“அண்ணா வந்த கோவத்தை எல்லாம் செஞ்சுவச்ச இந்த டிபன் மேல காமிச்சுட்டாரு... அதான் இந்த ஹால் இப்படி இருக்கு..” என்று ரோகிணியும் ரேணுவும் சொல்ல மனமெல்லாம் பாரமாய் போனது.
சீதாவின் கையை அழுத்தமாய் பற்றியவளை பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் தன் கைகளை உருவிக்கொண்டு அங்கிருந்து விலகிச்செல்ல இன்னும் வேதனை பட்டாள் மயூ.
“அத்தை...” என்றாள் தாங்க முடியாமல்.
“அவன் மாறுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை மயூ... நீ தான் மாற வேண்டியது வரும். இல்லன்னா இப்படி தான் தினமும் நடக்கும்... நீ பெரிய தப்பு பண்ற...” என்று கலங்கியபடி சொன்னவர் விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
அவர் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான் என்றாலும் அவளால் மாற முடியாதே... அவனையும் மாற்றியே ஆகணும். ஆனால் அவன் மாறமாட்டான் என்பது திண்ணம்.
பெருமூச்சு விட்டவள், “நீங்க நாலு பேரும் நம்ம ஹோட்டல்ல போய் சாப்பிடுங்க...” என்று சொல்லிவிட்டு, தலைமை பணியாளரிடம் சுத்தம் பண்ணுங்க கட்டளை இட்டுவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த பணியாளர்களிடம் உதவியை வாங்கிக்கொண்டு தன்னவனுக்காக ஆனியன் தோசையும் சட்னியும் தயார் செய்தவள்,
“கொஞ்ச நேரம் கழிச்சி ரெண்டு ஆம்லேட் போட்டு எடுத்துட்டு வாங்க...” சொல்லிவிட்டு ஆதியிடம் வந்தாள்.
“ஆதி சாப்பிட வாங்க...” என்றவள் மற்றொரு உணவு கூடத்தில் அவனுக்கு உணவு பரிமாற, அவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து வந்து அமர்ந்தான்.
அப்பொழுதும் சாப்பிடாமல் அவன் பப்ஜி விளையாட, நொந்துக்கொண்டவள் தானே அவனுக்கு உணவினை ஊட்டி விட்டாள்.
ஏதாவது சொன்னால் இதை விட அதிகமாக ஏதாவது செய்து வைப்பான். அவனது முரட்டு குணத்தை கண்டு மனம் சற்றே மிரண்டு தான் இருந்தது. அதனால் அவள் எதுவும் சொல்லாமல் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
சாப்பிட்டு எழுந்தவன்
“எதுக்கு கதவை தாள் போட்ட...” அடக்கிய சீற்றத்துடன் கேட்டவனை கண்டு மனம் பயத்தில் துடித்தது.
“இல்ல ஆதி தெரியாம...” வாய் தந்தி அடித்ததை சிரமப்பட்டு மறைத்துக்கொண்டாள்.
“தெரியாமலா...? இல்ல நான் வரக்கூடாதுன்னா...?” கூர்மையாய் கேட்டவனை கண்டு இன்னும் உள்ளம் பதறியது.
“நிஜமாவே மறந்து போய் தான்...”
“நம்ப முடியல... ஆனா இனி உன் அறைக்கு எப்பவும் நான் வரமாட்டேன்...” சொல்லிவிட்டு அவள் ஊட்டிக்கொண்டிருந்த கைகளை விலக்கியவன் எழுந்து சென்றுவிட்டான் கடும் சீற்றத்துடன்.
அவன் விலக்கிய கைகளை கண்ணீரோடு பார்த்தவள் அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.
மேசை மீது கவிழ்ந்து கண்ணீர் விட்டவளின் காதில் அவனது கார் உறுமும் சத்தம் கேட்க, அவசர அவசரமாய் முகத்தை துடைத்துக்கொண்டு ஓடினாள் வெளியே...
அதற்குல் அவன் காம்பவுண்ட் சுவரை தாண்டி சென்று இருந்தான். ஒரு நாளும் அவளை விட்டு செல்லாதவன் இன்று அவளை விட்டுவிட்டு சென்ற இந்த செயல் அவளை வேரோடு பிடுங்கி போட்டது போல வலித்தது.
கண்களில் இருந்த கண்ணீர் பார்வை மட்டத்தை மறைத்து நிற்க அப்படியே விழிகளை மூடிக்கொண்டாள். அதில் தேங்கி இருந்த கண்ணீர் அவளது கன்னத்தை நனைத்து ஈரமாக்கியது.
“நான் கொண்டு வந்து விடவா டா..” மாமன் பின்னிருந்து கேட்க...
“இல்ல வேணாம் மாமா.. நானே போய்க்கிறேன்.. உங்களுக்கும் அத்தைக்கும் மார்னிங் ப்ரேக்பஸ்ட் ரெடியா இருக்கு. ரெண்டு பேரும் சாப்பிடுங்க... நான் கிளம்புறேன்.” என்றவள் கார் செட்டுக்கு சென்று அங்கு வரிசையாய் நிறுத்தி இருந்த கார்களில் ஆதிக்கு பிடித்தமான ரோல்ஸ்ராயில் கிளம்பி அவனுடைய அலுவலகத்துக்கு சென்றாள்.
வந்தவள் நேரே அவனுடைய அறைக்கு செல்ல அங்கிருந்த பியே அவளை உள்ளே அனுப்ப மறுத்தார்.
“மிஸ்டர் க்ளாங்...” தோரணையுடன் அழைத்தவளை கண்டு தலை குனிந்துக்கொண்டவர்,
“சாரோட ஆர்டர் மேம்...” என்றார்.
