Notifications
Clear all

அத்தியாயம் 46

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஏன் மாமா நம்ம எல்லோரடா வாழ்கையும் இவ்வளவு சிக்கலாகி இருக்கு..” விழியோரம் கண்ணீர் கசிந்தது.

அதை தன் விரல் கொண்டு துடைத்து விட்டவன்,

“நடந்து முடிஞ்சா எதையும் மாத்த முடியாது.. எல்லாத்தையும் சரி செய்வேன்டி.. என்னை நம்பு” என்றான்.

“உங்களை நம்புனதுல தான் மாமா உங்க மடியில இப்படி அமர்ந்து இருக்கேன். இப்போ இந்த நிமிடம் தோணுது உங்களை யாருக்கும் விட்டுக் குடுத்துடவே கூடாதுன்னு.. என்ன மாயம் பண்ணீங்க.. உங்களை வேணான்னு நினைச்சேன். ஆனா இப்போ உங்களை மட்டுமே உயிரா நினைக்க வச்சுட்டீங்க” என்றாள் அவன் புறம் திரும்பி அவனின் விழிகளை பார்த்து.

“அந்த வகையில நான் அதிர்ஷ்ட்டசாலி தான் போல.. நான் விரும்புற பெண் என்னை விரும்புறாளே..” என்றவன், அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்து,

“ஒரு வருச ரெண்டு வருச தேடல் இல்லடி என்னோடது.. உன்னை தொலைச்ச நாளில் இருந்து உன்னை தேடிய தேடல் அது. அந்த தேடலின் வீரியம் உனக்குள்ள பாதிப்பை குடுக்கலன்னா இந்த பிரபஞ்சமே பொய்யா போயிடாதா கண்ணம்மா? இந்த பிரபஞ்சம் நாம எதை தேடுறமோ அதை கொண்டு வந்து நம்மக்கிட்ட சேர்க்கும் இல்லையா?” எதிர் கேள்வி கேட்டவனை வியந்துப் பார்த்தவள்,

“இந்த பிரபஞ்சம் உண்மை தான் போல மாமா.. இல்லன்னா உங்களை என் மனம் முழுக்க நிறைச்சு வச்சு இருப்பனா? உங்க தேடலுக்கான பதில் நான் மட்டும் தான்னு இப்போ நல்லா புரியுது” என்றவள்,

“இப்போ உங்ககிட்ட முத்தம் வாங்கிக்கணும்னு தோணுது.. என் உயிரே உருகி போற மாதிரி ஒரு முத்தம் குடுப்பீங்களா?” கேட்டவளின் கண்களில் கதிரவனுக்கான காதல் அப்பட்டமாய் முகத்தில் தென்பட்டது.

அதை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்தவன் அடுத்த நிமிடம் கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் இதழ்களை மிக மிக மென்மையாக கவ்விக் கொண்டவன், அவளின் உயிரை நெகிழ்த்தி தனக்குள் மிக மிக ஆழமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டான்.

அவனது முத்தத்தில் உயிர் கரைந்துப் போனாள் பெண்ணவள்.

அப்படி இப்படி என்று துளசி கோபால் இருவரின் கல்யாண நாள் அழகாக விடிந்தது. குடும்ப உறுப்பினர்கள், ஒன்னு விட்ட சொந்தம் ரெண்டு விட்ட சொந்தம், தூரத்து சொந்தம், அறிந்தவர், தெரிந்தவர், நட்பு, வியாபர வட்டம், தொழிளார்கள் என அனைவருக்கும் அழைப்பு குடுத்து இருந்தார்கள்.  

அந்த திருமணத்தில் அதிக கவனத்தை ஈர்த்தது என்னவோ பனி தான். அங்கும் இங்கும் வேலை என்று அலைந்தாள்.

கதிரவன் கூட சொல்லி பார்த்து விட்டான்.

“இது நம்ம வீட்டு கல்யாணம். முறைக்கு துளசி எனக்கு சித்தின்னாலும் அவங்க இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு நாத்தனார் முறை வரும்..” என்று அவள் சொல்ல,

“ரொம்ப அட்வான்சா தான்டி யோசிக்கிற” என்று மெலிதாக சிரித்தவன், அவளின் வியர்வையை தன் கர்சீப் வைத்து துடைத்து விட்டான்.

“குங்குமம் கலைஞ்சி இருக்குடி.. இரு வச்சு விடுறேன்” என்று ரிஷப்ஷனில் இருந்த குங்குமத்தை எடுத்து வைத்து விட போனவன், கல்யாண மண்டபத்தின் உள்ளேயே இருந்த பிள்ளையார் கோயில் தென் பட, அங்கு அவளை அழைத்துக் கொண்டு சென்றவன் அங்கு இருந்த குங்குமத்தை எடுத்து வைத்து விட்டான்.

இவளும் பவ்யமாக தலையை குனிந்து காட்டினாள். இதை எல்லாம் ஒரமாக பார்த்துக் கொண்டு இருந்த சிங்காரத்துக்கு பனியின் மீது கொலை வெறி எழுந்தது. இன்னும் திருமணத்துக்கு நேரம் ஆகவில்லை. இப்பொழுது தான் வீட்டு பெண்கள் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அதனால் இந்த காட்சி வேற யார் கண்ணுக்கும் தென்படவில்லை.

“புடவை மாத்தலையாடி?” கேட்டான்.

“கொஞ்சம் வேலை இருக்கு.. அதை மட்டும் முடிச்சுட்டு வந்திடுறேன்னு சொன்னேன் உங்க அக்காக்கிட்ட.. அதுக்குள்ள நீங்க கேட்டுட்டீங்க” சலித்துக் கொண்டவள்,

“முகூர்த்த நேரம் இன்னும் இருக்கு தானே” என்றாள்.

