Notifications
Clear all

அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளுக்கு எதிராக மூவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். தலையை நிமிர்த்தாமல் குழந்தையிடமே மொத்தமாக கவனத்தை பதித்தவள்,

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஆற்றி குடிக்க வைத்தாள்.

“இது நேனாம்மா” முதல் வாய் குடித்த பொழுதே அவன் அடம் பிடிக்க ஆரம்பிக்க,

“இது தான் ஹெல்திடா கண்ணா.. என் தங்கம் சமத்தா இந்த பாலை குடிப்பானாம்.. அம்மா தம்பிக்கு சாக்கி தருவாளாம்” பேரம் பேசி அவனை குடிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றானது அதிரலுக்கு.

அதிலும் பாதி நேரம் அவளின் மார்போடு ஒன்றிக் கொண்டு, “போயும்.. போயும்..” என்று வாயை அவளிடம் காட்டாமல் அவளின் நெஞ்சோடு புதைத்துக் கொண்டு சேட்டை செய்தான்.

“அடேய் படுத்தாதடா...” செல்லம் கொஞ்சி கொஞ்சியே அவனை ஒரு டம்ளர் பாலையும் குடிக்க வைத்தாள்.

“ம்மா சாக்கி” என்று பாலை குடித்த அடுத்த நிமிடம் கையை நீட்டினான்.

“இதுல எல்லாம் தெளிவா இருடா” முணகியவள் அவனுக்கு பிடிச்ச சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தாள்.

இருவரின் சத்தத்தை தவிர அங்கு வேறு எந்த சத்தமும் எழவில்லை. சோபாவில் அமர்ந்த மூவரும் இவர்கள் இருவரை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த நேரம் வெளியே வாசலில் அரவம் கேட்டது. அதிரல் எழுந்து வெளியே வர, புதிதாய் ஒருவர் நின்று இருந்தார்.

“யார் வேணும் உங்களுக்கு?” என்று அதிரல் கேட்கும் சமயமே, அவளின் பின்னோடு உரசாத குறையாக வந்து நின்றான் தீத்திரள் தீரன்.

“வாங்க டாக்டர்” என்று அழைத்தான். அதிரலுக்கு அப்போது தான் புரிந்தது. வந்து இருப்பவர் மருத்துவர் என்று.

ஒதுங்கிப் போக பார்க்க, அவளின் பின்னாடி தீரன் நின்று இருக்க, நகர முடியாமல் அப்படியே நின்றாள்.

“சுடுதண்ணீர் எடுத்து வை” என்றான் அவளிடம்.

தலையயை ஆட்டியவள் அவனை பார்க்க,

“வாட்?” என்றான்.

“வழி” என்றாள்.

அவளை மறித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்தவன், சற்று விலகி நிற்க, எப்படியும் அவனை இடித்துக் கொண்டு போகிற மாதிரி தான் நின்றான்.

தன் உடம்பை குறுக்கிக் கொண்டு அவள் சென்ற பொழுதும் அவனின் மார்பை அவளின் புஜம் உரசியதை தவிர்க்க முடியவில்லை.

உள்ளே வந்து அடுப்படிக்கு சென்று தீரன் கேட்ட சுடுதண்ணீரை வைத்தவள், ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யலாமா என்று பார்த்தாள்.

“சாப்பிடுவாங்கலான்னு தெரியலையே?” யோசித்தவள் சரி செய்து வைப்போம். சாப்பிட்டா சாப்பிடட்டும்.. இல்லன்னா எப்படியோ போகட்டும் எண்ணியவள், சுடுநீர் வைத்து கருப்பட்டியை தட்டி கொதிக்க விட்டு வடிகட்டிக் கொண்டவள், கேழ்வரகு மாவோடு கருப்பட்டி நீரை சேர்த்து கரைத்து வைத்தாள். அதில் ஒரு வாழைப்பழத்தை நன்றாக கூழாக்கி மாவில் சேர்த்து, கொஞ்சம் பேக்கிங் சோடா மாவையும் சேர்த்து கரைத்து வைத்து பத்து நிமிடம் ஊர வைத்தவள், தனியாக நறுக்கிய தேங்காயை நெய்யில் வறுத்து அதோடு கொஞ்சம் முந்திரி போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்தவள், குழிப்பணியார சட்டியில் நெய்யை ஊற்றி பாதி குழிக்கு மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்தாள்.

நெய்யோடு சேர்ந்த கருப்பட்டி வாசம் கூடத்தில் அமர்ந்து இருப்பவர்களை தூக்கியது.

“நல்ல வாசமா இருக்கே?” தாரா சொல்ல,

“ப்ச் இதென்ன தாரா இப்படி அல்ப்பமா நடந்துக்குற?” கேட்ட தாயை கண்டு வாயை மூடிக் கொண்டாள். தீரன் மருத்துவரோடு தந்தையின் அறையில் இருந்தான். அவனுக்கும் நெய் கருப்பட்டி வாசம் வந்தது.

