“ஏய்... உன் மாமியார் உன் கிட்ட என்னமோ பேசணுமாம். வந்து என்னன்னு கேளு...” என்று குரல் கொடுத்துவிட்டு அவள் போட்டு வைத்திருந்த காபியை எடுத்து பருகினான்.
அவனது மாமியார் மருமகள் என்ற வார்த்தையில் மயூவும், சீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ஏண்டா நான் இவ்வளவு சொல்றேன்... மறுபடியும் இணைக்கூட்டியே பேசிகிட்டு இருக்க...” கடுப்படித்தார்.
“இன்னைக்கு நேத்திக்கு இல்ல அவன் பொண்டாட்டி.. அவ பிறந்ததுல இருந்தே அவ தான் என் பொண்டாட்டி... ஏற்கனவே இரு முறை உங்க கிட்ட நிருபிச்சு இருக்கேன்னு நினைக்கிறேன்..” நறுக்கென்று பேசியவனை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்து வைத்தார் சீதா..
“டேய் வேணாம்..”
“அதை உன் மருமக கிட்ட சொல்லு...” என்றவன் கண்களை மூடி தன்னவள் போட்ட காபியை இரசித்து குடித்தான். அவனது இந்த போக்கை கண்டு சீதாவுக்கும் மயூவுக்கும் பயம் பிடித்துக்கொண்டது.
“அத்தை...”
“இதெல்லாம் தேவை தானா மயூ... ஒழுங்கா இருந்து இருக்கலாம்.. பாரு அவன... எனக்கு தெரிஞ்சு அவனை மாத்த முடியாது. உன்னை தான் நீ மாத்திக்கணும். ஆனா நீயும் மாறப்போறதுல்ல... கடைசில என் மண்டை தான் உருளும் எல்லா பக்கமும்... என்ன பண்ண போறீங்களோ.. கடவுளுக்கே வெளிச்சம்...” புலம்பியவர்,
“இங்க இருந்து வா முதல்ல..” என்று கையோடு அவளை அழைத்துக்கொண்டு செல்ல...
“இன்னொரு காபி வேணும்.. போட்டு குடுத்துட்டு போடி.” என்றான் விழிகளை திறவாமலே.. அதில் கோவம் வர பெற்ற சீதா அருகில் இருந்த அலங்கார பூவை எடுத்து அவன் மீது வீசினார்.
“ஏண்டா நான் இவ்வளவு தூரம் சொல்றேன். மறுபடியும் நீ உன் இஷ்டத்துக்கு தானே பண்ற... ஏண்டா இப்படி பண்ற.. எவ்வளவு பெரிய பிசினெஸ் மேன் நீ.. ஆனா நீ நடந்துக்குறத பாத்தா அப்படியா இருக்கு...”
அவர் வீசிய பூவை கேட்ச் பிடித்து, “ப்ச்.. சும்மா சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காதா ம்மா... தலை வலிக்குது. அவளை கொஞ்சம் அழுத்தி விட சொல்லு...” என்றவன், முன் புறம் இருந்த டீபாயில் கால்களை நீட்டிகொண்டு நன்றாக சாய்ந்து அமர பத்திக்கொண்டு வந்தது அவருக்கு.
“டேய்...”
“அத்தை நீங்க போங்க... நான் அவரை பார்த்துட்டு வரேன்.. இல்லன்னா இன்னைக்கு முழுதும் உங்களையும் சரி என்னையும் சரி அவரு விட மாட்டாரு.” என்றவள் அவன் கேட்டதை செய்து கொடுத்து, தைலத்தை எடுத்து அவனது நெற்றியில் பூசி தேய்த்து வருடி விட அவனுக்கு அவ்வளவு சுகமாய் இருந்தது.
பார்த்துக்கொண்டு இருந்த சீதாவுக்கு பொசு பொசுவென்று வந்தது.
“அடங்காத எரும மாடு..” முணகியவர் வேறு வழியில்லாமல் முன் புறம் இருந்த கூடத்தில் வந்து அமர்ந்துக்கொண்டார்.
அதை கண்டவன் “லேட்டாகும்... அப்புறம் உங்க புருஷன் உங்களை தேட போறாரு..” நக்கலாக குரல் கொடுத்தான்.
“அவரு என்னை தேடலனாலும் நீயே தேட சொல்லுவடா...” கடுப்படித்தவர், பொறுத்து இருந்து மயூவை கையேடு அழைத்துக்கொண்டே சென்றார்.
போகும் தன்னவளையே வேதனையுடன் பார்த்தவன் அந்த தோட்ட வீட்டை விட்டு இரவு வரையிலும் வெளியே வரவில்லை.
இருவரின் காதலும் இந்த வீட்டில் தான் அதிகமாக நடந்தும், நிறைந்தும் இருந்தது. படிக்கும் நாட்களில் இருந்தே இருவரும் இங்கே தான் வந்து படிப்பார்கள். அதன் பின் வேலை செய்ய ஆரம்பித்த பின்பும் மிக முக்கியமாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றாலும் இருவரும் இங்கு தான் சேர்ந்து செய்வார்கள்.
