Notifications
Clear all

அத்தியாயம் 42

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அவ ஏதாவது சொதப்பிட்டா என்ன பண்றது?” என்று ஒருவர் கேட்க,

“சொதப்பட்டும்னு தானே தனியா விட்டு இருக்கோம். பேக்கு மாதிரி அவ முழிக்கிறதை பார்த்து இரசிக்கலாம். நமக்கும் கொஞ்சம் என்டர்டேயிமென்டா இருக்கும்ல” சொல்லி தங்களுக்கு கிளுக்கி சிரித்துக் கொண்டார்கள்.

அப்பொழுது ஒரு கம்பெனி சார்பாக ஆட்கள் வர அவர்களுடன் பேச பெரும் தடுமாறிப் போனாள் அதிரல்.

அதுவும் அந்த எக்ஸ்போ முழுவதும் எல்லோருமே உயர்தரம் வாய்ந்த கோட் சூட் போட்டு மாடலாக இருக்க இவள் மட்டும் புடவையில் வந்து இருப்பதே அவளின் நம்பிக்கையை சற்று குலைத்து இருந்தது.

இதில் வந்தவர்களின் பார்வையும் அதையே சுட்டிக் காட்ட தன்னிரக்கமாய் போனது. எல்லாம் சிறிது நேரம் தான்.

ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் அவளுக்கு கைக் குடுக்க, மிகுந்த தெளிவான ஆங்கில உச்சரிப்பில் போர்டை காட்டி, அதற்கு தகுந்த பொருள்களை காட்டி, அது போதாது என்று அந்த பொருள்களை வைத்து கட்டுமானம் செய்து இருந்த பில்டிங்கையும் அது கட்டி எவ்வளவு நாள் ஆனது என்ற தகவலையும் அவள் வரிசையாக சொல்ல கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு முகத்தில் தெளிவு பிறந்தது.

தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அவர்கள் கேட்க, இவளும் ஓரளவு விளக்கம் சொல்லி அவர்களை சமாளித்தாள்.

அதே போல ஆடரும் பிடித்து விட்டாள்.

முன் பணமாக செக்கும் அவளது கையில் அவர்கள் குடுத்து விட்டு அக்ரிமென்ட் போட நாளை வருவதாக சொல்ல, அவள் மீதே அவளுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது.

அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவளுடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். எக்ஸ்போவில் இது வரை யாரும் செக் குடுத்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் முதல் முறையாக வந்த ஒரு பெண் செக் வாங்கி விட்டதை பார்த்து மலைத்து தான் போனார்கள்.

அவளின் திறமை கண்டு தாங்களாகவே அவளிடம் பேச இவளும் அவர்களோடு எந்த விகல்ப்பமும் பார்க்காமல் பேச ஆரம்பித்தாள்.

அன்று இரவு வீட்டுக்கு வர மணி பதினோரு மணிக்கு மேல ஆகி இருந்தது. குழந்தை என்ன பண்ணுவானோ என்று அடித்து பிடித்துக் கொண்டு வர, கேர்டேக்கர் வீட்டில் இருந்தார்.

“வாங்கம்மா.. பிள்ளையை தூங்க வைச்சுட்டேன்.. நான் கிளம்புறேன்” என்றார்.

“பிள்ளை எதுவும் சாப்பிட்டானா?” என்று தாயாய் தவித்துப் போய் அவள் கேட்க,

“இல்லம்மா தம்பி எதுவும் சாப்பிடல. உங்களை கேட்டு அழுதுட்டே இருந்தான்..” என்று அவர் சொல்ல, உள்ளம் துணுக்குற்றாள்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. குளித்து விட்டு வந்தவள் தானும் உண்ணாமல் பிள்ளையோடு படுத்து விட்டாள்.

அதிரல் வேலைக்கு போய் வரும் நேரம் அவனுக்கு தெரியும். எனவே அப்பொழுது இருந்து பிள்ளை அவளின் வருகையை தேட ஆரம்பித்து விடுவான். அதனாலே இவள் எங்கும் நிற்காமல் வீட்டுக்கு வந்து விடுவாள்.

