Notifications
Clear all

அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ம்ம். அதை நாளைக்கு சொல்றேன்... இப்போ வா போய் கொஞ்ச நேரம் படுக்கலாம். கார்ல வந்தது டையர்டா இருக்கு.” அவளை இழுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

பெரிதாக ஆடம்பரம் எதுவுமில்லை என்றாலும் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் நிறைந்து இருந்தது. கூடவே ஆதியும் பல பொருட்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

நான்கு அறைகளை கொண்டு இருந்தது அந்த வீடு... இரண்டு படுக்கை அறையும், ஒரு கூடமும், ஒரு சமையல் அறையும் என்று மிக கச்சிதமாய் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் விஸ்த்தாரமாகவே இருந்தது எல்லா அறைகளும்.

அதில் ஒரு படுக்கை அறைக்குள் ஆதி நுழைய இன்னொன்றில் மயூ நுழைந்து தூங்க ஆரம்பித்தாள். ஆதிக்கும் தூக்கம் கண்களை தாக்க, அப்படியே கவிழ்ந்து படுத்தான்.

யாரோ உசுப்புவது போல இருக்க கண்களை திறந்து பார்த்தான் ஆதி...

எதிரில் மயூ நின்றிருந்தாள்.

“என்னடி...” என்றபடியே அவளை இழுத்து அமரவைத்து அவளின் மடியில் படுத்துக்கொண்டான்.

“ஒண்ணுமில்ல தூக்கம் போய்டுச்சு அதான் வந்தேன்...”

“ம்ம்ம்... எனக்கு தூக்கம் வருது... அப்புடியே தலையை கொஞ்சம் கோதி விடேன்...” என்று அவளது கைகளை எடுத்து தன் தலை மீது வைத்து விட்டு அவளது இடுப்பை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

அவனை எழுப்பிவிட்டுட்டு சுவரோரமாக சாய்ந்து அமர்ந்தவள், அவனை இழுத்து தன் மடி மீது போட்டுக்கொண்டு தலையை கோதிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

இடையில் தெரிந்த வனப்பில் தன் முகத்தை அங்கு பதித்தவன் மெல்ல மீசை உரசி அதற்கு முத்தமும் கொடுக்க,

“தூங்குறேன்னு தானே சொன்னீங்க.. இப்போ என்ன பண்றீங்க...” தவிப்புடன் அவனது தலையை இழுத்து கேட்டாள்.

“இப்பவும் தூக்கம் வருது தான்...” என்றவன் இன்னும் வசதியாக அவளது வயிற்றில் முகம் புதைத்தவன், இரு கைகளாலும் கட்டிக்கொண்டான்.

மென்மையாக அவனது தலையை கோதி விட்டவள்

“ஆதி...” என்று அழைத்தாள்.

“என்னடி...” என்றவன் விழிகளை திறவாமலே அவளது வயிற்றில் தன் முகத்தை உரசி சிறுபிள்ளை போல நெளிந்துக்கொண்டே இருந்தான்.

“நெளியாதீங்க ஆதி... கூசுது..”

“அப்படியல்லாம் இருக்க முடியாது..” என்றவன் வீம்புக்கே இன்னும் கூடுதலாய் அவளது மடியில் புரண்டுக்கொண்டு, அவளது வயிற்றில் குறுகுறுப்பை மூட்டினான்.

அவனது செயல்களில் சிலிர்த்தவள், “ஆதி...” என்று இறுக்கமாக பற்றிக்கொண்டாள் அவனால் திரும்ப முடியாத படி.

அவளது கரங்களை தட்டிவிட்டு இன்னும் அதிகமாய் அவளது வயிற்றில் முகம் புதைத்தவன், அவள் கொஞ்சமும் எதிர் பாரா சமயத்தில் அவளது மார்பில் தன் முகத்தை பதித்தான்.

அதில் உடல் சிலிர்த்தவள் “ஆதி... என்ன பண்றீங்க...” விழிகளை மூடிக்கொண்டாள். அவனையும் பிடித்து இழுக்க பார்த்தாள். ஆனால் அவன் அசையவே இல்லை.

