“ஏதாவது எமெர்ஜென்சின்னா என்ன பண்றது ஆதி..”
“இது நமக்கான நேரம்... இதுல யாருமே இண்டர்பியர் ஆகுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது... எனக்கு முழுமையா உன் கூட இருக்கணும்...” என்று குரலை உயர்த்தி சொல்ல, பெண்ணவளின் உடலில் சிறு நடுக்கம் ஓடி மறைந்தது...
அதன் பின்பு அவனிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை. முழுமையாக அவனது விருப்பத்துக்கு விட்டாள். அவனுக்கு அது தானே வேண்டும்... உள்ளம் பொங்க தன் செயல்களை சரிவர திட்டம் போட்டு செய்ய ஆரம்பித்தான்.
அதன் படி இருவருடைய பிஏவிடமும் தேவையான தகவல்களை சொல்லி அதன் படி செய்ய சொல்லிவிட்டு சீதாவின் எண்ணுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டான்.
சீதாவிடம் சொன்னால் மொத்த பிளானும் ப்லாப் தான். எண்ணியவன் விவரமாக கிளம்பி மூன்று மணி நேரம் கழித்தே மெசேஜ் பார்வர்ட் ஆகிற மாதிரி செய்தான். சீதா மெசேஜ் பார்த்த நேரம் ஆதியும் மயூவும் மும்பையை விட்டு பறந்து இருந்தார்கள்...
அதில் பல்லைக்கடித்த சீதா பேசாமல் கல்யாணத்தை நிருத்திவிடுவமா...? என்று யோசித்தார். சட்டென்று அப்படி செய்ய முடியாமல் மயூவின் கண்ணீர் முகம் வந்து நின்றது.
அதுவுமில்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது.. கேசவன் வந்து கேட்டால் என்ன சொல்வது என்று தவித்து தடுமாறி போனார்...
ஆத்திரம் மிக “டேய் நல்லவனே... உங்க அப்பா வந்து கேட்டா என்னடா பதில் சொல்றது. அதுக்கும் சேத்து பதில் அனுப்பி இருக்க வேண்டியது தானே...” கடுப்புடன் இவரும் பதில் டெக்ஸ்ட் அனுப்பினார்.
அவருக்கு அவர்களை தொல்லை பண்ண விருப்பமில்லை. இருக்கும் கொஞ்ச நேரமாவது இருவரும் சந்தோசமாக இருக்கட்டுமே என்று கால் செய்யாமல் டெக்ஸ்ட் அனுப்பினார்.
அவரது மெசேஜை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் மயூவிடம் காண்பிக்க அவளும் சிரித்தாள் தன் முத்து பற்கள் வெளியே தெரியாத படி...
“அத்தைகிட்டவாவது சொல்லிட்டு வந்து இருக்கலாம்...” என்று இவள் குறை பட...
“முதல் எதிரியே உன் மாமியார் தான். அதனால தான் சொல்லல... நீ சொல்லி இருந்தா கண்டிப்பா இந்த ட்ரிப்பை தடுத்து இருப்பாங்க... அதனால தான் கிளம்புனதுக்கு பிறகு சொல்லி இருக்கேன்...” என்று தன் தாயின் கணிப்பை அச்சு பிசகாமல் சொன்னான் ஆதி..
சீதாவும் அப்படி தான் நினைத்தது இருந்தார். ஆனால் அவன் தான் கிளம்பிவிட்டானே... இனி பறந்து போன கிளிகளை என்ன செய்வது என்று அமைதி காத்து இருவரும் எந்த பிணக்கும் இன்றி இந்த ட்ரிப்பை முடித்துவிட்டு வரட்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார்...
கூடவே பத்திரிக்கை காரர்களுக்கு இந்த விஷயம் அவலாகி போக கூடாது என்றும் வேண்டுக்கொண்டார். அவரால் முடிந்தது அது மட்டும் தானே...
நெடுஞ்சாலையில் வண்டி சீராக ஓடிக்கொண்டு இருக்க... “சரி... நாம எங்க போறோம் ஆதி...” லாவகமாய் காரை ஓட்டிக்கொண்டு இருந்தவனை இரசித்தபடியே கேட்டாள்.
“உனக்கு எங்க போகணும்னு ஏதாவது ப்ளான் இருக்கா...” கேட்டான்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க. இருக்குற இந்த நாட்கள் முழுவதும் எந்த தொந்தரவும் இன்றி நிம்மதியா உங்க கூட இருக்கணும்...” என்று சொன்னவளை வாஞ்சையுடன் பார்த்து,
“அதுக்கென்ன இருந்துட்டா போச்சு...” என்று யாருமில்லா தனி உலகத்தில் அவளை கொண்டு வந்து சேர்த்தான் ஆதி...
