தன் உதவியாளரை அருகில் அழைத்து அந்த நிகழ்வை போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தவரிடமிருந்து இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டவை மட்டும் தனியாக வாங்கி வர சொல்லி பணித்தான்.
அதென்னவோ அவனுக்கு அதில் அதிக ஆர்வம், பிடித்தம் இப்படி எதுவேண்டுமானாலும் சொல்லலாம். அனைத்து போட்டோக்களும் தனி காப்பியாக வாங்கி வைத்துக்கொள்ளுவான்.
இன்றும் அது போல் வாங்கி கொண்டவன் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கிய நேரம் அவளிடம் காண்பித்தான்.
அதில் இருவரும் மிக இயல்பாக இருந்தனர்... அவள் மாராப்பை இரண்டு மடி மடித்து சும்மா மேலே போட்டு, முந்தானையை இடுப்பில் சொறுகி இருந்தாள். அவளின் அருகில் கோட்டை கலட்டி, சட்டையின் கைகளை ஏற்றி விட்டு நின்றுக்கொண்டு இருந்தான்.
அடுத்த போட்டோவையும் காட்டினான். அதில் அவள் ஒற்றையாய் விட்டிருந்த மாராப்பும் முடிகள் ஆங்காங்கே கலந்து ஓவியம் தீட்டியது போல கலையாத அலங்காரத்தோடு இருந்தவளின் அருகே புல் சூட்டில் இருந்தான் ஆதி...
“எனக்கு இந்த போட்டோவை விட முன்னாடி காட்டுன போட்டோ தான் ரொம்ப பிடுச்சி இருக்கு... உனக்கு...” என்றான்.
“ஆதி இப்போ போய்...” கூச்சத்தோடு கேட்டவளை பார்த்தவன்,
“சரி வண்டியில போகும் போது சொல்லு...” என்றவன் அவளது கைகளை பற்றிக்கொண்டான்.
“ஆதி... பசங்க முன்னாடி...” கைகளை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“ப்ச்.. என்னடி எதுக்கெடுத்தாலும் தடை சொல்லிக்கிட்டே இருக்க... வசமா சிக்குன அவ்வளவு தான் பாத்துக்க...” கடித்தவன் நிகழ்வுகளில் கவனம் வைக்க தொடங்கினான்.
அவனது உணர்வுகளையும், கோவத்தையும் தீர்க்க இது சரியான நேரம் இல்லை என்பதால் அவளும் அமைதி காத்தாள். நிகழ்வுகள் பாதி நடந்துக்கொண்டு இருக்கும் வேளையில் தலைமை உரை ஆற்ற ஆதி தேவனை அழைத்தனர்...
இப்பொழுது கைகளை இறக்கிவிட்டு கோட்டை எடுத்து மாட்டியவன் வசீகரமாய் அனைவரயும் பார்த்து சிரித்தான் மேடை ஏறி.
“ஹாய்... புதுசா நான் எதையும் பேச வரல... ஏற்கனவே உங்க கரஸ் பேசுனது தான்... அவங்க அழகா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க... என்னை பொறுத்த வரை பெண்களை சின்ன வயசுல இருந்தே தைரியமா வளர்க்கணும்.”
“எந்த சூழ்நிலை வந்தாலும் அதிலிருந்து வெளியே வர கத்து குடுக்கணும். சில தற்காப்பு முறைகளை கற்று வச்சு இருந்தாலே போதும். எதையும் பெண்களால சாதிக்க முடியும். பெண்களை பொத்தி பொத்தி வைக்காம எல்லாத்தையும் தெருஞ்சு அவங்களை வளருங்க...”
“எது சரி எது தவறுன்னு அவங்களுக்கே ஒரு புரிதல் வரும்... உடலை இரும்பா வச்சுக்கோங்க... உடலை உறுதி செஞ்சாலே நமக்கு ஆபத்து வரும் போது குறைந்தது ஐந்து பேரை நம்மளால சமாளிக்க முடியும். அதோட ஓட்ட பயிற்சி தினமும் எடுத்துக்கோங்க... ஆபத்து காலத்துல கயவர்கள் மீது ஒரு கை பிடி மிளகாய் தூளை போட்டுட்டு ஓடியே தப்பிச்சுக்கலாம்... இதெல்லாம் ஒரு சிம்பிள் வழிகள் தான்..”
“யாரும் நம்மளை வந்து காப்பாத்துவாங்கன்னு எதிர் பார்க்க கூடாது. இப்போல்லாம் நம்மளை நாம தான் காப்பாத்திக்கணும். உடனுக்கு உடனே எந்த தகவலாய் இருந்தாலும் சமுக வலை தளத்துல அப்டேட் பண்ணுங்க...”
“ஒருத்தர் இல்லாட்டியும் ஒருத்தருக்கு அதனுடைய தாக்கம் சென்று சேரும்...
இங்க நடத்தின நாடகங்கள், பாட்டு, நடனம் எல்லாமே அருமை... பலர் அழகா கட்டுரை வாசிச்சீங்க... எல்லோருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்...”
“இந்த தினம் பல போராட்டங்களுக்கு பின் கிடைத்த வெற்றி.. அதை என்றைக்கும் மறக்காமல் இதை விட அதிகமாக வெற்றி பெற்று கொண்டாடி மகிழுங்க...! நன்றி...! வணக்கம்...!” என்று கம்பீரமாக உரையாற்றி முடித்தான்.
