Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அதை நான் பார்த்துக்குறேன் நீ சாப்பிட வா. ரொம்ப பசிக்கிது..” என்று அவளை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

பனிக்கு இவனின் அடாவடியில் கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. அக்காவை கோவப்படுத்திட்டு எப்படி தன் இவருக்கு சாப்பிட மனசு வருதோ எண்ணிக் கொண்டே அவனோடு நடந்தாள்.

ரேவதி போன வேகத்திலே கீழே வந்ததும், யாரையும் பார்க்காமல் அறைக்குள் போய் அடைந்துக் கொண்டதையும் பார்த்த அனவைருக்கும் உள்ளங்கை புண்ணாய் தெரிந்துப் போனது. கதிரவன் அவரின் பேச்சை கேட்கவில்லை என்று.

அதனால் அவன் பனியோடு கீழே வரும் பொழுது பெரியவர்களின் முகம் சுருங்கிப் போனது. குறிப்பாக கலா, மங்கை, சிங்காரம், மற்றும் ரேவதியின் கணவன் சேகரன்.

கதிரவன் யாரையும் சட்டை செய்யாமல்,

“ம்மா” என்றான்.

“வந்துட்டேன் தம்பி.. ரெண்டு பேரும் உட்காருங்க” என்று அவர் இருவருக்கும் தட்டு வைக்க, சிங்காரத்துக்கு ஏகத்துக்கும் கடுப்பு வந்தது.

“மாப்பிள்ளை” என்று அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தார்.

“ரொம்ப பசியில இருக்கேன் மாமா.. இப்ப எது பேசுனாலும் காதுல விழாது.. இன்னைக்கு ரொம்ப வேலை” என்று விட்டான் எடுத்த எடுப்பிலே.

அவன் அப்படி சொல்லவும் அவரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

“சரி சாப்பிட்டுட்டு பேசலாம்” என்று எழுந்துக் கொண்டார்.

அதை கண்டு கொள்ளாமல் “ம்மா ரெண்டு ஆம்ப்லேட்” என்றான்.

“போட சொல்லி சொல்லிட்டேன் ப்பா” என்றவர் அவர்களுக்கு பரிமாற,

“நீங்க இருங்க ம்மா.. நாங்க போட்டுக்குறோம்” என்றவன் பனிக்கு அவனே பரிமாற, சற்று தள்ளி இருந்து இதை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு காதில் புகை வராத குறை தான்.

இதுநாள் வரை கதிரவனின் முன் முடி கூட தேவையில்லாமல் யாருக்கும் அசையாது. அப்படி இருந்தவன் இப்பொழுது இப்படி மாறி இருப்பதை கண்டு ஆச்சரியத்தை விட, இந்த மாற்றத்துக்கு காரணமான பெண் மீது வஞ்சத்தை வளர்த்துக் கொண்டார்கள்.

என்னவோ அவர்கள் வீட்டு பையனை அவளின் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டதை போல அவர்கள்  எண்ணினார்கள். அதிலும் மங்கையும் சிங்காரமும் தான் இப்படி எண்ணினார்கள்.

மற்றவர்களோ கதிரவன் ஏன் இந்த பெண்ணிடம் இவ்வளவு உரிமையாக தன்மையாக நடந்துக் கொள்கிறான் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே. மத்தபடி மகாவுக்கு இவனை கட்டி வைக்க எல்லாம் விருப்பம் இல்லை.

கலாவுக்கோ எப்படியோ இந்த சம்மந்தம் நாம எதுவும் செய்யாமலே கலைந்து விடும் போலையே.. என்று எண்ணிக் கொண்டார். அவரின் கவலை அவருக்கு..

மங்கையின் சொத்து மீது கலாவுக்கு எப்பொழுதும் ஒரு கண். எனவே மகாவை தன் மகனுக்கு கட்டி வைத்துவிட வேண்டும் என்று ஆசை.

ஆனால் கதிரவன் முன்னாடி இருக்கவும் அவரால் நினைத்த படி எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டடது. இப்பொழுது ஒரு வாய்ப்பு கனிந்து இருக்கிறது.. அதை பயன்படுத்திக் கொள்ள அவரின் மனம் உந்தி தள்ளியது.

ஆனால் அவசரப் படக்கூடாது என்று மெதுவாக காய் நகர்த்த எண்ணினார்.

“ம்மா” என்றான் கதிரவன்.

“தம்பி” என்று அவனின் முகத்தை பார்த்தார் காமாட்சி.

“ரெண்டு டம்ளர் பால்ம்மா”

“காய்ச்சு வச்சுட்டேன் தம்பி. போகும் பொழுது எடுத்துட்டு போயிடுங்க” என்றார். எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக இருந்த தாயை கண்டு சிரித்தவன்,

“காலையில டோஸ் அதிகமா குடுத்துட்டனா?” கேட்டான்.

“என் தப்பும் இருக்குள்ள தம்பி. நம்ம வீட்டுக்கு வந்த பெண்ணை நாம தானே கவனிச்சுக்கணும்” என்றவரை பார்த்தான். அவனின் மிக மெல்லிய புன்னகையே அவருக்கு போதுமானதாய் இருக்க,

“வேற எதுவும் வேணுமா தம்பி?” என்று கேட்டார்.

“போதும் ம்மா.. அப்பா தாத்தா சாப்பிட்டங்களா?”

“இல்ல தம்பி இனி தான்” என்றார்.

