பாதியிலே எழுந்து விட்டார். அதை ஒரு பார்வை பார்த்தானே தவிர கதிரவன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. காமாட்சிக்கு தான் தவிப்பாக இருந்தது. இருந்தாலும் கதிரவனின் முடிவை யாரால் மாற்றி அமைக்க முடியும்.
“உனக்கு நான்வெஜ் ரொம்ப பிடிக்குமே.. சொல்லவாடி” அவளுக்கு மட்டும் கேட்பது போல பேசினான்.
“ம்ஹும்.. சித்திக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு யாராவது நான்வெஜ் சாப்பிடுவாங்களா?” முறைத்தாள்.
“பார்ரா ரொம்ப தான்” என்றவன்,
“அவளுக்கே வாங்கி குடுத்து இருக்கேன் யாருக்கும் தெரியாமா?”
“ஹாங்” என்று அவள் மெலிதாய் அதிர்ந்தாள்.
“ம்ம்” என்று தலையை அசைத்து விட்டு உணவை அள்ளி உண்டான்.
“இதெல்லாம் போர்ஜரி.. பாட்டிட்ட சொல்லவா?” மிரட்டினாள்.
“பயப்பட மாட்டேன்டி” என்றான் கண்ணை சிமிட்டி.
“அதானே.. உங்களை பார்த்து தான் எல்லோரும் பயப்படுறாங்களே பிறகு உங்களுக்கு கொம்பு முளைக்க தான் செய்யும்”
“விட்டா பைசனாவே மாத்திடுவ போலடி” என்றான் நக்கலாக.
“ச்சச்ச.. அந்த அளவுக்கு எல்லாம் இறங்க மாட்டேன்” சிரிப்புடன் சொன்னவள்,
“இருந்தாலும் கொம்பு வச்ச டேஷ்...” என்றாள்.
“இதுக்கு நீ நேரடியா பைசனே சொல்லிடலாம்” என்று முறைத்தவன்,
“சிக்கன் சொல்லவாடி”
“வேணாம் மாமா” மறுத்து விட்டாள்.
“சரி ஓகே” என்று விட்டு விட்டான்.
அனைவரும் சாப்பிட்டுக்கொண்டே இவர்கள் இருவரையும் தான் விடாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். உணவு உள்ளே இறங்கியதோ இல்லையோ இவர்களை பற்றிய கருத்துக்கள் உள்ளே படு தீவிரமாக இறங்கியது.
அதுவும் மங்கையும் கலாவும் விழிகளாலே இவர்களை சுட்டி காட்டி பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் கேலி செய்து பேசுவதை கண்ட காமாட்சிக்கு இன்னும் வேதனையாகிப் போனது.
ஆனால் யாரையும் கதிரவன் யாரையும் சட்டை செய்யாமல் பனியோடு பேசிக் கொண்டே உண்டான்.
“மாமா எனக்கு சிக்கன் வேணும். கேட்டா அம்மா வாங்கி தர மாட்டிகீறாங்க. நீங்க வாங்கி குடுங்க” சித்து தாய் மாமனின் தோளை சுரண்டினான்.
“ஏனாம்..?” என்று ரேவதியை முறைத்து விட்டு, சிக்கென் ஆடர் செய்து சித்துவை சாப்பிட விட்டான்.
விசாலம், “இதெல்லாம் இப்ப வேணாமே ராசா.. தேதி வச்ச பிறகு கறி சாப்பிடக் கூடாதுல்ல” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி.. பொண்ணு தான் சாப்பிடக் கூடாது. இவன்லாம் கணக்கு இல்ல” என்றவன் சித்துக்கு பிடித்ததை வாங்கி குடுத்தான்.
“யாருக்கும் அடங்குறது இல்ல..” சிங்காரம் முணுமுணுத்து விட்டு வெளியே போய் விட்டார்.
அவரின் பேச்சை அங்கு யாருமே சட்டை செய்யவில்லை. அதன் பிறகு மீண்டும் பயணம் ஆனது..
திருமண நாள் வெகு விரைவில் வந்து சேர்ந்தது. துளசிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இந்த வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு பிரிந்து போகணுமே என்று பெரும் கலக்கம் சூழ்ந்தது.
மகா ஒரு புறம் அவளை தேற்றினாலும் பனியும் ஒரு புறம் தேற்றினாள். இருந்தாலும் துளசிக்கு அடி நெஞ்சில் ஒரு வித பயம் இருந்தது.
ரேவதிக்கு தங்கையின் வேதனை புரிந்தது. அவரும் இந்த சூழ்நிலையை கடந்து வந்தவர் தானே. அதனால் பெரும்பாலும் தங்கையுடனே அதிக நேரம் செலவிட்டார் பணி நேரம் போக. அதன் பிறகு திருமணம் நெருங்க நெருங்க ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.
