“ரொம்ப தேங்க்ஸ் வேரல் நீ இல்லன்னா என் மகனின் நிலையை நினைச்சு கூட பார்த்து இருக்க முடியாது. நீ சரியான நேரத்துக்கு போய் அவனை சேவ் பண்ணிட்ட.. வெரி தேங்க்ஸ்” சொன்னவன் மகனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான்.
போகும் அவனை பெருமூச்சு விட்டு பார்த்தாள் வேரல்.
“என்னடா கண்ணா” அவளின் அம்மா அவளின் தோளை தொட,
“எனக்கு என்னவோ இவங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது பெருசா எந்த வித்யாசமும் தெரிய மாட்டிக்குது ம்மா. சமரன் எந்த நிலையில இருக்கானோ அதே நிலையில தான் மிஸ்டர் கங்குவனும் இருக்காறோன்னு இருக்கு” என்றாள்.
“எனக்கும் அப்படி தான் தோணுது வேரல்.. ரெண்டு பேரும் ரொம்ப தனிமையில இருக்காங்க.. இந்த தனிமை தான் ரொம்ப மன அழுத்தத்தை அந்த பையனுக்கு குடுக்குது. அந்த அழுத்தம் அப்படியே அவரோட மகனிடமும் ஊடுருவுது” என்றார்.
“இதுக்கு என்ன தான் ம்மா பண்றது” தாயிடம் அவள் கேட்டுக் கொண்டு இருந்த சமயம்,
“வேற என்ன கல்யாணம் பண்ணா தான் இருவருக்கும் இந்த தனிமை போகும்” வந்த இளந்திரையன் சொன்னான்.
“ஆனா அதுக்கெல்லாம் இவர் ஒத்துக்க மாட்டாரு போல.. அங்க வேலை செஞ்சப்ப பச்சை பெருமாள் சார் கிட்ட பேசி இருக்கேன். அப்போ தெரியும். அதோட ஒரு நாள் இவரே சொன்னாரு.. அவரோட மகனை குப்பையா நினைச்சு தூக்கிப் போட்டுட்டு அவரோட வைப் போயிட்டாங்க போல. அதுல இருந்து பொண்ணுங்க மேல இவருக்கு இருந்த அபிமானம் ரொம்பவும் குறைஞ்சிடுச்சு.. யாரையும் நம்ப மாட்டிக்கிறாரு ண்ணா” என்றாள் கவலையாக.
“ம்ம்.. பேசி பேசி தான் சரி பண்ணனும்.. இவன் பேசவே மாட்டிக்கிறான்.. நாம் தான் வலுக்கட்டையமா வார்த்தையை புடுங்க வேண்டி வந்தது.. ஆனா ரொம்ப நல்லவன் போல” என்ற மகனை அதிசயமாய் பார்த்தார் மாளவிகா.
“என் மகன் கிட்டயே நல்ல பேர் எடுத்துட்டானா அந்த பையன். அப்போ ரொம்ப நல்லவன் தான்” என்றார்.
“ம்ம்மா” என்று அவன் தாயை செல்லமாய் முறைக்க,
“இல்லையா பின்ன.. வீட்டுல ஒரு தங்கச்சி இருக்கான்னு யாரோடையும் நெருங்கி கூட பழகாம இருந்த ஆசாமி தானேடா நீ..” என்றவரின் தோளில் முகத்தை புதைதுக் கொண்டு
“நண்பர்களை விட எனக்கு என் தங்கச்சியும் என் குடும்பமும் தான் முக்கியம்மா” என்றவனின் அன்பில் நெகிழ்ந்த மாளவிக்கா,
“என் செல்லம்டா நீ” என்று கொஞ்ச,
“அப்போ நான் யாராம்” என்று தாயின் இன்னொரு தோளில் சாய்ந்துக் கொண்டாள் வேரல்.
“நீ வைரம்டா தங்க பிள்ளை” என்று மகளையும் கொஞ்சிக் கொண்டார்.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி மாறி மாறி செல்லம் கொஞ்சிட்டு இருக்கப் போறீங்க.. போய் தூங்குற ஐடியாவே இல்லையா?” என்று வந்தார் முரளி.
