“இப்போதைக்கு எதுவும் புரியவேண்டாம். ஆனா அவளை நோகடிக்காத.. அவளுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்லை” என்று சொன்னவனின் வார்த்தையில் இருந்த பரிதவிப்பை புரிந்துக் கொண்ட ரேவதிக்கு ஐயோ என்று வந்தது. யாருக்காகவும் அவனது தம்பி இப்படி பரிதவித்துப் போய் பார்த்தது இல்லையே..
“இல்ல தம்பி இனி இப்படி அவளை நோகடிக்கிற மாதிரி பேச மாட்டேன்.. என்னை நம்பலாம்” என்றார் உடனே.
“இப்போ தான் என் அக்கா” என்றான்.
அதை கேட்டு முறைத்தவர், “அப்போ இதுக்கு முன்னாடி நான் உனக்கு அக்கா இல்லையா?” போலியாக கோவம் கொண்டவரை பார்த்து கண் சிமிட்டியவன் “சரி போய் சாப்பிடு.. அம்மா தான் ரொம்ப பரிதவித்து போய் இருக்காங்க. உனக்கும் எனக்கும் சண்டைன்னுட்டு” என்றான்.
“ஆனா நம்ம சித்திக்கும் அத்தைக்கும் கொண்டாட்டமா இருக்கும் நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுகுறதை பார்த்து” என்றார் ரேவதி.
“அதை விடு.. நாளைக்கு அம்மாவோட நகை கடைக்கு போயிட்டு வந்திடு. அவளையும் கூப்பிட்டுக்க” என்றான்.
“எவளை?” என்று கேலியாக கேட்க,
“நீ அடி வாங்காம போக மாட்ட.. பேங்க்ல வேல பார்க்கிற மாதிரியா பேசுற? கண்டித்தவன், “அவளுக்கு கொஞ்ச சேரி எடுத்துக் குடு.. பணத்தை உன் அக்கவுண்ட்ல போட்டு விடுறேன்” என்றான்.
“ஏன் நான் எடுத்து குடுக்க மாட்டனா?”
“பார்ரா.. இந்த அளவுக்கு இறங்கி வர்ற?” நக்கலாக கேட்டான்.
“உனக்கு முக்கியமானவ ன்னா எனக்கும் அவ முக்கியமானவ தான் கதிரவா..” என்றார் உள்ளார்ந்த சொல்லோடு.
“நல்ல அக்கா” என்று சிலாகித்தவன்,
“உன் காசுல அப்புறம் எடுத்துக்கலாம்.. இப்போ என் காசுல எடு.. இதையே அவ வாங்குவாளா இல்லையான்னு தெரியல” என்றான் பெருமூச்சு விட்டு.
“ரொம்ப சுய மரியாதை பார்ப்பாளோ” யோசனையுடன் கேட்டார்.
“ம்ம் அப்படியே அவங்க அம்மா மாதிரி க்கா” என்றான்.
“அவளுக்கு யாரும் இல்லன்னு சொன்ன.. இப்போ அம்மான்னு சொல்ற”
“அதுக்காக அவ என்ன தானாவேவா பிறந்து வந்தா.. அம்மான்னு ஒருத்தர் இருந்து இருப்பாங்க தானே..” என்றவன்,
“எல்லாரும் இருந்தாங்க.. இப்ப அவ மட்டும் தான் இருக்கா..” என்றான்.
“ஓ..” கேட்டுக் கொண்டவர் பனியின் மீது சொல்லோன்னாத நேசம் பிறந்தது.
“அவளை நல்லா பார்த்துக்குறேன்னு சொல்லி தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன் க்கா” என்று அவன் சொல்ல, பட்டென்று அவனது கையை பிடித்துக் கொண்டவர்,
“இனி நானும் அவளை நல்லா பார்த்துக்குறேன் கதிரவா.. அதுக்காக நீ விசனப்படாத.. அவளை இனி யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவ கூட எப்பவும் நான் இருப்பேன்” என்றார்.
கதிரவனின் முகத்தில் சின்னதாய் ஒரு மலர்வு தென்பட ரேவதிக்கு நிறைந்துப் போனது மனது.
ஆயிரம் தான் இருந்தாலும் தம்பி ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அதுக்கு பிறகு மறுபேச்சு எழுமா அவரிடம் இருந்து.
கதிரவனோடு வெளியே வந்தவர் சாப்பிட போக, இவன் மேலே சென்றான். போகும் பொழுது பால் எடுத்துக் கொண்டே சென்றான்.
பனியின் கதவை தட்டினான். அப்பொழுது தான் வந்து அமர்ந்தாள் உப்பரிகையில் நடை போட்டுவிட்டு.
எழுந்து போய் கதவை திறக்க,
“யாரும் அத்துமீறி உன் அறைக்குள்ள வர மாட்டாங்க. ஏன் எப்போ பாரு கதைவை தாழ் போட்டு வச்சு இருக்க..” கேட்டவன்,
“வா மாடிக்கு” என்று மேலே சென்றான்.
