“அதிரல்..” என்று அவளின் பெயரை யாரோ அழைக்க, திடுக்கிட்டுப் போனாள். அவளை பற்றி யாருக்குமே தெரியாதே இங்கே. அப்படி இருக்கும் பொழுது அவளின் பெயரை சொல்லி யாராவது அழைத்தால் திகைக்காமல் எப்படி இருக்க முடியும்.
யாரு என்று சுற்றிப் பார்க்க, அங்கே சிரித்த முகமாய் ஆளவந்தான் தீரனின் அப்பா நின்று இருந்தார். அவரை அங்கு கொஞ்சமும் எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள்.
“சார்” என்று அவள் எழப்பார்க்க,
“நீ உட்காரு ம்மா நான் வரேன்” என்றவர் அவள் அருகில் வந்து அமர்ந்தார்.
“எப்படிம்மா இருக்க.. ஊட்டில தானே இருந்த. இப்போ இங்க என்ன பண்ற?” வியந்தார்.
“அது வேலை இங்க மாத்திட்டாங்க சார். வந்து நாலு நாள் ஆகுது” என்றவளுக்குள் பெரும் சோதனை காலமாக இருந்தது. அவள் மடியில் இருந்த பிள்ளையை தன் மடிக்கு மாற்றிக் கொண்டவர்,
“டேய் கண்ணா எப்படி இருக்க.. என்னை ஞாபகம் வச்சு இருக்கியா? தாத்தாடா..” என்று அவர் அவனை தூக்கி கொஞ்ச இவளுக்கு பக்கென்று ஆனது.
‘இவன் உங்க பையனோட மகன்னு தெரியாம கொஞ்சுறீங்களே.. தெரிஞ்சா ஊரை விட்டு துரத்தி அடிக்க போறீங்க’ மனசுக்குள் பேசிக் கொண்டாள்.
“என்னம்மா அமைதியா இருக்க?” என்று அவளை இழுத்து வைத்துப் பேச,
“அது திடுதிப்பின்னு உங்களை இங்க பார்க்கவும் என்ன பேசுறதுன்னு தெரியல சார். அது தான்” என்று சொன்னவள்,
“இப்போ உங்களுக்கு உடம்பு எப்படி சார் இருக்கு.. மாஸ்டர் செக்கப் எடுத்துக்கிட்டீங்களா?” அக்கறையாக அவள் கேட்டாள்.
“ஊட்டில இருந்து வந்த உடனே அது தான் என்னோட முதல் வேலைன்னு சொல்லி என் மூத்த மகன் தீரன் இருக்கானே ஒரு ஆட்டம் ஆடிட்டான்..” என்றார் பெருமையாக.
“உங்க ஹெல்த் முக்கியம் இல்லையா சார்”
“அது தான் மா.. அதனால தான் அவன் ஆடின ஆட்டத்துக்கு நானும் ஆடினேன். ரொம்ப பாசக்காரன்.. குடும்பத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா தாங்க மாட்டான். வெளில தான் கரடு முரடா இருப்பான். ஆனா உள்ளுக்குள்ள தங்கம்” என்றார் அவர்.
“ம்கும் உங்க தங்கத்தை பத்தி எனக்கு தானே தெரியும்” வாய்க்குள் முணகியவள்,
“சரிங்க சார்.. நான் கிளம்புறேன்.. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க” என்று அவள் கிளம்ப பார்க்க,
“அட இரும்மா.. உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு தான் வந்தேன்” என்றவர்,
“ஆமா உன் தங்கச்சியும் கூட கூட்டிட்டு வந்து இருக்கியா? அவளை காணமே”
“இல்லா சார் அவளுக்கு ஊட்டில வேலை கிடைச்சு இருக்கு. அதனால நானும் பையனும் தான் வந்தோம்” என்றாள்.
“அப்படியா அப்போ இன்னைக்கு டின்னர் எங்க வீட்டுல தான். நான் உன்னை ஏற்கனவே கூப்பிட்டேன் தானே. அப்போ தான் வரல. இப்போ நீ கண்டிப்பா வந்தே ஆகனும்” என்றவர் வீட்டுக்கு போன் பண்ணி விருந்தை தடாபுடாலாக ஏற்பாடு செய்ய சொன்னவர், அதிரல் மறுக்க மறுக்க அவளை கையோடு கூட்டிக்கொண்டு போய் விட்டார் ஆளவந்தான்.
“இதென்னடா புது தலைவலி” என்று எண்ணியவளுக்கு அந்த மிகப்பெரிய மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்க அவ்வளவு தயக்கமாக இருந்தது.
தீரன் இங்கு தானே இருப்பான் என்கிற எண்ணமே அவளை வர விடாமல் தடுத்தது. ஆனால் ஆளவந்தான் விடாபிடியாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
ஆளவந்தானின் உடன் வந்த அதிரலை பார்த்த தேவகிக்கு பக்கென்று இருந்தது. அதுவும் அவளின் கையில் இருந்த பிள்ளையை கண்டு இவருக்கு உள்ளுக்குள் என்னவோ ஆனது.
அவரின் முகத்தை பார்க்கும் பொழுதே தங்களின் வருகை அவருக்கு பிடிக்கவில்லை என்று புரிந்துக் கொண்ட அதிரலுக்கு ஏன்டா வந்தோம் என்று தோன்றியது.
ஆனால் ஆளவந்தானின் பிடிவாதத்தில் அவளால் எதுவும் செய்ய முடியாமல் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
“இன்னும் என்னென்ன ல்லாம் பார்க்கணுமோ தெரியல” எண்ணியவள், தேவகியை பார்த்து “ஹை மேம்” என்றாள்.
