“உன் எச்சரிப்பை எல்லாம் ஓரம் கட்டிட்டு தள்ளி நில்லு. இல்லன்னா நீயும் இப்போ அவன் இருக்குற நிலையில தான் இருப்ப” என்றான் அடங்காத வெறியுடன்.
“டேய் ரொம்ப தப்பா இருக்கு. பேராசை பெரும் நட்டம்னு நீ கேள்வி பட்டது இல்லையா? தப்பை ஆரம்ப நிலையிலையே திருத்திக்கோ. தீரனை பற்றி உனக்கு இன்னும் சரியா தெரியாது. அவர் தீப்பொறி மாதிரி. ஒரே ஒரு பொறி போதும். மொத்தமா உன்னை கொழுத்தி போட்டுடுவாரு”
“ப்ச் சும்மா அவனுக்கு நீயே பில்டப் குடுத்து ரொம்ப உயரமா தூக்கி வைக்கிறதை முதல்ல நிப்பாட்டு. அவனுக்கு அவ்வளவு ஒன்னும் சீன் கிடையாது. அவனும் நார்மல் மனுஷன் தான் அதனால தான் இப்படி எழவே முடியாம முடமாகி இருக்கான்”
“நீ எவ்வளவு சொன்னாலும் திருந்தப் போறது இல்லை. ஆனா கண்டிப்பா தீரன் கிட்ட மாட்டுவ. அப்போ உனக்கு என்னால உதவி பண்ண முடியாது” தேவா தீர்க்கமாக சொல்ல,
தன் அண்ணனை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்தவன்,
“உன் ஹெல்ப் ஒன்னும் எனக்கு வேணாம் போடா. ஆனா உன்னை மாதிரி மித்ர தூரோகம் செய்யிறவனுக்கு போற இடத்துல புண்ணியம் கிடைக்காது பார்த்துக்க.. சொத்தும் கிடைக்காது” ஏளனம் செய்தான்.
அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், “உன் அழிவை நீயே தேடிக்கிற.. நான் என்ன செய்யட்டும்.. ஆனா ஒரு அண்ணனா உனக்கு ஒரே ஒரு ப்ரீ அட்வைஸ் தரேன். நெருப்புக்கிட்ட விளையாடுற.. அது உன்னை சுட்டுப் பொசுக்காம விடாது. அதுல நீ சாம்பலா போகாம பார்த்துக்க” என்றவன் தன் மனைவியோடு போய் நின்றுக் கொண்டவன் தன் தம்பி தீரனை நெருங்காமல் பார்த்துக் கொண்டான் அதித கவனத்துடன்.
“என்ன மறைமுகமா அவனை காப்பாதுறியா?” கேட்ட செல்வாவை ஏளனமாக பார்த்த தேவா,
“உன்னை தான் மரணத்துல இருந்து காப்பாத்திட்டு இருக்கேன்” என்றான்.
“ஹ.. இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இங்க வேணாம். படுக்கையில கையும் காலும் முடங்கி போய் கிடக்குற அதாவது கிட்டத்தட்ட செத்த பொணம் மாதிரி இருக்குறவனால என்னை என்ன செய்ய முடியும்னு நினைக்கிற..” கேட்டவன் தன் தலை முடியை பிடுங்கி காட்டி,
“இத கூட அவனால புடுங்க முடியாது.. போ போய் அவனுக்கு நல்லா நாய் மாதிரி காவல் இரு. உன் கண்ணு முன்னாடியே அவனை ஒளிச்சு கட்டுறேன்..” ஏகத்துக்கும் கேவலப்படுத்தி சவால் வேறு விட்டான் செல்வா.
அவனை திருத்தப் பார்த்து முடியாமல் வேறு வழியில்லாது யாரிடமும் சொல்ல முடியாமல் தன் தம்பிக்காக பாவம் பார்த்து தீரனின் அன்புக்காக அவனுக்கு இடை விடாமல் காவல் காக்க ஆரம்பித்து விட்டான் தேவா.
செல்வா எடுத்த எல்லா முயற்சிகளையும் விதி உடைத்துப் போட்டு விட்டு தீத்திரள் தீரனை காப்பாற்றி விட்டது. அவன் குணமாகி இந்தியா வர அடுத்து அடுத்து என வருடங்கள் ஓடிப்போனது..
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடிப் போய் இருந்தது. இந்த நான்கு வருடங்களில் தான் எவ்வளவு மாற்றம். ஒவ்வொருவரின் வாழ்விலும் சொல்ல முடியாத அளவுக்கு ஏகப்பட்ட நிகழ்வுகள், மாற்றங்கள் எல்லாம் நடந்து முடித்து இருந்தது.
“ம்மு கிப்பிடியா?” இனிமையான மழலை குரல் கேட்டது அந்த வீட்டில்.
“இதோடா செல்லம் கிளம்பிட்டேன்.. சார் கிளம்பிட்டீங்களா?” எதிர் குரல் குடுத்தாள் நேத்ரா.
“நா அப்வே கிப்பிட்டேன்..” மழலை மொழியில் சொன்னவனை அள்ளி கையில் தூக்கிக் கொண்டவள்,
“முத்தா குடுடா” கன்னத்தை காட்டினாள் நேத்ரா.
“ம்ஹும்.. மாத்தேன்”
“ஒன்னே ஒன்னு குடுடா என் செல்லம் தானே நீ” அக்கா மகனின் முத்தத்துக்காக கெஞ்சிக் கொண்டு இருந்தாள் நேத்ரா.
