Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

“பரவாயில்ல எனக்கு போரடிக்கல.. நான் கேட்கிறேன்” என்றாள்.

அவளின் இந்த பதிலில் அவளை திரும்பி ஒரு கணம் பார்த்தவன், பின் மீண்டும் தனக்கு எதிர் புறம் இருந்த வெற்று வெளியை பார்த்தான்.

“இது நம்ம வழி வழியா வர்ற பிசினெஸ்” என்றவன் மேலும் பேச, நிலா கவனமுடன் கேட்டுக் கொண்டாள்.

“அடுத்து ஒரு ஐடியா இருக்கு” என்றான்.

“என்ன?” என்று கேட்டாள். அவளிடம் கொஞ்சம் ஆர்வமும் தென்பட்டது.

“கேரவன்” என்றான்.

“சினிமா ஷூட்டிங்க்கா” என்றாள்.

“இல்ல இப்ப பெர்சனல் யூஸ்க்கே கேரவன் வந்துடுச்சு. அதை செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு” என்றான்.

“ஓ..” என்றவள், “தாராளமா பண்ணுங்க” என்றாள்.

“ம்ம் கொஞ்சம் டைம் ஆகும்.. பட் சீக்கிரம் பண்ணனும்” என்றான்.

அவன் பாட்டுக்க பேசிக் கொண்டே இருக்க,

“நேரா என்கிட்டே வந்த மாதிரி இருக்கு.. ஒரு காபியாவது குடிக்கலாமே” என்றாள்.

தன்னை அவள் கவனிக்கிறாள் என்று புரிந்தவனின் இதழ்களில் சின்ன புன்னகை வந்தது.

“இருக்கட்டும் நைட் டிபன் பண்ணிட்டு அப்புறம் குடிச்சுக்கலாம்” என்றவன் மீண்டும் பேச்சில் அவளை இழுக்க, இவளும் சின்ன சின்ன தயக்கங்களுடன் பேச ஆரம்பித்தாள்.

அப்படியே மேலும் ஒரு அரைமணி நேரம் சென்றது. அதற்குள் கீழ் இருந்த மங்கை தன் மகளை மேலே அனுப்ப,

“அவ மட்டும் வேணாம் நானும் போறேன்” என்று ரேவதி மேலே வந்தார்.

“ரேவதி அய்யா கிட்ட பார்த்து பேசு.. அவன் மனம் நோகும் படி பேசிடாத ஆத்தா” என்றார் விசாலம்.

“அவனுக்கு இப்படி கொடி பிடிச்சு கொடி பிடிச்சு தான் இப்ப  இந்த ஆட்டம் ஆடுறான். வீட்டுக்கு ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து இருக்கானே. இப்ப வரை யாராவது அவனை ஒரு கேள்வி கேட்டீங்களா? பின்ன அவன் ஆடாம என்ன செய்வான். கேட்குற என்னையும் அடக்கி வைங்க.. விளங்கிடுவான்” என்று எல்லோரையும் ஒரு போடு போட,

“அப்படி கேளு ரேவதி.. இதே விசயத்தை நான் கேட்டதுக்கு காலையில மாமியாரும் மருமகளும் என்னை அந்த பேச்சு பேசினாங்க” மங்கை சொல்ல, ஆயாசமாக வந்தது மாமியார் மருமகள் இருவருக்கும்.

“நீ அவசரப் படாத ரேவதி” என்று மனைவியை அடக்கினார் சேகரன்.

“நீங்க சும்மா இருங்க.. காலையிலேயே கேட்டு இருப்பேன். தூங்குறான்னு சொல்லி என்னை அவனை பார்க்கவே விடாம வேலைக்கு போக சொல்லிட்டாங்க.. இதோ இப்ப வெளில போயிட்டு வந்தவன், நீங்களும் மாமாவும் இருக்கீங்க.. ஒரு தலையசைப்புடன் மேலே போயிட்டான். இவன் மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கான்..” என்ற ரேவதியை,

“நீ நல்லா கேளும்மா. இப்படியே விட்டா எப்படி.. ஊருக்கு பெரிய வீடுன்னு சொன்னா மட்டும் போதுமா? அதுக்கேத்த மாதிரியான நடத்தை வேண்டாமா? இன்னைக்கு வெளில போனா பாக்குறவன் எல்லாம் இதே கேள்வியை தான் என்னை பார்த்து கேட்கிறேன்.. என்ன உன் மருமகன் வேற யாரோ ஒரு பெண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கானாமே.. நீ தான் மருமகன் மருமகன்னு சொல்லிட்டு இருக்க.. ஆனா அவன் உனக்கு டாட்டா காட்டிடுவான் போல.. எதுக்கும் கவனமா இரு.. இல்லன்னா கழுத்துல ஈர துண்டை போட்டு இருக்கிட்டு போயிடுவானுங்கன்னு கண்டவனும் எனக்கு அறிவுரை சொல்லிட்டு இருக்காணுங்க” என்று மங்கையின் கணவன் சிங்காரம் வேறு பொரிந்து தள்ளினார்.

