Notifications
Clear all

அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

எடுத்த புகை படங்களை பார்வை இட்டவனிடமிருந்து பட்டென்று கேமராவை பிடுங்கியவள், “ரெண்டு பேரும் சேர்ந்து தான் பார்க்கணும், இப்போ வாங்க நாம் அருவியில நிக்கலாம்...” என்று அவனை இழுத்துக்கொண்டு அருவியில் நிறுத்தினாள்.

அதில் புன்னகையுடன் அவளருகில் வந்து நின்று மீண்டும் நீரில் நனைந்து நின்றான். அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

“ஆதி.. எவ்வளவு நேரம் ஆச்சு நாம் அருவியை விட்டு வந்து... ஆனா பாருங்களேன்... எனக்கு இன்னும் அருவியில நிக்கிற மாதிரியே இருக்கு... தண்ணி இன்னும் என் மேல விழற மாதிரியே இருக்கு ஆதி...” கண்களை மூடி அந்த உணர்வுகளை உள் வாங்கியபடி சொன்னவளை பார்த்து...

“ம்ம்... அது எல்லாருக்கும் இயல்பு தான் மயூ... எனக்கும் அப்படி தான் இருக்கு... அதும் கண்ண மூடி அதை அனுபவிச்சா இன்னும் அதிகமாகும் அந்த உணர்வு..” என்று சொல்லி அவளின் முன் காலை உணவான ரொட்டியை பிரட்டி கொண்டு வந்து வைத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

அவன் தந்ததை சாப்பிட்டவள், கண்களை திறக்கவே இல்லை... “சுகமா இருக்கு ஆதி... எப்படி உங்களை மனசுக்குள்ள நினச்சா சுகமா சலிக்கவே சலிக்காதோ அது போலவே இருக்கு...” சொன்னவளின் முகத்தில் இருந்த மகிழ்வை கண்டு ஆதியின் மனம் குளிர்ந்து போனது. அருவியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலே அவளது கூந்தல் காய்ந்துவிட அவளுக்கு வலிக்காமல் சிக்கெடுக்க ஆரம்பித்தான்.

அவனது கை பட்டு இன்னும் சுகமாய் இருந்தது... “ஆதி சிக்கு வேண்டாம்... அப்படியே தலையை கோதி குடுங்க ப்பா...” என்று கண்களை சொருகிய தூக்கத்தை விரட்டி அடித்து அவனிடம் கேட்டாள்.

அவள் கேட்டதை செய்தவன்... எதிரில் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவளது முகத்தை பார்த்தான். எந்த அலங்காரமும் இல்லாமல் மென்மையாய் விழி மூடி இருந்தாள். அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டவனுக்கு இந்த முகத்தை தன் நெஞ்சினில் வாழ்க்கை பூரா வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வழுத்தது...

கைகளால் அவளது முகத்தை வருடி விட்டான். “ம்ம்ம்ம்.... இன்னும் சுகமா இருக்கு ஆதி...” என்றவள் அப்படியே அவனது மடியில் படுத்துக்கொண்டாள். சிரித்தவன், இன்னும் மெதுவாய் மயிலிறகை விட மென்மையாக வருடிவிட தொடங்கினான்...

அந்த சுகத்தில் கண்களை திறந்து பார்த்தவள் தன்னவனின் காதலில் திளைத்து போய் அவனையே பார்த்தாள். அவள் விழிகளை திறக்கவும்,

வார்த்தைக்கு கூட வலிக்குமோ என்பது போல இதமாக “என்னடா...” என்றான்...

“ஆதி உங்களுக்கு இப்படி கூட பேச தெரியுமா...?” அவனது மென்மையில் வியந்து போய் கேட்டாள்.

“எனக்கு இன்னும் என்னென்ன தெரியும்னு உனக்கு தெரியாது கண்ணம்மா... முழுசா என் காதலை காட்டுவதற்க்குள்ள தான் நீ என் கை நழுவி போய்ட்டியே...” பெருமூச்சு விட்டவன்,

“அப்பாவுக்காக இந்த தொடர்வண்டி பெட்டி பழுது பார்க்கும் நிறுவனத்தை உருவாக்கிட்டு, பிறகு உன் கூட முழுசா நேரம் ஒதுக்கணும்னு நின்னைச்சேன்.. இந்த காண்ட்ராக்ட் பெர்மேநேண்டா நமக்கு தான்னு தெரியும். அதனால ஒரு வருடத்துக்கு முன்பே எல்லா ஊர்களிலும் இடம் வாங்கி முழுமையாக பட்டறை ரெடி பண்ணி வச்சுட்டேன்...” என்றான்.

அவனது வேகத்தை கண்டு “அப்போ அந்த மீட்டிங் சும்மா கண் துடைப்பு தானா...?” கேட்டாள்.

“அப்படின்னு சொல்ல முடியாது... இந்திய அரசாங்கம் நமக்கு ஒப்புதல் குடுத்துட்டாங்க... ஆனா ஜெர்மனி அரசாங்கம் உன்னோட மீட்ல தான் சைன் பண்ணினாங்க...” என்றான்.

“நான் தான் எல்லாத்தையும் சொதப்பிட்டன்னா...” விழிகள் கலங்க கேட்டவளை இழுத்து அணைத்தவன்,

“இந்த வேலை முடுஞ்ச உடன் நம்ம கல்யாணம், அதுக்கு பிறகு ஒரு வருடம் உன்னோட இந்த உலகத்தை சுத்தி வரணும்னு ப்ளான் பண்ணி, எல்லா ஊர்களிலும் உள்ள ஹோட்டல்ஸ் கெஸ்ட் ஹவுஸ் எல்லாமே புக் பண்ணி வச்சேன்... நம்ம கல்யாணத்துக்கு இந்தியாவுல இருக்க மிக பெரிய கற்கோட்டையை புக் பண்ணி வச்சி இருக்கேன்.”

