்டையில் கலந்துக் கொண்டாள்.

இலகுவாக கூடத்தில் அமர்ந்து இருந்த கதிரவன் கோபாலிடம் திரும்பி ஒரு கவரை நீட்டினான்.

“என்ன மச்சான்” என்று கேட்டுக் கொண்டே அதை பிரித்தான். அதில் இரண்டு ஹனிமூன் டிக்கெட் இருந்தது. சிம்லாவுக்கு போட்டு இருந்தான்.

“வாவ்..” என்று சிரித்தவன்,

“நானே மூனார் போகணும்னு இருந்தேன் மச்சான். பட் நீங்க சிம்லவுக்கே போட்டு குடுத்துடீங்க.. தேங்க்ஸ்” என்றான்.

“ஏன்டா இப்ப வந்த சின்ன மாப்பிள்ளைக்கே சிம்லாவுக்கு ஹனிமூன் போட்டு குடுத்து இருக்கியே.. நான் தானே இந்த வீட்டு வந்த பெரிய மாப்பிள்ளை முதல் மாப்பிள்ளை.. என்னை எங்காவது ஹனிமூனுக்கு அனுப்பனும்னு தோணி இருக்கா உனக்கு.. ஒரு கண்ணுல சுண்ணாம்பு ஒரு கண்ணுல வெண்ணை வைக்கிறடா” கதிரவனின் காதோடு அமர்ந்து இரகசியமாக கேட்ட சேகரனை ஆழ்ந்து பார்த்த கதிரவன், இன்னொரு கவரை அவரிடம் நீட்டினான்.

“என்னடா இது” என்று வாங்கிப் பார்த்தவர் திகைத்துப் போனார். ஏனெனில் அதிலும் இரண்டு ஹனி மூன் டிக்கெட் இருந்தது. கூர்க் பகுதில் இருக்கும் விலை உயர்ந்த ஹோட்டலில் தனி காட்டேஜ்.. செய்யப்பட்டு இருந்தது.

“டேய் நான் சும்மா சொன்னேன்டா”

“ஆனா எனக்கு தெரியும் தானே.. என் மாமாவும் அக்காவும் இவ்வளவு நாளா வாழாம இருந்த கதை. அது தான் உங்க மக உங்களுக்கு கிடைச்சுட்டா இல்லையா? இனி என்ன தடை.. ரெண்டு பேரும் ஒரு வாரம் ஜாலியா இருந்துட்டு வாங்க” என்றான்.

“டேய்.. அது” என்று அவர் தடுமாற, அவரின் கையை அழுத்திப் படித்த கதிரவன்,

“நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்து நான் பார்க்கவே இல்ல மாமா.. இன்னும் எத்தனை நாளுக்கு தான் குற்ற உணர்ச்சிளையும் வேதனையிலும் இருப்பீங்க.. போதும். அது தான் மொத்தமா உங்க பொண்ணு உங்கக்கிட்ட வந்து சேர்ந்துட்டா இல்லையா.. சோ இனி உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க மாமா” என்றான்.

“டேய்” என்றவருக்கு அத்தனை நெகிழ்வு உட்புறம். அவனின் கையை மிக அழுத்தமாக பற்றிக் கொண்டார். அடுத்த இரண்டு நாளிலே இரண்டு இணைகளும் அவரவர்களுக்கு ஏற்பாடு செய்து இருந்த விமானத்தில் கிளம்பினார்கள்.

சித்து ஏன் எதுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் கிளம்புறீங்க என்று எதுவும் கேட்கவில்லை. அவனுக்கும் சில புரிதல்கள் இருந்ததுவோ என்னவோ. அம்மாச்சி வீட்டில் இருந்து பள்ளிகூடத்துக்கு கிளம்பினான். கதிரவன் பனியை அழைத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டான். வீடு எப்பவும் போல இயல்பாக இருக்க ஆரம்பித்தது. கலாவின் பிள்ளைகளும் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.

கல்யாண பரபரப்பில் விடுபட்டு இருந்த வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்த கதிரவனுக்கு கைக் கொடுத்தாள் பனி. அவளின் தலையில் சில பணிகளை சுமத்தினான். அதோடு அவளை பக்காவாக கவனிக்கவும் செய்தான்.

போகிற இடத்துக்கு அவளை இழுத்துக் கொண்டே சென்றான். காமாட்சி கூட வீட்டில் கொஞ்ச நாள் இருக்கட்டுமே என்று சொல்ல, அவன் கேட்டால் தானே..

“அவ என்னோட இருக்கட்டும் ம்மா” என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.

