முன்பை விட இப்பொழுது அதிக நெருக்கமாகி இருந்தார்கள் ஆதியும் மயூவும். அந்த நெருக்கத்தை வேதனையுடன் பார்த்த சீதா அதிரடியாய் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணியவர் மயுவிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டார்.
அவளும் இரு நாட்கள் நேரம் கேட்டு இருக்க... அதற்குள் ஆதியின் நெருக்கம் மயுவிடம் இன்னும் அதிகமாக இருந்தது. அதனால் சீதா மயூவிடம் விரைந்து முடிவை சொல் என்று சொல்ல... அதற்கு தோதாய் மயூவை எங்கும் விடாமல் ஆதி அடைகாக்க.... ரஞ்சனியின் மூலம் பெறப்பட்ட செய்தியில் மயூ தன் சம்மதத்தை சீதாவிடம் சொல்லிவிட்டாள்.
அதை கேட்ட சீதாவுக்கு வருத்தம் என்றாலும் இதுவும் நல்லதுக்கே என்று எண்ணிக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.
மயூவை ரஞ்சனியியை பார்க்க அனுமதிக்காமல் போனிலே பேசிக்கொள் என்று ஆதி சொல்லிவிட... தனிமையை நாடி அவளுடன் பேசிய மயூவுக்கு நெஞ்செல்லாம் பாரமாகி போனது.
“ரஞ்சனி நீ என்ன சொல்ற...” திகைத்து தான் போனாள் மயூ.
“ஆமா மயூ எனக்கு ரொம்ப பயமா இருக்கு... இப்பவே வயிறு லேசா வெளிய தெரிய ஆரம்பிக்குது. இன்னும் மூணு மாசம் ஆச்சுன்னா எங்க அப்பா என்னோட ஜேம்சை கொன்னு புதைச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பாரு. அதற்குள்ள ஏதாவது ஏற்பாடு பண்ணு மயூ.. அவரோட சேர்த்து அவர் குழந்தையையும் வயிற்றோடே அழிச்சுடுவாரு...” என்று கதறினாள் ரஞ்சனி.
“ரஞ்சனி நீ எதுக்கும் பயப்படாத... ப்ளீஸ் அழாத.. உன்னோட குழந்தைக்கும் சரி உன்னோட காதலனுக்கும் சரி எதுவும் வர விட மாட்டேன்.. நீ கவலை படாம இரு...” என்று தேற்றியவள் கனத்து போன மனதுடன் போனை வைத்தாள்.
மயூவிற்கு என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை. சீதா வேறு திருமணத்தை இன்னும் மூன்று மாதங்கள் தள்ளி வைக்கணும் என்று சொல்லிவிட ரஞ்சனியை எப்படி காப்பாற்றுவது என்று குழப்பமாய் இருந்தது.
இதற்க்கு என்ன தான் தீர்வு... என்று அதை பற்றியே சிந்தனை வயப்பட்டு இருந்தாள் அடுத்த ஒரு வாரமும். அந்த இடைவெளியில் சீதா மயூவிற்கு ஒரு வரனை பார்த்து பேசி முடித்து இருந்தார்.
இது எதுவும் தெரியாமல் மயூ ரஞ்சனியை பெற்றியே நினைத்துக்கொண்டு இருந்தாள்.
விடிந்தால் பெண் பார்க்க வரும் சடங்கை ஏற்பாடு செய்து இருந்தார் சீதா. அதை அன்று இரவு அவளிடம் சொல்ல வர, அவளோ விட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“மயூ...” அழைத்து அவளை உசுப்பினார்.
அதில் கலைந்தவள் “அத்தை” என்றாள் தடுமாற்றமாய். அவளது தடுமாற்றத்தை கண்டவர்,
“என்ன ஆச்சு மயூ.. உடம்பு எதுவும் சரியில்லையா..?” என்று அவளை தொட்டு பார்க்க..
“அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை... எழுந்திரிக்கும் போது லேசா தடுமாரிடுச்சு..” என்றாள்.
“பாத்து கவனமா இரு மயூ. கல்யாண பொண்ணு வேற... எங்கயாவது அடிபட்டு நிக்க போற பாத்துக்க...” என்று அவர் அறிவுறுத்த..
“யாருத்த கல்யாண பொண்ணு...” திகைத்து போனாள்.
“நீ தான் மயூ... நாளைக்கு உன்னை பெண் பார்க்க வராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... அதை சொல்ல தான் இப்போ வந்தேன்.. நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுட்டு தயரா இரு... ஒன்பது மணிக்குள்ளே வரதா சொல்லி இருக்காங்க..” என்றார்.
“என்ன அத்தை இவ்வளவு சீக்கிரமா...? இப்போ தானே நான் கல்யாணத்துக்கு சம்மதமே குடுத்தேன். நீங்க அதுக்குள்ள பெண் பார்க்குற சடங்கு வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க...” திகைத்து போனாள்.
“இது வெறும் சும்மா பார்ம்லாட்டிக்கு தான். நிச்சியத்துக்கு நாளே குரிச்சுட்டோம் நாங்க...” என்று சீதா சொல்ல... அவளது தலையில் இடையே விழுந்தது போல ஸ்தம்பித்து நின்றாள்.
“அத்தை நீங்க...” பேச்சே வராமல் தடுமாறினாள்.
“ஆதிக்கு கல்யாணம் முடியிறதுக்குள்ள உனக்கு செஞ்சுடணும்னு நினைக்கிறேன்... அதனால தான் இவ்வளவு விரைவா நடத்துறேன். எல்லாத்தையும்.” என்றார்.