“ஆதி...” மெல்லமாய் அவளது முனகல் சத்தம் அவனை தீண்ட...

“மயூ...”

“ம்ம்ம்...” என்றவள் விழிகளை திறக்கவே இல்லை. அவளை அப்படியே படுக்கையில் சரித்து அவள் மீது படர்ந்தவன், அவளது மார்பில் தன் தலையை வைத்து சயனம் செய்ய தொடங்கினான்.

வேறு எந்த சத்தமும் இல்லை அங்கு... இருவரது மூச்சு காற்று மட்டுமே அந்த அறையை சுத்தி வந்துக்கொண்டு இருந்தது.

தன் மார்பில் சாய்ந்து தூங்குபவனை தட்டிக்கொடுத்து தலை கோதிவிட்டுக்கொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு இருந்தது.

இந்த அணைப்பு இனி கிடைக்காது இல்லையா...? இவரை பிரிந்து என்னால வாழ்ந்திட முடியுமா...? அவரது மூச்சு காற்றில் கலந்து இருக்கும் என் மூச்சு காற்றை எங்கணம் பிரிக்க இயலும்...? பிரித்தால் உயிர் பூ இரண்டும் சருகாகி போகுமே...? எதற்கு இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது...

அவள் நினைத்தால் எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம் தான்.. ‘எல்லாவற்றையும் நிறுத்தி விடலாமா...?’ என்ற யோசனையும் வந்தது அவளுக்கு... ஆனால் அவளால் அதை செய்ய முடியாதே...

செய்ய முடியாத காரணம் கண் முன் வந்து நிற்க... ஆதியை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்... யாருக்கும் அவனை விட்டு தரமாட்டேன் என்பது போல... அவளது இறுக்கமான பிடி ஆதிக்கு இன்னும் அதிக சுகத்தை கொடுக்க,

“ம்ம்ம்.. அப்படித்தான்டி இன்னும் இருக்கிக்கோ...” தூக்க கலக்கத்திலே சொல்ல... அவனது ஆசையையும் காதலையும் உணர்ந்தவளுக்கு மனமெல்லாம் மேலும் புண்ணாகி போனது. ஆனால் பிடியை இன்னும் இறுக்கி பிடித்தாள். தன்னவன் சுகமாக துயில் கொள்ள வேண்டும் என்பதற்காக...

எல்லாவற்றையும் யோசித்துத் பார்த்தவளின் கண்களும் தூக்கத்தில் சொருக... அவளும் கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றாள்.

அன்றைய பொழுது தூக்கத்திலும் எல்லாவற்றையும் எடுத்து வைப்பதிலுமே செல்ல... அடுத்த நாள் காலை அவளை அழைத்துக்கொண்டு அருவி கரைக்கு சென்றான்...

“இது மூலிகை கலந்து வரும் தண்ணி... அதனால ஒன்றும் செய்யாது... வா” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு கொட்டும் அருவியின் அடியில் சென்று நின்றான்.

அதிகம் புழங்காத இடம் என்பதால் பாசன் சற்று அதிகமாகவே இருந்தது... கவனமாக பாறையை பிடித்து நின்றுக்கொண்டவன், தன் கை பிடியிலேயே அவளை நிறுத்தி குளிக்க சொன்னான்.

சிலிர் என்று தண்ணீர் அதிக குளுமையுன் உச்சந்தலையில் கொட்டியதில் மனமும் குளுமையாக... உடலெல்லாம் ஜில்லென்று இருந்தது...

படபடவென்று கொட்டும் நீரில் மனம் லயிக்க, திரும்பி தன்னவனை பார்த்தாள். அவன் இருகைகளையும் விரித்து நீட்டி நீரை இரசிக்க, அவளும் அவனது முன்பு நின்று அவன் கைகளோடு தன் கைகளை நீட்டி கண்களை மூடி இரசிக்க ஆரம்பித்தாள்.