“ம்ம்ம்” என்று அந்த நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான். ஊர் சுற்ற கிளம்பியவர்கள் நிறைய சாப்பிட்டா நடக்க முடியாது என்று பெரியவர்கள் இருவரும் பாதி உணவு தான் உண்டார்கள்.

அதனால் தீரனும் தாராவுமே அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுக்கு போகும் பொழுது பெரிய ஹோட்டலில் நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஒழுங்காக சாப்பிடவில்லை.

அங்கும் இங்கும் அலைந்ததோடு, ஆளவந்தானுக்கு அடிபட்டு இங்கே அதிரல் வீட்டுக்கு வந்த பொழுதே பசி தான். அதனாலே அதிரல் குடுத்த காபியை வாங்கிக் கொண்டார்கள்.

இருந்தாலும் பசி எடுத்தது. ஆளவந்தானுக்கு நடுக்கம் குறையாத காரணம் மத்திய உணவு ஒழுங்காக எடுத்துக் கொள்ளாதது தான். சரியாக சாப்பிடாமல் அங்கும் இங்கும் அலையவும், அதில் கீழே விழுந்து காயம் ஏற்படவும் இன்னும் தளர்ந்துப் போனார்.

என்ன காசு பணம் இருந்தாலும் நேரத்துக்கு சரியான உணவு உண்டால் தான் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியும். இல்லை என்றால் எத்தனை செல்வம் இருந்தாலும் அது கால் தூசிக்கு தான்.

ஆளவந்தானுக்கு அடிவயிற்றில் பசி எடுத்தது. அதுவும் நெய்வாசம் வர அவரின் பசியை இன்னும் தூண்டியது.

--

முதல் ஈடு எடுத்துக் கொண்டு வந்தவள் அதை இரண்டு தட்டில் வைத்து ஒன்றை தேவகியிடம் நீட்ட,

“இல்ல எனக்கு வேண்டாம்” என்று மறுத்து விட்டார். அவர் அப்படி சொல்லவும் அதிரலுக்கு மனம் புண் பட்டு விட, தாராவிடம் ஒன்றை நீட்டினாள்.

அவள் தாய்க்கு பயந்துக் கொண்டு, “இல்லங்க வேணாம்” என்று அவளும் மறுத்து விட்டாள். அதில் அவளின் முகம் வாடி விட, ஒன்றும் சொல்லாமல் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள்.

என்னவோ அவர்களின் பார்வையில் தான் ரொம்ப கீழே இறங்கியது போல உணர்ந்தாள்.

“சாப்பிட தானே குடுத்தேன்..” என்று மனம் முரண்டியது.

“தட்ஸ் ஓகே அதிரல். அவங்க ஸ்டேடஸ்க்கு தகுதி இல்லாத இடத்துல போய் கை நனைப்பாங்களா?” தனக்கு தானே பேசிக் கொண்டவள், சூடாக இருந்த இரண்டு பணியாரத்தை எடுத்து சின்ன சின்னதாய் பிட்டு ஒரு தட்டில் போட்டு கூடத்தில் பொருள்களோடு விளையாடிக் கொண்டு இருந்த மகனிடம் போய் கொடுத்தாள்.

“கண்ணா உனக்கு பிடிச்ச பணியாரம்டா” என்று அவனின் வாயில் வைத்து ஊட்டி விட,

“அய்.. இப்பு பனி... இப்பு பனி” என்று அவனுக்கு கொண்டாட்டமாய் போக, மகன் குதியாட்டத்தோடு வாயில் போட்டு சுவைக்க, அதிரலுக்கு மனம் நிறைந்துப் போனது.

“நீங்க சாப்பிடாட்டி போங்க.. எனக்கு என் மகன் சாப்பிட்டா போதும்” என்று எண்ணிக் கொண்டவள், பொறுமையாக மகன் உண்ண உண்ண ஒவ்வொரு வில்லையாய் எடுத்து ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் மருத்துவரோடு வெளியே வந்த தீரன் மகனுக்கு அவள் ஊட்டி விடுவதை பார்த்தான்.

“உன் மகனுக்கு மட்டும் தான் செஞ்சியா?” என்று கேட்டான் தீரன்.

அவன் திடுதிப்பென்று அப்படி கேட்கவும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

“ப்ச் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி பயப்படுற?” என்றவன்,

“சேர்த்து செஞ்சு இருக்கியா இல்ல.. உனக்கு மட்டும் தான் செஞ்சியா?” என்று கேட்டான்.

“இல்ல சார் சேர்த்து தான் செஞ்சேன்..” என்றாள் தயக்கமாக.

“அப்புறம் என்ன எடுத்துட்டு வந்து குடுக்க வேண்டியது தானே” என்றவன், மருத்துவரிடம் திரும்பி,

“சாப்பிட்டுட்டு போங்க..” என்றான். பின்பு அதிரல் புறம் திரும்பி, “காபி போடு” என்றான். “அதுக்கு முன்னாடி ப்லேட்டிங் பண்ணி குடு” என்றான்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 4, 2026 1:24 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top