“இல்ல பால் வேணாம்.. இப்ப தானே சாப்பிட்டேன்” என்று அவள் மறுக்க,
“உன் கிட்ட பெர்மிஷன் கேட்கலையே.. வான்னா வரணும்” என்று விட்டு அவன் போக, “அராஜகம் பண்னறாரு” முணகிக் கொண்டே மேலே சென்றாள்.
“உட்காரு” என்று தனக்கு அருகில் இடம் காண்பித்தான். பனியும் அமர்ந்தாள்.
“ப்ளாஸ்க்ல தான் இருக்கு.. சோ ஆறாது.. பேசிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்சுக்கலாம்” என்றான். அவள் தலையை அசைத்தாள்.
“நாளைக்கு மத்தியம் சாப்பிட்டுட்டு ரெடியா இரு.. கடைக்கு போகலாம்” என்றான்.
“ஏன் சார் இப்படி பண்றீங்க? எனக்கு எதுவும் வேணாம்..”
“ஆனா யாரும் வேணான்னு சொல்லல தானே” என்றான் அவளை அறிந்தவனாய்.
அவள் மௌனம் காக்க, அவளின் கையை பற்றியவன்,
“உனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு நிலா.. நீ ஏன் ஒதுங்கியே இருக்க.. ஏன் உண்மையை சொல்ல வேணான்னு சொல்ற? ” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள் விரக்தியாக சிரித்து,
“ஆனா எனக்கு இதை எல்லாம் அனுபவிக்க தோணல சார்.. எவ்வளவோ பார்த்துட்டேன்.. நான் தனியா கட்டல் (கஷ்ட்டப்)ப்பட்ட எனக்காக ஏதாவது ஒரு உறவு வந்து என்னை தாங்கிக்கொள்ளும்னு எதிர் பார்த்துட்டே இருந்தேன். ஆனா அப்படி ஒரு உறவு கூட என்னை தேடி வரவே இல்லை. எல்லாம் இருந்தும் அனாதையா இருந்தேன்.. அனாதையா ஆக்கப்பட்டேன். அந்த வலியை வார்த்தையால் சொல்லி தீராது..” என்றவளை பார்த்தவனின் விழிகளில் பெரும் துயரம் வந்துப் போனது.
அவள் அனுபவித்த நேரங்களில் இவனும் அவள் வாழ்ந்த மடத்தின் வாசலில் தனித்து கால் கடுக்க பல இரவு பொழுதுகள் முழுவதும் நின்று இருந்தானே.. அவனுக்கா தெரியாது அவளின் வலிகள் எல்லாம். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல்,
“இனி சரியா போகும்” என்றவன், “நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.. இப்பவே உன்னை இந்த வீட்டு ராணியாக்கி காட்டுறேன்” என்றான்.
“நான் யாருன்னு சொல்லி அதுக்கு பிறகு வர்ற எந்த சொந்தமும் எனக்கு வேணாம் சார்” விழிகள் கலங்க சொன்னவளை வேதனையுடன் பார்த்தவன்,
“உன் பிடிவாதத்தை கொஞ்சமா தளர்த்திக்கலாம் நிலா” என்றான்.
“சொன்னா உங்களுக்கு புரியாது சார்...” என்றவளை அவன் முறைக்க,
“சரி மாமா” என்று மாற்றிக் கொண்டவள்,
“துளசி சித்தி கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நினைக்கிறேன்.. அதனால நான் யாருன்னு யாருக்கும் தெரிய வேண்டாம்..” என்றாள்.
“ப்ச் இதெல்லாம் பழைய கதை”
“ஆனா நான் யாருன்னு தெரிஞ்சா புதுசா தான் எல்லாருமே பார்ப்பாங்க.. துளசி சித்திக்கு பேசி இருக்குற வீட்டுல ஆளுங்க எப்படி என்னன்னு தெரியாம ரிவில் பண்றது சிக்கல்ல தான் போய் முடியும். அதுவும் இன்னும் எல்லா ஏற்பாடும் செஞ்சு இதோ இன்னும் ஒரு மாதத்துல கல்யாணம்னு இருக்குற நிலையில இந்த தலைவலி வேணாம் மாமா.. ப்ளீஸ்” என்றவளின் நல்ல உள்ளம் புரிய, புன்னகைத்தான்.
“என்ன சிரிக்கிறீங்க.. இது என் சித்தி கல்யாணம் மட்டும் இல்ல.. உங்கா தங்கச்சி கல்யாணமும் தான். சோ என்னை விட கவனமா இருக்க வேண்டியது நீங்க தான்” என்றாள்.
“அதுக்காக உன்னை என்னால எப்பவும் விட முடியாது நிலா.. இப்பன்னு இல்ல எப்பவுமே” என்று அழுத்தமாக சொன்னவனிடம் தன் நெஞ்சை முட்டிய கேள்வி கணைகளை தொடுக்க ஆசை தான்.
“இத்தனை நாள் என்னை மறந்து போய் தானே இருந்தீங்க.. என்னை தேடாம தானே இருந்தீங்க.. இப்ப மட்டும் என்ன?” கேட்க நாக்கு துடித்தது என்றாலும் அவளால் அவ்வளவு எளிதாக வார்த்தையை பிரையோகிக்க முடியவில்லை.