“உங்க பொண்டாட்டி முதல்ல கூட்டிட்டு போங்க. அதுக்கு தானே வந்தீங்க” என்று தாயை பிடித்து தகப்பனிடம் தள்ளி விட்டார்.
“இல்லன்னு எல்லாம் சொல்லவே மாட்டனே” என்று மனைவியை தாங்கிக் கொண்டார் அவர்.
“ஐயோ.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்னை ஏன் பந்தாடுறீங்க” அலுத்துக் கொண்டார் மாளவிகா.
தன் தாயை ஆழ்ந்து உள் வாங்கினாள் வேரல்.
என்ன தான் பெரிய பெரிய பதவி வகித்தாலும் அவளின் அம்மாவுக்கு வீடு தான் எல்லாமே.. அதுவும் பிள்ளைகளிடமும் கணவரிடமும் மாட்டிக் கொண்டு அவர் முழிக்கும் விதம் எப்பொழுதுமே வேரலுக்கு ரொம்ப பிடிக்கும்.
இப்பொழுதும் வேரல் தன் தாயை மிகவும் இரசித்துப் பார்த்தாள்.
“என்னடா கண்ணா அப்படி பார்க்கிற?”
“இல்லம்மா நீங்க எவ்வளவு தான் வெளில சமூகத்துல சாதிச்சாலும், உங்களோட முழு மகிழ்ச்சி எங்களோட நீங்க ஸ்பென் பண்ற டைம்ல தான் இருக்குன்னு ஒவ்வொரு கணமும் எங்களுக்கு உணர்த்துறீங்க பாருங்க.. ஐ லவிட் மா.. நானும் கல்யாணம் பண்ணி உங்களை மாதிரி ரெண்டோட எல்லாம் நிறுத்தாம கண்டிப்பா நாலாவது பெத்துக்குவேன். என்னை சுத்தி என் பிள்ளைங்க இருந்துக்கிட்டே இருக்கணும்” ஆசையாக சொன்னாள்.
“ஹலோ மேடம் நீங்க பாட்டுக்க வதவதன்னு பெத்து போட்டா யார் சீர் செய்யிறதாம்..” இளந்திரையன் நக்கலாக கேட்க,
“வேற யார் என்னோட போலீஸ் கார அண்ணன் நீ தான் செய்யணும்” என்றாள்.
“நான்லாம் செய்ய மாட்டேன் ப்பா” என்று அவன் பிகு பண்ண,
“போடா அப்போ உன் கல்யாணத்துல நான் விளக்கு பிடிக்க மாட்டேன்.. உன் பொண்டாட்டிக்கு நாத்தனார் முடிச்சு போடா மாட்டேன், கருகமணி போட்டுவிட மாட்டேன். குறிப்பா நான் இல்லன்னா உனக்கு கல்யாணமே கிடையாது பார்த்துக்க” அவள் மிட்ட,
“ஏன் பாப்பா ஒரு சீர் செய்யலன்னா எனக்கு கல்யாணமே பண்ண விட மாட்ட போலையே..”
“அதுல உனக்கு டவுட்டே வேணாம் ண்ணா. கன்பார்ம். சீரு வச்சா கல்யாணம் இல்லன்னா காலம் முழுக்க ஒண்டி கட்டை தான் பார்த்துக்க” என்று சிரித்தவளை தாவி வந்து பிடிக்கப் பார்க்க,
“வெவ்வெவ்வே” பழிப்புக் காட்டி விட்டு அவள் ஓட,
“கையில மாட்டு உனக்கு இருக்கு” என்று அவளை இவன் துரத்தி ஓட, நள்ளிரவு நேரம் என்றாலும் அந்த வீடே அவ்வளவு கலகலப்பாக இருந்தது.
அந்த கலகலப்புக்கு ஏங்கி போய் இருந்தான் சமரன். வேரல் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததில் இருந்து அவனை சுற்றி சுற்றி வந்த பெரியவர்களை அவனின் மனம் நாடியது.
அதை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளாமல் தனக்குள் பூட்டி வைத்துக் கொண்டான் பிள்ளை.