“ம்ம்” என்று மட்டும் தலை அசைத்தவர், வேலையாட்கள் மூலம் குடிக்க எடுத்து வர செய்து கொடுத்தவர் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவளின் கையில் இருந்த பிள்ளை நழுவிக் கொண்டு ஓடப் பார்க்க,
“கண்ணா நோ” என்று அதட்டினாள்.
“ம்மா” என்று கெஞ்சலுடன் பார்த்தான் பிள்ளை.
“நோ நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும். நோ டா கண்ணா” என்று அவனை இழுத்துப் பிடித்தாள்.
“அட நீ என்னம்மா இவ்வளவு பெரிய இடம் இருக்கு பிள்ளை ஓடியாடி விளையாடட்டுமே. அவனை ஏன் பிடிச்சு வச்சு இருக்க..” என்ற ஆளவந்தான் அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கி ஓடியாடி விளையாட விட, அவனுக்கு ஒரே ஜாலியாக போய் விட்டது.
பரந்து விரிந்து இருந்த இடத்தில் அங்கும் இங்குமாய் ஓடியாடி விளையாடிவன் ஒரு இடத்தில் தேங்கி நின்று விட்டான்.
விளையாட்டு பிள்ளையின் கண்ணை பறிக்கும் வகையில் உயர்த்தரம் வாய்ந்த பிளவர் வாஷ் இருக்கக் கண்டு அதன் அருகில் ஓடினான். அவனது மோட்டிவ் புரிந்துக் கொண்ட அதிரல் அவன் எடுக்க போகும் முன்பே சுதாரித்து அவனை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள பார்க்க, அதற்கும் அம்மாவை ஏமாற்றி விட்டு எட்டி அந்த பிளவர் வாஷை எடுக்கிறேன் என்று எட்டி எடுத்து அதை பிடிக்க முடியாமல் கீழே போட்டு உடைத்து விட்டான். அதில் மிரண்டு முழித்து அவன் நிற்க,
--
அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த தேவகி பிள்ளையை பார்த்து திட்ட வர, எங்கே பிள்ளை பயந்து தன்னிடம் ஓடி வந்து விடுவானோ, அப்படி ஓடி வந்தால் பிள்ளையின் காலில் கண்ணாடி குத்தி விடுமோ என்று பயந்து “கண்ணா அங்கயே நில்லு. அம்மா வந்து தம்பியை தூக்கிக்கிறேன். நீ வர வேண்டாம்” என்று எச்சரித்துக் கொண்டே பாய்ந்து வந்து பிள்ளையை தூக்கிக் கொண்டாள். அதில் ஒரு கண்ணாடி சில் அவளின் காலை பதம் பார்த்தது.
“ஏம்மா இப்படி தான் கொஞ்சமும் பொறுப்பில்லாம பிள்ளையை விடுவியா? இந்த பிளவர் வாஷ் என்ன விலை தெரியுமா? உன்னால இதை திருப்பி தர முடியுமா? நான் அமெரிக்க போனப்ப வாங்கிட்டு வந்தேன். இதை போய் இப்படி போட்டு உடைச்சுட்டானே உன் மகன். என்னம்மா நீ பிள்ளையை வளர்க்கிற? சுட்டியா இருக்குறான்னு தெரியும் தானே. பிறகு கவனமா இருக்குறது இல்லையா? இப்படியா வந்த இடத்துல நடந்துக்குவீங்க” என்று தேவகி ஆத்திரத்தில் சீர, அதிரலுக்கு அவமானத்தில் முகம் சிவந்துப் போனது.
முகத்தை நிமிர முடியாமல் அவள் தத்தளிக்க,
“தேவகி என்ன பேச்சு பேசுற? அந்த பொண்ணு நம்ம கெஸ்ட்” என்றார் கோவமாக.
“அதுக்காக வந்த இடத்துல இப்படி தான் எல்லா பொருளையும் தூக்கிப் போட்டு உடைப்பாங்களா” என்ற தேவகியை முறைத்துப் பார்த்த ஆளவந்தான்,
“நீ..” என்று அவர் ஆரம்பிக்க,
“சாரி மேம்.. அவன் தெரியாம நடந்துக்கிட்டான்.. இந்த வாஸ்க்கு உரிய பணத்தை நான் செட்டில் பண்ணிடுறேன்..” என்றவளை ஏளனமாக பார்த்த தேவகி,
“இது எவ்வளவு டாலர்னு தெரியுமா?” நக்கலாக கேட்டார்.
தெரியாது என்பது போல அவள் தலையை ஆட்ட,
“உன் ஒரு வருட சம்பளம் இந்த வாஸ்..” என்றார் அத்தனை எகத்தாளமாக.
“எங்க இப்ப குடுக்குறேன்னு சொல்லு” என்று தேவகி அவளை மேலும் அவமானப்படுத்த, அதிரலுக்கு அத்தனை மன வேதனையாகிப் போனது.
“தேவகி நீ ரொம்ப ஓவரா போற? வந்த கெஸ்ட்டை இப்படி தான் அவமானப் படுத்துவியா?” ஆளவந்தான் சீறினார்.
“நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வரதுக்கு ஒரு தகுதி இருக்குன்னு தெரியாதாங்க.. உங்க இஷ்ட்டத்துக்கு யாரையாவது கூட்டிட்டு வந்து நடு வீட்டுல உட்கார வச்சா இப்படி தான் பேசுவேன். இதை விட அதிகமா பேசுவேன்” என்றவரின் பேச்சை கேட்ட அதிரலுக்கு பெரும் வேதனையாக இருந்தது.
“முதல்ல கிளம்ப சொல்லுங்க.. அவ நிக்கிற இடத்தை வாஷ் பண்ணனும்” என்று தேவகி சொல்ல, அவரை அறைய கை ஓங்கி இருந்தார் ஆளவந்தான்.