“அதுக்காக கடைசி நேரம் தான் கிளம்புவியா? முறைத்தவன் அவளை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றவன்,

“இந்த வேலை எல்லாம் மத்தவங்க பார்த்துக்குவாங்க.. நீ முதல்ல கிளம்பி வா” என்று அவளை அறைக்குள் விட்டவன், வெளியே வந்து விட்டான்.

அடுத்த கொஞ்ச நேரத்திலே ரேவதியின் கண்கள் ஏகத்துக்கும் அழுது சிவந்துப் போய் இருந்தது. அவரால் தன் அழுகையை கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியவில்லை. உதடுகள் நடுங்க உயிர் குழைந்து போக அப்படி ஒரு அழுகை அவருக்கு. அவரை தேற்ற வேண்டிய சேரனோ மின்சாரம் தாக்கியது போல உணர்வின்றி ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கதிரவன் பனியை புடவை கட்ட சொல்லி சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க சென்றான். அறைக்குள் உள்ளே வந்த பனிக்கு பியூட்டி பார்லர் ஆட்கள் மேக்கப் சேலை என்று கட்டி விட வர,

“இல்ல அதெல்லாம் அதுவும் வேண்டாம்.. நான் பார்த்துக்குறேன்” என்று அவள் சொல்ல,

“இல்ல மேடம் கதிரவன் சார் தான் உங்களை தயார் பண்ண சொல்லி சொன்னாங்க.. நீங்க வேணா கதிரவன் சார் கிட்ட கேட்டுக்கோங்க..” அவர்கள் சொல்ல, வேகமாக கதிரவனுக்கு போனை போட்டாள்.

“நான் தான் சொன்னேன். உனக்கு மட்டும் இல்ல நம்ம குடும்பத்து ஆட்கள் எல்லோருக்குமே சொல்லி இருக்கேன்.. அதனால மறுப்பு சொல்லாம கிளம்பு” என்றான் அவன்.

“ம்ம்” என்று முணகியவள் வேறு வழி இல்லாது தேமே என்று இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

தலை முதல் கால் வரை அவளை முழுமையாக அலங்கரிக்க ஆரம்பித்தார்கள் பார்லர் பெண்கள்.

எல்லாம் முடித்து “மேம் கண்ணாடியில பாருங்க” என்று சொல்ல, நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தாள். ஏற்கனவே அவள் அழகு தான். ஆனாலும் இந்த பார்லர் பியூட்டியில் அவள் இன்னும் பேரழகாக தெரிந்தாள்.

அந்த நேரம் கதிரவன் உள்ளே வந்தான். பெண்கள் வெளியே போய் விட, அவளுக்கு பின்னாடி வந்து நின்றவன் இருவரின் பொருத்தத்தையும் விழி அசைக்காது பார்த்தான்.

அவனது உருவத்துக்கும் கம்பீரத்துக்கும் மிக பொருத்தமாக இருந்தாள் பனி. அதுவும் கொஞ்சம் பெரிய பெண்ணாக தெரிய கதிரவனுக்காகவே அளவு எடுத்து செய்த பெண் போல இருந்தாள் பனி.

அவன் கட்டி இருந்த பட்டு வேட்டி சட்டைக்கு பொருத்தமாய் இருந்தது அவளின் பட்டுப் புடவை. அதோடு கூடவே அவள் அணிந்து இருந்த நகைகள் எல்லாம் அவளை ஒரு ராணியாகவே காட்டியது.

எல்லாவற்றையும் விட அவளுக்கு அவன் வாங்கி குடுத்து இருந்த வைர மூக்குத்தி அவ்வளவு எடுப்பாக இருந்தது அவளின் முகத்துக்கு. கண்களுக்கு இட்டு இருந்த காஜல் இன்னும் அவளின் அழகை ஒரு படி தூக்கி காட்டியது.

இருவரின் உருவ பொருத்தத்தையும் விழிகளால் அவளிடம் அவன் சுட்டி காட்ட, பெண்ணவளின் முகத்தில் மேக்கப்பை மீறி சிவந்துப் போனது.

அவளின் முக சிவப்பை கண்டவன், “வாவ்” என்றான் உல்லாசமாய். அதில் அவளுக்கு இன்னும் முகம் சிவக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை நெருங்கி இடையோடு அணைத்து நின்றவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதிக்க வந்தான்.

ஆனால் மேக்கப் கலைந்து போய் விடும் என்று எண்ணி தன்னை பெரிதாக முயன்று அடக்கிக் கொண்டு,

“கொல்றடி.. ஒரு முத்தம் கூட குடுக்க விடாம பண்ற” அவளையே குறை கூறினான். அதில் அவனை முறைத்துப் பார்த்தவள்,

“நானா இந்த மேக்கப் எல்லாம் கேட்டேன்.. நீங்களே ஏற்பாடு செஞ்சுட்டு இப்ப என்னை குறை சொல்றீங்களா?” என்றவள்,

“மேக்கப் கலைஞ்சா நான் டச்சப் பண்ணிக்கிறேன். அதுக்காக எல்லாம் முத்தம் குடுக்காம இருக்க வேண்டாம்” என்றாள் அவன் மீதான காதலுடன்.

“நல்ல முன்னேற்றம் தான்டி” என்றவனுக்கு மனதுக்குள் மழை சாரல் தான். பின்ன பனியிடம் இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதே.. அது போதாதா கதிரவனுக்கு.

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 3:53 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top