வீட்டுக்கு வந்த கங்குவன் பிள்ளையை படுக்கையில் கிடத்தி விட்டு அவனுக்கு அருகில் அவனின் முகத்தை பார்த்தபடி அமர்ந்து விட்டான்.
வேரலுக்கு பேச துடித்த மனதை கட்டுப் படுத்திக் கொண்டு பிள்ளையின் தலையை வருடி விட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.
விடிய விடிய பொட்டு கூட தூக்கமில்லை அவனுக்கு. என்னவோ அவனை சுற்றி மட்டும் எதுவுமே இல்லாமல் பொட்டல் காடாக வெற்று வெளியாக இருந்த மாதிரி உணர்ந்தான்.
அந்த தனிமை உணர்வை போக்க அவனது கால்கள் மதுவை தேடித் போக, எவ்வளவு முயன்றும் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஒரு பாட்டிலை எடுத்து முழு மூச்சாக குடித்து முடித்தவனின் கைகள் ஆட்டோமேட்டிக்கா வேரலின் எண்ணுக்கு அழைத்தது.
வேரலுக்கும் அதுவரை தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். சரியாக இவனிடம் இருந்து கால் வர வேகமாய் எடுத்து காதில் வைத்தாள்.
“சாம் குட்டி ஓகே தானே” எடுத்த எடுப்பிலே அவள் கேட்க,
“அவன் ஓகே தான். அவனோட அப்பன் காரன் தான் ஓகே இல்லை” ஒளர ஆரம்பித்தான்.
“குடிச்சு இருக்கீங்களா கங்குவன்” கோவத்துடன் கேட்டாள்.
“எனக்கு என்னை மறக்கணும்”
“மண்ணாங்கட்டி..” வார்த்தையை கடித்து துப்பினாள்.
“என் இடத்துல இருந்து என்னை பாருடி.. அப்ப தான் என் வேதனை என்னன்னு தெரியும்”
“குடிக்க இது ஒரு சாக்கு.. நீங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத அப்பன். உங்கக்கிட்ட போய் கிடைக்க கூடாத மாணிக்கம் கிடைச்சு அதனோட வாழ்க்கையையே வீணாக்கிக்கிட்டு இருக்கேங்க மிஸ்டர்” ஆத்திரத்தில் கொதித்தாள்.
“ப்ச்.. திட்டாதடி..” என்றவனின் குரல் உள்வாங்கி ஒலித்தது.
“திட்டாம உங்களை என்ன பண்ண சொல்றீங்க.. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இப்படி குடிச்சுட்டு சலம்புனா எல்லாம் சரியா போயிடுமா? நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறதை விட்டுட்டு இப்படி தண்ணி போட்டா அதுவே தானா சரியாகிடுமா?”
“இந்த கும்மிருட்டுல என்னை என்னடி பண்ண சொல்ற”
“எவ்வளவு வேணாலும் பண்ணலாம்..”
“ப்ச் மனசு வெறுமையா இருக்கு”
“தியானம் பண்ண வேண்டியது தானே..”
“அதை அடக்கி ஒடுக்கி ஒரு இடத்துல பிடிச்சு வைக்க முடியாம தான் தடுமாரிட்டு இருக்கேன்”
“வாய் தாங்க இருக்கு உங்களுக்கு. செயல்ல ஒண்ணுமே இல்ல.. உங்களோட சேர்த்து சாமையும் கெடுத்துட்டு இருக்கீங்க. அவ்வளவு தான் சொல்லுவேன்” கடுப்படித்தவள் போனை கட் பண்ணி விட,
உடனே அழைத்தான் கங்குவன். இவள் பேசாமல் மௌனம் காக்க,
“ஏன்டி என் வாழ்க்கை மட்டும் இப்படி சூனியமா போச்சு?” வேதனையுடன் கேட்டவனின் குரலை கேட்டு இவளுக்கு தான் நெஞ்சு கணத்துப் போனது.
“போனது விடுங்களேன்”
“அப்படி எல்லாம் விட முடியாது.. எனக்கு பதில் சொல்லுடி” என்று இவன் அளப்பரையை கூட்ட, இன்றைக்கும் இருவருக்கும் தூக்கமில்லாமல் போனது.





