Notifications
Clear all

அத்தியாயம் 64

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இதை உன் கழுத்துல தாலி கட்டிய பிறகு எழுத்து மாறாம சொல்லு..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான். சித்து தயாராக இருக்க, அவனோடு காமாட்சியின் அண்ணன் மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

“ஏன் அக்கா ஒரு பேச்சுக்கு கூட என் மகன் மகளை அழைக்கவே இல்லையே” கலா பொறும,

“உன் பிள்ளைங்க என்னைக்கு இவ்வளவு சீக்கிரமா எழுந்து இருக்காங்க கலா.. அதோட நேத்திக்கு கல்யாணத்துலையே ஆடி ஓடி வேலை செஞ்சு கலைச்சு போய் இருப்பாங்க. அவங்களை தொந்தரவு பண்ண என் மகனுக்கு எப்படி மனசு வரும். அது தான் தூங்கட்டும்னு பனியை கூட்டிட்டு கிளம்பிட்டான்” என்று காமாட்சி சொல்ல, கலாவுக்கு தலை இரக்கமாய் போனது.

பின்ன கல்யாணத்தில் ஒரு துரும்பை கூட கில்லி போடவில்லையே கலாவின் பிள்ளைகள். இப்ப கூப்பிட்டா மட்டும் உடனே வந்து விடுவார்களா என்ன? அதை நக்கலாகவே காமாட்சி சொல்லி காட்ட, கலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

அதை பற்றி தேவனிடம் சொல்ல,

“என்னை கூப்பிட்டாங்க கலா நான் தான் நேற்றைக்கே அலைச்சல் இன்னைக்கு எல்லாம் வர முடியாது.. அதோட கொரியர் ஆபிஸ், டெப்போவுக்கு போற வேலை இருக்குன்னு மறுத்துட்டேன்” என்றார் அவர்.

“எல்லாம் எனக்குன்னு வந்து வாச்சீங்களே” முணுமுணுத்துக் கொண்டே வெளியே வந்து விட்டார்.

காமாட்சி பரபரப்புடன் பணியாளர்களிடம் வேலை சொல்லிக் கொண்டு இருந்தார்.

“ஏங்க” என்று கணவனை அழைத்து,

“மீன், நண்டுக்கு சொல்லிடுங்க, நல்ல வெடக்கோழியா பிடிச்சு கிளீன் பண்ண சொல்லுங்க.. அப்படியே ஆட்டு தோளை உரிக்க ஆள் சொல்லிடுங்க” என சொன்னவர்,

“நாட்டு முட்டை எவ்வளவு ஸ்டாக் இருக்கோ பண்ணையில இருந்து எடுத்துட்டு வர சொல்லுங்க” என்றார்.

மகள் மருமகன் வருகிறார்களே.. விருந்து ஏற்பாடு பண்ணனுமே.. காமாட்சியை கையில் பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை பொண்ணு என இருவருர் தான். ஆனால் இவர்களின் வீட்டு டிக்கெட்ட் அதிகம் அல்லவா..

எப்படியும் ஐம்பது பேருக்கு சமைக்கணும். எனவே காலை நேரத்திலே வேலையை துவக்கி விட்டார். அவருக்கு உதவியாக அவரின் அண்ணி இருக்க, இருவரும் பேசிக் கொண்டே வேலை செய்ய அலுப்பே தெரியவில்லை காமாட்சிக்கு. கூடவே விசாலமும் இருக்க வேலையும் மளமளவென்று நடந்தது.

கலாவுக்கு தான் பத்திக் கொண்டு வந்தது. ஒரு உதவிக்கு கூட அவரிடம் வந்து நிற்கவில்லை காமாட்சி. அவ்வப்பொழுது பனியிடம் போன் போட்டு விசாரித்துக் கொண்டார் எப்போ போனீங்க, எப்போ கிளம்புறீங்க என்று.

கோபாலின் வீட்டுக்கு போய் இறங்கினார்கள் ஐவரும். கதிரவனின் தாய் மாமா பசங்க இரண்டு பேரும் கூட வந்து இருந்தார்கள்.

அனைவரையுமே இன்முகத்துடன் வரவேற்ற அல்லி பனியின் கையை பிடித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போனார்.

துளசி வந்தவர்களுக்கு காபி குடுத்தாள். பனி அவளோடு எழுந்துக் கொள்ள,

“முதல்ல காபி குடிடி.. அப்புறம் வா” என்றாள்.

“ம்கும் ரொம்ப தான் மருமகளா நடந்துகுற சித்தி” என்றவள் கதிரவனின் அருகில் அமர்ந்து குடித்து விட்டு அதன் பிறகே எழுந்துக் கொண்டாள்.

ரேவதி வந்தவர்களை வாங்க என்று கேட்டு விட்டு அல்லியோடு சமையல் அறையில் நின்றுக் கொண்டார்.

அவர்களோடு துளசியும் பனியும் இணைந்துக் கொள்ள, இங்கே அவரின் நாத்தனார் மார்கள் கொதித்துப் போனார்கள்.

“ஒரு பேச்சுக்கு கூட நம்ம கிட்ட எதையும் செய்ய சொல்ல பாரேன்” என்று இருவரும் பேசிக் கொள்ள, அவர்களோடு மங்கையும் இணைந்துக் கொண்டார். அவரையும் இழுத்துக் கொள்ளவில்லை அல்லி.

