Notifications
Clear all

அத்தியாயம் 41

 
Admin
(@ramya-devi)
Member Admin

துளசி கோபால் இருவரின் திருமணமும் வெகு விமர்சையாக ஆடம்பரமாக நடக்க ஆரம்பித்தது. இடையில் குல தெய்வம் கோயிலுக்கு சென்று படையலிட்டு முதல் பத்திரிகை சாமிக்கு வைத்து வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

அதற்கு எல்லோருமே கிளம்பி சென்றார்கள். பெரிய சொகுசு பேருந்தை கொடுத்தவன், தான் மட்டும் காரில் வந்து விட்டான். கூடவே பனி மற்றும் மாதவனை உடன் வைத்துக் கொண்டான்.

“நான் அதுலையே போறனே..” என்றவளின் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ளாமல் காரில் இழுத்து போட்டுக்கொண்டு முன்னாடி கிளம்பி விட்டான்.

“அடம் அடம்” என்று முணகியவள்,

“நீங்களாச்சும் சொல்லுங்க ண்ணா” மாதவனிடம் பனி சொல்ல,

“என் பேச்சை துரை அப்படியே கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்.. அட போ தங்கச்சி.. நான் வரவே இல்லன்னு சொல்றேன். என்னை தூக்கி கார்ல போட்டுட்டு வர்றான்.. இதுல உனக்கு எப்படி நான் பரிஞ்சு பேச..” என்றான் அவன் அதற்கு மேல்.

“அது சரி.. யார் பேச்சையும் கேட்கிறது இல்லையா?” கதிரவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அவன் தான் வண்டியை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனுக்கு அருகில் முன் பக்கமாக பனி அமர்ந்து இருக்க, பின் பக்கம் நடுவில் மாதவன் அமர்ந்து இருந்தான்.

மூன்றே பேர் மட்டும் தான் அந்த காரில்.

“ரொம்ப தூராம் போகனுமா?” கேட்டாள்.

“ஏன் தூரம் அதிகம்னா இடையிலையே இறங்கிக்கலாம்னு பார்த்தியா?” கதிரவன் வாயை திறந்தான்.

“ஆமா அப்படியே விட்டுடுவீங்க பாருங்க..” முறைத்தவள் தலையை திருப்பிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“தெரியுதுல்ல அப்புறம் என்ன?”

“சாமி உங்கக்கிட்ட போய் பேசுனேன் பாருங்க.. என்னை சொல்லணும். இனி வாயை திறந்தனா பாருங்க” என்றவள் அமைதியாகி விட,

“பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்..” என்கிற பாடல் காரில் திடுமென்று ஒலிக்க, திகைத்து போய் அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையை எதிர்க் கொண்டவன், ஒற்றை புருவத்தை ஏற்றி என்ன என்று கேட்டான் விழிகளாலே..

“ம்ஹும்..” அவசரமாய் தலையை ஆட்டியவள் மீண்டும் வெளி பக்கமாக திரும்பிக் கொண்டாள்.

“நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..” அடுத்த பாடல் மாற்றி விட்டான் சடுதியில். அதில் இன்னும் திகைத்துப் போனவள் அவனை திரும்பி பார்த்தாள்.

அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது அவள் பெயர் கொண்ட பாடல்கலாகப் போட்டு வம்பிழுக்க தொடங்கி விட்டான் என்று.

ஒரு பக்கம் முறைத்தாலும் இன்னொரு பக்கம் முகம் அப்பட்டமாய் சிவந்துப் போனது அவளுக்கு.

“எவ்வளவு சேட்டை பண்றாரு இவரு.. வெளில மட்டும் உர்ருன்னு சிங்கம் மாதிரி இருக்காரு. ஆனா என் கிட்ட மட்டும் இவரு நடந்துக்குற விதமே வேற மாதிரி இருக்கு.. அய்யய்யோ ரொம்ப பிடிச்சும் போலயே இவரை” தனக்குள் புலம்பிக் கொண்டாள்.

“கல்யாண தேன் நிலா... காய்ச்சாத பால் நிலா” அடுத்த பாடலை ஒலிக்க விட, மாதவன் மண்டை காய்ந்தான்.

“அடேய் உருப்படியா ஏதாவது ஒரு பாட்டை ஓட விடு மச்சான்.. எல்லா பாட்டுலையும் ஒரொரு வரி போட்டு படுத்தாதடா” நொந்துப் போனான் மாதவன்.

“நீ காதுல பஞ்சை வச்சு, குறட்டை விட்டு தூங்க ஆரம்பி. நீ விடுற குறட்டை சத்தம் எனக்கு கேட்கணும்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“ஏதே தூங்குறதா?” பாவமாய் கதிரவனை பார்த்தான்.

“ம்ம்.. தூங்கியே ஆகணும்” என்றான் கொஞ்சமும் இரக்கமில்லாமல்.

“சாரி மச்சான்.. இனி வாயே திறக்க மாட்டேன். நீ என்ன பாட்டு வேணாலும் போடு.. எத்தனை பாட்டு வேணாலும் மாத்து.. நான் ஏன்னு கேட்டான்னா உன் காலுல இருக்குற செருப்பை கொண்டு என்னை அடி..” என்றவனுக்கு காரில் தூங்கும் பழக்கமே இல்லை. அப்படியே தூங்கினாலும் சிறிது நேரத்திலே எழுந்து விடுவான். எழுந்த உடனே குடம் குடமாய் வாந்தி எடுத்து விடுவான். எனவே எவ்வளவு தூக்கம் வந்தாலும் காரில் மட்டும் தூங்கவே மாட்டான் மாதவன்.