அவன் சொன்னது சிம்பிள் வழிகள் என்றாலும் அதை கதை பிடித்தால் கண்டிப்பாக தங்களை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று உண்மை புரிய அனைவரும் கை தட்டி ஆர்பரித்தார்கள்...
அவன் தன்னுடைய கடிகாரத்தை பார்த்து மயூவை பார்த்தான்.
“நீங்க முன்னாடி போறீங்களா...? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு...” தயக்கமாய் இழுத்தவளை கண்டு முறைத்தவன்,
“இப்போ நீ வரணும். உனக்காக நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். இவ்வளவு நேரமும் இருந்து இருக்கேன். உன்னால என் கூட வர முடியாது இல்ல...” காட்டமாய் பேசினான்.
“விழாவை அப்படியே பாதியில விட்டுட்டு வர முடியாது... கெஸ்ட் வந்து இருக்காங்க... அவங்களையாவது ஒழுங்கா கவனிக்கணும் இல்லையா..?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ இப்போ என்னோட வரணும்...” உடும்பு பிடியாய் நின்றவனை கண்டு கஷ்டமாய் போனது.
தன்னுடைய பிஏவை பார்த்தாள். மேடம் இல்லாமல் எப்படி சமாளிப்பது என்று கையை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
ப்ரின்சியை மட்டும் தனியே விட முடியாது. அது கெளரவ குறைச்சலா இருக்கும்... என்ன செய்வது என்று யோசித்தவள்,
“ஆதி கொஞ்ச நேரம் என்னோட ரூம்ல இருங்க.. அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம் சரியா...?” சமாதனம் செய்தவளை கோவமாக பார்த்தவன்,
“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போயே ஆகணும் மயூ...”
“ஆதி ப்ளீஸ்... ஏதாவது ஒண்ணுக்காகவாவது ஒத்து வாங்களேன்...” கெஞ்சியவளின் கெஞ்சல்கள் எல்லாம் அவனது காதிலே ஏறவில்லை.
“இப்ப நீ வர முடியுமா...? முடியாதா...? அதை மட்டும் சொல்லு...”
“ஆதி... இப்போ நான் இங்க இருந்தே ஆகணும்...” தவிப்புடன் சொன்னவளை ஏளனமாக பார்த்தவன்,
“உனக்கு நான் எப்பவுமே முக்கியம் இல்லன்னு ஒவ்வொரு முறையும் உன் செயல் மூலம் நீ நிருபிச்சுக்கிட்டே இருக்க... ஆனா அதை நான் புருஞ்சும் உன்கிட்ட உன்னையே கேட்டுக்கிட்டு இருக்கேன் பத்தியா... என்னை சொல்லணும். உன்னோட கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டிக்கிற... ரொம்ப வலிக்குதுடி...” கண்கள் சிவக்க சொன்னவன் அடுத்த நொடி கூட வீண் பண்ணாமல் அவ்விடம் விட்டு சென்றுவிட்டான்.
போகும் அவனையே கண்கள் கலங்க பார்த்தவளின் கால்கள் வேரோடி போய் இருந்தது எந்த அசைவும் இன்றி...
மனம் கலங்கி, நெருப்பில் இட்டதை போல துடித்து போனது மயூவுக்கு. வார்த்தையால் அவன் கொட்டிவிட்டு போன தணல் அவளை வாட்டி வதைக்க அதன் பின் எதிலும் அவளால் கவனத்தை செலுத்த முடியவில்லை.
மயூவிடம் கோவத்தை காட்டிவிட்டு வந்தவனோ, மனம் கொள்ளா சினத்தில் வண்டியை தாறுமாறாக செலுத்திக்கொண்டு அலுவலகம் சென்றான்.
அன்றைக்கு நடந்த மீட்டிங்கில் அவனால் முழு ஈடுபாட்டோடு கலந்துக்கொள்ள முடியாமல் தடுமாறியவன் ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல்
“சாரி கைஸ்...” என்று வெளியே வந்துவிட்டான்... மனம் முழுக்க ஆத்திரம் மட்டுமே மிஞ்சி இருந்தது. அவளது புறக்கணிப்பில் மனம் விம்மி தணிந்தது ஆதிக்கு... அவ்வளவு கோவம் அவள் மீது. தான் ஒன்று கேட்டு அவளால் எப்படி அதை மறுக்க முடிகிறது... இவ்வளவு தான் அவளது காதலா...?
இது தான் அவளது காதலா...? என் மீது வேறு எந்த விருப்பமும் இல்லையா அவளுக்கு...? என் உணர்வுகளை அவளால் எப்படி புறக்கணிக்க முடிகிறது... காதலில் விழிகள் அதிகம் பேசிக்கொள்வதை விட உணர்வுகள் தானே அதிகம் பேசிக்கொள்ளும்... என்று ஏதேதோ எண்ணியவனுக்கு மயூவை மன்னிக்க மட்டும் முடியாது என்ற உண்மை புலனானது...
காதலனின் சின்ன ஆசையை கூட அவளால் நிறைவேற்ற முடியாதா...? ஆனால் நான், அவள் கேட்டாள் என்று என் மனதை கூட கல்லாக்கிக்கொண்டு அவள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு இதோ, ரஞ்சனியை திருமணம் செய்ய போகிறேனே... இது தானே காதல்... இந்த செயலிலே காதலின் சூட்சமம் புலனாகிறதே... அப்போ அவளது காதல் வெறும் வார்த்தை மட்டும் தானா..? என் மீது உண்மையான காதல் இல்லையா...? ஏனோ மனம் கிடந்து தவித்து தள்ளாடிக்கொண்டு இருந்தது...