அவளும் அவ்வாறு செய்ய, இதழ் பிரியாமல் சிரித்தவன் முகத்தை நிமிர்த்தி அருவியில் காட்டினான். முகத்தில் பட் பட்டென்று நீர் வந்து விழ... வலித்தாலும் இன்னும் வேண்டும் என்பது போல முகத்தை நிமிர்த்தி காட்டினான்.

அதன் பின்பு மூச்சு முட்ட, லேசாய் முகத்தை நீரை விட்டு விலகினான். அவளும் மூச்சுக்கு சிரமபடுவதைக் கண்டு அவளை வெளியே இழுத்தான். வெளியே வந்து வேகமாய் மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள்

“செம்மையா இருக்கு ஆதி... இன்னும் நிக்கலாம் வாங்க” என்று அவனை இழுத்துக்கொண்டு நீருக்கு அடியில் சென்று நின்றாள். கொஞ்ச நேரம் அமைதியாய் விழும் நீரை இரசித்தவள், அதன் பின்பு அதில் ஆட்டம் போட தொடங்கினாள்...

தன் நிலையை மறந்து... அவளோடு அவனும் இணைய... இருவரும் சிறு பிள்ளைகள் போல அந்த நீரில் ஆட்டம் போட்டும், நீரை அள்ளி ஒருவர் மீது ஒருவர் தெளித்துக்கொண்டும், கொப்பளித்து துப்புவதும்... புகைப்படம் எடுப்பதும், அந்த அருவி முழுவதும் அவன் குடிப்பது போலவும் புகைப்படம் எடுத்தாள்.

“எதுக்குடி இது...” அவன் ஆட்சேபிக்க

“என்னோட ஆதி.. மிஸ்டர் கிங்... சோ அவரால முடியாது எதுவும் இல்லை இல்லையா... அதான் அப்ட்ரால் இந்த அருவிய குடிக்கிற மாதிரி ஒரு க்ளிக் வேணும்னு தோணுனது” என்று சொல்லி அவனை அருவியை விட்டு தள்ளி நிற்க வைத்து வாயை பிளந்து நேரே அருவியை விழுங்குவது போல புகை படம் எடுத்தாள். அதுவும் மிக அழகாக வந்து இருந்தது...

அதன் பின்பு இன்னும் பல போஸ்களில் இருவரும் புகை படம் எடுத்துக்கொண்டார்கள்... திடிரென்று அவன் அவளை உயர தூக்கினான்..

“ஆதி என்ன பண்றீங்க... விடுங்க” என்று பயந்து கத்தினாள்.

“என் தோள் மேல நீ உட்காந்து இருக்குற மாதிரி ஒரு ஸ்டில் எடுக்கலாம்” என்றவன் வாட்டர் ப்ரூப் கேமராவை அவளிடம் நீட்டினான்.

அவளும் அவனது தோள் மேல் தன் இரு கால்களையும் போட்டு ஜம்மென்று உட்கார்ந்துக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்டாள்.

அதன் பின் அவனது கைகளில் தவழ்வது போல, அவனது ஒற்றை கையில் அவளை தூக்கி வைத்திருப்பது போல, வலுக்கும் தரையில் நீருக்கு அடியில் அவன் குப்புற படுத்து, அவனுக்கு மேல் இவள் படுத்து என்று விதவிதாமான போட்டோக்கள் எல்லாம் அந்த அருவியிலே வைத்து எடுத்தார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அருவியிலே ஆட்டம் போட்டார்கள். ஆதிக்கே அவ்விடத்தை விட்டு வர மனமில்லை... இருந்தாலும் காலையில் எழுந்த உடனே இங்க வந்தாச்சு... இன்னும் உணவு கூட உண்ணவில்லை... என்பதால்

“போதும் மயூ... வா போகலாம்..”

“ப்ளீஸ் ஆதி.. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாம்...” என்று மறுபடியும் அருவியின் உள்ளே தலையை கொடுத்துக்கொண்டு நின்றாள்.

அவளது ஆசையை கலைக்க மனமில்லாமல் அருகில் இருந்த பாறையின் மீது அமர்ந்தவன் எடுத்த புகைப்படங்களை பார்வையிட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:06 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top