“சரி சரி கிளம்பு.. நான் வெளில வெயிட் பண்றேன்” என்று வெளியே போனவன், பார்லர் ஆட்களை அனுப்பி விடவும் மறக்கவில்லை.
அவர்கள் உள்ளே வந்து பெண்ணவளை பார்க்க, நமட்டு சிரிப்பு எழுந்தது. அவர்களுக்கு தெரியாதா என்ன நடந்து இருக்கும் என்று.
“மானத்தை வாங்குறாரு” முணகிக் கொண்டவள் அவர்களுக்கு மீண்டும் ஒத்துழைப்பு குடுத்தாள்.
எல்லா வேலையும் முடிய, அதே நேரம் ரேவதி உள்ளே வந்தார்.
“பனி கிளம்பிட்டியாடா?” கேட்க,
“இதோ கிளம்பிட்டேன் மேடம்...” என்று அவள் சொல்லிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே போல புடவை, ஒரே மாதிரி நகை. ஏன் மேக்கப் கூட ஒரே மாதிரி தான்.
“வாவ்.. ரொம்ப இளமையா இருக்கீங்க நீங்க.. செம்ம பிரிட்டி” பனி ரேவதியை பாராட்ட, ரேவதி அதிர்ந்த மனதுடன் பனியை பார்த்து நின்றார். அந்த நேரம் காமாட்சி உள்ளே வந்தார்.
அவரும் அதே போல ஒரே டிசைன் புடவை, ஒரே நகை செட் என இவர்களை போலவே அவருக்கும் ஒரே வடிவில் இருக்க காமாட்சியும் அதிர்ந்துப் போனார். அதுவும் அவருடைய அறிவுக்கு புலனான விசயம் கண்டு மூச்செடுக்க முடியவில்லை அவரால்.
--
காமாட்சியின் புலமைக்கு எட்டிய விசயத்தில் மூச்சு முட்டிப்போனது. ஏற்கனவே அவருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதுவும் அன்று நகை கடைக்கு சென்ற பொழுது கொஞ்சம் புலன் ஆனது தான், இருந்தாலும் அடுத்தடுத்து நடந்த செயல்களில் அதை முழுதும் மறந்துப் போய் விட்டார்.
ஆனால் இன்றைக்கு இப்படி வெட்ட வெளிச்சமாகியது போல அவரின் புலமைக்கு விசயம் புரிபட சிலையாகிப் போனார். தன் விழிகளை பனியின் மீது இருந்து அவரால் மீட்டுக் கொள்ளவே முடியவில்லை. “சரி தானா நான் பார்ப்பது உணர்வது எல்லாம் சரி தானா?” என்று கேள்வி அவருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவருக்கே அந்த நிலை என்றால் ரேவதியின் நிலை சொல்லவும் வேண்டுமா?
ரேவதியின் விழிகள் முழுக்க முழுக்க எதிரில் இருந்த பனியிடம் மட்டுமே நிலைத்து இருந்தது. அவரால் அவளின் மீது இருந்து பார்வையை எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.
அவரின் புத்தி சொல்லும் விடையத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மூச்சுக்காற்று போகும் வழியை எதோ பெரிய மலை வந்து அடைத்துக் கொண்டது போல அவ்வளவு திணறிப் போனார்.
விழிகளில் மெல்லிய நீரோட்டம். அவரின் மொத்த தேகமும் நடுங்கத் தொடங்கி விட்டது..
“மேடம்.. நீங்க அழகா இருக்கீங்கன்னு தானே சொன்னேன். அதுக்கு என்ன எந்த ரியாக்ஷன்னும் குடுக்காம இருக்கீங்க..” என்றவள், அவரின் முகத்துக்கு நேராக கையை ஆட்டி,
“ஹலோ” என்றாள். ம்ஹும் ரேவதியிடம் எந்த அசைவும் இல்லை. அவரின் அசையாத பார்வை தான் பனிக்கு கிடைத்தது.
“என்ன இது இப்படி நிக்கிறாங்க” என்று முணகி, காமாட்சியை பார்க்க, காமாட்சி அதை விட மோசமாக சிலையாக அல்லவா நின்றுக் கொண்டு இருக்கிறார்..
“என்ன ஆச்சு இவங்க ரெண்டு பேருக்கும்.. இப்படி என்னவோ போல நிக்கிறாங்க” என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே எதிரில் இருந்த நீளமான கண்ணாடியை பார்த்தாள். அந்த கண்ணாடியில் அவர்களின் மூன்று பேரின் பிம்பமும் விழுந்து இருந்தது.
அதை பார்த்தவளுக்கு மின்சாரம் தாக்கிய உணர்வு.. உடலெல்லாம் பயத்தில் ஆட்டம் காண ஆரம்பித்தது. நொடியில் மூளை உணர்த்திய செய்தியில் நெஞ்சு கூடு காலியாகிப் போனது. பற்று கோலாய் பற்றிக் கொள்ள அவளுக்கு அருகில் எதுவும் இல்லாமல் போக தள்ளாடினாள்.
தன் மீது மொத்த பார்வையையும் வைத்து இருந்த ரேவதியின் விழிகளை சந்திக்கவே அவளால் முடியவில்லை.. ஆனாலும் அவரை நிமிர்ந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மெல்ல விழிகளை உயர்த்தி அவரின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள் பனி. அவளிடமும் மெல்லிய நடுக்கம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர வாய் வார்த்தையாக ஒருவராலும் பேசிக் கொள்ளவே முடியவில்லை.