“ஆனா அத்தை அவரு...”
“ஆதியை சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு... இதுல நான் தலையிடவே மாட்டேன்... நீயாச்சு அவனாச்சு... ஆனா நாளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்க.” என்றவர் கிளம்பிவிட்டார்.
மயூவிற்கு இந்த விஷயத்தை ஆதியிடம் எப்படி சொல்லுவது என்று பயந்து போனாள். இப்பொழுதே சொன்னாள் கொஞ்சம் சேதாரம் மிச்சமாகும். நாளை காலையில் அவனே பார்த்து தெரிந்துக்கொண்டால் அவ்வளவு தான் உருத்திர அவதாரம் எடுத்து எல்லோரையும் துவம்சம் செய்து விடுவான்.
இப்பொழுது தனிமையான பொழுதில் அவனை தனியாக சந்தித்து இந்த விஷயத்தை சொல்ல முடியாமல் உடலெல்லாம் நடுங்கியது.
நாளைக்கு காலையில் அவரே வந்து தெரிந்துக்கொள்ளட்டும். என்று எண்ணியவள் பேசாமல் தூங்கிவிட்டாள். தூக்கம் வெகு தொலைவில் இருந்துக்கொண்டு ஆட்டம் காண்பித்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் உடம்பு அசதியில் மடிய... விழிகளும் தூக்கத்தில் மூடிக்கொண்டது.
--
அடுத்த நாள் காலையில் எழுந்த மயூவிற்கு உள்ளமெல்லாம் ஏதோ கடும் பாறையை சுமப்பது போல பாரமாய் இருந்தது. மனமே இல்லாமல் சீதாவின் கட்டளை படி தயாராக முயன்றாள். அவள் என்ன முயன்றும் அவளது மனமும் மெய்யும் ஒத்துழைப்பு தர மறுக்க... அப்படியே சாய்ந்து கொண்டாள் அலமாரியில்.
குளித்து வெறும் பாத் ரோபை மட்டும் போட்டுக்கொண்டு அடுத்து எதுவும் செய்ய இயலாத அளவு துக்கம் அவளை போட்டு வாட்ட கண்களை மூடிக்கொண்டாள். அவளால் மன கோலத்தில், அலங்காரத்தில் எப்படி இன்னொரு ஆடவனின் முன்பு போய் நிற்க முடியும்.
மனம் முழுக்க ஆதியை சுமந்துக்கொண்டு அவளால் நிற்க இயலுமா...? முடியாதே...
மனமெங்கும் பரவி நிறைந்து வாசம் செய்து கொண்டிருப்பவனை விடுத்து இன்னொரு ஆடவனின் முன்பு மணக்கோலத்தில் அதும் பெண் பார்க்கும் சடங்கில் நிற்க இயலுமா...? என்று எண்ணிய போதே விழிகள் இரண்டும் கண்ணீரில் நிறைந்து போனது.
“எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை. மனம் முழுக்க ஒருவனை நினைத்துக்கொண்டு அவனது எதிரிலே இன்னொருவனை மண மகனாக ஏற்றுக்கொள்ள இயலுமா..?” மனம் கதறி தவித்துக்கொண்டு இருந்தது.
அந்த நேரம் ஆதி வந்து அவளது கதவை தட்ட... சட்டென்று சுதாரித்தவள் தன் கண்ணீரை உள் இழுத்துக்கொண்டு கண்களையும் முகத்தையும் அழுத்தி துடைத்துக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறை தன் முகத்தை சரி பார்த்துக்கொண்ட பின்பே கதவை திறந்தாள்.
“கதவு திறக்க இவ்வளவு நேரமா...?” என்று கேட்டபடி உள்ளே வந்தவன்,
“நேற்றைக்கு அறிமுகம் செய்த திட்டத்தை பற்றி கல்வி அமைச்சர் உன்னை பார்க்க வறாராம்... உனக்கு எப்போ நேரம் கிடைக்கும். அப்பவே வர சொல்லிக்கலாம்” என்று அவளை பார்த்தான்.
“மத்தியத்துக்கு மேல ப்ரீ தான் ஆதி. அப்பவே வர சொல்லுங்க.” என்றவள் “கூட நீங்களும் இருப்பீங்க தானே...” தயக்கமாய் கேட்டாள்.
“இது உன்னோட திட்டம்... சோ நீ தான் இதை ஹேண்டில் பண்ணனும்... அவரு என்ன மாதிரி கேள்வி கேட்டாலும் தைரியமா பதில் சொல்லு... உன்னால முடியும். அசால்ட்டா ஜெர்மனி காரனையே ஹேண்டில் பண்ண... இவரெல்லாம் உனக்கு தூசி மாதிரி... அதுவுமில்லாம இவரு நம்ம ஆளு... அதனால பயப்படாம அட்டென்ட் பண்ணு” என்றான்.
“ம்ம்” என்றவளின் குரல் உள்ளே போனது.
“ஹே இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு பீல் பண்ற... உன் பின்னாடி நானும் கொஞ்ச நேரம் கழிச்சு ஜாயின்ட் பண்ணிக்கிறேன் சரியா...?” என்று சொல்ல.. மயூவின் முகத்தில் அப்பொழுதும் முழுமையான புன்னகை வராமல் போக ஆதியின் முகம் யோசனைக்கு மாறியது.
“மயூ...” என்று அவளை அழைத்தான். அவளது கவனம் இங்கு இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியையே சுற்றி வர... மயுவின் இந்த போக்கு ஆதிக்கு கடும் சினத்தை கிளப்பி விட்டு இருந்தது.