“ம்ம்ம்” என்றவன்,

“நாளைக்கு கல்யாண பத்திரிக்கை அடிக்க குடுக்கணும்.. பெயர் மற்ற விவரங்கள் எல்லாம் எழுதி சாமி ரூம்ல வச்சு இருக்கேன். காலையில விளக்கேத்தி சாமி கும்பிடுங்க.. அப்புறம் நான் எடுத்துட்டு போறேன்” என்றான்.

“சரிப்பா” என்றார்.

“அப்புறம் புது நகை எதோ எடுக்கனும்னு சொன்னீங்களே”

“ஆமாப்பா”

“யார் யார் தம்பி?” அதையும் நீயே சொல்லிடு என்று அவர் குரல் இருக்க, மகனுக்கு இவ்வளவு பதுவுசாக பதில் சொல்லும் தன் அம்மாச்சியை வியந்துப் பார்த்தாள் பனி.

அவளின் பார்வையை கண்டு கண் சிமிட்டிய காமாட்சி மகனை பவ்வியமாக பார்த்தார்.

“அட கேடி அம்மாச்சி” மனதுக்குள் எண்ணி சிரித்துக் கொண்டே உணவை உண்டாள்.

“நீங்க, துளசி, ரேவதியை லஞ்ச் டைம்ல வர சொல்லிடுங்க. இல்லன்னா பெர்மிஷன் போட்டுக்கட்டும் ஹாப் டே..” என்றவன்,

“இவளையும் கூட்டிட்டு வாங்க. அப்படியே இவளுக்கு கொஞ்சம் புடவையும் எடுத்து குடுங்க.. எப்போ பாரு சுடியே போட்டுட்டு இருக்கா.. துளசி கிட்ட சொல்லி அவ தைக்கிற இடத்துலயே இவளுக்கும் ஸ்டிச் பண்ண குடுத்துடுங்க” என்றான் வெகு இயல்பாய்.

ஹாங் என்று பனி அதிர்ந்துப் போனாள்.

“திசிஸ் டூ மச்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு.

“ஐ நோ மை லிமிட்ஸ். உன் சைஸ சொன்னா தான் என் லிமிட் தாண்டுனதா அர்த்தம். இது அப்படி ஒன்னும் இல்லையே.. ஜஸ்ட் டைலரை சஜஸ்ட் பண்ணேன்” என்றவனது பேச்சில் வாயடைத்துப் போய் விட்டாள் பனி.

“அத்தை, சித்தி எல்லாம்” என்று காமாட்சி இழுக்க,

“இப்போதைக்கு அவங்க வேணாம்.. காரணம் எதுவும் கேட்டா இவளுக்கு ட்ரெஸ் எடுக்க போறோம்னு சொல்லிடுங்க.. அவங்களே வர மாட்டாங்க..” என்றான்.

அவனது ப்ளானில் வாயை பிளந்தாள்.

“அக்கா” என்று காமாட்சி தயக்கமாக இழுக்க, “சாப்பிட்டு போய் பேசுறேன் ம்மா” என்று முடித்துக் கொண்டான். அதன் பிறகு பனியையும் சாப்பிட வைத்து அவளை மேலே போக சொல்லி விட்டு அதன் பிறகே ரேவதி இருக்கும் அறைக்குள் சென்றான்.

அங்கு அவர் கலங்கிய கண்களுடன் இருட்டை வெறித்துக் கொண்டு இருக்க, அவருக்கு அருகில் அமர்ந்தவன் அவரின் தோளை பற்றி அசைத்து,

“அவளை அக்சப்ட் பண்ண பழகிக்கோ அக்கா..” என்றான்.

“அப்போ நீ என்னை சமாதனம் செய்ய வரல இல்லையா?”

“நான் தவறா எதுவும் நடந்துக்கலையே..” என்றவனை பார்த்த ரேவதிக்கு இவன் என்னைக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறான் இன்னைக்கு கேட்க என்று எண்ணிக் கொண்டவர்,

“அவ அவ்வளவு முக்கியமானவளா டா” ஆதங்கமாய் கேட்டவரை பார்த்து சிரித்தவன்,

“நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அது மாதிரி அவளும் எனக்கு முக்கியமானவ” என்றான்.

“அவளை காதலிக்கிறியா தம்பி”

“அப்படி எல்லாம் இல்ல க்கா.. ஆனா அவ எனக்கு முக்கியம்” என்றான் அழுத்தமாய்.

“ஓ...” என்றவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“ஆனா அவ நம்ம குடும்பம் இல்லையே..”

“இந்த வார்த்தைக்காக நீ என்னைக்காவது கண்டிப்பா வருத்தப்படுவ க்கா” என்றவன் வேறு எதுவும் சொல்லவில்லை.

“எனக்கு புரியலடா.. நான் ஏன் வருத்தப் படணும்” பாவமாய் கேட்டவரை கண்டு பெருமூச்சு விட்டவன்,

“உன் வெறுப்பை அவக்கிட்ட காட்டாத.. அவ வருத்தப் படுவதை விட நீ தான் அதிகமா வருத்தப்படுவ” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்,

“இப்போதைக்கு எதுவும் புரியவேண்டாம். ஆனா அவளை நோகடிக்காத.. அவளுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்லை” என்று சொன்னவனின் வார்த்தையில் இருந்த பரிதவிப்பை புரிந்துக் கொண்ட ரேவதிக்கு ஐயோ என்று வந்தது. யாருக்காகவும் அவனது தம்பி இப்படி பரிதவித்துப் போய் பார்த்தது இல்லையே..

Loading spinner

Quote
Topic starter Posted : April 23, 2026 9:11 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top