தனிமை வேண்டும் என்றாலும் இங்கு தான் வருவார்கள் இருவரும். அதனாலே இது அவர்களின் காதல் மாளிகை என்று சொல்லலாம். இருவரும் இந்த தோட்ட வீட்டை பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தார்கள். அதில் இருக்கும் இன்டீரியர் முதற்கொண்டு இருந்த பொருட்கள் அத்தனையும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒன்றிற்காக பரிசளிக்க பட்டதாகவே இருந்தது.
அதில் அவர்களது நினைவுகளும் சேர்ந்தே இருந்தது. அதனாலே அதனை விட்டு இருவராலும் இருக்க முடியாது. அருகில் இல்லாத துணையின் இருப்பை உணர்வதற்கு, ஒருவரை ஒருவர் தேடும் போதெல்லாம் இங்கே வந்து அந்த அழகான அமைதியான தனிமையை உள்வாங்கிக்கொண்டு செல்வார்கள்.
பல நேரம் துணையுடன் வந்தாலும், நினைவுகளை அசைப்போட அவ்வப்பொழுது தனியாகவும் வந்து செல்வார்கள்.
காதலை அதிகமாய் பகிர்ந்துக்கொண்ட இடம் அது. அவர்ளை பொறுத்த வரையில் அந்த தோட்ட வீடு காதலின் சின்னம்.
அந்த அழகிய கூடு இனிமேலும் காதலின் சின்னமாய் இருக்குமா என்று எண்ணியவனுக்கு மனமெல்லாம் பாரமாய் இருந்தது.
“உன்னை விட்டு குடுக்கவே முடியல கண்ணம்மா... ஆனா நீ என்னை விட்டுடுன்னு சொல்ற.. எப்படி என்னால உன்னை விட்டுடுட முடியும்.” கண்கள் சிவந்து உள்ளமெல்லாம் பற்றி எரிந்தது.
“மாமா, அத்தை உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க. வாங்க மாமா.” என்று மனு வந்து அவனை அழைக்க,
“உன் அக்கா என்னடா பண்றா...” இருக்கையை விட்டு எழாமல் அப்படியே கேட்டான்.
அக்கா வராமல் அவர் இங்கிருந்து வர மாட்டார் என்பது புரிய,
“அக்கா உங்களுக்கு தோசை வார்த்துகிட்டு இருக்கா...”
“ம்ம்... ஊத்தி முடிச்சுட்டு அவளை இங்க வர சொல்லு.” என்றவன் கண்களை மூடிக்கொண்டான்.
அவனது வேதனை புரிய,
“மாமா...” என்றான் தயக்கமாய்.
“ம்ம்ம்...”
“அக்கா செய்யிறது...”
“அவளுடைய செயலை விமர்சிக்கத்தான் நீ பேச்சை ஆரம்பிச்சீன்னா தேவையில்ல... நீ போகலாம்.” கொஞ்சமும் தயவு பார்க்காமல் பேசினான் ஆதி.
“மாமா...”
“மனு, நீ சின்ன பிள்ளை கிடையாது. உங்க அக்கா ஏதாவது செய்தான்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அவளை பத்தி புகார் சொல்ற வேலை வேணாம். இது அவளுக்கும் எனக்கும் இடையில நடக்குற பிரச்சனை. அதை நான் பார்த்துக்குவேன். நீ போ.” என்றான் அவளை சிறிதளவு கூட விட்டு கொடுக்காமல்..
“அதில்ல மாமா”
“என்ன எனக்கு ஆறுதல் சொல்ல போறியா...?” என்றான் வேதனையாக.. அதில் கண்கள் கலங்கிய மனுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவனது அருகில் வந்து நின்றான்.
அவனது அருகாமையை பார்த்தவன் பெருமூச்சு விட்டு
“எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் மனு... நீ எங்களை பத்தி கவலை படாம கம்பெனி ட்ரைனிங்க ரேணுவுக்கும் ரோகிணிக்கும் முடிங்க. அடுத்த மாசம் அவங்க ரெண்டு பேரும் சார்ஜ் எடுக்கணும் தெரியும் தானே...”
“ம்ம் தெரியும் மாமா..”
“போ அதுக்குண்டான வேலைகளை பாருங்க... மயூ என் பொறுப்பு.” என்றவன் விழிகளை மூடிக்கொண்டான்.
அதற்கு மேல் மாமனை தொந்தரவு பண்ண மனமில்லாமல் போய்விட்டான். அவன் சென்ற சிறிது நேரத்தில் மயூ வந்தாள் கைகளில் தட்டுகளோடு...
அவளின் கொலுசு சத்தத்தில் கண் விழித்தவன், எழுந்து அமர்ந்தான்.