அதோடு அவளுக்கு இன்னும் சில உடைகளை எடுத்துக் கொடுக்க அவனே அழைத்துக் கொண்டு வந்தான்.

“அது தான் இருக்கே மாமா போதுமே..” என்றவளின் பேச்சை காதில் வாங்காமல், இந்த முறை அவளுடன் இருந்து அவனே செலெக்ட் செய்ய உதட்டை பிதுக்கிப் பார்த்தாள்.

“என்ன?” என்றவன் தீவிரமாக புடவைகளை செலெக்ட் செய்தான்.

“கொஞ்சம் சுடிதாரும் எடுத்துக்குறேனே” என்றவளின் பேச்சை காதில் வாங்கவில்லை அவன்.

“உனக்கு சுடியை விட சேலை ரொம்ப அழகாக இருக்குடி.. அதனால அதிகம் இதையே கட்டு..” என்றவன் மிருதுவான சில புடவைகளை எடுத்தான். அதிகம் ஜார்ஜெட் புடவைகளே வாங்கி குவித்தான்.

“இதெல்லாம் கொஞ்சமும் உறுத்தாதுடி.. அதே போல தினமும் கட்டிக்க ஈசியா இருக்கும்.. இதுல ஒர்க் இருக்குற மாதிரியும் எடுத்துக்கலாம். வெளில கட்டிக்கவும் ஈசியா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே பல வகை புடவைகளை எடுத்து அன்றைக்கே ப்ளவுஸ் தைக்கவும் கொடுத்து விட்டான்.

“பிடிவாதம்” என்று முறைத்தவளுக்கு முத்தம் வைத்து சரி கட்டியவன், பேமஸ் பொட்டிக்கில் அவளை கொண்டு வந்து நிறுத்தி வைரமாய் ஜொலிக்கும் வேலைபாடு கொண்ட உடைக்கு அளவு எடுத்து தைக்க சொல்லி விட்டு வந்தான்.

“இதெல்லாம் எதுக்கு மாமா”

“உன்னை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இருக்கே.. மறந்துட்டியா? நீ அன்னைக்கு வைரமாய் ஜொலிக்கணும்டி” என்றவன் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்தான்.

அதோடு அன்றைக்கு அவள் போடுவதற்காக ரோஸ் டைமண்ட் பதித்த நகைகளை வாங்கினான்.

“இன்னும் எவ்வளவு மாமா செலவு பண்ணுவீங்க?” அவள் தடுக்க தடுக்க ஹேர் க்ளிப்பில் இருந்து கொலுசு வரை அனைத்துமே பார்த்து பார்த்து ரோஸ் டைமன்டில் எடுத்தான்.

அவனது அன்பில் மூச்சு முட்டிப் போனாள் பெண்ணவள்.

“ரொம்ப திணற வைக்கிறீங்க” என்றவள் அவனின் நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டாள்.

“இன்னும் ஏதாவது செஞ்சு உன்னை அதிகமா திணற வைக்க தான்டி தோணுது.. நான் என்ன பண்ணட்டும்” என்றவன் அவளின் மூக்கோடு மூக்கு வைத்து உரசினான்.

“ம்கும்” என்று நொடித்துக் கொண்டவள், அவனை ஆழமாக பார்த்து,

“எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க?” கேட்டவளை தன் நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தவன்,

“உனக்கு எப்ப தோணுதோ அப்பன்னு சொல்ல ஆசை தான் கண்ணம்மா. ஆனா பாரு.. இனிமேலும் உன்னை தனியா இருக்க விட முடியாம அடுத்த மாசத்துலையே தேதி குறிச்சுட்டு வந்துட்டேன்..” என்றவன் தன் பேன்ட் பாக்கட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதில் மூன்று தேதி இருக்க,

“உனக்கு எது வசதி படும்னு பாரு.. அதுலையே நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றான்.

“இதுல வசதி பட என்ன மாமா இருக்கு.. எந்த தேதின்னாலும் எனக்கு ஓகே தான்” என்றவளை பார்த்தவனுக்கு நெஞ்சில் சொல்லொண்ணாத வலி எழுந்தது.

குடும்பத்தோடு வாழ்ந்து இருந்து இருந்தால் அவன் சொன்னதுக்கான பொருள் விளங்கி இருக்கும். “சீ பேட் பெல்லோ” என்று அவனின் நெஞ்சில் குத்தி இருப்பாள்.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே..

“கண்ணம்மா” என்று அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு,

“இல்லடா இதுல உன் பீரியட்ஸ் டேட் எதுவும் வந்தா அதை ஸ்கிப் பண்ணிடலாம் இல்லையா அது தான் கேட்டேன்” என்றான்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 5, 2026 11:09 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top