ஆனால் இன்றைக்கு இங்கு வந்த முதல் நாளே இப்படி ஆகி இருந்ததில் நெஞ்சு கணத்துப் போனது. தங்களின் உணர்வை சொல்லி தீரனிடம் பேச முடியாது.

“சோம்பேறி வேலை செய்ய மாயுறன்னு கண்டபடி பேசுவார்” என்று எண்ணிக் கொண்டவளுக்கு விழியோரம் கசிந்தது.

இவரிடம் வேலை வேண்டாம் வேற கம்பெனிக்கு போகிறேன் என்றால் கண்டிப்பாக மகனை தன்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்.

கடவுளே என்று எண்ணிக் கொண்டவளுக்கு பிள்ளையை பிரிந்து இருந்த இந்த ஐந்து மணி நேரமும் நரகமாக இருந்தது. இது இன்னும் ஒரு வாரம் தொடரும் என்றால் பிள்ளை என்ன செய்வானோ என்று அவனை கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டவளுக்கு தூக்கம் வெகு தூரம் போனது.

விடியற்காலையில் தான் விழிப்பே தட்டியது. நேற்றைக்கே அவர்கள் சொல்லி விட்டார்கள். எக்ஸ்போ காலை பதினோரு மணிக்கு தான் தொடங்கும். அதனால தாமாக வந்தாலே போதும் என்று சொல்லி இருக்க காலையில் அதிக பரபப்பு இல்லாமல் எழுந்து கிளம்பினாள். குறிப்பாக பிள்ளையிடம் அதிக நேரம் கொஞ்சி மகிழ்ந்தாள்.

எழு மணிக்கே கேர்டேக்கர் வந்து விட்ட பொழுதும் அவரிடம் குடுக்காமல் பிள்ளையை தன் இடுப்பில் வைத்துக் கொண்டே அனைத்து வேலையையும் செய்தாள்.

ஷார்ப்பாக இங்கே கம்பெனிக்கு வந்த தீரன் பிள்ளை இன்னும் வராமல் போக கேர்டேக்கருக்கு போனை போட்டான்.

அவர் எடுத்து பேசி இங்க நடப்பதை சொல்ல ஏகத்துக்கும் கடுப்பான தீரன் அவளை தேடி வந்தான்.

இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு அவள்  தோசை வார்த்துக் கொண்டு இருந்தாள்.

“தம்பிக்கு முறுகல் தோசை வேணுமா?” என்று கேட்டு முறுகலாக ஊற்றி வைத்து இருந்த தோசையை உடைத்து அவனது வாயில் வைத்து அதன் நுனியை தன் வாயில் வைத்து கடித்த நேரம்,

கிச்சன் கதவு உடைபடும் சத்தம் கேட்டது. அதிர்ந்து திரும்பி பார்த்தாள். ருத்திர மூர்த்தியாக தீத்திரள் தீரன் நின்று இருந்தான்.

“இவரு எங்க இந்த நேரம்” திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.

“இன்னும் இங்க என்ன பண்ற? வேலைக்கு போகணும்னு எண்ணமே இல்லையா உனக்கு.. உனக்கு எல்லாம் ஒரு வேலை போட்டு குடுத்தேன் பாரு என்னை சொல்லணும்டி. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத ஆள் நீ. சரியான சோம்பேறி” என்று ஏக வசனத்தில் அவன் பேச சுல்லேன்று கோவம் வந்தது அவளுக்கு.

