“உனக்கு தனியா சொல்லணுமா வெளிய போ” என்றான் கொஞ்சமும் அசையாமல். இதை தான் இவன் சொல்லுவான் என்று தெரிந்தும் அவள் விழி எடுக்காமல் அவனை பார்த்தவள்,
“அப்பாயின்ட்மென்ட் இருக்கு” என்றாள்.
“சோ வாட்... எனக்கு இப்போ யாரையும் பார்க்க மூட் இல்லை.. மூடிட்டு கிளம்பு” என்றான் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்.
“ஆனா எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் அழுத்தமாய்.
அவளை கூர்ந்து பார்த்தவன்,
“இப்போ நீ என்ன சொன்னாலும் நான் கேக்குற மூடுல இல்ல.. ஒழுங்கா சேதாரம் ஆகும் முன்னாடி கிளம்பி போயிடு. இல்லன்னா நடக்குறதே வேற...” என்று அடி தொண்டையில் இருந்து எச்சரித்தான்.
அவனது ஆத்திரத்தையும் கோவத்தையும் பார்த்தவளுக்கு விரக்தியில் உதடு பிதுங்கியது.
“தெரியும் உங்களுக்கு நான் ஒரு பொருட்டே இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்... இருந்தும் நான் ஏன் உங்ககிட்ட பேச வந்தேன்னா...” என்று அவள் மேலும் பேச ஆரம்பிக்க,
“எனப்” என்று மேசையை ஒரு தட்டு தட்டி கர்ஜித்தவன் விழிகள் சிவக்க அவளை அவ்வளவு கோவத்துடன் பார்த்தான் ராசசிங்கன்.
அவனது அந்த தட்டுதலில் அவ்வளவு கனத்து இருந்த மேசையில் இருந்த பொருள்கள் கூட அதிர்ந்து சிதறி விழும் நிலையில் இருந்தது.
ஏந்திழையாளுக்கு பயத்தில் உடல் மொத்தமும் வெடவெடவென்று வந்தது. பயத்தில் மூச்சு ஒரு கணம் நின்று தான் போனது. ஆனாலும் தான் கொண்ட உறுதியில் இருந்து பின் வாங்காமல் தைரியமாக நின்றவள் அவன் மேசை மீது தன் கையில் இருந்த ஒரு பொருளை வைத்து விட்டு கூடவே ஒரு காகித கற்றையையும் சேர்த்து வைத்தவள்,
கண்களில் அதித வலியுடன் ராசசிங்கனை பார்த்தவள்,
“இதுக்காக தானே இந்த ஒரு வாரமா இப்படி தூக்கம் இல்லாம, ராவும் பகலுமா அல்லாடிட்டு இருக்கீங்க” என்று கேட்டாள். அவள் சொன்னவுடன் என்ன அது என்று மேசை மீது இருந்த பொருள்களை பார்வையிட்டான்.
முதலில் கண்ணில் விழுந்தது என்னவோ அவள் வைத்த ஒரு பொருள் தான். அதை எடுத்துப் பார்த்தவன் அவளை ஆராய்ந்தது. அதை விட காற்றில் படபடத்து இருந்த காகிதங்கள் அவனது கவனத்தை ஈர்க்க வேகமாய் அந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தான்.
வேல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியின் சேர்.. கிட்டத்தட்ட அவன் எதிர் பார்த்ததை விட அதிகமாக கிடைத்து இருந்தது. வேகமாய் பரபரப்புடன் அதை முழுமையாக எடுத்து வாசித்துப் பார்த்தான்.
அவனது ஆர்வத்தை கண்டு முற்றும் முழுதுமாக உடைந்துப் போன ஏந்திழையாள்,
“என்னோட ஷேர்சும் உங்க பேருக்கு மாத்த சொல்லிட்டேன்” என்றாள் தகவலாய்.
ராசசிங்கன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“சோ பைனலி நீங்க கேட்ட அங்கீகாரம் இப்போ பிசினெஸ் சர்க்கில்ல கிடைச்சுடுச்சு இல்ல?” என்றாள் அமைதியாய்.