பேசவே மறந்துப் போனது போல ரேவதியும் பனியும் பார்த்து நின்றார்கள். காமட்சியோ இருவரையும் சேர்த்து பேச்சு மூச்சு இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதிர்ந்த கோலம் தான்.. மெலிதாக இருந்த கண்ணீர் இப்பொழுது அவரின் கண்களை முழுமையாக மறைத்து விட்டது. மூச்சுகளை கூட எடுக்க மறந்துப் போனவராய் நின்ற ரேவதியை பார்த்த காமாட்சிக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
தன் மகளின் ஒட்டு மொத்த உயிர் தேடல் அல்லவா இன்று அவளின் கண் முன் வந்து நிற்கிறது.. எந்த நாளுக்காக தன் மகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்து இருந்தாரோ அந்த நாள் இந்த நாளாக ஆனதில் காமாட்சிக்கு உணர்வுகளின் ஆதிக்கம் அதிகமானது.
ஆதரவற்ற பிள்ளை துணைக்கு தாயை தேடும் தேடலோடு “ம்மா” என்ற மகளின் உயிர் துடிப்பை கேட்ட காமாட்சிக்கு லேசாக உயிர் வந்தது. ஒரு கையை ஆதரவுக்கு தாயிடம் நீட்டிய ரேவதி, மறு கையை தன் மகள் புறம் நீட்டினார்.
அவரின் கையை பற்ற வரும் முன்பே பனியை பார்த்துக் கொண்டே மயக்கம் போட்டு விழுந்து விட்டார் ரேவதி. அதித அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வெளியே அவ்வளவு கம்பீரமாக தன்னை காட்டிக் கொள்ளும் ரேவதி உள்ளுக்குள் மிகவும் பூஞ்சை மனது கொண்டவர்.
அதை யாரும் அறியாமல் பார்த்துக் கொண்டார் இத்தனை நாளும். ஏன் பனிக்கு கூட தெரியாது. தன் அம்மா கம்பீரமான பெண் மணி என்று தான் எண்ணி இருந்தாள். ஆனால் அந்த கம்பீரத்துக்குள்ளும் ஒரு பூ மனது இருப்பதை இந்த நொடி தான் உணர்ந்தாள்.
அவரை தாங்கி பிடிக்க வேண்டும் என்கிற ஸ்மரணை கூட இரு பெண்களுக்கும் வரவில்லை. தன்னிடம் கையை நீட்டிய தாயின் கையை பிடிக்க வருவதற்குள் அவர் மயக்கம் போட்டு விழ, விழிகளை சிமிட்டி சிமிட்டி இயல்புக்கு வர முயன்று தோற்று இவளும் ரேவதியுடன் கீழே விழ இருந்தாள்.
இவளுக்கும் தன் தாய் தன்னை அடையாளம் கண்டு கொண்டார் என்று புரிந்துப் போனது. புரிந்துப் போன அடுத்த நிமிடம் ரேவதியின் விழிகளில் தெரிந்த மெல்லிய நீர் படலம் இருக்க இருக்க வலுவாகி அவரின் விழிகளை மொத்தமாக நிரப்பி வழிந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.
ஆனாலும் அவளால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தத்து உணர்வு குவியல்.
தன்னிடம் கையை நீட்டிய தாயின் கையை பற்ற இருந்த நேரம் அவர் வெட்டிய வாழைமரம் போல சரிய பார்த்தாளே தவிர ஓடி வந்து தாங்கிக் கொள்ள சுரணை வரவில்லை.
இறுதியாக அவர் தரையை தொடும் நேரத்தில் அவளுக்கு பிரம்மை விலகி,
“அய்யோ அம்மா” என்று அலறினாள் சத்தமில்லாமல். அவளுக்கு கத்தி சொல்லவே முடியவில்லை. வெறும் காற்று தான் வந்தது. அதே நேரம் காமாட்சியும் சுதாரித்து, “ஐயோ ரேவதி” என்று அலறி விட்டார்.
“ஆன்டி இவங்களை பிடிங்க...” காமாட்சியிடம் பனி சொல்ல, மகள் கீழே விழுவதை கூட பொருட்படுத்தாமல் பனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் காமாட்சி. அவர் அப்படி அறைவார் என்று எதிர் பாராத பனி அடி வாங்கிய கன்னத்தை பற்றிக் கொண்டாள் அதிர்வுடன்.
அதுவரை அமைதியாக வெளியே நின்ற கதிரவன், தாய் தன்னவளை அடிக்கவும் வேகமாய் உள்ளே வந்து தன்னருகில் பெண்ணவளை இழுத்துக் கொண்டவன்,
“ம்மா” என்று கர்ஜித்தான். தன் நெஞ்சில் பாதுகாப்பாக அவளை அணைத்துக் கொண்டான். அவனை தாண்டி யாராலும் அவளை காயப்படுத்தவே முடியாத அரணாய் இருந்தான் கதிரவன்.
அவனது கர்ஜனையில் திகைத்துப் போனாலும் அடுத்த நொடி அவரின் கண்களில் இருந்து இன்னும் கண்ணீர் அதிகமாக வந்தது.