“ராஜஸ்த்தான் கோட்டையை தான் முதல்ல முடிவு பண்ணினேன். ஆனா எனக்கு அதுல விருப்ப இல்ல... அதனால நம்ம தமிழ் நாட்டுல இருக்க சிவகங்கை செஞ்சி கோட்டையை சீர் செய்து அங்கே விமர்சையாக செய்ய எல்லா ஏற்பாடும் நடந்துக்கொண்டு இருக்கிறது...”

“ஆனா... எல்லாத்தையும் நிறுத்த வேண்டிய சூழல்ல கொண்டு வந்து நிறுத்திட்ட...” என்றான் வேதனையாக...

“ஆதி...”

“விடு... இப்போ எதை பற்றியும் பேச வேண்டாம். இந்த நேரம் போனா மீண்டும் வராது. நம்ம வாழ்க்கையில...” என்றவன், “நீ தூங்கு..” அவளை தன் மடியில் படுக்கவைத்து தலையை கோதி, முகத்தை வருடி, முதுகை தட்டி கொடுத்தான். அவனது இந்த பரிமாணத்தில் திகைத்து தான் போனாள்.

ஏனெனில் இன்று வரை இதெல்லாம் இவனுக்கு இவள் தான் செய்துகொண்டு இருந்தாள். இவனுடைய எல்லா வேலைகளுக்கும் இவள் வேண்டும். ஒரு நாள் ஒரு பொழுது கூட இவ்வளவு தன்மையாய் அவன் பேசியதே இல்லை. அதை அவனிடமும் கேட்டே விட்டாள்.

“நீ என் பக்கத்துலயே, என் கைக்குள்ளயே இருந்தியா...? அதனால இதெல்லாம் காமிக்கனும்னு எனக்கு தோணல.. அது மட்டும் இல்லாம அதுக்கு எனக்கு நேரமும் இருந்தது இல்ல. நீயும் அதை என் கிட்ட அதிகமா எதிர் பார்த்தது இல்ல இல்லையா...?”

“அதனாலா நானும் அதை பெருசா கண்டுக்கல... எங்க போய்ட போற, எப்படியும் என்கிட்டே தானே வருவன்னு ஒரு அலட்ச்சியத்துல இருந்துட்டேன்...”

“ஆனா அந்த அலட்ச்சியத்துக்கு தான் எனக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைச்சிருக்கு இருக்கு...” சொன்னவனின் குரலில் இருந்த வேதனை அவளையும் தாக்கியது.

“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க... நீங்க என்கிட்டே அலட்ச்சியமா இருந்தீங்களா...? இதை அந்த கடவுளால கூட நம்ப முடியாது... எனக்காக நீங்க பார்த்து பார்த்து செய்யிற ஒவ்வொரு விசயத்திலும் ரேணு, ரோகிணி எல்லாரும் எவ்வளவு பொறாமை படுவாங்க தெரியுமா..?”

“அவ்வளவு கிண்டலும் பண்ணுவாங்க... உங்கள மாதிரி காதல் செய்ய யாராலும் முடியாது ஆதி... இன்னொரு முறை என் முன்னாடி இப்படி பேசாதீங்க...”

“உங்க காதலுக்கு நான் தான் நியாயம் செய்யலன்னு ஒவ்வொரு முறையும் என் நெஞ்சு என்னை அருத்துக்கிட்டே இருக்கு.” கண்ணீருடன் அவனது முகத்தை தாங்கி பேசியவளின் கைகளை பற்றிக்கொண்டவன்,

“இதோ இப்போ கூட பாரு மயூ... என்னை என்னையவே ஒரு வார்த்தை திட்ட கூட அனுமதிக்கல நீ... இப்படி பட்ட உன் காதலுக்கு இன்று வரை நான் எதுவுமே செய்தது இல்லை... ஒரு முத்தம் கூட மென்மையா கொடுத்தது இல்ல...”

“எல்லாமே என் அவசரத்துல செஞ்சுட்டு போய்டுவேன். அதுவும் ரஞ்சனி உள்ளே நுழைய ஆரம்பித்ததிலிருந்து என் அதிகாரமும், ஆளுமையும் உன்னை பல முறை காயப்படுத்தி இருக்கு... அதெல்லாம் காதலின் வெளிப்பாடு தான்.”

“ஆனா அந்த முரட்டு தனத்தை தாங்க முடியாம நீ துவண்டு சரியும் போது உன்னை ஆதரவா தோள் சாய்க்காமா இன்னும் அதிக பிடிவாதத்துடன் உன்னை இறுக்கி இருக்கிறேன்...” என்று மனம் குமுறினான்.

“அப்படி நீங்க இறுக்கி பிடிக்கிறதுனால தான் ஆதிமா நான் இன்னும் இருக்கிறேன்.. நீங்க என்னை காயப்படுத்துற ஒவ்வொரு முறையும் உங்களுக்கு உள்ள நான் எவ்வளவு ஆழமா வேரூன்றி இருக்கிறேன்னு எனக்கு காண்பிச்சுக்கிட்டே இருக்கீங்க...”

“உங்க கோவம் கூட என் காதலை உயிர்பிச்சுக்கிட்டே இருக்கு ஆதி... எனக்கு என் ஆதிமா எப்படி இருந்தாங்களோ அதே மாதிரி என் கடைசி வரை வேணும்... மென்மையை விட உங்க வன்மையும் திண்மையும் தான் என்னை உயிர்ப்போட வைக்கிது ஆதி..” என்றவளின் சொற்களில் அகமகிழ்ந்து போனான்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:08 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top