“க்ளாங்... நான் அவரை பார்க்கணும்...”
“உங்களை மறுக்க என்னால முடியாது. ஆனா இன்னைக்கு சார் ரொம்ப டிபிகல்ட்டா இருக்காரு மேம்...” என்றார் தன்மையாக. அதில் ஓய்ந்து போனவள், அங்கேயே அமர்ந்தாள் வேறு வழியின்றி...
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியது. ஆனால் அவனை பார்க்க முடியவில்லை. க்ளாங் மட்டும் அவ்வப்பொழுது உள்ளே போய் வெளியே வந்துக்கொண்டு இருந்தார்.
அவனுடைய கோவ குரல் வெளியே வரை கேட்டுக்கொண்டு இருந்தது. அவ்வளவு கோவத்திலும் ஆத்திரத்திலும் இருந்தான்.
மயூவின் ஒதுக்கத்தில் பித்து பிடித்தவன் போல நடந்துக்கொண்டான். எதார்த்தமாய் செய்த ஒரு செயல் அவனை இவ்வளவு பாதிக்கும் என்று அவளும் எதிர் பார்த்திருக்கவில்லை. எதிர் பார்த்திருக்க வேண்டுமோ...?
அவனை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவியாய் தவித்து போனாள் பெண்ணவள். இதற்க்கு இடையில் அவளுக்கு கல்லூரியில் இருந்து போன் மேல் போன் வந்துக்கொண்டே இருந்தது..
இவள் போயே ஆக வேண்டும் என்கிற நிலை. இவனை இப்படியே விட்டு செல்லவும் மனம் வரவில்லை.
இரண்டுக்கும் நடுவில் அல்லாடிக்கொண்டு இருந்தாள். அவளை ஒரு முடிவெடுக்க வைத்தது அவளுக்கு வந்த கால்.
போனையே சிறிது நேரம் வெறித்து பார்த்தவள், அதற்கு மேல் தாமதிக்காமல் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
வந்தவளையே எரிப்பது போல பார்த்தான் ஆதி...
“என் அனுமதி இல்லாம என் அறைக்குள்ள நுழையறது...” என்று கடுமையாய் பேசியவனை நெருங்கியவள் அவனை மேற்கொண்டு பேச விடாமல் அவனது இதழ்களை சிறை செய்தவள்,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இன்னைக்கு பெண்கள் தின நிகழ்வு இருக்கு... சோ... நான் அட்டென் பண்ணனும். எதுவா இருந்தாலும் ஈவினிங் பார்த்துக்கலாம்.”
“வொர்க்கர்ஸ் நிலை கொஞ்சம் பாவம் தான். ரொம்பவும் கடிய வேண்டாம்.. என் அறைக்கு இனி நீங்க வர வேணாம். ஆனா இனி ஒவ்வொரு இரவும் உங்க அறையில தான் நான் தூங்குவேன் சரியா...?”
“மாப்பு கேட்டுக்குறேன் என் ஸ்டையில்ல... இப்போ இல்ல. நைட்.” என்றவள் மீண்டும் அவனது இதழ்களை சிறை செய்தவள்,
“என் மேல உள்ள கோவத்தை என் மேல மட்டும் தான் காண்பிக்கணும்...” என்றவள் அவனிடமிருந்து விலகி “நேரமாச்சு ஆதி... ப்ளீஸ்...” தயக்கமாய் அவனது அனுமதிக்காக காத்திருந்தாள்.
“அதான் எல்லா முடிவும் நீயே எடுக்குறியே.. அப்புறம் எதுக்கு இந்த நடிப்பு...” என்று சீரியவனின் கோவம் புரிய, மௌனமானாள்.
“போ...” என்றான் அழுத்தமாய். அதில் அவளால் ஒரு அடி கூட நகர முடியவில்லை.
“ப்ச் இன்னும் என்ன.. அதான் அனுமதி குடுத்துட்டனே...”
“ஆதி...” என்றாள் தயக்கமாய்..
“என்னடி...” கடுப்படித்தான். அதில் கண்கள் கலங்கியவள் “ஒண்ணுமில்ல... பை ஆதி.” என்று கிளம்பிவிட்டாள்.
தன்னுடைய காரில் அமர்ந்து அவனுடைய நிறுவனத்தின் கேட்டை தாண்டி செல்லும் முன் குறுக்கே வந்து நின்றது அவனது புகாட்டி. உலகிலே அதிக பணமதிப்பு பெற்ற, உச்சத்தில் இருக்க கூடிய மகிழுந்து...
அதில் அரசனுக்குரிய அனைத்து திறமைகளையும் தன்னுள் அடக்கி வைத்திருந்த ஆதி, ஆதிகாலத்து ராஜனுக்கெல்லாம் ராஜனைப் போல கம்பீரமாக அமர்ந்து இருந்தான்.
கண்களில் இருந்த கூலர்ஸ் அவனுக்கு இன்னும் மிடுக்கை கொடுத்தது. அவனது வருகையை கண்டவளுக்கு மனம் குதி ஆட்டம் போட்டது என்றாலும் அதை காட்டிக்கொள்ளாமல் வேகமாய் தன்னுடைய காரிலிருந்து இறங்கி அவனுடைய காரில் சென்று அமர்ந்தாள். மிக பெரிய நிறுவனத்திற்கு உரிய ஓடு பாதையில் நடுநாயகமாக நிருத்தி இருந்த காரை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அவனுடன் சென்று அமர்ந்தாள்.
அவள் சென்ற அடுத்த நொடி அந்த காரை அழுங்காமல் குலுங்காமல் ஆதி காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார்கள் பணியாளர்கள்..