அன்றைக்கு காலையில் முகூர்த்த கால் ஊன்றினார்கள். அதை தொடர்ந்து தாய்மாமா சோறு ஆக்கிப் போட காமாட்சியின் கூடப்பிறந்தவர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தோடு வந்து இருந்தார்கள்.
“ம்ம் மகளுக்கு கல்யாணம் கூடி வந்துடுச்சு.. அடுத்து உன் மகனுக்கு தானே.. பொண்ணெல்லாம் பார்த்தாச்சா காமு” என்று காமாட்சியின் அண்ணி பேச்சை ஆரம்பிக்க, மங்கைக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“வந்துட்டாளுங்க பெருசா பேச.. ஏன் இவளுக்கு தெரியாதா என் மகளை தான் கதிரவனுக்கு பேசி வச்சு இருக்கோம்னு..” பொருமினார்.
“விடுங்க அண்ணி பையன்னு இருந்தா நாலு பேர் பேச தான் செய்வாங்க.. எப்படியும் கதிரவன் உங்க கையை விட்டு போக மாட்டான். நீங்க கவலை படாதீங்க” ஆறுதல் சொல்வது போல சொல்லி,
“இருந்தாலும் கதிரவனை நம்ப முடியாது.. சும்மாவே அவன் உங்களை மதிக்க மாட்டான். இப்ப நீங்க வலிக்கவே சென்று பொண்ணு குடுக்குறேன்னு சொல்றீங்க.. இன்னும் உங்க மதிப்பு அவன் கிட்ட கீழ இறங்கி தான் போகும். அதை தான் உங்க கண் கூடவே பார்க்குறீங்களே.. அத்தைன்னு ஒரு மதிப்பு குடுக்குறானா பாருங்க” வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டார் கலா.
கலா இப்படி பேசியதில் மங்கைக்கு இன்னும் கோவம் வந்தது. எரிகிற தீயில் இன்னும் நெய் வார்த்தது போல ஆனது மங்கையின் நிலை.
“நீ கொஞ்சம் சும்மா இரு” என்று கலாவை அடக்கி விட்டு, “ஏன் க்கா உங்களுக்கு தெரியாதா கதிரவனுக்கு என் மகளை தான் பேசி வச்சு இருக்கேன்னு.. இப்ப வந்து இப்படி கேட்குறீங்க?” வெடுவேடுத்தார் மங்கை.
“சும்மா பேச்சுக்கு கேட்டேன். உடனே சண்டை காரிக்கிட்ட பேசுற மாதிரி பேசுறியே மங்கை..” காமுவின் அண்ணி தலைந்துப் போனார்.
அவர் தலைந்துப் போகவும் மங்கை இன்னும் எகிறி பேச ஆரம்பிக்க, காமுவுக்கு அழாத குறை.
“பேச்சுன்னா நீங்க எது வேணாலும் பேசுவீங்களா? பேச்சுக்கு ஒரு வரைமுறை இல்லையா?”
“இப்ப நான் என்ன பேசிட்டேன்னு நீ இந்த குதி குதிக்கிற.. உன்னை விட எனக்கு தான் உரிமை அதிகம். நான் மட்டும் பொம்பளை பிள்ளை பெத்து இருந்தனா இந்நேரம் கதிரவனை என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன்.. என் நேரம் நான் பெத்தது ரெண்டும் ஆம்பளை பிள்ளையா போயிடுச்சு..” என்று அவர் சொல்ல,
மங்கை இன்னும் பேசினார்.
“ஓ.. பொம்பளை பிள்ளை பெத்தா உடனே வந்து என் அண்ணன் மகனை கட்டிடுவீங்களோ.. அப்போ நாங்க என்ன நாக்கை வழிச்கிக்கிட்டு போறதா?” வார்த்தையை அதிகம் விட்டார் மங்கை.
“மங்கை அவங்க என் அண்ணி” என்று காமு சத்தம் போட,
“உனக்கு தான் அண்ணி. எனக்கு இல்ல. அதனால வந்தமா விருந்து சாப்பிட்டமான்னு போக சொல்லு அண்ணி உன் அண்ணியை” என்று மங்கை மேலும் சொல்ல,
காமுவின் அண்ணிக்கு முகம் அவமானத்தில் சிவந்துப் போனது. கல்யாணத்துக்கு என்று வந்து இருந்தவரை இப்படி சாப்பாட்டுக்கு வந்தவர் போல பேச அவரால் தாங்க முடியவில்லை.
“மங்கை” காமாட்சி சத்தமாக அதட்டி விட்டார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. பிறகு ரேவதி தலையிட்டு அந்த பேச்சை அத்தோடு முடிச்சு ஏற்காட்டி விட்டார்.
ஆனாலும் காமாட்சியின் முகம் தெளியவே இல்லை.
“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?” அவரின் கையை பிடித்துக் கொண்டு கேட்ட மூத்த மகளை பார்த்தவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.





