அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

கொண்டு வந்த பதார்த்தங்களை அவனுக்கு பரிமாறினாள். அவனோ கருமமே கண்ணாய் வேலை செய்துக்கொண்டு இருந்தவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனது பார்வையில் அவள் வேதனை கொண்டாலும் “சாப்பிடுங்க” என்று உபசரித்தாள்.

“ஊட்டி விடு...” என்றான்.

அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

“ஏன் வேண்டாதது எதுவும் காதில் விழுந்ததா...? உடம்பு இப்படி தூக்கி போடுது..” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் சாப்பிடும் அழகை பார்த்தவள், பின் குருங்கண்ணோரம் போய் இருள் படர்ந்த ஏகாந்ததை பார்த்தாள்.

நிலவு மட்டும் தனியாய் உலாவிக்கொண்டு இருந்தது. ஒரு விண்மீன் கூட கண் சிமிட்டி நிலாவுக்கு துணையிருக்கவில்லை.

அதை காணுகையில் தன்னை போலவே அதுவும் இருக்கிறதோ என்று உணர்ந்தாள். அவளது முகத்தை காணாமலே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை உணர்ந்தவன்,

“சாம்பார் போட மனமில்லையா...?” ஏகாந்தத்தை கிழித்துக்கொண்டு அவனது குரல் கம்பீரமாக ஒலிக்க... அடித்து பிடித்துக்கொண்டு வந்தவள், அவனுக்கு தேவையானதை பார்த்து பரிமாறினாள்.

அவன் மீண்டும் உண்ண தொடங்க... மயூ மீண்டும் அவ்விடம் செல்ல,

“இப்போ நான் சாப்பிடவா...? வேண்டாமா...?” கத்தி போல வந்த வார்த்தையில், இரண்டடி எடுத்து வைத்த பெண்ணவள், மீண்டும் அவனருகில் சென்று அமர்ந்தாள்.

அதன் பின்பு திருப்தியாக சாப்பிட்டவன், “சாப்பிடு...” என்றான். அவன் சாப்பிட்டு வைத்த தட்டில் இவள் உண்டு எழ...

“தாலி இல்லா பத்தினி...” என்றவனது ஏளன பேச்சில் கண்களை மூடிக்கொண்டு,

“அது உங்களுக்கே தெரியும் ஆதி...” அவனை விட அதிகமான இறுக்கத்துடன் சொல்லியவள், சாப்பிட்டதை சுத்தம் செய்ய சொல்லி வேலையாளிடம் பணித்து விட்டு

“வரலையா...?” என்றாள் அவனிடம்.

“வந்தா ஏதும் தர உத்தேசமா...? கேட்டான் இரு பொருள் பட...

அதில் அவனை அடிபட்ட பார்வை பார்த்த மயூ எதுவும் சொல்லாமல் செல்ல...

“இன்னும் எத்தனை நாள் இப்படி பேச போறேன்.. ஜஸ்ட் ஒன் மந்த்.. அப்புறம் உன் வழி வேற என் வழி வேற... நினைச்சாலும் இப்படி பேச முடியாது... ஏன் பேசணும்னு நினைச்சா கூட முடியாது...” என்றவனின் சொல்லில் இருந்த உண்மை மயூவை தாக்க அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள்.

வாய் விட்டு கதற முடியாமல் மௌன கண்ணீர் வடித்தவளை தேற்ற முடியாமல் அவளருகில் அவனும் அமர்ந்தான்.

“இது தான் நிஜம் மயூ... இதை ஏத்துக்க இப்பவே மனசை பக்குவ படுத்திக்கிறேன்.. நீயே முடிவு எடுத்ததுனால உனக்கு இது ஈசியா இருக்கும். ஆனா எனக்கு அப்படி இல்லையே.. வலுக்கட்டாயமா இந்த முடிவை என்கிட்டே திணிச்சி இருக்க.”

“சோ.. நான் ஒவ்வொரு முறையும் ஞாபகம் வச்சுக்கணும் இல்லையா...? அதான் அடிக்கடி எனக்கு நானே சொல்லி பார்த்துக்குறேன். இல்லன்னா நீ தான் என் பொண்டாட்டின்னு நான் நினைச்சுக்கிட்டே இருப்பேன். அந்த எண்ணத்தை மாத்தணும் இல்லையா...?” என்று மேலும் இதயத்தில் ஆயிரம் முனை கொண்ட ஊசியை சொருகினான் அவளுக்கு வலிக்கும் என்று தெரிந்து.

அவனது பேச்சைக் கேட்டு கண்களில் மின்னிய கண்ணீரோடு அவனை ஏறெடுத்து பார்த்தவளுக்கு இதயம் முழுவதும் கடப்பாரையால் குத்தியது போல வலித்தது.

அவன் சொல்வது சரி தான் என்றாலும் அவன் சொல்லும் பொழுது அதை கேட்க முடியாமல் மனம் தவியாய் தவித்து போனது... அதும் காதல் கொண்ட தலைவனே அதை சொல்லும் பொழுது உயிர் போனது...