“மாமனார் கிட்ட கேட்டா, பொறுமையா இருங்கன்னு சொல்றாரு.. மச்சான் கிட்ட கேட்டா நான் கேட்டு சொல்றேன். நீங்க அவன் கிட்ட எதுவும் கேட்டுடாதீங்கன்னு என்னை தான் அடக்கிக்கிட்டு இருக்காங்க..” என்று சொன்னவரை என்ன சொல்லி சமாதனம் செய்யன்னு தெரியாமல் வீட்டு பெண்கள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தார்கள்.

“ப்பா அது தான் தாத்தாவும் மாமாவும் சொல்றாங்க தானே.. கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன்” அவரின் மகன் வினு சொல்ல,  

“என்னத்தடா பொறுமையா இருக்க சொல்ற.. இது மகளோட வாழ்க்கை உனக்கு விளையாட்டா இருக்கா” என்று சலங்கை இல்லாமல் அவர் ஆட, வினு வாயை மூடிக் கொண்டான்.

“டூர் முடிஞ்சு அப்படியே என் வீட்டுக்கு போய் இருக்கணும். இங்க வந்தேன் பாரு என்னை சொல்லணும்” எனு நொந்துக் கொண்டவன்,

“ஒரு வார்த்தை சொல்லி இருந்து இருக்கலாமே” என்று தங்கையான மகாவை முறைத்தான்.

“நீ கூட சொல்லல துளசி” என்று அவளையும் முறைத்தான்.

“அட நீ வேறடா.. காலையில இருந்து இங்க நடக்குற நாடகத்தை பார்க்கவே எனக்கு சரியா இருந்தது. இவ தப்பிச்சு காலேஜ் போயிட்டா.. நான் தான் மாட்டுனேன். அதுவும் உன் சின்ன அத்தை கலா ஊருக்கு போயிட்டு மத்தியத்துக்கு மேல வந்து ஒரு ஆர்பாட்டம் செஞ்சாச்சு.. உன் அம்மாவும் உன் சின்ன அத்தையும் சேர்ந்து எவ்வளவு பேச்சுங்குற.. பாவம் பாட்டியும் என் அம்மாவும்” என்றாள்.

“ம்கும்.. வாயில்லா பூச்சிக்கிட்ட தானே இவங்க வீரத்தை காண்பீப்பாங்க. இதே இது உன் அண்ணன் கிட்ட காட்ட சொல்லு.. வாய் கம்மு போட்டு ஓட்டுன மாதிரி ஒட்டிக்கும்” என்றான் கடுப்பாக.

“அதை சொல்லு” என்றவளிடம்,

“உன் ஹப்பிக்கு விசயம் தெரியுமா?” என்று விசாரித்தான்.

“ம்ம்.. அப்பாவும் தாத்தாவும் முறையா சொல்லி இருப்பாங்க போல.. அவங்க வீட்டுல கொஞ்சம் சடைவு போல” என்றாள்.

“ஓ” என்றான்

“அதிகம் பேசலடா.. ஆனா அவருக்கு இந்த விசயம் பெருசா தோணலன்னு சொன்னாரு..”

“ஆனா அக்கா உன் ஹப்பி கொஞ்சம் நல்லவர் தான் போலையே” என்றாள் மகா.

சிங்காரம் தன் கோவத்தை எல்லாம் வீட்டு பெண்களிடம் காட்டிக் கொண்டு இருக்க, கலாவுக்கும் மங்கைக்கும் குளுகுளுவென்று இருந்தது.

அதுவும் தன் பெரிய அண்ணி காலையில் இருந்து இதோ மாலை சிற்றுண்டி வரை அந்த பெண்ணை கவனித்த கவனிப்பில் அவ்வளவு கோவம் வந்தது. அதுவும் கதிரவன் அந்த பெண் தான் மனைவி என்று முடிவெடுத்துவிட்டால் அவள் தான் தன் மருமகள் என்று சொல்லியதில் அவ்வளவு கோவமும், ஆத்திரமும் அவரை பிடித்து ஆட்டியது.

அதற்கு தன் கணவன் ஆடி தீர்க்க உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி. “நல்லா வேணும்” என்று எண்ணியவர் தன் கணவனை கொஞ்சமும் தடுக்க நினைக்கவில்லை.

“நீங்க கோவப் படாதீங்க மாமா. நான் தம்பிக்கிட்ட நிதானமா பேசிட்டு வரேன். நீங்க வந்தா டென்ஷன் ஆகிடுவீங்க. மகாவும் இங்கயே இருக்கட்டும்” என்று சொன்ன ரேவதி தான் மட்டும் மாடிக்குச் சென்றார்.

அறையில் கதிரவன் இல்லாமல் போக, மொட்டை மாடியில் தான் இருப்பான் என்று யூகித்து மேலே வந்தார்.

மேலே அந்த புது பொண்ணோடு பேசிக் கொண்டு இருந்த தம்பியை பார்த்து அவ்வளவு கோவம் வந்தது. வீட்டில் எல்லோரும் கூடி இருக்கும் பொழுது அவர்களுடன் உரையாடாமல் சின்ன ஒரு தலையசைப்புடன் மேலே வந்து இங்கே இந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார்.

“கதிரவா” சத்தமாக அழைத்தார்.

சத்தம் கேட்டு இருவரும் திரும்ப அங்கே ரேவதி நிற்பதை பார்த்து பட்டென்று பனி எழுந்து நின்றாள். ஆனால் கதிரவன் அசையவே இல்லை.

Loading spinner

Quote
Topic starter Posted : April 23, 2026 9:07 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top