காலை வேலை முடிந்த பிறகு மாப்பிள்ளை பொண்ணை அமரவைத்து விருந்து குடுத்து, அவர்களோடு பெண் வீட்டு ஆட்களையும் அமரவைத்து அல்லி பரிமாற, ரேவதியும் பனியும் அவருக்கு உதவி செய்ய வர, அல்லிக்கு அத்தனை நிறைவாய் இருந்தது. பணியாளர்கள் இருந்தார்கள் என்றாலும் இது அவருக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.

அவரின் நாத்தனார்கள் யாருக்கு வந்த விருந்தோ என்று தள்ளியே இருந்தார்கள். அதை ரேவதி உணர்ந்துக் கொண்டு கை கொடுக்க, அம்மாவோடு சேர்ந்து பொண்ணும் கைக் கொடுத்தாள்.

அவர்கள் உண்டு எழ, அதன் பிறகு இவர்கள் உண்டு எழ என காலை பதினோரு கோபால் வீட்டிலையே ஆனது. மறுவீட்டு விருந்துக்கு முறைப்படி கதிரவனுடன் பனியும் சேர்ந்து நின்று அழைக்க, அவளுக்கு குங்குமம், பூ என வைத்து விட்டார் அல்லி.

குடும்பத்தோடு சேர்த்து அழைத்தான் கதிரவன். அதில் அல்லிக்கு இன்னும் மனது நிறைந்துப் போக,

“முதல்ல பொண்ணும் மாப்பிள்ளையும் வரட்டும். பின்னாடியே நாங்களும் வரோம்” என்றார் முக மலர்ச்சியுடன்.

“அப்போ வரோம் அத்தை” என்று கதிரவன் கைகூப்ப,

“சந்தோஷம் ய்யா” என்றார் அல்லி நெகிழ்வாக.. அவருக்கு அத்தனை திருப்தி மகனின் கல்யாணம் இவ்வளவு வெகு விமர்சையாக நடந்து முடிந்ததில். ராஜனும் கைக்கூப்பி நன்றி சொல்ல,

சின்ன தலை அசைப்புடன் புதுமண தம்பதியர்களை தனி காரில் அழைத்துக் கொண்டு சென்றான்.

கூடவே இன்னொரு காரில் மங்கலம் சேகரனை அனுப்பி வைத்தவன், தன் காரில் ரேவதி மற்றும் சேகரனை ஏற்றிக் கொண்டான்.

அவனுக்கு அருகில் பனி அமர வைத்துக் கொண்டான். எல்லோரும் ஓகோ போட்டார்கள். பனியின் முகம் சிவந்துப் போனது.

--

வீட்டுக்கு வந்த பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆராத்தி சுற்றி வரவேற்று விருந்து உபச்சாரம் செய்து என பரபரப்பாக சென்றது. மத்திய நேரம் அல்லியும் அவரது சொந்த பந்தங்களும் வந்து விட்டார்கள்.

கதிரவன் தான் போனா போகுதென்று அல்லியின் நாத்தனர் மார்களை அழைத்து இருந்தான்.

வீடு முழுவதும் ஆட்கள் தான். ரேவதிக்கும் பனிக்கும் நிற்க நேரமில்லாமல் அலைந்துக் கொண்டு இருந்தார்கள். காமாட்சி தன் அண்ணிக்கு மட்டும் விசயத்தை சொல்லி இருந்தார். எனவே அண்ணி பனியின் முகத்தை வழித்து நெட்டி முறித்து முகத்தோடு முகம் வைத்து மகிழ்ந்தார்.

“உன்னை இழந்துட்டு இந்த ரெண்டு பொண்ணுங்களும் எப்படி துடிச்சு போனாங்கன்னு எனக்கு தான் தெரியும் தங்கம்.. காமாச்சியும் ரேவதியும் பட்ட பாடு இருக்கே..” என்று அன்றைய நாளின் வேதனையை நினைவு கூர்ந்தார்.

“அத்தை போனது எல்லாம் போகட்டும்.. விடுங்க.. இப்போ கிடைச்சுட்டா இல்லையா? கொண்டாடுங்க” என்று ரேவதி சொல்ல,

“அதானே.. என்ற பேத்தி வந்த நேரம் சுப மகிழ்ச்சி தான்..” என்றவர், அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

விசாலாட்சிக்கு இன்னும் யாரும் சொல்லவில்லை. தாத்தாவுக்கு சேகரனின் அப்பா மூலம் தெரிந்து இருந்தது தான். ஆனால் அவர் வாயை திறக்கவில்லை. தன் பேரனே யாருக்கும் சொல்லாத பொழுது தான் எப்படி சொல்வது என்று யாரிடமும் சொல்லவில்லை.

காமாட்சியும் தன் கணவனிடம் இன்னும் சொல்லி இருக்கவில்லை. கல்யாண பரபரப்பு ஒரு பக்கம் என்றாலும் எல்லோருக்கும் முன்னிலையில் சொல்ல தோன்றவில்லை அவருக்கு. தனிமையே கிடைக்கவில்லை. ஆற அமர சொல்ல வேண்டிய விசயம் அல்லவா.. அதனால் மௌனம் காத்தார்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 5, 2026 11:06 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top