“ஆமாம்” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“சோ உங்க டீல் இதோட முடிஞ்சிடுச்சு இல்லையா? நல்ல குடும்பத்து பெண்ணா பரம்பரை பரம்பரையா பிசினெஸ் செய்துட்டு இருக்கிற பெண்ணை கல்யாணம் பண்ணா உங்க மதிப்பு இன்னும் உயரும். அதை விட உங்க பிசினெஸ் இன்னும் பெருகும். எங்க கம்பெனில டையப் வச்சுக்க முயற்சி செய்து அது கிடைக்காம போனதுல வெகுண்டு போய் எங்க சேர்ஷை வாங்கிப்போட்டு நீங்களும் வேல் க்ரூப்ஸ்ல ஒன்னாப் பாட்ர்னர்னு இந்த உலகத்துக்கு காட்டணும். இதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிட்டிங்க?” என்று கேட்டாள் அடிபட்ட மனதுடன்.
ராசசிங்கன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “யா அப்கோர்ஸ்” என்றான் திமிராக.
“நீங்க கேட்ட எல்லாத்தையும் குடுத்துட்டேன்...” என்றாள் விரக்தியாக.
“சோ” என்று அவளை அவன் ஆழமாக பார்த்தான்.
“சோ நாம இதோட பிரிஞ்சுடுறது நல்லது” என்றாள் நெஞ்சை கவ்விய வேதனையுடன்.
“யாருக்கு” என்றான் கூர் விழிகள் இடுங்கியது அவள் மீது.
“என் பிள்ளைக்கு” என்றாள் அழுத்தமாய். அப்பொழுது தான் தன் கையில் வைத்திருந்த பொருளை பார்வை இட்டான். அது கற்பத்தை உறுதி பண்ணும் பேட். அதில் இரண்டு சிவப்பு கோடு இருக்க புரிந்துப் போனது அவனுக்கு.
தன் மனைவியின் மணி வயிற்றில் அவனது முத்து சிந்தாமல் சிதறாமல் உருக்கொண்டு இருக்கிறது என்று.
பெருமூச்சு விட்டவன் அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
“ஏன் என்கிட்டே இருந்தா உன் பிள்ளைக்கு ஆகாதா?” என்று கேட்டான்.
விரக்தியுடன் சிரித்தவள்,
“என் கழுத்துல தாலி கட்டுனது இந்த ஷேர்ஸ் க்காக தானே. அது தான் குடுத்துட்டனே... பிள்ளைக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... வேல் க்ரூப்ஸ் மருமகன் என்கிற கெளரவமும் உங்களுக்கு கிடைச்சிடுச்சு. அதை தாண்டி உங்களுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லன்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமாக மொழிந்தவளை இன்னும் கண்கள் இடுங்கப் பார்த்தான்.
அவனது பார்வையை எதிர்க் கொள்ளாமல்,
“இனிமே நான் உங்களுக்கு தேவை இல்லன்னு நினைக்கிறேன். ஏன்னா என்னால ஆகக்கூடிய காரியம் எல்லாம் நிறைவேத்தியாச்சு... இனி இது வெறும் பொம்மை தான். என்னால வேற எந்த தேவையையும் நிறைவேற்ற முடியாது இல்லையா” என்று சொன்னவள்,
“கிளம்புறேன்” என்றாள் அவனிடம்.
ராசசிங்கன் அசையவேயில்லை. அசையாத பார்வை அவளை பார்த்தான். அவனது பார்வையை கண்டு கொள்ளாமல்,
“விருந்து சாப்பிட்ட பிறகு எச்சி இலைக்கு என்ன மதிப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ என்னை விலக்கி வைக்கிற வேலை கூட உங்களுக்கு நான் வைக்கல” என்றவள்,
“இனி என்னால வேற ஒரு லைப் லீட் பண்ண முடியுமான்னு தெரியல” என்றவளுக்கு குரல் கரகரத்தது. அதை செருமி சரி செய்துக் கொண்டவள்,
“கல்யாணம் ஆனா நாள்ள இருந்து உங்ககிட்ட எனக்கு ஒன்னே ஒன்னு கிடைக்கணும்னு ரொம்ப ஆசை பட்டேன்” என்றவளுக்கு கண்ணீர் வந்து விடும் போல இருந்தது. அதை அடக்கிக் கொண்டு,
“ஆனா இதுவரை எனக்கு கிடைக்கல” என்றாள்.