“இதை சரி பண்ணவே முடியாது... அழாம நேரத்தோட போய் தூங்கு.. மார்னிங் ஆபிஸ் போகணும்.” என்றவன் அவளை சிறிதும் ஆறுதல் படுத்தாமல் சென்று படுக்கையில் விழுந்தான்.

அவளை காய படுத்த மனம் வரவில்லை தான். ஆனால் அவளது செயல்களில் காயம் பட்டு போன மனம் அவ்வப்பொழுது தன் காயத்தை கண்டு சீறி எழுகிறது.

அதை அடக்க முடியாமல் வார்த்தையால் வந்து விடுகிறது.

அதில் மயூ இன்னும் காயப்பட்டு இரணமாகிறாள்.. என்ன செய்வது.. எல்லாமே அவள் செய்தது தானே. இன்று அதன் பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள்.

ஆரம்ப காலமே இவ்வளவு வலிக்கிறது என்றால். இன்னும் போக போக எவ்வளவு வலி இருக்க போகிறதோ..

தோட்டத்தில் கதறி அழுதவளை அணைத்துக்கொண்ட சீதா.

“எழுந்து உள்ளா வா மயூ...” என்று அவளை அழைத்துக்கொண்டு வந்து அவளை படுக்க வைத்தவர்,

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல... எல்லா ஏற்பாட்டையும் நிருத்தவாடா...?” மனம் கேட்காமல் கேட்டவரை பார்த்து இன்னும் கதறி அழுதாள்.

“மயூ... நீ ரெண்டு பேரோட வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டு இருக்க...” கண்டிப்புடன் சொன்னார்.

“ஆமா தான். ஆனா அத்தை இது நடக்க வேண்டும் என்று இருக்கே. அதற்கு என்ன செய்வது.. விதி படி நடக்கட்டும்” என்றவள் அவரது மடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தலையை வருடி கொடுத்தவரின் உள்ளம் பாரத்தை தாங்க முடியாமல் கீழே சென்றது.

வளர்ந்த பிள்ளைகளுக்கு என்ன வென்று அறிவுரை சொல்வது. அவர்களுக்கு தெரியாததா... பெருமூச்சு விட்டவர், அவளை தூங்க வைத்த பின் தன்னுடைய அறைக்கு சென்று துயில் கொண்டார்.

அடுத்த நாள் காலை பரபரப்புடன் புலர்ந்தது...

மயூ எழுந்து மணியை பார்த்தாள். அது எட்டு என்று காட்ட அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தவள்... காலை கடன்களை முடித்து குளித்து கீழே வருவதற்குள் டைனிங் ஹாலை ஒரு வழி பண்ணி இருந்தான் ஆதி...

அதை பார்த்தவளுக்கு மூச்சடைப்பே வந்துவிட்டது. காலை உணவுகள் அத்தனையும் தரையை முத்தமிட்டு இருக்க, சுவரில் தன் தடயத்தை பதித்து இருந்தது சாம்பார், சட்னி, உருளை மசால்கள்... பத்தாதற்கு கண்ணாடி குவளைகள், தட்டுகள் எல்லாம் உடைந்து போய் என்னை பார் என் அழகை பார் என்று சிதறி கிடந்தது.

சீதாவின் முகம் இறுகிப்போய் இருந்தது. கேசவனின் முகமோ யோசனையில் சுருங்கி போய் இருந்தது. பிள்ளைகளின் முகமோ எல்லா பாவனையையும் காட்டிக்கொண்டு இருந்தது.

இது அத்தனைக்கும் காரணமானவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு மிக தீவிரமாய் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தான்.

என்ன ஆச்சு... என்று கண்களிலே ரேணுவிடமும் ரோகினியிடமும் கேட்டாள்.

“மாமா சாப்பிட வந்தாரு...” என்று ரோகிணி சொல்ல

“சரி...” என்றாள்.

“நீங்க வர நேரமாச்சா...”

“ஆமா அதுக்கு..”

“அம்மா நான் பரிமாருறேன், சாப்பிடுன்னு அண்ணனை கூப்பிட்டாங்க. அவரு முடியாதுன்னு சொன்னார்.” என்று ரேணு சொல்ல,

“அதுக்கு அத்தை இன்னும் எத்தனை நாள் அவ பரிமாறி சாப்பிட போற.. இனி நீ ரஞ்சனி கையாள தான் சாப்பிடனும். அதனாலா இப்பவே பழக்கப் படுத்திக்கன்னு சொல்லி அவருக்கு தட்டை எடுத்து சாப்பாடு வைக்க...”

“அண்ணா வந்த கோவத்தை எல்லாம் செஞ்சுவச்ச இந்த டிபன் மேல காமிச்சுட்டாரு... அதான் இந்த ஹால் இப்படி இருக்கு..” என்று ரோகிணியும் ரேணுவும் சொல்ல மனமெல்லாம் பாரமாய் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : September 14, 2026 9:38 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top