ஆனால் அவனை போய் தூங்க சொன்னால் பாவம் அவனும் என்ன தான் செய்வான்.

குரங்கு பொம்மை போல இரு கையாளும் வாயை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டான்.

“அது.. யாருக்கிட்ட” என்ற கதிரவன் மேலும் பாடல்களை மாற்றி மாற்றி ஒலிக்க விட்டுக் கொண்டே வர, பனிக்கு அவனது அடாத செயலில் பொறுமை போய் விட்டது.

“ஐயோ தலை வலிக்கிறது.. கொஞ்சம் அதை நிறுத்துங்க..” என்றாள்.

அதன் பிறகே உருப்படியாய் முழு பாடலையும் பாட விட்டான். அதுவும் பனி இல்லை என்றால் மலர் என்று வரும் பாடல்கள் தான் ஒலித்தது.

அதில் ஒரு பக்கம் சிரிப்பு தான் வந்தது பனிநிலவுக்கு.

சில பல கலாட்டக்களோடு கோயிலுக்கு வந்து சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, என எல்லாம் செய்து கும்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

இந்த முறை மாதவன் அடித்து பிடித்துக் கொண்டு முதல் ஆளாக சொகுசு பேருந்தில் ஏறிக் கொண்டான். “ஆள விடுங்கடா சாமி. என் குடும்பத்துக்கு நான் ஒரே வாரிசு.. கொஞ்ச நேரத்துல கொலை பண்ண பார்த்துட்டானே இந்த பச்சை மண்ணை” புலம்பிக் கொண்டே ஏற, அவனின் பின்னோடு ஏறிய சேகரன்,

“என்னாடா.. பேயறைஞ்ச மாதிரி இருக்கு முகம்..” நக்கலாக கேட்டார். அவருக்கு தெரியுமே கதிரவன் அவனை ஓட ஓட விரட்டி இருப்பான் என்று.

“மனுசனாய்யா உங்க மச்சான்.. கொஞ்ச நேரத்துல ஒரு குழந்தை பிள்ளையை கொலை பண்ணி போட்டு இருப்பான். ஈவு இரக்கம் இருக்கா அவனுக்கு” கொந்தளித்தான்.

“என்ன சொன்ன.. ஒழுங்கா கேட்கல.. இன்னொரு முறை சொல்லு” என்றவர் நைசாக தன் மச்சானுக்கு வீடியோ கால் போட்டு சட்டை பையில் வைத்துக் கொண்டார்.

“லவ் பண்ணுங்க வேணான்னு சொல்லல.. ஆனா அதுக்காக அடுத்தவங்க உயிரை எடுக்குறது எந்த விதத்துல நியாயம்.. மாமா உங்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ் தரேன்.. இதுக்காக நீங்க காசு எல்லாம் குடுக்கணும் எந்த அவசியமும் இல்ல..” என்றவன்,

“காதலிக்கிற ஆளுங்க கூட மட்டும் பிரெண்டா இருந்துடாதீங்க மாமா.. உங்க உயிருக்கு உத்திரவாதமே இருக்காது.. உங்களை கொலை நாசம் செய்துட்டு அவனுங்க ஜா...லியா...” என்ற நேரமே கதிரவன் பேருந்தில் உள்ளே வந்தான்.

மாதவனின் வாய் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது.

“என்ன மச்சான்.. என்னவோ சொல்லிட்டு இருந்தியே ப்ரீ அட்வைஸ்.. எனக்கும் கொஞ்சம் சொல்லு.. நானும் கேட்கிறேன்” என்று வந்து நின்றவனை கண்டு உண்மையாகவே பேய் அறைந்தது போல நின்றான் மாதவன்.

இருவரின் சம்பாஷனையையும் பார்த்து சேகரன் வாய் விட்டு சிரித்தார்.

“கேடி பயலே..” என்று மாதவனை ஒரு தட்டு தட்டியவர், கதிரவனை பார்த்தார். அவரின் பார்வையில் இருந்த கேள்வியை கண்டு லேசாக சிரித்தவன்,

“கன்பார்ம் பண்ணிட்டேன் மாமா.. அவ தான் எனக்குன்னு” என்றான்.

“நல்ல சாய்ஸ் மச்சான்... பொண்ணு வீட்டுல பேசட்டுமா?” என்றார் அவர்.

“ம்க்கும் பொண்ணு வீடே உங்க வீடு தான். இதுல பொண்ணு வீட்டுல போய் பேசுறாராக்கும்..” முணகினான் மாதவன். அவன் காலிலே ஓங்கி ஒரு மிதியை போட்டான் கதிரவன்.

“வாயே திறக்கல மச்சான்” என்று பம்மி விட்டான்.

“அதை அப்புறம் பார்த்துக்கலாம் மாமா.. முதல்ல துளசி கல்யாணம் நல்லபடியா முடியட்டும். பிறகு பொறுமையா ஆரம்பிக்கலாம்” என்று சொன்னவன், மீதம் இருந்தவர்களையும் பேருந்தில் ஏற்றி கிளப்பியவன் தன்னோடு பனியை மட்டும் வைத்துக் கொண்டான்.

அதிலே பலருக்கு காதில் புகை வந்தது. ஆனால் அவனை எதிர்த்து யார் கேள்வி கேட்டபது. மாதவனையும் பேக் பண்ணி பேருந்திலே அனுப்பி வைத்து விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : June 6, 2026 11:22 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top