“நீங்க எப்படி உங்க பிசினெஸ்க்காக சில அதிகாரிங்களுக்கு லஞ்சமா பெண்களை ஏற்பாடு செய்து குடுப்பீங்களோ அது மாதிரி எனக்கும் ஒரே ஒரு செயலை செய்துக் கொடுக்கணும்” என்றாள் தவிப்புடன்.
அப்பொழுதும் ராசசிங்கன் அசையவே இல்லையே... இரும்பு மனிதனாய் அப்படியே நிமிர்ந்து நின்றான்.
அவனது அசையாத நிலையை கண்டு, “இல்ல உங்களுக்காக என் சேர்ஷ் எல்லாம் கொடுத்து இருக்கேன் இல்லையா?” என்று தடுமாறினாள். ராசசிங்கனின் பார்வை இன்னும் கூர்மையானது.
“அந்த சேர்ஷ்க்கு பதிலா ஒரே ஒரு ...” என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது. அதை எச்சில் கூட்டி விழுங்கியவள்,
“நெத்தி முத்தம் குடுக்க முடியுமா?” என்று கேட்டு விட்டாள். அதை கேட்பதற்கு பெரும் அவமானமாய் இருந்தது ஏந்திழையாளுக்கு.
ஆனால் அவளால் அதை கேட்காமல் அவனை விட்டு நீங்க முடியாது. அவளின் அழகான நினைவுகளில் இந்த முத்தம் தான் முதன்மையானதாக இருக்கும் என்று எண்ணியே கேட்டாள்.
ஒவ்வொரு கூடலிலும் இறுதியாக அவன் நெற்றி முத்தம் இடுவான் என்று ஏங்கி ஏங்கி இதோ இப்பொழுது வரை அவனிடம் இருந்து அவளுக்கு அந்த முத்தம் கிடைக்கவே இல்லை.
அதனாலே வாய் விட்டு கேட்டு விட்டாள். கேட்ட பிறகு அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவனது முகத்தில் எந்த பாவமும் இல்லை. நான் சொன்னது அவன் காதில் விழுந்ததா இல்லையா என்று தடுமாறினாள்.
“ஏங்க” என்று அவனை அவள் கலைக்க,
“சோ ஒரு நெத்தி முத்தம் தான் இந்த சேர்ஷ்க்கான ஈக்குவல் வேல்யூ இல்லையா?” என்று வாயை திறந்தான் ராசசிங்கன்.
அவள் பதில் எதுவும் பேசவில்லை.
“என்னோட ஒரு கிஸ் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியாம போயிடுச்சே... தெரிஞ்சு இருந்து இருந்தா எத்தனையோ கிஸ் குடுத்து இந்த உலகத்துலயே நான் நம்பர் ஒன் பணக்காரனா ஆகி இருப்பன்...” என்று அவன் நக்கல் பண்ண,
சுக்கு நூறாய் உடைந்து சிதறிப் போனாள் ஏந்திழையாள்.
“என்னடி பார்க்கிற... நான் என்ன அவ்வளவு காஸ்ட்லி பிகரா என்ன?” என்று கேட்டவன்,
“யூஸ் பண்ணது நீ தானே. அப்போ உனக்கு தானே என்னோட வேல்யூ என்னன்னு தெரியும். சரி சொல்லு” என்றவனை அடிபட்ட வேதனையுடன் பார்த்தவள்,
“ச்சை உங்க குணம் தெரிஞ்சும் உங்கக்கிட்ட போய் வந்து கேட்டேன் பாரு என்னை சொல்லணும். இனி உங்க முகத்துலையே முழிக்க மாட்டேன்... குட்பாய்” என்று விறுவிறுவென்று வெளியே போய் விட்டாள் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு.
இனி அவ்வளவு தான்... எல்லாமும் முடிந்து போய் விட்டது என்று மனம் விண்டுப் போனது பெண்ணவளுக்கு.