அந்த இடத்தை பார்த்தவளுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை... ஏதாவது பனி பிரதேசத்துக்கு, உயர் வகை ஹோட்டல், காட்டேஜ் இப்படி ஏதோ ஒன்றுக்காக அழைத்து செல்லுவான் என்று எண்ணியவள், இப்படி ஒரு இடத்துக்கு அவளை கூட்டி வருவான் என்று நினைத்தது கூட பார்க்கவில்லை.
தன் முன் விரிந்த காட்சியை விழிகளை விரித்து உள் வாங்கி ஸ்தம்பித்து நின்றாள்.
“ஆதி ஐ ஆம் மெர்சல்...” என்றாள்.
“புடுச்சு இருக்கா...”
“ம்ம்ம்... ரொம்ப பிடுச்சு இருக்கு... இது எந்த ஏரியா...?”
“எனி கெஸ்...”
“ம்ஹும்...”
“க்ரீன் ஹில்ஸ்...”
“வாட்...”
“இது கிழக்கு மலை தொடர்ச்சிகளில் ஒன்று.. மூன்று ஊரை தன்னிடம் வைத்து இருக்கு... இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு...”
“என்ன அது..” ஆர்வமாய் விசாரித்தாள்.
“விச்சி மலை...”
“பேரே புதுசா இருக்குங்க...”
“ம்ம்ம்... விச்சி பூ நிறைய பூக்குறதுனால இதுக்கு இந்த பேரே வந்துடுச்சு...” என்றான்.
“இப்போ நீ பார்த்துக்கிட்டு இருக்கியே நிறைய வண்ணத்துல பூவு... இதுக்கு பேரு தான் விச்சி..” என்று அவன் சொல்ல சொல்ல அந்த இடத்தை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
கூடவே மேலிருந்து கீழாக கொட்டும் அருவியை பார்த்தவளுக்கு பேச்சே எழவில்லை...
“இந்த அருவிக்கு ஏதும் பேரு இருக்கா...”
“ம்ம்ம்... இதுக்கு மங்களம் அருவின்னு பேரு... இந்த இடத்துல இன்னொரு அருவியும் இருக்கு.. அது இந்த பக்கமா போகணும். அதுக்கு பேரு கோரையாறு...”
“அவ்வளவு தான் இருக்கா இல்ல இன்னும் இருக்காங்க...?”
“ம்ம்... இன்னும் இருக்கு” என்றவன்,
“சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு எல்லாம் இங்க தான் உற்பத்தி ஆகுது..” என்றான்.
“ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்துக்கு கூட்டிட்டு போங்க ஆதி... ஐ ஆம் வெரி இம்ப்ரெஸ்டு...” என்றவள் அந்த ஓங்கி உயர்ந்த மலையை பிரம்மிப்புடன் பார்த்தாள்.
“இப்படியே நிக்கிறியா...? இல்ல கொஞ்சம் போய் ஓய்வெடுக்கலாமா..?”
“எனக்கு இந்த இடத்தை விட்டு வரவே மனசில்ல ஆதி... அந்த அருவியில போய் குளிக்கலாமா...?”
“குளிக்கலாம் ஆனா இப்போ இல்ல. போய் ஏதாவது சாப்பிடுவோம். அதுக்கு பிறகு இங்க வந்து குளிப்போம்” என்றவன், கற்களால் ஆனா சின்ன வீட்டுக்குள் அவளை அழைத்து சென்றான்.
“ஆதி இதெப்படி... இங்க வீடு..” வியந்தாள்.
“இந்த மலையில இடம் வாங்கி போட்டு இருக்கேன்... இந்த மலையையே வாங்க தான் நினைத்தேன்... ஆனா இயற்கையை வாங்க மனம் வரல... நமக்கு பின்னாடி வர சந்ததிகள் இதை அழிச்சுட்டா என்ன பண்றது. அதான் கவர்மென்ட்லயே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.” என்றான்.
அவன் சொல்வது உண்மை தான் என்று எண்ணியவள், அவன் சொல்வதை அமைதியுடன் கேட்டுக்கொண்டாள்..
கற்கள் ஒவ்வொன்றும் செவ்வக வடிவில் சீராக வெட்டி எடுத்து காரையோடு சிமெண்டும் கொண்டு பூசி அழகாக கட்டி இருந்தார்கள்.
“இங்க சுத்திலும் காடு தானாங்க...” என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள்.
“உனக்கு எப்படி தோணுது...” என்றான்.
“முழுவதும் காடாவே இருக்குற மாதிரி தான் தோணுது... ஆனா இந்த ஆதி தேவனை நம்ப முடியாது...” சேர்த்து சொல்ல, ஆதியின் இதழ்களில் கர்வ புன்னகை ஒன்று எழுந்தது....
“அப்போ ஏதோ பண்ணி வச்சு இருக்கீங்க... சரியா?”
“ம்ம். அதை நாளைக்கு சொல்றேன்... இப்போ வா போய் கொஞ்ச நேரம் படுக்கலாம். கார்ல வந்தது டையர்டா இருக்கு.” அவளை இழுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.