எவ்வளவு தான் பொறுத்துப் போவாள் அவளும். நேற்றிலிருந்து தன்னை எவ்வளவு அலைக்கழிக்கிறான் என்று கோவம் கொண்டவள்,

“போதும் சும்மா நிறுத்துங்க சார்.. உங்க கம்பெனிக்கு வேலைக்கு வந்தா இப்படி தான் மட்டு மரியாதை இல்லாம பேசுவீங்களா? என்னை டி போட்டு கூப்பிட நீங்க யாரு..? உங்க லிமிட்டை நீங்க ரொம்ப க்ராஸ் பண்ணிட்டு இருக்கீங்க. என்னோட வேலை இன்னைக்கு கம்பெனில இல்ல. எக்ஸ்போல தான். சோ பதினோரு மணிக்கு மேல வந்தா போதும்னு என்னோட வந்தவங்க சொன்னாங்க. அதனால தான் லேட்டா கிளம்புறேன். அதோட நீங்க என்ன சொன்னீங்க.. உங்க மகனை பார்க்க என்கிட்டே கேட்டீங்க. ஆனா இப்போ பார்த்தா என் மகனை என்கிட்டே இருந்து பிரிக்கிற எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நேத்துல இருந்து அவன் எதுவுமே சாப்பிடல. அழுதுட்டே இருக்கிறான். இது தான் நீங்க அவனை பார்த்துக்குற அழகா? கேர்டேக்கர் கிட்ட அவன் கொஞ்ச நேரம் தான் இருப்பான். மூணு மணி ஆகிட்டாலே அவன் என்னை தேட ஆரம்பிச்சிடுவான்.. அது தெரியுமா உங்களுக்கு. என்னவோ பெரிய இதுவா கேர்டேக்கரை ஏற்பாடு பண்ணா மட்டும் போதாது. பிள்ளைக்கு கூடவே நாம இருக்கணும். நாம கொஞ்சம் அவங்களோட இருந்து பழக விடணும். அதுக்கு பிறகு தான் அவன் பழகுவான்”

“அப்படி பழக விடாம செய்தா நேத்திக்கு நடந்த மாதிரி தான் அவன் சாப்பிடவும் மாட்டான், பழகவும் மாட்டான். அழுதுக்கிட்டே இருப்பான். இது எதுவும் தெரியாம என்னை வெளியே வேலைக்கு அனுப்பிட்டு நீங்களும் அவனை கவனிக்காம நாள் முழுக்க அழ விட்டு இருக்கீங்க. போதும் சார் என் பிள்ளையை நீங்க பார்த்துக்கிட்டே அழகு. எனக்கு உங்க வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம். வெளில வேலைக்கு போனா கூட ஆறு மணிக்கு எல்லாம் விட்டுடுவாங்க.. ஆனா இங்க...” என்று பொரிந்து தள்ளியவள்,

“இதுக்கு மேல உங்க கிட்ட என்னால வேலை பார்க்க முடியாது. நான் வெளில வேலை பார்த்துக்குறேன். ஆறு மணிக்கு மேல என் பையன் கூட நான் நேரம் ஸ்பென்ட் பண்ணி ஆகணும். அவனுக்கு என்னை தவிர வேற யாரையும் தெரியாது. அவனை தனியா தவிக்க விட்டுட்டு உங்கக்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உங்க பார்வையில நான் சோம்பேறியா எதுக்கும் லாயக்கு இல்லாதவளாவே இருந்துட்டு போறேன். எனக்கு அதனால எந்த பிரச்சனையும் இல்லை” என்று ஒரே மூச்சாக பேசி முடித்தவள் அங்கு ஒருவன் இல்லாதவனாக பாவித்து,

“கண்ணா நீ சாப்பிடு.. அம்மா இன்னைக்கு எங்கயும் போகல தம்பிக்கூடத்தான் இருக்க போறேன்” என்று சொன்னவுடன்,

“மையா?” என்று அவன் கண்கள் விரித்து தாயை பார்த்தான்.

“உண்மையாடா கண்ணா. எனக்கு உன்னை விட வேற எதுவும் பெருசு இல்ல.. நீ போதும் எனக்கு” என்றவள் அவனின் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சியவள், பிள்ளைக்கு அப்படியே நேக்காக ஊட்டி விடவும் ஆரம்பிக்க, இங்கே தீத்திரள் தீரனோ தீயின் தகிப்போடு அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.

--

Loading spinner

Quote
Topic starter Posted : October 29, 2026 10:53 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top