“நா உன் செல்லம் தான். ஆனா நீ என் செல்லம் இல்ல தானே” கண்களை உருட்டி சொன்னவனின் கன்னத்தில் அழுத்தி முத்தம் வைத்தவள்,
“உன் செல்லத்துக்கு மட்டும் தான் முத்தா தருவியா?” கேட்டவளுக்கு நெஞ்சம் பாகாய் கரைந்தது. ஆனாலும் பொய் கோவம் கொண்டாள் அவனிடம்.
“சரி ஒன்னே ஒன்னு தான்” என்றவன் அவளின் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் வைத்தவன்.
“இதே உன் செல்லத்துக்கு மட்டும் நல்லா அழுத்தி குடுப்ப தானே” முறைத்த பொழுதும் அவனை நெஞ்சோடு தூக்கி வைத்துக் கொண்டவள், வீட்டை பூட்டிவிட்டு
“போகலாமா தங்கம்” கேட்டவள் அவனை தன் ஸ்கூட்டியின் முன்புறம் நிற்க வைத்து பேபி ஹெல்மெட் மாட்டி விட்டு தன் தலையிலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாள் நேத்ரா.
பிள்ளையை க்ரஷில் கொண்டு போய் விட்டுட்டு இண்டர்வியூ அட்டென் பண்ண அந்த மல்டி இன்டர்நேஷனல் கார்பரேட் கம்பெனிக்குள் நுழைந்தாள்.
இந்த நான்கு வருடத்தில் அக்காவை போல இவளும் பிஈ முடித்து விட்டு இதோ அக்கா வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு வந்து இருக்கிறாள்.
சரியாக நேத்ரா உள்ளே வரும் நேரம், அவளின் போன் அடித்தது.
“நேத்ரா” அவளின் அக்கா குரல் கேட்டது.
“அக்கா மகனை கொண்டு போய் கிரஷ்ல விட்டுட்டேன். அவன் அழாம சமத்தா இருந்துக்குறேன்னு சொல்லிட்டான். உனக்கு ஒரு கிஸ் பார்சல் குடுத்து இருக்கான். மறக்காம நான் உனக்கு குடுக்கணுமாம். இல்லன்னா வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு அடி உண்டாம். உன் மகன் என்னை மிரட்டுறான்” என்றாள் முகம் கொள்ளா சிரிப்புடன்.
“சாப்பிட்டானா நேத்ரா. நீ சாப்பிட்டியா?” பரிதவித்தாள். இருவருக்கும் இவள் தானே அன்னை.
“சாப்பிட்டு உனக்கும் எடுத்து வந்து இருக்கேன். நீ முதல்ல கேண்டீன் வாக்கா” என்றாள்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல இண்டெர்வியூ ஹாலுக்கு வா” என்றாள்.
“நீ சாப்பிடாம நான் எங்கயும் வர மாட்டேன்” என்றவளின் அன்பில் எப்பொழுதும் போல நெகிழ்ந்தவள்,
“இண்டேவியூ ஹால் போயிட்டு ஐடிகார்ட் முதல்ல வாங்கு. நம்பர் பார்த்துட்டு பிறகு கேண்டீன் போய்க்கலாம்” என்றாள்.
“ஓகே” என்றவள் தன் அக்கா சொன்ன ஹாலுக்கு வந்தாள். அவளின் அக்காவும் அங்க தான் இருந்தாள்.
ஊரே ஏசி போட்ட மாதிரி குளிர்ந்து போய் இருந்த பொழுதும் நெற்றியில் போடி வியர்வையுடன் பரபரப்பாக வந்த அக்காவை விழி அகலாது பார்த்தாள்.
அவளின் பார்வையை கண்டு,
“என்னடி அப்படி பார்த்துட்டு இருக்க.. தினமும் பார்க்கிற தானே என்னை” என்று அவள் கேட்க,
“தினமும் பார்க்கிறேன் தான். ஆனா தினமும் உன்னை பார்க்கலன்னா நான் செத்துடுவேன் க்கா” கண்கள் கலங்கினாள்.
“ப்ச் நேத்ரா” அதட்டியவளின் நெற்றியில் அரும்பி இருந்த வியர்வையை தன் ஷால் கொண்டு துடைத்து விட்டாள்.
“என் கிட்டயே கர்சீப் இருக்குடி” தடுக்க வர,
“அதை நீயே பத்திரமா வச்சுக்க... நீ கொட்டுற உதிரத்தை தான் என்னால துடைக்க முடியல.. ஆனா உன் வியர்வையாவது துடைக்கிறனே.. அதுக்காவது என்னை அனுமதிப்பியா?” மன்றாடளுடன் கேட்ட தங்கையை புன் சிரிப்புடன் பார்த்த மூத்தவள்,
“யாருக்காக எல்லாம் உங்க ரெண்டு பேருக்காக தானே. அதுல எனக்கு எந்த வலியும் எடுக்கல. மனசை போட்டு குழப்பிக்காம இண்டெர்வியூ அட்டென் பண்ணு” என்றாள்.
“நிச்சியமா அக்கா” என்ற நேரம்,
“அதிரல்” என்ற ஆளுமையான குரல் ஒலித்தது அந்த பெரிய கூடத்தில்.





